Thursday, December 1, 2022

ஷரீஆ சட்டம் தொடர்பான கர்தினாலின் கருத்துக்கு நான் வரைந்த ஆட்சேபனை மடலும் அவரது விளக்கமும்!

ஷரீஆ சட்டம் தொடர்பான கர்தினாலின் கருத்துக்கு நான் (இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன்) வரைந்த மடலும் கர்தினாலின் விளக்கமும் !

டொக்டர் காவிந்தவுடனான சமீபத்திய நேர்காணலில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஷரீஆ சட்டம் முக்கிய பங்கு வகித்தது என ஷரீஆ சட்டம் தொடர்பில் கருதினால் மல்கம் ரஞ்சித் கூறிய கருத்து ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டிருந்த நிலையில் நான் கருதினால் அவர்களுக்கு 04.12.2020 அன்று அனுப்பிய கடிதத்துக்கான தனது விளக்கத்தை கருதினால் அனுப்பி வைத்துள்ளார்.

கார்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

இலங்கையின் மதிப்புக்குரிய பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் இலங்கை முஸ்லிம்களுக்கு முன்வைத்திருந்த விளக்கமொன்றை 2020 டிசம்பர் 04 ஆம் திகதிய தேசியப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் பண்பாடான பெரும்பான்மை இலங்கை முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளில் இருந்து பிரித்து நோக்கிய துணிச்சலான நிலைப்பாட்டுக்காக இலங்கைப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை இலங்கை முஸ்லிம்கள் மதிப்புடனும் கண்ணியத்துடனும் பார்க்கின்றனர்.

தாக்குதலைக் கண்டிப்பதில் இலங்கை மக்களுடன் உறுதியாக நின்ற அப்பாவி முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான உணர்ச்சிவசப்பட்ட உடனடி எதிர்வினைகளைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கச் செய்வதிலும் அவரது அந்த ஒரு அறிக்கை பெரும்பங்கு வகித்தது.

பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதியாகச் செயற்படும் நிலையில், தேசியப் பத்திரிகையொன்றில் தலைப்பிடப்பட்டிருந்த செய்தி இலங்கையின் முழு முஸ்லிம் சமூகத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஷரீஆ சட்டத்தை இலங்கையின் சட்டமாக மாற்றுவதற்கு முஸ்லிம்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தியும் அச்சுறுத்தியும் பலவந்தப்படுத்துகிறார்கள் என்ற தவறான கருத்தைக் கொடுக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, அதனை யார் செய்கிறார்கள் என்றோ எந்த நிகழ்வை அவர் குறிப்பிடுகின்றார் என்றோ சொல்லாமல் அவர் அதில் முன்வைக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள இந்தக் கூற்று, கொவிட் 19 பெருந்தொற்றை ஒழிப்பதில் முழுத் தேசமும் முயற்சித்து வருகின்ற வேளையில் நாம் நேசிக்கும் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பதற்கு அக்கறை காட்டும் இனவாதக் கூறுகளுக்கு அணிசேர்ப்பதைத் தவிர வேறெதனையும் கொண்டுவரப் போவதில்லை.

உலக அளவிலும் குறிப்பாக காயப்பட்ட இந்தத் தேசத்தினதும் திருத்துவப் பணிக்கு முரணான வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் கையாளப்படும் மற்றுமொரு விவகாரத்தில் தலையிடுமாறு பொதுவான வேண்டுகோளொன்றை முன்வைக்கின்ற ஒரு அரசியல்வாதியுடனான சந்திப்பின் பின்னரே இந்த அரசியல் முனைப்புடைய அறிக்கை வெளியிடப்பட்டது.

கருதினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் கொழும்பு மறைமாவட்ட அலுவலகம் இந்தச் செய்தி குறித்து விளக்கமொன்றை வழங்கும் எனவும், இலங்கையிலுள்ள திருத்துவ பீட தூதாண்மை இந்த விடயத்தில் தலையிட வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

வேதங்கள் மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னாலுள்ள தீய சக்திகளை இனம் காண்பதற்கு இலங்கை அரசாங்கமும் இலங்கையின் சட்ட அமுலாக்கல் துறையும் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என கொழும்பு மறைமாவட்டத்துக்கும் இலங்கையின் சட்ட அமுலாக்கல் துறையினருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் மீண்டும் வலியுறுத்தி உறுதிப்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்த தமது சமூகத்தின் மீதே மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாகவே இலங்கை முஸ்லிம் சமூகம் தமக்கு உரிமை கோர முடியாத ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஈஸ்டர் தாக்குதலைக் கருதுகிறது.

சர்வவல்லமையுள்ள இறைவன் இந்த நாட்டுக்கும் நாட்டின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும், செழிப்பையும் வழங்குவானாக.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

தேசப்பற்றுள்ள ஓர் இலங்கைப் பிரஜை

04.12.2020

கருதினால் மல்கம் ரஞ்சித் வழங்கிய மறுமொழி

அன்புள்ள இனாமுல்லாஹ்,

உங்களது மின்னஞ்சல் 2020 டிசம்பர் 05 ஆம் திகதி கிடைத்தது. பேராயரின் இல்லத்துக்கு டொக்டர் காவிந்த ஜயவர்தன சமுகம் தந்தபோது நான் வழங்கிய நேர்காணல் தொடர்பில் சில தெளிவுகளை முன்வைக்க விரும்புகிறேன்.

ஜயவர்தன அவர்களே என்னைத் தொடர்பு கொண்டு என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார் என்பதையும் நான் அவருக்கு அனுமதி வழங்கினேன் என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படும் பட்டிகலோ கம்பஸ் குறித்து அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் சில விடயங்களை முன்வைக்கவே அவர் வந்தார். அவரது உரிமை என்ற வகையில் அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த விடயங்களை அவர் என்னிடம் முன்வைக்க விரும்பினார். அவரது வேண்டுகோளின் பேரில் அவரைச் சந்திப்பதற்கு நான் அனுமதி கொடுத்தேன்.

எனது அறிக்கையைப் பொறுத்தவரை, நான் ஷரீஆ சட்டத்துக்கு எதிரானவன் என்றோ ஷரீஆ சட்டத்தை பின்பற்ற முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்றோ எங்குமே கூறவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதைத் தீர்மானிப்பது எனது பொறுப்புமல்ல. கிறிஸ்தவர்கள் பத்துக் கட்டளைகளையும் பௌத்தர்கள் பஞ்சசீலத்தையும் பின்பற்றுவது போல முஸ்லிம்களும் தாம் விரும்பும் சட்டமொன்றை பின்பற்றுவதற்காகத் தெரிவு செய்வதற்கு முஸ்லிம்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறன்று சிலரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கோரும் விதமாகவே எனது கூற்று அமைந்திருந்தது, தாமதங்கள் குறித்து நான் எனது அதிருப்தியை வெளியிட்டேன்.

அதுவும் கூட முறையான விசாரணைகள் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களின் உரிமைகள் மிதிக்கப்படுவதாகவும் சிலர் வெளியிட்ட எதிர்ப்பின் காரணமாகவே. விசாரணைகள் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டியதும் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதும் முக்கியமானது. பொறுப்பானவர்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவரா அல்லது ஏனைய மதங்களைச் சேர்ந்தவரா என்பதல்ல முக்கியம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒரு மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியாது.

பட்டிகலோ கம்பஸைப் பொறுத்தவரை நான் கூறியது என்னவென்றால், அது ஒரு பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அது மதம், மொழிகளுக்கு அப்பால் அனைத்து சமூகங்களின் மாணவர்களுக்காகவும் திறந்து விடப்பட வேண்டும் என்பதே.

நான் யாருக்கும் எதிரான எந்தவொரு பாகுபாட்டுக்கும் எதிரானவன் என்பதையும், யாராவது ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் தமது மத, இன அடையாளங்களைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். எமது சில்லறை விவகாரங்கள் அனைத்துக்கும் மேலாக சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படுவது முக்கியமானது.

இலங்கையில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், சட்ட அமுலாக்கத்தில் உள்ள சிலர் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கவும் அரசியல் நோக்கங்களுக்காக உண்மைகளை மறைக்கவும் முயற்சிக்கிறார்கள். யாராவது ஒரு தவறைச் செய்தால், அவர் எந்த அரசியல் கட்சி, இனம், மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எது சரி, எது தவறு என்பதை அணுகுவதில் பக்கச்சார்பின்றிச் செயற்படுவதற்கு நாம் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறோம் ?

2019 ஏப்ரல் 21 சம்பவம் நடந்த உடனேயே முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நான் அவர்களுக்கு மிகவும் தேவையாகவிருந்த பாதுகாப்பை வழங்கினேன் என்பதையும் அவர்களைக் காப்பாற்றினேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இங்குள்ள எந்தச் சமூகத்துக்கும் நான் எதிரானவனல்ல. நான் அனைவருடனும் இருக்கிறேன். ஆனால் வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் இடையில் சகோதரத்துவ வாஞ்சையை இந்த நாட்டில் வளர்ப்பதற்கு நான் ஊக்குவிப்பும் உற்சாகமும் வழங்கி வருகிறேன். நாங்கள் எங்களது வேறுபாடுகளைக் காட்டுவதிலும் அதனை ஊன்றிப் பிடிப்பதிலும் முயற்சிக்கும் காலமெல்லாம் இந்த நாடு தொடர்ந்தும் பாதிப்புக்கே உள்ளாகும். யுத்தத்தின் 30 வருட கால பேரழிவுக்குப் பிறகாவது நம்மைப் பிளவுபடுத்தும் விடயங்களை விட நம்மை ஒன்றிணைக்கும் விடயங்களைப் பற்றி அதிகமாகப் பேசுவதற்கு நாம் கற்றுக் கொள்ள மாட்டோமா ?

நான் ஒரு கத்தோலிக்கன். ஆனால் எனது கத்தோலிக்க அடையாளம் இந்த நாட்டில் பிளவை ஏற்படுத்துவதனை நான் விரும்பவில்லை. அத்தகைய வேறுபாடுகளை வளர்க்கும் சிறப்புச் சலுகைகளைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன்.

மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான நட்பையே நான் எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். அதற்காக நான் துணிந்து நிற்கிறேன். நாமனைவரும், வேதங்களின் மக்களும் ஏனையவர்களும், நம்முடைய வேறுபாடுகளை அழுத்திப் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் நம்மை ஒருங்கிணைக்கும் விடயங்களைக் கற்றுக் கொள்வோம்.

அப்பொழுது நம்மால் அடுத்தவரது அடையாளத்துக்கு மதி்ப்பளிக்க முடியும். குறிப்பாக நமது இளைய சந்ததியினரிடையே உணர்ச்சிகளைத் தூண்டிவிடாமல் ஒரு தேசத்துக்குள் நம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு கற்றுக் கொள்வோம். ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவர்கள் அதனைப் பரந்த பொறுமையுடன் வெளிப்படுத்தினார்கள். எதிர்காலங்களிலும் நாங்கள் இதனைத் தொடர்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.  எம்மைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் அளவற்ற அருளாளனான எல்லாம் வல்ல இறைவனை நம்புபவர்கள். நாங்களும் அதனையே நம்புகிறோம். இதில் நாங்கள் ஒன்றாய் இணைந்திருப்போம்.

கடவுள் எமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அருள்பாலிப்பாராக.

உங்களது உண்மையுள்ள,

மல்கம் கர்தினால் ரஞ்சித், கொழும்பு பேராயர்.


05.12.2020

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles