கடந்த ஒன்பது மாதங்களாக உலக சுகாதார அமைப்பினதும் உலகலாவிய வைரஸ் நிபுணர்களினதும் சுற்றுச்சூழல் புவியியல் நிபுணர்களினதும் வழிகாட்டல்கள் பரிந்துரைகளை அப்பட்டமாக மீறி கொவிட் 19 நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம்களது ஜனாஸாக்களை அவர்களது பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் இலங்கை அரசு கொளுத்தி வந்தமை அறிந்த விடயமே!
இன்றுவரை சர்வதேச விஞ்ஞான வழிகாட்டல்களை, அடிப்படை மனித உரிமை நியமங்களை விஞ்சிய (இனமதவெறி அரசியல்) வழிகாட்டல்களை விடாப்பிடியாக திணித்த அதிமேதாவிகளின் பெயர்பட்டியல் வெளியிடப் படவுமில்லை.
முஸ்லிம் அரசியல் சன்மார்க்க சிவில் தலைமைத்துவங்கள் விடுத்த வேண்டுகோள்களை மதிக்காது விடாப்பிடியாக இருந்த அரசு தனது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காண வேண்டிய கட்டாய நிலைக்கு இப்பொழுது தள்ளப் பட்டிருக்கின்றது.
இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் கறைபடிந்த ஒரு நிகழ்வாகவே இந்த விடயம் பதியப்படுகிறது, உச்சநீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படையுரிமை மீறல் வழக்கில் தீர்வு கிட்டுமென எதிர்பார்திருந்த முஸ்லிம்களுக்கு காரணங்கள் கூறப்படாமலே வழக்கு நிராகரிக்கப்பட்டமை பேரதிர்சியையும் கவலையையும் தந்தது.
இந்த நிலையில் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமது நிலைப்பாடாடை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எடுத்த எதிர்காகட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஐக்கிய மக்கள் உற்பட சில எதிர்க் கட்சிகளும் பெரும்பான்மையின புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் பகிரங்கமாக முஸ்லிம்களது அடிப்படை சமய சம்பிரதாய உரிமைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
அதேவேளை இலங்கையில் உள்ள அரபு முஸ்லிம் நாட்டுத் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளிட்டிருந்ததோடு முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பினூடாகவும் அரசின் கவனத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் ஐ நா மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை உற்பட பல சர்வதேச அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக ஊடகங்களூடாக முஸ்லிம் இளைஞர்கள் அரசிற்கும் தமது மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக வெளியிட்ட பலத்த ஆட்சேபனைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் அமைப்புக்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் மேற்கொண்ட அழுத்த முயற்சிகள் இலங்கையில் சுயேட்சையாக ஜனசாக்களை கொளுத்துவதற்கு உடன்பட மறுத்த சிவில் புறக்கணிப்பு நடவடிக்கைகள் அரசிற்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களது பிரேதங்களை எரிப்பதில் எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள் இறைவனின் நாட்டத்தில் இருந்த மற்றுமொரு நெருக்கடியாக இருந்தது.
இந்த நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களது விடயத்தில் தமது அனுதாபத்தை வெளியீட்டு பகிரங்க ஆதரவை வழங்க முன்வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக 2021 மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் 45 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைத் தூதுக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்தல் அரபு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுதல் போன்ற இராஜதந்திர கரிசனைகளும் இந்த அரசை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.
கொவிட் 19 கொள்ளை நோய் வடித்த காலம் முதல் அதனை இனமதவெறி காழ்ப்புணர்வு சக்திகள் மற்றும் கூலிப்படை ஊடகங்கள் தமது உள்நாட்டு வெளிநாட்டு எஜமானர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப முஸ்லிம் விரோத அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக பயன்படுத்தியமை பகிரங்க இரகசியமாகும்.
அதேபோல் அரசியல் தேவைகளுக்காக தம்மால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட இனமதவெறி பூதத்தின் பிடியிலிருந்து வெளியேறுவதற்கு சில தரப்புக்களுக்கு அவகாசமும் தேவைப்பட்டது.
இந்த நிலையில் பறிக்கப்பட்ட ஒரு உரிமையை வென்றெடுப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல்பரிமாண கூட்டு முயற்சிகளுக்குமான பெருமையை தமது சாதனையாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற முரசிகளும் முண்டியடிப்புக்களும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியமையும் மறுக்க முடியாத உண்மையாகும்.
தற்பொழுது நிலத்தடி நீர்மட்டத்தை கருத்தில் எடுத்து ஜனாசக்களை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை கண்டறியுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன..
இன்ஷா அல்லாஹ் ஜனாசக்களை நல்லடக்கம் செய்து விட்டு தொடர்வோம்..!