நபித் தோழர் முஆத் இப்னு ஜபல் (ரழி) இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம், என்னை சுவனத்தில் கொண்டு சேர்க்கும் நல் அமல் ஒன்றை கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள்..!
சுவன வாழ்வை அடைவது அல்லாஹ் (அவனது அன்பை திருப்தியை வெல்வதில் ஆர்வமுள்ள தான்) நாடியவர்களுக்கன்றி இலகுவான காரியமல்ல அதற்கு அல்லாஹ்வின் அருள் வேண்டும் என கூறி விட்டு அதற்கான சில பிரதான தகைமைகளை சொல்கிறார்கள்:
நீ அல்லாஹ்விற்கு இணைவைக்காது வழிபட வேண்டும், தொழுகையை நிலைநிறுத்த வேண்டும், நோன்பை நோற்க வேண்டும், (வசதி வரின்) ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். அவை இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் ஆகும்.
அதற்கு மேலதிகமாக அபரிமிதமான நன்மைகளை அள்ளித்தரும் இறையன்பு அருகாமையை பெற்றுத் தரும் மற்றும் சில விடயங்களை சொல்லித் தருகிறார்கள்:
நோன்பு (தீமைகளில் இருந்து ஒரு விசுவாசியை காக்கும்) கேடயமாகும்.ஸதகா தான தர்மம் நீர் நெருப்பை அணைத்து விடுவது போல் பாவங்களை போக்கி விடுகிறது.இராத் தொழுகை (கியாமுல் லைல் – தஹஜ்ஜுத்) இறை நெருக்கத்தை ஏற்படுத்து கிறது என்று கூறி விட்டு ஸூரதுஸ் ஸஜ்தாவின் கீழ் காணும் வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்கள்.
“அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.” (ஸூரதுஸ் ஸஜ்தா 16:17)
பின்னர், உமக்கு நான் மூன்று முக்கிய விடயங்களை கூறுகின்றேன்:
வாழ்வில் தலையாய அடிப்படை அம்சம்!
அசைக்க முடியாத தூண்!
அனைத்திற்கும் உச்சம்!
முற்று முழுதாதாக அல்லாஹ்விற்கு அடிபணிந்த முஸ்லிமாக இருப்பது தான் தலையாய அடிப்படை அம்சம்!
ஐவேளை தொழுகைகளையும் நிலைநிறுத்துவது தான் (இஸ்லாமிய வாழ்வெனும் அழகிய கட்டடத்தின்) தூண்!
சத்தியத்தை நிலைபெறச் செய்து அசத்தியத்தை ஒழிக்க அயராது உழைக்கும் அறப்பணி “ஜிஹாத்” அவற்றின் உச்சமாகும்!
இவ்வாறு சுவனபதிக்கு இட்டுச் செல்லும் பர்ழான நபிலான, பிரதான மற்றும் பிரத்தியேகமான வழிமுறைகளை சொல்லித் தந்த இறைதூதர் (ஸல்) அவர்கள் இறுதியாக மற்றொரு எச்சரிக்கையை சொல்லித் தருகிறார்கள்.
முஆதே!
சொல்லப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் கட்டிக் காத்துக் கொள்கின்ற ஒரு விடயம் இருக்கிறது, அது தான் இது என நாவை இறைதூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள்!
நாம் பேசுகின்றவை குறித்தெல்லாம் வினவப்படுவோமா? யா ரஸூலல்லாஹ் என கேட்கவே, உமது தாய்க்கு நீர் இல்லாமல் போயிருத்தல் வேண்டும்…(இது ஆச்சரியத்தை வெளிப்படுத்த அன்றைய அறபு வழக்கில் இருந்த ஒரு பிரயோகம், நபியவர்கள் எவரையும் சபித்ததில்லை)
முஆதே! மனிதர்களை அதிகமாக நரகில் முகம்குப்புற தள்ளிவிடுவது நாவு ஏற்படுத்தும் தீ வினைகள் தவிர வேறதும் உண்டோ…?!
என நாவினை பேணி மனிதர்களை நோவினை செய்யாது வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கை விடுத்தார்கள் எமது உயிரிலும் மேலான தலைவர் இறைதூதர் (ஸல்) அவர்கள்.
(ஸுனன் திர்மிதி – ஸஹீஹ்/ஹஸன்)
சுவர்கத்திற்கு செல்வதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்த இறை தூதர் ஸல் அவர்கள், எல்லாத் தகைமைகளும் பெற்ற பின்பும் நாவினாலும் நடத்தையினாலும் பிறருக்கு தீங்கிழைப்பவர் எவ்வாறு சுவனம் செல்ல முடியும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்கள்.
பொய், புறம், கோல், அபாண்டம், அவதூறு சொல்தல், மானபங்கப் படுத்தல், இட்டுக்கட்டுதல், கேலி செய்தல், மனதை காயப்படுத்தும் பட்டப்பெயர்கள் சூட்டல், குதர்க்க வாதங்கள், உறவுகளை பிரிக்க சதி செய்தல், சூழ்ச்சிகள் செய்தல், பிணக்குகளை, சர்ச்சைகளை ஏற்படுத்தல், உணர்வுகளை காயப்படுத்தல், குரலை உயர்த்தி பேசுதல், திட்டுதல், சாபமிடுதல்… என பல விடயங்கள் பற்றி அல்குர்ஆனும் சுன்னாஹ்வும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. (தொடரும்)
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
07.10.2021