ஜாமியாஹ் நளீமியாஹ்வின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷுக்ரி புனித ரமழான் மதம் கடந்த 19/05/2020 அன்று வபாஃத் ஆனார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது நல்ல அமல்களை சேவைகளை அங்கீகரித்து குற்றம் குறைகளை மன்னித்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!
கலாநிதி ஷுக்ரி மாத்தறை நகரில் 1940 ஜூன் 24 ஆம் திகதி பிறந்தார், மாத்தறை புனித தோமஸ் கல்லூரி, தர்கா நகர் அல்- ஹம்ரா கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான ஷுக்ரி 1960 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார், அறபு மொழியை சிறப்புத் துறையாக தெரிவு கொண்டார்.
1965 ல் பட்டப்பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த ஷுக்ரி 1965 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார், பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசில் 1973 ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் எடிபரோ எடின்பரோ கழகத்தில் பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் எனும் பிரசித்தி பெற்ற கீழைத்தேய கற்கைகள் அறிஞரின் மேற்பார்வையில் கலாநிதி கற்கைகளை மேற்கொண்டு 1976 ஆம் ஆண்டு நாடு திரும்பி பேராதனை பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும், தொடர்ந்து அறபு இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவராகவும் நியமனம் பெற்றார்.
ஜாமியாஹ் நளீமியாஹ் எனும் இஸ்லாமிய கற்கைகளுக்கான உயர்கல்வி பீடம் கருப்பொருளாக இருக்கும் பொழுதே நளீம் ஹாஜியார் மற்றும் அவரது தோழர்களுடன் சிரேஷ்ட சிவில் சேவை ஊழியர் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், மாவட்ட நீதிபதி அமீன், மௌலவி தாசீம் அஸ்ஹரி, மௌலவி மசூத் ஆலிம் சாஹிபு போன்ற சமூக முக்கியஸ்தர்களுடன் இளம் பட்டதாரி ஷுக்ரியும் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சன்மார்க்க கற்கைகளை சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப கற்கும் ஏக காலத்தில் அரச அங்கீகாரமுள்ள உயர்தர மற்றும் பல்கலைக் கழக பட்டப்படிப்பினையும் வெளிவாரியாக ஜாமியாஹ் நளீமியாஹ் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதுவும் நடுநிலையான இஸ்லாமிய சிந்தனைப் போக்கை கொண்டிருக்க வேண்டும் என்பதுவும் சமூக தேசிய வாழ்வில் தலைமைத்துவப் பண்புகளுடன் கூடிய பயனுள்ள பிரஜைகளாக அவர்கள் மிளிர வேண்டும் என்பதுவும் அவர்களது பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது.
கலாநிதி கற்கைகளை நிறைவு செய்து கொண்டு ஜாமியாஹ் நளீமியாஹ்வில் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற நளீம் ஹாஜியாரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது துறையில் தனக்கிருந்த உத்தரவாதங்கள் மிக்க உயர்வுகள் மேன்மைகளை அர்ப்பணம் செய்து 1981 ஆம் ஆண்டு ஜாமியாஹ் நளீமியாஹ்வின் முழு நேர ஊழியனாக பணிப்பாளராக இணைந்து கொண்டார்.
நான் கண்ட கலாநிதி ஷுக்ரி..!
ஜாமியாஹ் நளீமிய்யாஹ்வில் முதலாம் இரண்டாம் வகுப்பில் நாம் கற்கும் போது பேராதனை பல்கலைக் கழகத்தில் அரபு இஸ்லாமிய நாகரீகத் துறைப் பீடாதிபதியாக இருந்த டொக்டர் ஷுக்ரி பல்கலைக் கழகத்திலிருந்து அவ்வப்போது ஜாமியாஹ்விற்கு வருகை தருவார்.
ஜாமியாஹ் நளீமிய்யாஹ் ஸ்தாபக உறுப்பினராக, அதன் கற்கை நெறியை வடிவமைத்தவர்களில் ஒருவராக இருந்த கலாநிதி யவர்கள் 1981 ஆம் ஆண்டு முழுமையாக ஜாமியாஹ்வின் பணிப்பாளராக பொறுப்புக்களை ஏற்றாலும் சிறிய வகுப்புகளுக்கு மிகவும் அரிதாகவே வருவார்..
அப்போதெல்லாம் நான் அரபு மொழியில் மாத்திரமே அதிக ஆர்வம் காட்டும் காலம், அல் குர்ஆனையும் ஸுன்னாஹ்வையும் கற்கவும் புரியவும் வேண்டுமென்ற அளவு கடந்த ஆவலில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே என்னை ஏதேனுமொரு அரபுக் கல்லூரியிற்கு அனுப்புமாறு உம்மா வாப்பாவுடன் பிடிவாதம் பிடித்து தான் ஜாமியாஹ் பிரவேசம் பெற்றிருந்தேன்.
1982 ஆம் வருடம் நாம் மூன்றாம் வகுப்பில் படிக்கும் காலமது, டொக்டர் ஷுக்ரி என்றாவது ஒரு நாளைக்கு எங்கள் வகுப்புக்கு வருவார்.
ஒரு நாள் டொக்டர் ஷுக்ரி நவீன அரபு மொழிப் பிரயோகங்கள் Modern Arabic Language Usages مفردات في اللغة المعاصرة என்ற ஒரு நூலை கையில் எடுத்துக் கொண்டு வந்து எமக்கு சில பிரயோகங்களை கற்பித்தார்.. تَلَذُّذُ اللغة மொழிப் பிரயோகங்களை சுவைத்து கற்றல் என்று இனிமையாகவே புகட்டுவார்..
அடுத்த முறை வரும் போதெல்லாம் சில வசனப் பிரயோகங்களை அவரிடம் திரும்பவும் கேட்பேன்.. அரபு மொழியில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட டொக்டர் வகுப்புக்கு வரும் பொழுது.. “மஹ்பூப்” இன்றைக்கு என்ன விஷேசம் என கேட்பார்..
ஒரு நாள் இனாமுல்லாஹ் இந்த கைநூலை நான் உங்களிடம் தருகிறேன் நீங்கள் அதனை முழுமையாக குறிப்பெடுத்து கற்று விட்டு என்னிடம் திருப்பி ஒப்படைத்து விடுங்கள்..
அவசமின்றி அலாதியாக படியுங்கள் என்று தந்துவிட்டார்..
அரபு மொழியில் இருந்த அவருடைய காதல் தான் பாசமழையாக எம்மீது பொழிந்தது என்று சொல்லலாம், நான்காம் ஐந்தாம் வகுப்புக்கு வந்தவுடன் காலை அசெம்பிலியில் யாராவது ஒருவர் உரை நிகழ்த்தும் வழமை இருந்தது..
வழமையாக வங்காள தேச கல்விமான் பிரதிப் பணிப்பாளர் உஸ்தாத் ஷஹீதுல்லாஹ் கவ்தர் தான் இருப்பார்கள் ஒரு நாள் பணிப்பாளர் டொக்டர் ஷுக்ரி அவர்கள் அசெம்பிலிக்கு வந்திருந்தார்கள்..
அசெம்பிலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிரேஷ்ட மாணவர் ஷெய்க் நளீர் அவர்கள் திடிரென என்னை அறபுமொழியில் உரையாற்ற அழைக்கிறார்கள்..
நான் அறிஞர் இப்னுல் கையிமுடைய ஒரு நூலை மேற்கோள் காட்டி உடல் அறிவு ஆன்மா என மூன்று அம்சங்களும் ஏக காலத்தில் சமநிலையில் வளர வேண்டும் என்ற கருப் பொருளில் சுயமாகவே பேசினேன்..
எனது உரை முடிந்தவுடன் ஆர்வ மேலீட்டால் அன்று டொக்டர் ஷுக்ரி ஆனந்தக் கண்ணீருடன் அசெம்பிலியில் தானும் முதன்முறையாக அரபு மொழியில் குறிப்பிட்ட அதே விடயப் பரப்பில் உரையாற்றியதோடு எனக்கு خطيب الجامعة
என ஒரு சிறப்புப் பெயரையும் சூட்டினார்.
டொக்டரை காண்பது கதைப்பது எல்லாம் அப்போது கற்பனை செய்ய முடியாத காலம், அவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆய்வுப் பணிகளிலும், ஹாஜியார், அறிஞர்கள் என அதிகபட்ச அலுவல்களில் இருக்கும் காலம்.
ஜாமியாஹ் நளீமியாஹ் வாழ்வில் நேர காலத்தோடு நித்திரைக்குச் செல்வதும் (10:15) அதேபோன்று ஸுபஹுத் தொழுகைக்கு அடுத்தவர்களையும் எழுப்பிவிட்டு அதான் சொல்லும் முதலே மஸ்ஜிதுக்கு சென்றுவிடுவதும் எனது வழமையாக இருந்தது, மஸ்ஜிதுக்கு முதலில் வருகை தருவதும் முதல் ஸஃபீல் தொழுவதும் கலாநிதி ஷுக்ரியின் வழக்கமாக இருந்தது.
அடிப்படையில் ஸுஃபித்துவ மரபைக் கொண்டிருந்த, அதே துறைசார் ஆன்மீக ஞானி அபூதாலிப் அல் மக்கி எனும் மேதையின் கூதுல் குலூப் என்ற நூலை தனது கலாநிதி கற்கை ஆய்விற்காக தெரிவு செய்திருந்த டொக்டர் ஷுக்ரியின் அமைப்புகள் சார்பற்ற சிந்தனைச் சுதந்திர நிலைப்பாட்டில் ஆன்மீக வழிகாட்டலில் அறபு மொழிமீதான காதலில் நானும் ஒத்துப் போனதால் அன்றைய சூழலில் சகாக்களுடன் ஒவ்வாமைகளும் மேலோங்கி இருந்தது.
காலம் வேண்டிநின்ற இலங்கைக்கான ஒரு சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தை ஆழமான ஆன்மீக அடித்தளத்தில் கட்டி எழுப்புவதில், தேசிய வாழ்வில் பங்களிப்புச் செய்ய முடியுமான ஒரு நடுநிலை அறிஞர் பரம்பரையை தோற்றுவிப்பதில் அவரிடம் காணப்பட்ட கோட்பாட்டு ரீதியிலான சிந்தனைத் தெளிவும் புரிதலும் என்னைப் பெரிதும் கவர்ந்த சிறப்பம்சமாகும்.
அடுத்த பணிப்பாளர் என சில செல்லமான நக்கல்களும் இருந்தன.. !என்னை விரிவுரையாளராக நியமிப்பதில் டொக்டரரும் ஷஹீதுல்லாஹ் கவ்தரும் உறுதியாக இருந்தார்கள், அரபு மொழி, அரபு இலக்கணம், பிக்ஹு, ஹதீஸ், தப்ஸீர், உஸுலுல் பிக்ஹு, பிக்ஹுல் முகாரன் என ஐந்தாம் வகுப்புவரை எனக்கு பாடங்கள் தரப்பட்டன…
நான் பேராதனை பல்கலைக் கழக வெளிவாரி மாணவராக அரபு மொழியில் கலைமாணி ஸ்பெஷல் செய்த பொழுது ஒரு குறிப்பும் எடுத்துக் கற்கவில்லை ஸெகண்ட் அப்பர் கிடைத்தது.
டொக்டர் ஷுக்ரியிடம் கதை கேட்டே இஸ்லாமிய வரலாற்றையும் அரபு பாட விதானத்தையும் இம்ரஉல் கைஸையும் உள்வாங்கியிருந்தேன், அவருக்கும் எனக்கும் இடையில் கொரோனா இடைவெளி பின்னர் ஏற்படுத்தப்பட்டாலும் நிலைப்பாடுகளில் கொள்கைகளில் உடன்பாடுகளும் உரிமையும் நட்பும் தொடர்ந்தும் இருந்தது.
தேசிய ஷுரா சபை ஸ்தாபிக்கப்பட்ட முதலமர்விற்கு அதிதிகளில் ஒருவராக வருகை தர உடன்பட்டு எம்மை ஊக்குவித்த அவர் இறுதி நேரத்தில், மன்னிப்புக் கேட்டு தவிர்ந்து கொண்டார், சமூக இடைவெளி திணிக்கப்பட்டது போன்ற கவலை, என்றாலும் அல்லாஹ் வின் நாட்டத்தில் நிச்சயமாக நன்மைகள் இருக்கும்.
நானும் அவரும் (பிரதிப்) பணிப்பாளர் அகார் முஹம்மது அவர்களும் இருக்கும் அருகாமை அமர்வுகளில் சுவாரஷ்யத்திற்கு குறைவே இருக்காது, அந்த அளவு நட்புடன் தான் எமது உறவு இருந்தது.
அவர் அல்லாஹ்விடம் முந்திக் கொண்டு சென்று விட்டார், அவரது பணி நிறைவடைந்து விட்டதாக நாம் சாட்சி பகர்கிறோம், எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை அவரது பணிகளை அங்கீகரித்து உயரிய சுவன வாழ்வை வழங்கப் பிரார்த்தித்துக் கொள்வோம், நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அழைக்கப்படுவோம்.. எமது பணிகள் பற்றி தனித்தனியாகவே விசாரிக்கப்படுவோம்..
யா அல்லாஹ்
எங்களையும் சரியான திசையில் பயணிக்கச் செய்வாயாக!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்