முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் சவால்களுக்கு பின்னால் உள்ள அரசியலும், எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கும் எமது அரசியலும்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கட்விழ்த்து விடப்படுகின்ற காழ்ப்புணர்வு பரப்புரைகள், வன்முறைகள், அநீதிகள் அராஜகங்களுக்கு பின்னால் தேசிய பிராந்திய, பூகோல அரசியல் பொருளாதார இராணுவ இராஜதந்திர மூலோபாயங்களே இருக்கின்றன.
துரதிட்டவசமாக களத்தில் நின்று சவால்களின் வகையறிந்து முகம் கொடுப்பதற்கு தேவைப்படும் பிரதான உத்திகளும் யுக்திகளும் சாதனங்களும், நிபுனத்துவங்களும், ஆள் பொருள் வளங்களும் இல்லாத ஒரு கையாலாகாத சமூகமாகவே நாம் இருக்கின்றோம்.
பரப்புரைகளுக்கு பதில் அறிக்கைகள் விடுவதும், வன்முறைகளுக்கு கண்டன அறிக்கைகள் விடுவதும், அவசர சந்திப்புக்கள், திடீர் விஜயங்கள் என ஆளாய் பறப்பதும் அவ்வப்போது எதிர்வினையாற்றுவதும் அவற்றிற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் கொடுப்பதும் மாமூலான நடவடிக்கைகள் ஆகிவிட்டன.
போராட்ட யுக்திகள் அறியாது உஷார் மடையர்களாக எதிர்வினையாற்றும் சமூகமாக இருப்பதனால் எதிரிகளின் சதிவலைகளில் தாமாகவே சென்று சிக்கித் தவிக்கும் நிலைதான் இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது என்று சொன்னாலும் மிகையாகாது.
மேற்படி சவால்களை எதிர்கொள்ள ஒரு சிறுபான்மைச் சமுகமாக உடனடி, இடைக்கால நீண்ட கால அரசியல் இராஜதந்திர மூலோபாய நகர்வுகளை திட்டமிட்டு தெளிவான தேசிய நிகழ்ச்சி நிரலில் சமூகத்தை வழிநடாத்தும் கடமையிலிருந்து எமது சிவில் சன்மார்க்க அரசியல் தலைமைகள் தவறியுள்ளன.
எமது சமூக உள்ளக அரசியலை எவ்வாறு கையாள்வது, ஏனைய சமூகங்களுடனான பிராந்திய தேசிய அரசியலை எவ்வாறு கையாள்வது, ஒரு தேசமாக புவி அரசியலை எத்தகைய பரிமாணங்களில் கையாள்வது என எத்தகைய அறிவும் சாணக்கியமும் சாமர்த்தியமும் பிரக்ஞையும் இல்லாத மொத்த மற்றும் சில்லறை அரசியல் வியாபாரத்தையே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பாக கடந்த மூன்று தசாப்த கால முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் எரிகிற வீட்டில் பிடுங்குகிற அல்லது கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கின்ற தேசிய அரசியலையும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற சமூக அரசியலையுமே செய்துவந்திருப்பதனை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் பின்விளைவுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
ஊழல் மோசடியின், வங்குரோத்தின் உச்சகட்ட அரசியல் கலாசாரத்தை உள்வீட்டில் சந்தைப்படுத்தி போராட்ட அரசியலை சோரம் போகும் சரணாகதி சூதாட்ட அரசியலாக்கிய வரலாற்றுப் பெயரும் பெருமையும் நம் சமுதாய குட்டி சுல்தான்களையே சாரும்.
முஸ்லிம் சமுகத்தின் இருப்பு பாதுகாப்பு அடிப்படை உரிமைகள், சமய கலாசார தனித்துவங்கள் மாத்திரமன்றி தேசத்தின் சுயாதிபத்தியம், ஐக்கியம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார அபிவிருத்தி என சகல துறைகளிலும் பங்களிப்புச் செய்வது எமது தார்மீக பொறுப்பு கடைம என்பதனை உணராத அறிஜீவிகளை கொண்ட மலட்டுச் சமூகமாக நாம் இருக்கின்றோம்.
எமது தொழுகை, நோன்பு, ஸக்காத்து, ஹஜ்ஜு மற்றும் பர்ழு ஐன் பர்ழு கிபாயா கடமைகள் போல் சமூக தேசிய வாழ்வில் ஒரு உம்மத்தாக எமது அறப்(போராட்டம்)பணி எதுவென அறியாத அல்லது அறிந்தும் உணர மறுக்கின்ற கடமை பொறுப்புணர்வற்ற ஏட்டுச் சுரைக்காய் சமூகமாக நாம் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றோம்.
தலைமுறை இடைவெளியை விசாலமாக்கி புதிய தலைமுறைகளுக்கு வழிவிடாது சூதாட்ட அரசியலில் ஏகபோகம் கொண்டாடும் எதேச்சதிகார ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து அரசியல் அமானிதத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரலாற்றுக் கடமையிலிருந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு சமூகத்தவராகவும் தேசத்தவராகவும் நாம் தவறி விடுகின்றோம்.
இனியும் இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் அதைத் தொடர்ந்து வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் விழுமிய அரசியலில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ள இளம் தலைவர்கள் களமிறங்கி வரலாறு படைக்க முன்வரவேண்டும்!
இன்ஷா அல்லாஹ்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் (11.10.2921)