Monday, December 9, 2024

நான் கடந்து வந்த பாதையில் சில மைல் கற்கள்..!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

1980 களின் இறுதிப்பகுதியில் நாட்டின் வடக்கு கிழக்கில் பிரிவினை யுத்தமும் தென்னிலங்கையில் சிவில் யுத்தமுமாக வன்முறைகளும் பயங்கரவாதமும் வெடித்துச் சிதறிய பொழுது முஸ்லிம் இளைஞர்களை ஆயுத மற்றும் வன்முறைக் கலாசாரத்தில் இருந்து காத்து ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கை கொள்ளச் செய்யவும் அவர்களை சன்மார்க்க வரம்புகளுக்குள் தேசிய வாழ்வில் ஈடுபடுத்தவும் வழிநடாத்தவும் மர்ஹும் அஷ்ரஃபுடன் இணைந்து பணியாற்றினேன்.

எனது அரசியல் வாழ்வு இஸ்லாமிய அறிஞர் ஒருவரின், அரசியல் மாணவனின், ஆய்வாளரின், கொள்கை வகுப்பாளரின், இராஜ தந்திரியின் பணிகளாகவன்றி சாமாண்ய மாமூல் அரசியல் வாதியின் பாத்திரமாக அன்றும் இன்றும் என்றும் இருந்ததில்லை.

அன்று ஹாகிமிய்யத் பேசியவர்களும் இகாமதுத் தீன் பேசியவர்களும் கிலாபத் வல் முல்க் பேசியவர்களும் என்னை ஏளனம் செய்தார்கள், தள்ளி வைத்தார்கள், தீண்டத் தகாதவனாக பார்த்தார்கள், சிலர் ஜனநாயகம் “குப்ர்” என்றார்கள்.

ஜனநாயகம் எம்முன்னுள்ள ஒரே சாதனம் (வஸீலா) இறுதி இலக்கு அல்ல (க்காயஹ்) அல்ல நாட்டில் உள்நாட்டுப் போர் ஓய்ந்து அரசியல் தீர்வுகளும் அமைதி சமாதானமும் நல்லாட்சியும் ஏற்பட நான் மேற்கொண்டுள்ள ஜனநாயக அரசியல் பயணம் ஒரு இஜ்திஹாதாகவும் (ஆய்வு முயற்ச்சி) ஜிஹாதாகவும் (தார்மீக அறப்பணி) இருக்கும் இஜ்திஹாதில் இரண்டில்லாவிடினும் ஒரு நன்மையும் இந்தப் பயணத்தில் இறந்து போனால் ஷஹாதத்தும் கிடைக்கும் என எழுதியும் பேசியும் வந்தேன்.

ஆனால், என்னை தீண்டத்தகாத வேண்டத்தகாத விரும்பத்தகாதவனாகவே சில சிந்தனைப் பள்ளிகள் மட்டுமல்ல, பள்ளிகளும் பார்த்தன தள்ளி வைத்தன, ஆனால் அவர்கள் எவர்களோடும் நான் முரண்படவோ வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவோ இல்லை.

நாம் தெரிவுசெய்து செப்பனிட்டுக் கொண்ட ஜனநாயக அரசியல் பாதையில் பயணித்தோர் தடம்புரண்டு இலக்குகள் மறந்து விழுமிய அரசியலை வியாபார அரசியலாக விலைபேசிய போது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த சகாக்களை வேள்வியில் ஏற்றி கேள்விகள் கேட்க நான் வரலாறு நெடுகிலும் தவறவில்லை என்பதற்கு இரண்டு தலைமுறைகளாவது சாட்சியங்கள் பகர்வார்கள் என நம்புகிறேன்.

ஒவ்வாமைகள் தொடரும் நிலையிலும் “சுதேச இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம்” ஒன்றின் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்தேன், தேசிய ஐக்கியம், மத சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்பவற்றைக் கட்டி எழுப்ப சிறுபான்மையினருக்கான பிக்ஹு பற்றி என்பதுகளின் இறுதிப்பகுதி முதலே எழுதியும் பேசியும் வந்ததேன்.

தேசிய வாழ்வில் எமது விகிதாசார வரம்புகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த தேசமக்களுக்கும் நன்மை செய்கின்ற கருணைத்தூதின் மகத்துவங்களை நடைமுறையில் கொண்டு செல்கின்ற ஒரு சிந்தனைப் பாரம்பரியத்தை வலியுறுத்தி வந்தேன், அன்று எனது எழுத்துக்களுக்கு தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடரொலி நவமணி தவிர எந்த சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இடம் தரவில்லை.

என்றாலும் இந்த தனிமைப்படுத்தல்கள் ஓரம்கட்டல்கள் விமர்சனங்கள் ஏளனங்கள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் எதனையும் கண்டு கொள்ளாமல் குருடனாகவும், செவிடனாகவும், ஊமையாகவும் வலிகள் சுமந்து சரியென நான் கண்ட வழியில் பயணித்தேன்.

எனது இந்தப் பாதையிலும் பயணத்திலும் அரசியல் தலைமைகளோடு மாத்திரமன்றி உள்நாட்டு சிவில் சன்மார்க்கத் தலைமைகளோடும் உடன்பாடுகள் முரண்பாடுகளோடு இணைந்து நான் பணியாற்றத் தவறவில்லை.

அதே போன்று அறபு முஸ்லிம் உலக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இஸ்லாமிய அறிஞர்களுடன் எனது உறவுகளை வளர்த்துக் கொண்டு முஸ்லிம் உலகின் உம்மத்தின் சமகால விவகாரங்களில் ஈடுபாடு காட்டவும், மாநாடுகளில், ஆய்வுக் கருத்தரங்குகளகளில், செயலமர்வுகளில் பங்குபற்றவும் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.

குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபிய கத்தார் தூதுவராலயங்களில் அரபு மொழிபெயர்ப்பாளராக கொன்ஸுயூலர் அதிகாரியாக அரசியல் பொருளாதார ஆய்வாளராக சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிற நான் 2005-2007 காலப்பகுதியில் சவூதி அரேபிய ஜித்தா நகரில் இலங்கைக்கான கொன்ஸல் ஜெனரலாகவும் பணியாற்றினேன் அந்த வகையில் எமது தேசத்தின் இருதரப்பு பல் தரப்பு உறவுகளை பலப்படுத்துவதில் மகத்தான பங்காற்றும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

எந்வொரு தலைமையும் தேசியவாழ்வில் இந்த சமூகத்திற்கான தெளிவான நன்கு ஆரயப்பட்ட குறுகிய இடைக்கால நீண்ட கால மூலோபாய திட்டமிடல்களையும் கொண்டிருக்கவோ மேற்கொள்ளவோ இல்லை என்பதனை உணர்ந்த போது கோளாறு எங்கு இருக்கின்றது என்பதனைக் கண்டு கொண்டேன்.

சமூகத்தின் சகல தரப்புக்களையும் உள்வாங்குகின்ற பலமான சிவில் சமூகத் தலைமைத்துவம் ஒன்றிற்காக குரல் கொடுத்தேன், தனிநபர்களது எதேச்சதிகாரம் ஆபத்தானது கூட்டுத் தலைமைத்துவம், சிந்தனைத் தலைமைத்துவம் என சமூகத்திற்கான மூலோபயங்களின் அவசியத்தை 1989 முதல் வலியுறுத்தி வந்தேன்.

முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் பொழுதே மஜ்லிஸ் அல் ஷுரா எனும் கருத்திட்டத்தை உலமா காங்கிரஸ் ஊடாக முன்வைத்தேன், பின்னர் சில காலம் அதன் தலைவராக இருந்த போதும் அந்த சபை அமைப்புகளின் தனிப்பட்ட ஷுரா சபைகள் போல் கட்சியின் ஷூராவாக அல்லது தலைமைகளின் ஷூராவாக மாத்திரமே மாறிப்போனது, அதனை சமூகத்திடம் ஒப்படைக்க முடியாமல் போனது.

என்றாலும் தொடர்ந்தேர்ச்சியான எனது பேச்சுக்கள் சிந்தனைகள் எழுத்துக்களில் போருக்குப் பின்னரான இலங்கையில் சரியான புரிதல்களுடன் ஒத்துப்போன சமூகத்திற்கான பலமான சிவில் சமூக தலைமைத்துவத்தின், ஒருங்கிணைப்புப் பொறிமுறையின் அவசியத்தை உணர்ந்த (என்னைத்தவிர வயதில் இளம்) சுமார் 20 இளைஞர்களுடன் இணைந்து தேசிய ஷுரா சபையை தோற்றுவிக்கும் பணியில் 2011 ஆண்டுமுதல் இறங்கினோம்.

அதன் இலக்குகள் விஞ்ஞாபனம், கட்டமைப்புகள் குறித்து நாடளாவிய சந்திப்புக்களை கல்வி உயர்கல்விச் சமூகத்துடன் மேற் கோண்டோம்.

சமூக ஊடகங்கள் அறிமுகமாகிய காலப்பகுதியில் புதிய தலைமுறையினருக்கு மத்தியில் எனது சிந்தனைகளை கொண்டு செல்வதற்கும் எதிர்கால தலைமைகளை இனம் கண்டு வழிநடாத்துவதற்குமாக அவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்டேன் எனது முகநூல் வட்ஸ்அப் யூ- டியூப் கணக்குகள் எனது உத்தியோகபூர்வ வளைதளம் www.inamullah.net ஆகியவற்றை எனது பாதை மற்றும் பயணத்திற்காக இனம் காணப்பட்ட இலக்குகளோடு பயன்படுத்தியும் வந்தேன் வருகிறேன்.

அவற்றிற்கு வருகை தரும் எவருக்கும் ஆய்வுகள் மற்றும் புலனாய்வு செய்வோருக்கும் எனது சுயசரிதம், ஆளுமை சிந்தனைகள் மற்றும் பணிகளை பங்குபற்றுதல்களை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

தொடரும்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles