Monday, December 9, 2024

எட்டாம் வகுப்பும் படியாது எம்மை எட்டும் வரை படிக்க வைத்த யுக புருஷர்!

யுக புருஷர் தந்த அந்த கல்லூரி ஹாஸ்டல் வாழ்க்கை..!

(ஜாமியாஹ் நளீமிய்யாஹ் ஸ்தாபகர் யுகபுருஷர் அல்ஹாஜ் நளீம் (ரஹிமஹுல்லாஹ்) அல்லாஹ்விடம் மீண்டு இன்றுடன் 16 வருடங்களாகின்றன, நினைவுகளை மீட்டி அன்னாரது மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக என்னோடு என் உறவுகளும் துஆ செய்வீர்களென எதிர்பார்த்தவனாக இதனை மீள்பதிவு செய்கின்றேன்.)

மஸ்ஜிதில் லுஹர் தொழுது விட்டு டைனிங் ஹால் நோக்கி நடப்போம், சாப்பாட்டு மேசையில் எமது பிலேட்கள் தயாராக இருக்கும் இரண்டு மூன்று காய்கறிகள் மீன் இறைச்சி அல்லது முட்டையுடன் பகலுணவு தயாராக இருக்கும்.

வாரம் இருமுறை ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர் இருக்கும் ஒரிரு நாட்கள் ஒரு வாழைப் பழமிருக்கும்!

ஒரு கல்லூரியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு மூவேளை உணவு மூன்று வேளை தேநீர் இலவசமாக தருவதென்பது இலகுவான காரியமா?

எனக்கு அந்த தயிர் என்றால் உயிர், வாழைப்பழமென்றால் வாழ்க்கை என்றிருக்கும்..!

வீட்டில் அவ்வப்போது அந்த இரண்டு வகைகளும் பழவகைகளும் வீட்டுத் தோட்டம் பண்ணையிலிருந்து அவ்வப்போது கிடைப்பதால் ஹாஸ்டலில் தான் அருமை பெருமை அதிகம் தெரிந்தது..

அந்த ஏழு வருட ஏக்கத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது பழப்பிரியனாக கண்ட இடத்தில் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வேன்..தயிரும் அவ்வாறே…

பிறந்தது முதல் பசி தாகம் தெரியாது வேளாவேளை உணவு தேநீர் பழங்கள் பானங்கள் தந்து, தொட்டில் முதல் கல்வியும் அறிவும் ஆன்மீகமும் தந்து வளர்த்து ஆளாக்கிய அதிபர் ஆசிரியர் உம்மா வாப்பாவிற்கு உயரிய சுவனத்தின் அருள்பாக்கியங்களை அள்ளித்தர அந்த வல்லோனை பிரார்திக்கும் ஒவ்வொரு வேளையும் அந்த அறிவுத் தந்தைக்கும் மன்றாடிப் பிரார்த்திக்கிறேன்.

7 வருட கற்கை 2 வருட கற்பித்தல் விடுமுறை நாட்கள் போக வருடம் 325 நாட்கள் என கூட்டிக் கழித்துப் பார்க்கிறேன் சுமார் 2925 நாட்கள்…

மூவேளை உணவு 8775 மூவேளை தேநீர் 8775…

இவ்வளவையும் இலவசமாக தந்த கல்வித் தந்தை..!

வதிவிடக் கற்கைகளுக்காக சகல வசதிகளுடனும் கூடிய ஹாஸ்டல்கள் சிரேஷ்ட மாணவர்களுக்கான விடுதியறைகள் கட்டில்கள் மெத்தைகள் தலையணைகள் காற்றாடிகள் மின்விளக்குகள் என அனைத்தையும் இலவசமாகவே தந்த கல்வித் தந்தை…

அல்லாஹ்வின் அளப்பரிய அருளால் அவனது கலாமை அவனது தூதரது ஸுன்னாஹ்வை அறபு மொழியை இஸ்லாமிய ஷரீஆவை கற்று இந்த மண்ணிலும் உலகெங்கிலும் அறப்பணி செய்ய உங்களிடம் எங்களைப் பாரப்படுத்தினானே!

நீங்கள் எத்தகைய அருள்பாக்கியம் பெற்ற மனிதராக மனிதருள் மாணிக்கமாக இருத்தல் வேண்டும்… நீங்கள் உலகறிந்த மாணிக்க கல் வியாபாரி மாணிக்க கல் வியாபாரிகளுக்கெல்லாம் முன்மாதிரி, மனிதர்களில் மாணிக்கங்களை காண கனவு கண்டீர்கள்..

நீங்கள் கண்டெடுத்து பட்டை தீட்டி சந்தைக்கு விட்ட விலைமதிக்க முடியாத பலவர்ணக் கற்களுக்குள் இந்த சாதாரண கல்லையும் உள்வாங்கி உருவாக்கிய உங்களுக்கு எவ்வாறு நன்றி சொல்வது அதை அந்த அல்லாஹ்விடமே பாரப்படுத்த மட்டுமே என்னால் முடியும்..

நீங்கள் எமது பட்டமளிப்பு விழா நிறைவில் அதே டைனிங் ஹாலில் தயாராக இருந்த விருந்து மண்டபத்தில் எழுந்து நின்று எதையோ சொல்ல முயற்சித்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் சொன்னீர்கள்..

வார்த்தைகள் வரவில்லை அழுது விட்டீர்கள்.. நாங்களும் கண்கலங்கி விட்டோம்… பின்னர் சொன்னீர்கள்..

நான் பட்டமளிப்பு விழாவில் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன்.. ஆனால் ஒரு விஷயத்தை இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன்..

கோடானு கோடான வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் இந்த உலகைப் படைத்தான், இலங்கை மண்ணில் இந்த இடத்தை படைத்தான் இதில் அவனது சன்மாரக்க கலையகத்தை உருவாக்க அவனது கழாவிலும் கதரிலும் நாடியிருந்தான்..

மீண்டும் அழுதீர்கள்..

அந்தக் கலையகத்தை கட்டியெழுப்ப இந்த ஏழை என் பெயரைக் குறித்து வைத்தானே…அந்த ரப்பிற்கு நாயனிற்கு நான் எவ்வாறு நன்றி சொல்வேன்… என்று கூறினீர்கள்…

உலகம் தோன்றும் போதே யுக புருஷர்கள் பெயர்களும் தோன்றியுள்ளன… பயனாளிகள் எங்கள் பெயர்களும் பட்டியலில் இருந்திருக்குமே..

உங்கள் கடமைகளை நீங்கள் செவ்வனே செய்துவிட்டு அல்லாஹ்விடம் மீண்டு விட்டீர்கள்…பயனாளிகள் நாம் செய்கிறோமா..? நினைக்கவே நெஞ்சம் படபடக்கிறது…!

உங்கள் கதை அன்று சொன்னீர்கள்… எட்டாம் வகுப்பு வரை படிக்க முடியவில்லை, எங்களை எட்டும் வரை படிக்க வைத்தீர்களே..!

உம்மா தென்னை மட்டைகளை ஊர வைத்து அதை தட்டி தும்புக் கயிறு திரித்து தறுவார்கள் நான் விற்று வருவேன்.., காலையில் அப்பம் சுட்டு தருவார்கள் நான் விற்று வருவேன்… அம்மிக்கல்லில் எஞ்சியிருக்கும் அரைத்த தேங்காய் சம்பலில் அப்பம் தொட்டு சாப்பிட்டதாக சொன்னீர்கள்..

வீடுகள் கட்டும் இடங்களுக்கு கையாளாக கற்களை சுமந்து செல்வேன்..! பசிபட்டிணி பழகிப்போன விவகாரம் என்றீர்கள்.. உங்கள் பிள்ளைகள் எங்களை பசி தாகம் உணராது பார்த்துக் கொண்டீர்கள்…!

உணவு,தேநீர்: இன்று பால்மா, எரிவாயு, பசளை தட்டுப்பாடு என மக்கள் அங்கலாய்க்கிறார்கள், வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியாம், அன்று சிறிமாவோ அம்மையாரின் அரசிற்கு வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி தீர்க்க நீங்கள் கைகொடுத்து வரலாற்றில் இடம்பிடித்தீர்கள்..!

எனக்கு ஏற்பட்ட நிலை என் சமூகத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று உங்கள் பிஞ்சு நெஞ்சில் கனவு கண்டீர்கள்… நாடாளவிய ரீதியில் கொடை வள்ளல் உங்கள் பெயர் ஒலித்தது..மஸ்ஜிதுகள் மத்ரஸாக்கள் என வாரிவழங்கினீர்கள்…

எமது அன்பிற்குரிய நளீம் ஹாஜியார் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களே..!

இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம், ஜாமியாஹ் நளீமிய்யாஹ், இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி, இலங்கை முஸ்லிம்களது கீர்த்தி மிகு வரலாறு.. என இன்னும் உங்கள் இலட்சிய வாழ்வு நீடித்துக் கொண்டிருக்கிறது…!

நீங்கள் வபாஃத் ஆவதற்கு இரு வருடத்திற்கு முன்னர் என்னை ஒரு இராப்போசன விருந்திற்கு அழைத்தீர்கள்.. மேசை நிறைய விதவிதமான உணவுகள் இருந்தன..

இனாமுல்லாஹ், இதுவெல்லாம் ஹாஜியாருக்கு தயாரிக்கப்படும் பத்திய உணவுகள் அவற்றையே உங்களுக்கும் தயார் செய்யச் சொன்னேன் என்றீர்கள்… பின்னர் என்னிடம் நீங்கள் சில வசஸிய்யத்துகளை சொன்னீர்கள்.. (ஏற்கனவே எழுதியுள்ளேன்)

நீங்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் என்னை அழைத்து விருந்து படைத்தமை எனது வாழ்நாளில் நான் பெற்ற அதி உன்னத கெளரமாகும்!

யா அல்லாஹ்!

நளீம் ஹாஜியாரையும் அவர்போல் இந்த மண்ணில் அறப்பணிகள் புரிந்த நன்மக்கள் பெரியார்கள் உலமாக்கள் கல்விமான்களையும், எமது பெற்றார்களையும் உனது அருள்கொண்டு அரவணைத்துக் கொள்வாயாக, அவர்களைப்போல் இன்றும் இனியும் தம்மாலியன்றதை சமூகத்திற்கும் தேசத்திற்கும் செய்யும், செய்ய எண்ணம் கொண்டிருக்கும் நன்மக்களது ஈருலக வாழ்விலும் நிறைவாக அருள் புரிவாயாக!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

10.08.2021

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles