அரிசி, கோதுமை மா, சீனி, பால்மா, எரிவாயு விலையேற்றம் காரணமாக சகல உணவு பான வகைகளினதும் விலை அதிகரிப்பது சாதாரண விடயமாகும்.
அதே போன்று எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் பொழுது போக்கு வரத்து செலவினங்கள் மாத்திரமன்றி சந்தைப்படுத்தல் செலவினங்களும் அதனூடாக பொருட்கள் சேவைகளின் விலைகளும் கட்டணங்களும் அதிகரிக்கின்றன.
அவற்றோடு மக்கள் பொருட்கள் சேவைகளுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தும் வரிகளும் அதிகரிக்கின்றன.
வாழ்க்கைச் செலாவணி அதிகரிக்கின்ற பொழுது தொழிலாளர் ஊழியர்கள் சிற்றூழியர்கள் என சம்பளம் கொடுப்பனவுகளும் அதிகரிக்கின்றன.
அரச தனியார் ஊழியர்கள் வாழ்க்கைச் செலாவணி உயர்வை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு போராட்டங்கள் நடத்தும் போது அரசு மீண்டும் வருவாயை அதிகரிக்க பொருட்கள் பண்டங்களின் விலைகளில் கை வைப்பதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதால் மீண்டும் மக்கள் மீதான சுமை அதிகரிக்கிறது.
அரசு உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் பொழுதும் மீளச் செலுத்தும் பொழுதும் பணவீக்கம் அதிகரிப்பதாலும் பணத்தின் பெறுமதி குறைவதால் பண்டங்களின் சேவைகளின் கட்டணங்களும் விலைகளும் அதிகரிக்கின்றன.
அபிவிருத்தி நிதிகளை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி உறுப்பினர்கள், அரச அதிபர்கள், கொந்தராத்துக் காரர்கள் என பல தரப்பட்டோர் கையாடுவதால் ஏற்படுகின்ற நேரடி மறைமுக உடனடி நீண்ட கால இழப்புக்கள் பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்தில் வரிவிதிப்புகளில் முடிவடைகின்றன.
அதே போன்று தேசத்தின் தேவைக்கு மிஞ்சிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெள்ளை யானை எனப்படும் மாகாண சபை உறுப்பினர்கள், இரட்டிப்பாக்கப்பட்டுள்ள ஊராட்சி நகராட்சி உறுப்பினர்கள் அவர்களுக்கான சம்பளங்கள் சலுகைகள் கொடுப்பனவுகள் என சகல செலவினங்களும் மக்களது வயிற்றில் அடிக்கின்றன.
அரசாங்கம் செல்வாக்கு இழக்கின்ற பொழுது அபிவிருத்தி நிதியென்ற பெயரில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளூடாக அடிமட்ட அடியாட்கள் வரை சென்றடைய பட்ஜட் மூலம் ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி நிதியும் பொருட்கள் பண்டங்களினூடாகவும் முதலாளி இடைத்தரகர் மாஃபியாக்களூடாகவுமே திரட்டப்படுகின்றன.
வாழ்க்கைச் செலாவணி அதிகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் போதுதாமல் இருப்பதனால் ஒருங்கிணைந்த போராட்டங்கள் இல்லாமல் போயிருக்கிறது.
இலங்கையில் மக்கள் போராட்டம் என்றால் அரசியல் மயமாகும் தொழிற்சங்கங்களின் அரச உத்தியோகத்தர்களின் போராட்டங்கள் மட்டும் தான், ஆனால் பெரும்பான்மையான மக்கள் தொகையை பாதிக்கும் வாழ்க்கைச் செலாவணி சார் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை, சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளும் விலைபோய்விடுகின்றனர்.
சந்தையில் கேள்வி நிரம்பலை நுகர்வோர் தீர்மானிப்பதன் மூலம் விலைகளை ஒரு சில மாதங்களில் குறைக்க முடியும்.
பால்மா தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கடைப்பிடித்த மாற்று வழிகளை இயன்றவரை தொடர்வதன் மூலம் சந்தையில் அதற்கான கேள்வியை குறைக்க முடியும்.
கிராமப்புறங்களில் ஆட்டுப்பால் பசும்பால் பாவனையை அதிகரிப்பதன் மூலம் பால்மா எனும் பெயரில் விற்கப்படும் இரசாயன மற்றும் செயற்கை புரதங்கள் சேர்க்கப்பட்ட சக்கை நிறமூட்டி மாவின் தேவையை குறைக்க முடியும்.
தாய்ப்பாலின் பின்னர் குழந்தைகளுக்கு அங்கர் பால் எனும் மாயையிலிருந்து தாய்மாரின் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி பதிலீடுகளில் கவனம் செலுத்துதல் ஆரோக்கியமானது.
இடைத்தரகர்களின் அரிசி மாஃபியாவில் இருந்து விடுதலை பெற சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு சந்தைப்படுத்தல் வலையமைப்பை ஏற்படுத்த புதிய தொழில் முனைவர்கள் முன்வர வேண்டும்.
எரிவாயு பாவனையை பாதியளவிலாவது குறைப்பதற்கு இயன்றவரை முயற்சிக்க வேண்டும், தட்டுப்பாடு இருந்த காலகட்டத்தில் கடைப்பிடித்த சிக்கனமான அணுகு முறைகளை தக்கவைத்துக் கொள்வது நல்லது.
மண் எண்ணை அடுப்பு, கிராமங்களில் விறகு, உமி அடுப்பு என்பவற்றை பயன்படுத்துவதன் மூலம் குறுகிய காலத்தில் எரிவாயு விலையை குறையச்செய்ய முடியும்.
நகர்புறங்களில் ஒரே சமையலின் பொழுது வெளியேறும் கொதிநீராவியின் மூலம் பாதியளவு காய்கறிவகைகளை பதப்படுத்தி விட்டு சமைக்கும் முறைகளை கையாள வேண்டும்.
இளைஞர்கள் தமக்கு முடியுமான பிரதேசங்களில் இயற்கை எரிவாயு உற்பத்தி பயன்பாட்டை கண்டறிந்து தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாக மாறிவருகிறது.
பொதுவாக அத்தியாவசிய தேவைகளோடு சில பண்டங்களின் பாவனைகளை மட்டுப்படுத்திக் கொள்வதும் வாழ்க்கைச் செலாவணி உயர்வை கருத்தில் கொண்டு சிக்கனத்தை கடைப்பிடிப்பதும் விரயங்களை தவிர்ப்பதும் கட்டாயமாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
12.10.2021