Monday, October 18, 2021

ஆட்கொல்லி கொரோனா நோய்த் தொற்று : தற்காப்பும் பிறர்காப்பும்!

நோய்கள் அவை இயற்கையாக அல்லது மனித செயற்பட்டினூடாக வரினும் அவை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மனிதர்களுக்கு சோதனையாகவோ, தண்டனையாகவோ வரலாம் என்பதனால் பாவங்களில் இருந்து மன்னிப்பு தேடி இதய சுத்தியுடன் அமல் இபாதத்துகள் செய்து எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கொடிய நோய்களில் இருந்தும் சோதனைகளில் தண்டனைகளில் இருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (ஸுரத்துத் தவ்பாஹ் 9:51)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். 2 நாட்களில் வறட்டு இருமல் ஏற்பட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். வழக்கமன சளித்தொல்லை, இருமல், காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைக் கொண்டிருக்கும். முதியவர்களையும், குழந்தைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களையும் கொரோனா எளிதில் தாக்கக் கூடும். கொரோனா வைரஸ் உடலில் தீவிரமடைவதன் அறிகுறிகள் உறுப்புகள் செயலிழப்பு, நிமோனியா, அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும்.

கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் அளவிலான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியாவிற்கான சிகிச்சையே அளிக்கப்படுவதாகத் தெரிகிறது.  

இந்த வைரஸ் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பதால் நோய் பரவாமல் தடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்கிறது. எனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது, வைரஸின் வீரியம் அவரவரின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஏற்ப குறையும் பட்சத்தில் தொடர்ந்து 28 நாட்கள் அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலும் வைக்கப்படுகின்றனர்.

சுத்தம் ஈமானின் பாதி (விசுவாசத்தின் அரைப்பகுதி) என்பதனால் முடிந்தவரை நாமும் எமது குடும்ப உறுப்பினர்களும் சிறார்களும் தூய்மையாக ஆரோக்கிய சுகாதார வழிமுறைகளை கைக் கொள்ளுதல் வேண்டும், அதே போன்று எமது வீட்டுச் சூழலை நன்கு தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் கட்டாயமாகும்.

அவ்வப்பொழுது இலத்திரனியல் பதிப்பு மற்றும் சமூக ஊடகங்களூடாக பகிரப்படும் அரசாங்க அறிவுறுத்தல்கள்,  ஊர்ஜிதம் செய்யப்பட்ட அறிவுரைகளை நாம் கவனத்தில் கொள்வதோடு அன்பர்கள் நண்பர்கள் அண்டை அயலவருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.

PANDEMIC

எமது உடம்பில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் இயற்கையான உணவுப் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக கைக்கொள்ள வேண்டும், அந்த வகையில் சுதேச வைத்திய முறைகளில் உள்ள சிறந்த உறுதிப்படுத்தப் பட்ட தகவல்களையும் நாம் பகிர்ந்து கொள்ளலாம், ஆயுர்வேதா, சித்த மருத்துவம், யூனானி மருத்தவ முறைகளில் இயற்கையான தாவரங்கள், பழங்கள் மூலிகைகளில் இருந்து எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.

தொற்றுநோய் (COVID-19 : PANDEMIC) அனர்த்தநிலை உலகளாவிய அளவில் உலக சுகாதார அமைப்பினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் பயணங்களை, சுற்றுலாக்களை, பொதுக் கூட்டங்களை, விரிவுரைகளை, விழாக்களை, விளையாட்டு போட்டிகளை, பொது இடங்களை, பிரத்தியேக வகுப்புகளை, சனநெருக்கடியான நகர்ப்புறங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் வழமையான தடிமல் காய்ச்சல் தலைவலி சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டாலும் உரிய தற்காப்பு மற்றும் பிறர்காப்பு முன்னேற்பாடுகளுடன் உரிய வைத்திய ஆலோசனைகளைப் பெறுதல் வேண்டும்!, தமாக முடிவுகளுக்கு வரவோ வைத்தியர்கள் அல்லாதோரின் ஆலோசனைகளை பெறவோ முயலக் கூடாது.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் ஐவேளையும் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்தாக தொழுகின்ற பழக்கமும் வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகைக்கு ஒன்றுகூடும் வழமையையும் கொண்டுள்ளோம், எனவே உரிய தற்காப்பு நடவடிக்கைகளை நிபுணத்துவ ஆலோசனைகளோடு நாம் மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மஸ்ஜிதுகளில் ஹவ்ழ் எனப்படும் பொது நீர்தங்கிகளில் வுழு செய்வதனை முற்றாக தவிர்ப்பதோடு குழாய் நீரில் நேரடியாக வுழு செய்தல் அல்லது வீட்டிலிருந்து வுழுவுடன் செல்தல் சிறந்தது.

மஸ்ஜித் தரையோடுகளை, விரிப்புகளை உரிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய கண்காணிப்புடன் துப்பரவு செய்யப் படுதல் அவசியமாகும்.

ஜும்மாஹ் தினத்தில் குத்பாக்களை மிகவும் சுருக்கமாக மேற்கொள்வதோடு குறுகிய நேரத்திற்குள் சகல கடமைகளையும் நிறைவு செய்வதனை நிர்வாகங்கள் உறுதி செய்தல் வேண்டும்.

தீவிரமான நோய்த் தொற்று பரவல் அரசினால் பிரகடனம் செய்யப்படின் மாத்திரம் ஜும்மாத் தொழுகை அல்லது ஜமாஆத்துத் தொழுகைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதா இல்லையா என்ற த தீர்மானங்களை சமூக சன்மார்கத் தலைமைகள் மேற்கொள்வார்கள்!

நோய்த் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப் படுபவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறின் உடனடியாக உரிய தரப்புக்களிற்கு அறியத் தருதல் கட்டாயமாகும், நெருங்கிய குடும்ப உறவினராக இருப்பினும் அவரை தனிமைப்படுத்தி சிக்கிச்சியளிக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.

வீட்டுச் சூழலில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பின் அவை வெளிப்பட முன்னரும் ஏனைய சக உறுப்பினர் உறவினர் தொழிளார்களுக்கு தொற்றியிருக்கும் சந்தர்ப்பம் இருப்பதானால் அந்த சூழலில் இருந்த அனைவரும் அவதானமாக உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தம்மையும் பிறரையும் காத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்கொல்லி கொரோனா பரவும் வேகத்தைவிட அதிக வேகத்தில் அது தொடர்பான வதந்திகள் பரவுவதனால் மக்கள் மிகவும் பாரிய அசெளகாரியங்களுக்கு ஆளாகுவதொடு தேசங்களும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களாகிய நாம் சகலரும் வைத்திய நிபுணத்துவ அறிவு படைத்தவர்களோ அல்லது பிந்திய வைத்திய சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்புக்கள் பற்றிய அறிவோ தெளிவோ உடையவர்கள் அல்ல என்பதனால் அது குறித்த நம்பகமான தகவல்களை அறிவுரைகளை உரிய தரப்புக்களிடம் இருந்து மாத்திரமே பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும்!

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரழி) கூறினார்கள்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும். (புஹாரி: 5734)

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டு விட்டால், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள். (ஆயிஷா (ரழி) முஸ்லிம்)

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 6743

“நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் அவனது வல்லமை கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4082

(நபி(ஸல்) அவர்களின் மற்றுமொரு துஆ  “யா அல்லாஹ்! குஷ்ட நோய்கள், பைத்தியம் பெரும் வியாதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”. அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : அபூதாவூத் , நஸயீ

 “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!”

“(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்.”

“இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.”
(ஸுரத்துல் பகரா 02: 155,156,157)

இலங்கையில் கடந்த வருடம் 99,000 மாத்திரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர் சுமார் 100 இறந்தனர், தினமும் கான்சர் நோயினால் 35 பேர் இறக்கின்றனர், 65 புதிய நோயாளிகள் இனம் காணப்படுகின்றனர், சுமார் 17,000 சிறுநீரக நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர், மாரடைப்பினால் சுமார் 15,000 பாதிக்கப் படுகின்றனர், எனவே எல்லாவிதமான நோய்கள் குறித்தும் விழிப்பாகவும் போதிய அறிவுடனும் நாம் செயற்படல் வேண்டும்.

விசுவாசிகளுக்கு நோய்கள் குறித்த வீண் அச்சம் பீதி தேவையற்றது, தற்காப்பும் தவக்குளும் தாராளமாகப் போதுமானவை!

அஜல் முடியாமல் மரணம் சம்பவிப்பதில்லை, முடிந்து விட்டால் காரண காரியம் பற்றிய கவலையால் ஆகப்போவது ஒன்றுமில்லை!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles