Tuesday, October 19, 2021

இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) முழு மனித குலத்திற்குமான கருணையின் தூதராவார்!

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான (பிரபஞ்ச நியதியிலுள்ள நிலையான) சமர் அன்றி வேறு ஒரு சமர் இஸ்லாத்தில் இல்லை!

நபியே! உங்களை முழு மனிதகுலத்திற்கும் கருணையின் தூதராகவே (ரஹ்மத்) ஆகவே நாம் அனுப்பிவைத்தோம்!

அருள் கொடை என சுருக்கமாக மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் “ரஹ்மத்” என்றால் கருணை அன்பு பாசம் நேசம் என பரந்துபட்ட ஒரு கருத்தை கொண்டுள்ளது! எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹீம், ரஹ்மான் என்ற இரண்டு பிரதான பன்புகளைக் கொண்டுள்ளான், அனைத்துப் படைப்பினங்கள் மீதும் அபரிமிதமான அன்பை கருணையை கொண்டுள்ளதால் அவன் “ரஹ்மான்” ஆகவும், விசுவாசிகள், நல்லடியார்கள் மீது தனிப்பட்ட கருணையை கொண்டுள்ளதால் “ரஹீம்” ஆகவும் அழைக்கப்படுவதாக தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

அல்குர்ஆனின் அனைத்து ஸூராக்களையும், பகுதிகளையும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்யும் படி கட்டளையிட்டுள்ள அல்லாஹ் அனைத்துக் கருமங்களையும் அதே நாமம் கொண்டே ஆரம்பம் செய்யுமாறும் உபதேசம் செய்கிறான்.

மனித வர்க்கத்திற்கான கருணையின் தூது அவர்களது உலக வாழ்வில் அன்பையும் அறத்தையும் அமைதி சமாதானத்தையும் போதிக்கும் அதேவேளை நிலையான மறுமை வாழ்விலும் அவர்களுக்கு விமோசனத்தை தருவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

அன்பையும் அறத்தையும் அமைதி சமாதானத்தையும் சமத்துவத்தையும் சகவாழ்வையும் தன் வாக்காலும் வாழ்வாழும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டிய கருணையின் தூதர் “உயர்ந்த மானுட பண்புகளை பூரணப்படுத்தவே தான் அனுப்பப் பட்டுள்ளேன்” என்றார்கள்.

அத்தகைய வாழ்வு நெறி இஸ்லாம் எனவும் அதனை ஏற்று வாழ்வோர் முஸ்லிம்களாகவும் அழைக்கப்படுவதிலும் ஒரு செய்தி இருக்கிறது, அசத்தியம், அநீதி அக்கிரமங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகும் மனித குலம் இழந்து தவிக்கும் அமைதி சமாதானத்தை நிலைநிறுத்தி “ஸலாம்” எனும் சாந்தி சமாதானத்தை நிலைநிறுத்துவதும் மனித குலத்திற்கான கருணைத் தூதின் பிரதான பணியாகும்.

தனது நாவினாலும் நடத்தையாலும் பிறருக்கு தீங்கிழைக்காதவரே முஸ்லிம் ஆக இருக்க முடியும் என கருணையின் தூதர் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

“நபியே நிச்சயமாக நீங்கள் உயரிய பண்புகளைக் கொண்டுள்ளீர்கள்” நீங்கள் பண்பு ஒழுக்கமில்லா கடின சித்தம் கொண்டவராக இருந்திருந்தால் உங்களை விட்டும் அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள்” என்றெல்லாம் இறை தூதர் (ஸல்) அவர்களது குணாதிசயங்கள் குறித்து கூறும் அல்குர்ஆன் “நிச்சயமாக இறைதூதரில் உங்களுக்கு சிறந்த முன்மாதிரி இருக்கின்றது” என விசுவாசிகளுக்கு உபதேசம் செய்கிறது.

ஒருவருக்கொருவர் “ஸலாம்” சொல்லிக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு தனியாளும் அமைதியை சமாதானத்தை தமக்குள் போதித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்ட கருணையின் தூதர் அன்பு அறம் சார் நெறிகளற்றோர் தம்மைச் சார்ந்தவரல்லர் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்.

ஒருவரது உடல் பொருள் மானம் அனைத்துமே அடுத்தவருக்கு ஹராமானவை தீண்டத் தகாதவை, ஒருவரது உயிரை கொல்வது முழு மனித வர்க்கத்தையும் அழிப்பதற்கு சமனாகும், அதேபோன்று ஒரு உயிரை வாழ்விப்பது முழு மனித வர்க்கத்தையும் வாழ வைப்பதற்கு சமனாகும்!

இஸ்லாம் எனும் பரிபூரணமான வாழ்வு நெறியை பலவந்தமாக திணிக்குமாறோ, வன்முறைகள் கொண்டு பரப்புமாரோ அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிட்டதில்லை, மாறாக அறிவுபூர்வமாக, நல்லுபதேசங்கள் மூலமும், அழகிய பிரயோகங்களைக் கொண்ட கருத்தாடல்கள்மூலமும் அல்லாஹ்வின் அறநெறியின் பால் அழைக்குமாறே அன்பு நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப் பட்டது.

தர்மம் அதர்மம், சத்தியம் அசத்தியம், நீதி அநீதி என்பவற்றிற்கிடையிலான தொடர்ந்தேர்சியான சமர் பிரபஞ்ச நியதிகளுடன் தொடர்புடைய நிலையான சமராகும், அது ஒரு இறைதூதரின் வாழ்வுடன் மட்டுப்படுவதில்லை, ஆதம் ஹவ்வா உலகிற்கு வந்ததது முதல் அனைத்து இறை தூதர்களும் சத்திய வழி நின்றவர்களும் தீய சக்திகளால் சவாலுக்கு உற்படுத்தப் பட்டனர்.

அதே தொடரில் தான் இன்றும் இஸ்லாமும் இறைதூதரும் அல்குரானும், ஷரீஆவும், முஸ்லிம்களும் சவாலுக்கு உற்படுத்தப் படுகின்றனர், அநீதி அக்கிரமங்கள் அராஜகங்களை அரங்கேற்றும் தீய சக்திகளின் மேலாதிக்கத்திலிருந்து மனித குலத்திற்கு விடிவையும் விமோசனத்தையும் பெற்றுத்தருகிற கருணையின் தூதினை சுமந்துள்ள ஒரு சமுதாயம் கைர உம்மத் ஆக சிறந்த சமுதாயமாக இறைவனால் போற்றப்படுகிறது.

ஆட்சி அதிகாரங்களுக்காக மேலாதிக்கம் செலுத்தும், அக்கிரமம் அராஜகம் புரியும் சக்திகளால் சத்தியத்தின் பேரொளியை வாயினால் அணைத்துவிட முடியாது, கருணையின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆட்சி அதிகாரங்களை விரும்பிய மன்னராக அன்றி கடைக்கோடி மனிதராகவே எளிமையாக வாழ்ந்து காட்டினார்கள்.

நிச்சயமாக சத்தியம் மிகைத்து அசத்தியம் அழிந்தே தீரும், ஆக்கிரமிக்கப் படும் பூமிகளிலும், அக்கிரமக் காரர்கள் ஆட்சி புரியும் பூமிகளிலும் ஆரவாரமின்றி சத்தியத்தின் பேரொளி ஒளிவிட்டுப் பிரகாசிக்கவே செய்யும், கருணையின் தூது மனித மனங்களில் ஊடுருவி ஆட்சி புரியும், அதுவே பிரபஞ்ச நியதியுமாகும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்  (10.10.2021)

இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) தான் ஒரு மன்னராகவோ செல்வந்தராகவோ வாழ்வதனை ஏன் விரும்பவில்லை?  

ஒரு முறை இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அமர்ந்திருக்கின்ற நிலையில் மற்றொரு வானவர் வருகை தருகின்றார். ஆச்சரியமாக அவரைப்பார்த்த இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஜிபரயீல் (அலை) அவர்கள், படைக்கப்பட்டதற்கு பின்னர் இதுவே இந்த வானவர் முதன் முறையாக உலகிற்கு அனுப்பப் பட்டுள்ளார், அல்லாஹ்விடமிருந்து பிரத்தியேகமான ஒரு செய்தியை கொண்டுவந்துள்ளார், நீங்கள் உமது இரக்ஷகனுடன் பணிவாக நடந்து கொள்ளுங்கள் என ஆலோசனை கூறுகிறார்கள்.

வருகை தந்த வானவர் இறைதூதரைப் பார்த்த்து ஒரு மன்னராகவும் நபியாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு சாதாரண அடியாராகவும் நபியாகவும் இருக்க விரும்புகிறீர்களா? என கேட்கிறார்கள். உடனே இறைதூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு சாதாரண அடியாராகவும் நபியாகவும் இருக்கவே விரும்புவதாக கூறிவிடுகிறார்கள்.

ஆட்சியை அதிகாரத்தை செல்வங்களை அவர்கள் நிலையற்ற இம்மை வாழ்விற்கான சாதனங்களாக சுகபோகங்களாக (சோதனைகளாக) பார்த்த இறைதூதர் (ஸல்) அவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வின் சுகபோகங்களையே தேர்ந்தெடுக்கின்றார்கள்.

ஒரு முறை உமர் ரழி அவர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் காண வருகிறார்கள், தனது வீட்டிற்குள் தரையில் ஈச்சம் ஓலைகளால் வேயப்பட்ட ஒரு பாயில் படுத்திருந்த முஹம்மத் ஸல் எழுந்திருக்கிறார்கள் அவரது மேனியில் ஓலைகளின் அடையாலம் பதிந்திருக்கிறது, தோலினால் செய்யப்பட்டு காய்ந்த சருகு புற்களால் நிரப்பப் பட்ட தலையணை காணப்பட்டது, வீட்டின் சுவற்றில் தோல்கள் கொழுகப்பட்டிருந்தன, வீட்டினுள் தோலை பதப்படுத்துவற்கான குர்ழ் எனும் ஒருவகை இலைகள் குவிக்கப் பட்டிருந்தன..

அல்லாஹ்வின் தூதரே நீங்கள் தரையில் பாயில் படுத்திருக்க உரோம பாரசீக மன்னர்கள் கைஸரும் கிஸ்ராவும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என உமர் ரழி வினவ, அவர்களுக்கு துன்யாவும் எமக்கு ஆகிராவும் தரப்பட்டிருக்கிறது என இறைதூதர் (ஸல்) பதிலளித்தார்கள்.

இதே கேள்வி விசுவாசிகளின் உள்ளத்தில் ஏற்படுவது இயல்பானதே, பிரபஞ்சம், உலகம் வாழ்வு மரணம் இம்மை மறுமை போன்ற இன்னோரன்ன விடயங்களை ஒரு விசுவாசி எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணமாகவே இறைதூதர் ஸல் அவர்கள் தனது வாக்கையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டார்கள் அதுவே அல்லாஹ்வின் நாட்டமாகவும இருந்தது.

இறைதூதர் ஸல் அவர்கள் ஒரு துறவியாகவோ சந்நியாசியாகவோ துன்யா வாழ்வைத் துறந்தவர்களாகவோ இருக்கிவில்லை அவர் அன்றைய சமூகத்தில் இருந்த வாழ்வாதார தொழில்களை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கிற ஒரு மனிதராகவே இருந்தார்கள். ஷாம்தேசத்திற்கும் ஏனைய தேசங்களிற்கும் அரேபிய தீபகற்பத்தினூடாக செல்கிற வணிக கரவான்கள் மக்கா மதீனா போன்ற பல நகரங்களை வர்த்தக மையங்களாக கொண்டிருந்தன.

நுபுவ்வத்திற்கு முன்பிருந்தே அத்தகைய கரவான்களில் பயணித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இறைதூதர் ஸல் அவர்கள் கதீஜா நாயகியின் வாணிப நடவடிக்கைகளை பொறுப்பேற்று செய்தார்கள் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நுபுவ்வத்திற்குப் பின்னரும் அவரது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அதே போன்றே அன்றைய நபித் தோழர்களும் அன்றாடம் உழைப்பவர்களாகவே இருந்தார்கள், மிகப்பெரும் தனவந்தர்களும் இருந்தார்கள், ஜும்மாஹ் தினங்களில் கூட தொழுகைக்காக அழைக்கபாபட்டால் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் தொழுகை நிறைவுற்றவுடனேயே புறப்பட்டுச் சென்று அல்லாஹ் அருளியுள்ள செல்வங்களை திரட்டிக் கொள்ளுமாறே அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.

செல்வத்தை முறையாக திரட்டுதல் முறையாக கையாளுதல் முறையாக நிர்வகித்தல் முறையாக செலவு செய்தல் போன்ற அனைத்து விடயங்களும் அல்குர்ஆன் சுன்னா மூலம் எமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன, உலகிலேயே அறிமுகமான முதன்மையான நீதியான நேர்மையான பொருளாதார நிதியியல் சித்தாந்தங்களை இறைதூதர் ஸல் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த உலக வாழ்வு மறுமைக்கான விளை நிலம் என்பதனை தனது வாக்காலும் வாழ்வாலும் இறைதூதர் ஸல் அவர்கள் இந்த உம்மத்திற்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை செல்வம் செல்வாக்கை தனது பாதங்களிற்கு கீழ் வைத்துக் கொண்ட கருணை நபி உலகின் கடைக்கோடி மனிதனின் எளிமையான வாழ்வையே தேர்ந்தெடுத்ததன் மூலம் இவ்வுலக வாழ்வின், அடைவுகளின் யதார்த்தத்தை உலகறியச் செய்தார்கள்.

பாயில் படுத்துறங்கி எழுந்த இறைதூதரின் (ஸல்) மேனியில் பதிந்திருந்த ஓலைகளின் அடையாளம் கண்டு தங்களுக்கு ஒரு மெத்தையை செய்து தரட்டுமா என்று கேட்ட தோழர்களிடம்; ஒரு மரநிழலில் தங்கிச் செல்லும் வழிப்போக்கன் போன்றவன் நான்; உலக வாழ்வு அத்தகையதே என்றார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்  (08.10.2021)

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles