மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
மஸுத் ஆலிம் ஸாஹிப் எனப் பிரபலமாக இருந்த ஷெய்க் (அஷ் ஷெய்க் பட்டம் அந்தக் காலத்தில் இருக்கவில்லை, ஜாமியாஹ் நளீமிய்யாஹ் தான் அந்தப் பட்டத்தை அறிமுகம் செய்தது) அவர்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சி சஹர் விஷேட நிகழ்ச்சி லைலதுல் கத்ர் விஷேட துஆ என்பவற்றின் மூலமே ஆரம்பத்தில் அறிந்திருந்தேன்.
நான் சிறுவனாக வாப்பா அதிபராகவும் உம்மா ஆசிரியையாகவும் கற்பித்த நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை தொகுதியில் அமைந்துள்ள அல் காஹிரா பாடசாலை அமைந்துள்ள அஹஸ்வெவ எனும் கிராமத்தில் இருக்கும் பொழுது (7-8 வயதிருக்கும்) அந்த ஊருக்கு சில உலமாக்கள் பிரமுகர்கள் வருகை தந்தார்கள் (சுமார் 30 பேரளவில் வரிசையாக நடையாக) 1968-69 என நினைக்கிறேன், அப்போது தான் முதன் முதலாக தப்லீக் ஜமாத் எமது பிரதேசத்தில் அறிமுக மாகிய ஞாபகம், அந்த ஜமாஅத் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் தலைமையில் வந்தமை ஞாபகம் இருக்கிறது.
பின்னர் 1977 என நினைக்கிறேன் கொழும்பு ஸாஹிரா மஸ்ஜித் முன்றலில் இடம் பெற்ற தப்லீக் ஜமாத் உலக மாநாடு இஜ்திமாவில் ஹஸ்ரத்ஜீ இனாமுல் ஹஸன் ஸாஹிப் மொளலான கலிலுர் ரஹ்மான் சாஹிப் மெளலான யூஸுப் ஸாஹிப் போன்றோருடன் பிரதான உரை, உரை மொழி பெயர்ப்பாளராக நேரடியாக கண்டேன், வாப்பாவுடன் தொந்தரவு பண்ணி அதற்கு வந்திருந்தேன்.
அடுத்து ஜாமியா நளீமிய்யா பிரவேச நேர்முகத் தேர்வு குழாமில் அவர் இருந்தபோது கண்டேன், குர்ஆனை ஓதச் சொன்னதும் சரியாகவே வழமையாக ஒதும் வாகிஆ ரஹ்மான் பக்கங்கள் வந்தன, யூஸுப் தலால் அலி, கலாநிதி ஷுக்ரி மஸுத் ஆலிம், முபாரக் மெளலவி இன்னும் பலர் இருந்த அவை மாஆஆஆஷா அல்லாஹ் என பொஸிடிவ் அலைகளை என்னுள் பாய்ச்ச தப்பினேன் பிழைத்தேன் என்று கதிரையில் சுதாகரித்துக் கொண்டு தைரியமாகவே அமர்ந்து கொள்கிறேன்.
இனி கேள்விகள் அறிந்த ஜமாத்துகள்.. தப்லீக் அதன் அமீர் யார்..?
மஸுத் ஆலிமைப் பார்த்து சிரித்துக் கொண்டு ஹஸரத்ஜீ இனாமுல்ஹஸன் சாஹிப் என சொல்ல, ஏன் மஸுத் ஆலிமை பார்த்து சிரித்தீர்கள் என ஒருவர் கேட்க.. மருதானை இஜ்திமாக் கதையை சொன்னேன், அந்த சம்பவத்தை முபாரக் மெளலவி இன்றும் ஞாபகப் படுத்துவார். அஸ்ஸாஇலு அஃலம் என்ற தோரணையில் நான் சுவாரஷ்யமாக (முட்டாள் தனமாகவோ தெரியாது😉) பதில் சொன்னதாக.
1926 ஜுன் 11 ஆம் திகதி பஸ்யாலையில் பிறந்த அஹமத் அலி முஹம்மத் மஸ்ஊத் (ஆலிம் ஸாஹிப்) அவர்கள் காலி பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா கல்லூரியில் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆலிமாக பட்டம் பெறுகிறார், அந்த நிறுவனம் ஈன்றெடுத்த மிகப் பிரபலமான இலங்கை உலமாக்களில் ஒருவராக இன்றுவரை போற்றப் படுகின்றவர்.
இலங்கை முழுவதிலுமுள்ள குர்ஆன் மத்ரஸாக்களுக்கு உதவும் நோக்கில் தனவந்தர் ஈ எல் ஹாஜியார் (இப்ராஹீம் லெப்பை மரிக்கார்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மஊனதுர் ரஹ்மான் அறக்கட்டளையில் மர்ஹும் மக்தூம் ஆலிமுடன் இணைந்து பரீட்சகராக நாடு முழுவதும் பயணித்து பணியாற்றி இருக்கின்றார்.
அதிகமான சன்மார்க்க அரபு நூல்களைப் போன்றே தமிழ் இலக்கிய நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவரது விடயதானங்களும் மொழிவளமும் கணீரென்ற கந்தர்வக் குரலும் அவரை மிகச் சிறந்த சிறப்புச் சொற்பொழிவாளராக நாடறியச் செய்திருந்தது.
நளீமிய்யாவுக்கு வந்த பின் மஸுத் ஆலிம் குறித்து மேலும் அறிந்தேன் அவ்வப்போது உயர் வகுப்புகளுக்கு வந்து சென்ற ஞாபகம்.
அவர் அப்போது மர்ஹும் நளீம் ஹாஜியாரின் ஆஸ்தான ஆலோசகர், நாடளாவிய ஹாஜியாரின் நற்பணிகளின் ஒருங்கிணைப்பாளர். மஸ்ஜிதுகள் மத்ரஸாக்கள் ஏழைகள் கன்னியரது திருமணங்கள் என இன்னோரன்ன பணிகளின் பிரதான ஒருங்கிணைப்பாளர் மாத்தரமன்றி ஹாஜியாரின் உள்நாட்டு பிறநநாட்டு பயணத் தோழர் என்றெல்லாம் அறிந்தேன்.
கொழும்பு வெள்ளவத்தையில் அலெக்ஸாண்ரா இல்ல காரியாலயத்தில் இருந்து பணியாற்றிய மர்ஹும் மஸுத் ஆலிம் ஹாஜியாரின் ஆசிரியராக இருந்ததாகவும் சன்மார்க்க அறிவு பத்வாக்கள் முஸ்லிம் உலகம் இஸ்லாமிய அமைப்புகள் என ஹாஜியாரின் தேடல்களுக்கு தொடர்ந்தும் பதில் தரும் ஆஸ்தான குருவாகவும் இருந்திருக்கிறார்.
ஜாமியாஹ் நளீமிய்யாஹ் ஸ்தாபிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் ஹாஜியாருடன் பக்கபலமாக இருந்தவர் என்றும் முதலாவது அதிபராக அவரை நியமிப்பதா அல்லது மெளலவி தாஸிம் நத்வி அல் அஸ்ஹரி அவர்களை நியமிப்பதா என்று ஆலோசிக்கப் பட்ட பொழுது மஸுத் ஆலிம் தன்னோடு முழுநேரம் இருக்க வேண்டும் எனவும் தாஸிம் மெளலவி அதிபராக நளீமிய்ய விவகாரங்களில் கவனம் செலுத்தட்டும் என்று முடிவாகியதாகவும் சொல்லப் பட்டது.
மஸுத் ஆலிம் அவர்களது ஆழமான அரபுப் புலமை அவரது இஸ்லாமிய அமைப்புகள் குறித்த பரந்த பார்வை சுதந்திரமான வாசிப்பு செயற்பாடுகள் அவரை தனித்துவமான ஆளுமையாக அடையாளப் படுத்தியிருந்தது.
1950 களில் இலங்கையில் தப்லீக் ஜமாத் அறிமுகமான பொழுது நாட்டின் பல பாகங்களிற்கும் அதனை கொண்டு சென்ற முன்னோடிகளில் பிரதானமானவர், இலங்கை தப்லீக் ஜமாத்தின் அமீராக மஸுத் ஆலிம் அவர்கள் அன்று தெரிவாகும் அளவு அங்கு செல்வாக்கு பெற்றிருந்த போதும் வழமைபோல் வழிவிட்டு விலகிச் செல்லும் பெருந்தன்மையுடன் அவர் நடந்து கொண்டார் என சொல்லப்பட்டது.
மஸுத் ஆலிம் அவர்களுடைய பசியாலை இல்லத்தில் உள்ள நூலகம் அவரது அறிவுப் புலத்திற்கு சிறந்த சாட்சியாகும்.
அவரது மூத்த மகன் ஜாமியாஹ் நளீமிய்ய பழைய மாணவர், ஆசிரியர் அக்ரம் தந்தையைப் போன்று சிறந்த பேச்சாளர் மாத்திரமன்றி இலங்கை இஸ்லாமிய நூலகத்திற்கும் கல்விப் புலத்திற்கும் மிகச் சிறந்த நூல்களை பாடவிதான நூல்களை தந்திருக்கிறார்.
உஸ்தாத் அக்ரம் என அழைக்க முடியுமான அவரது திறமைகள் ஆற்றல்கள் அறிவு ஆய்வுப் பங்களிப்புகள் இன்னும் பரந்த அளவில் சமூக மற்றும் தேசியத் தளத்திற்கு வர வேண்டும்.
சுருங்கச் சொன்னால் மஸுத் ஆலிம் விசிரிபோல் ஓயாது ஓடி உழைத்த ஒரு செயல்வீரன் நளீம் ஹாஜியாரின் ஆளுமையை செப்பனிட்ட அவரில் பிரதிபலித்த மற்றுமொரு பிரதான பாத்திரம்.
1988 அக்டோபர் 5 ஆம் திகதி மஸ்ஊத் ஆலிம் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் வபாஃத் ஆனார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரையும் அவரது பணிகளையும் அங்கீகரித்து உயரிய சுவனத்தில் தனது சகாக்களுடனும் இறை நேசர்களுடனும் இன்புறச் செய்வானாக!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்