Friday, December 2, 2022

உஸ்தாத் மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் கபூஃரி (ரஹிமஹுல்லாஹ்)

ஜாமியாஹ் நளீமியாஹ்வில் கற்கின்ற பொழுதும் விரிவுரையாளராக இருக்கின்ற பொழுதும் உஸ்தாத் மௌலவி எம்.ஜே.எம் றியாழ் (கஃபூரி) அவர்கள் குறித்து ஓரளவு அறிமுகம் இருந்த போதும் 1988 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராக, இஸ்லாமிய விவகாரம், சர்வதேச விவகாரங்கள், உலமாக் காங்கிரஸ், மஜ்லிஸ் அல்-ஷூரா என்பவற்றிற்கு பொறுப்பாக கொழும்பு 12 இல் அமைந்திருந்த தலைமையகத்தில் இருந்த பொழுது அவருடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தேன், நளீம் ஹாஜியார் மீதும் ஜாமியாஹ் நளீமியாஹ் மீதும் அளவிலா பற்றுக் கொண்டிருந்த மௌலவி றியாழ் அவர்கள் நளீமிய பட்டதாரிகள் விரிவுரையாளர்களை அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவில் இணைத்துக் கொள்வதில் கரிசனை கொண்டிருந்தார்.  

அறிமுகமான புதிதில் 1989 என நினைக்கிறேன் மருதானை சாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் இடம் பெற்ற அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் சபைக் கூட்டம் ஒன்றிற்கான அழைப்பையும் கொண்டு வந்து தந்ததோடு அதன் நிறைவேற்று குழுவிற்கு என்னை ஒரு உறுப்பினராக தெரிவு செய்வதற்கு காரணமாகவும் இருந்தார், ஒவ்வொரு முறையும் நிறைவேற்றுக் குழு கூட்டத்திற்கான அழைப்பை தனது ஹன்ட்பாக் தாஸ்தாவேஜுகள் பையில் எடுத்துக் கொண்டு சுச்சரித்த மாவத்தையில் எனது அறைக்கு வந்து தந்துவிட்டுச் செல்வார், அவராகவே அழைப்பிதழ்களை தயார் செய்து இயன்றவரை தானாகவே விநியோகிப்பதோடு ஏனையவற்றை தபால் மூலம் அனுப்பியும் வைப்பார்.  

றியாழ் மௌலவி என்றால் ஜம்மியத்துல் உலமா என்றோ அல்லது ஜம்மியதுல் உலமா என்றால் றியாழ் மௌலவி என்றோ சொல்லுமளவு தனது அர்பணிப்புகளால் பிரசித்தமடைந்திருந்தார், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவைவின் நடமாடும் காரியாலயமாக அவர் திகழ்ந்தார் என இன்றும் உலமாக்கள் அவரை பாராட்டுவார்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தனது ஹன்ட்பாகில் சுமந்து திரிந்தவர் என்றும் சிலர் நன்றியுடன் நினைவு கூறுவர்.

மௌலவி எம்.ஜே.எம் றியாழ் (கஃபூரி) இலங்கை மண் ஈன்றெடுத்த மிகச் சிறந்த முன்மாதிரி ஆலிம் ஆளுமைகளில் ஒருவராவார், 1979 ஆண்டு முதல் சுமார் கால் நூற்றாண்டு காலம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாராக பணிபுரிந்து அதனை இலங்கை முஸ்லிம்களின் சன்மார்கத் தலைமைத்துவமாக நிறுவனமயப் படுத்துவதற்கும் தேசிய சர்வதேச அளவில் பிரதிநிதித் துவப்படுத்துமளவிற்கும் பிரதான பங்காற்றிய ஒரு பெருந்தகை என்பதனை எல்லோரும் அறிவார்கள், ஜம்மியதுல் உலமாவிற்கான முதலாவது தலைமையகம் அவரது முயற்சியாலும் ஜம்மியஹ்வின் முன்னாள் தலைவர் எனது மதிப்பிற்குரிய ஆசான் உஸ்தாத் முஹம்மத் மக்தூம் அஹமத் முபாரக் (கபூஃரி-மதனி) அவர்களது ஒத்துழைப்புடனும் பெறப்பட்டதோடு 25 மாவட்டங்களிலும் ஜம்மியாஹ்ஹ்வின் கிளைகளும் அமைக்கப்பட்டன.

மிகவும் பணிவான, பண்பான கனிவான குணாதிசியங்களை அணிகலன்களாக கொண்டிருந்த மௌலவி எம்.ஜே.எம் .றியாழ் அவர்கள் குறிப்பிட்ட எந்தவொரு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியையும் அமைப்பையும் சாராத நடுநிலை கல்விமானாக அறிஞராக இருந்ததனால் எல்லாத் தரப்பினரதும் மதிப்பிற்கும் கௌரவத்திகும் பாத்திரமானவராக இருந்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குள் அரசியல் ரீதியாகவும் சன்மார்க்க ரீதியாகவும் நிலவிய கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகளாக பிளவுகளாக பிணக்குகளாக பரிணாமம் பெற்ற ஒரு காலப்பகுதியில் முஸ்லிம் சமூத்திற்கு மத்தியில் வேறுபாடுகளுக்கு மத்தியில் இணக்கப் பாடுகளை ஐக்கியத்தை ஏற்படுத்தவும், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு சகிப்புத் தன்மை சமாதன சகவாழ்வு போன்ற நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்க சமகால அரசியல் சனமார்க்க சிவில் தலைமைகளோடு இணைந்து பல முன்னோடி முயற்சிகளை ஈடுபட்ட பெருந்தகையாவார்.

1980 களின் ஆரம்பப் பகுதியில் முஸ்லிம் சமூக ஐக்கியத்தை கட்டி எழுப்பும் நோக்கில் (இன்றைய தேசிய ஷூரா சபை போன்று) அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும் முஸ்லிம் அமைப்புக்களையும் முஸ்லிம் அறிஞர்கள் புத்தி ஜீவிகளையும் ஒருங்கிணைக்கின்ற பொறிமுறை ஒன்றை இத்திஹாதுல் முஸ்லிமூன் என்ற பெயரில் ஸ்தாபிப்பதில் பிதான பங்காற்றியதோடு அதன் ஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் ஷாஃபி மறைக்காருடன் இணைந்து  அதன் செயலாளராகவும் பணியாற்றினார், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டை ஸ்தாபிப்பதிலும் முன்னோடிகளாக இவர்கள் செயற்பட்டமை வரலாறாகும்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனம், இலங்கை அரச மற்றும் தனியார் பதிப்பு இலத்திரணியல் ஊடகங்கள் வழியாக ஒரு இஸ்லாமிய சன்மார்க்க அறிஞராக, சமூகப் பிரதானியாக மகத்தான சேவையாற்றிய மௌலவி றியாழ் அவர்களுக்கு பல்வேறு விருதுகள் கௌரவங்களும் கிடைத்துள்ளன, அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமனம் பெற்றிருந்த அவர், கலபூஷன விருது, ஷம்சுல் உலமா, காத்திமுல் உலமா,  ஷெய்குல் உலமா என பட்டங்களும், இலங்கை முஸ்லிம் விவகார அமைச்சு, சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு, எகிப்து அல் அஸ்ஹர் பலகலைக் கழகம் என்பவற்றின் கௌரவங்களையும் பெற்றிருக்கின்றார்.

அரபு மத்ரஸாக்களின் பாடத் திட்டங்களை ஒருமுகப்படுத்துதல், அஹதியா பள்ளிக் கூடங்களின் பாடத் திட்டங்களை தயார் செய்தல், அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடத திட்டத்தை தயார் செய்தல் என அவரது தேசிய மற்றும் சமூகப் பணிளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

என்றாலும், ஆரம்பக் கல்வியை 5 ஆம் வகுப்போடு இடைநிறுத்திவிட்டு அரபு மதரசாவிற்கு சென்ற ஒரு மாணவன் பின்னர் SSC, HSC, BA, PGDE என தனது கல்வி உயர்கல்வி அமைச்சின் கற்கைகளை தொடர்ந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள பிரஜையாக தலைசிறந்த முமாதிரி ஆளுமையாக எவ்வாறு மாறியுள்ளார், கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதனை புதிய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது வாழ்வின் சில பக்கங்களை சுருக்கமாக தர விரும்புகிறேன்.

உஸ்தாத் மௌலவி முகமது ஜலால்தீன் முகமது றியாழ் (கஃபூரி)   1933 /1/ 25 அன்று கம்பாஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு கொச்சிக்கடை கம்மல் துரை என்ற கிராமத்தில் மர்ஹூம் ஏ.எல்.எம் ஜலால்தீன் தம்பதிகளின் மூத்த புதல்வராக பிறந்தார்கள்.

1938 ஆம் ஆண்டில் கம்மல் துரை முஸ்லிம் வித்யாலயத்தில் (தற்போதைய அல்-ஃபாலாஹ் மகாவித்யாலயம்) தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார், 1943 ஆம் ஆண்டில் மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் சேர்ந்தார் 1951 இல் கபூரியா அரபு கல்லூரியில் அல்-ஆலிம் பட்டத்தை பெற்றார்.  

1952 ஆம் ஆண்டு புத்தளம் சாஹிராக் கல்லூரியில் மௌலவி ஆசிரியர் நியமனம் பெறுகிறார், ஆசிரியராக இருந்து கொண்டே 1954 ஆண்டு அரச முன்பள்ளித் (SSC)  தேர்வுக்கு அமர்ந்தார், பின்னர்    1956 வரை கல்பிட்டியா சிரேஷ்ட  பாடசாலையில்  தனது இடைநிலைப் பள்ளி (HSC)  படிப்பைத் தொடர்ந்தார், பின்னரே அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறுகிறார்.  

பின்னர் கற்பிட்டி அல்-அக்ஸா கல்லூரி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மாவனல்லை சாஹிராக் கல்லூரி, மட்டக்குளிய தமிழ் வித்தியாலயம், கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி, கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆசியர் பணி செய்தார்.

ஏக காலத்தில் பேராதெனிய பல்கலைக்கழகத்தில்  இளங்கலைமாணி (சிறப்பு) பட்டம்  பெற்ற அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின்படிப்பு முதுகலை டிப்ளோமாவும் பெற்றார்.  

கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர், மௌலவி  றியாழ் கொழும்பு பாடத்திட்ட மேம்பாட்டு மையத்தில் பாடநூல் குழுவின் எழுத்தாளராகவும் ஆலோசகராகவும் தனது சேவைகளைத் தொடர்ந்தார்.

1973 ஜனவரி முதல் 1981 டிசம்பர் வரை அவர் கல்வி அதிகாரியாக (தலைமை நிர்வாக அதிகாரி)  பணியாற்றினார். பின்னர் அவர் இஸ்லாம் மற்றும் அரபு கல்வி துணை பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) கட்டுப்பாட்டு தலைமை தேர்வாளராகவும் இருந்தார். இவ்வாறு மௌலவி றியாழ் 17 ஆண்டுகள் கல்விப் பணிப்பாளர் / துணை கல்வி பணிப்பாளராக பணியாற்றினார்.

சிறிது காலம் நோய்வாய்ப் பட்டிருந்த மதிப்பிற்குரிய றியாழ் மௌலவி அவர்கள் 10/12/2013  வபாஃத் ஆனார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லடியாரின் வாழ்வையும் பணியையும் அங்கீகரித்து, குறைகுற்றங்களை மன்னித்து இறைநேசர்களுக்கான உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles