Saturday, November 27, 2021

16 அக்டோபர் 2021 வட கிழக்கு பிரிக்கப்பட்டு 15 வருடங்கள், கிழக்கு அரசியலில் மாற்றம் வேண்டும்!

(கிழக்கிலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நியாயமான காரணங்களுக்காக தமக்கான பிரத்தியேகமான அரசியல் அணியொன்றை மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைத்துக் கொள்தல் ஆரோக்கியமான நகர்வாக இருக்கும்.)

Eastern Sri Lanka – Early settlement

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1987 வடக்குடன் கிழக்கை இணைத்தது அன்றைய ஜே ஆர் ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு, அதனை முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைச் சாசனம் என்று முஸ்லிம் காங்கிரஸ் போர்க் கோடி தூக்கியது.

அதன்பின் 1994 ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளியாக மாறிய முஸ்லிம் காங்கிரஸ் 2000 ஆண்டுவரை சந்திரிக்கா தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரதான பங்காளியாக இருந்தது.

தலைவர் அஷ்ரஃபின் மரணத்திற்குப் பின் 2001 ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணி அரசு சதி மூலம் கவிழ்க்கப்பட்டு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைய முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கியது.

2002 பெப்ரவரி 24 அன்று அரசு புலிகளுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து வடகிழக்கில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை அவர்களின் சுயநிர்ணயத்தில் விட்டுவிட்டது அன்றைய ரனிலை பிரம மந்திரியாக கொண்ட அரசு.

முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுடன் நேரடியாக பெயரளவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டாலும் பின்னர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கூட முஸ்லிம்கள் முதுகில் எழுதப்பட்ட மற்றுமொரு அடிமைச் சாசணம் என உணரப்பட்டது. தனித்தரப்பு, தனி அலகு கோஷங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது. வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்து தனித்திருக்க வேண்டும் என முஸ்லிம் அரசியலில் கோஷங்கள் எழும்பின.

2006 அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் வடக்கு கிழக்கு மாகாணங்களை தனித்தனி மாகாணங்களாக பிரகடனம் செய்தது, வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வழக்கு தாக்கல் செய்திருந்தது, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதே நிலைப்பாட்டில் இருந்தைம குறிப்பிடத் தக்க விடயமாகும்.

இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இணைக்கப்பட்ட வடகிழக்கில் தமிழ் தேசிய 13 ++ சுயாதிபத்தியத்தை இன்றும் தமிழ் தலைமைகள் கேட்டு அரசியல் போராட்டம் நடத்தி வருகின்றன, புவியரசியல் களநிலவரங்களும் இலங்கை அரசிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

தற்பொழுது இந்தியா 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் படியும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் படியும் வலியுறுத்தி வருகின்றமையும் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுமாக இருக்கின்றார்கள். வடகிழக்கு இணைப்பு பிரிப்பு எவ்வாறு இருப்பினும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கின்றது .

இந்த நிலையில் ஏனைய மாகாணங்களில் போலன்றி கிழக்கு மாகாண முஸலிம்கள் தமக்கே உரிய பிராந்திய அரசியல் புவியரசியல் இராஜதந்திர பரிமாணங்களை உள்வாங்கி மாகாண சபைத் தேர்தலுக்கான அரசியல் வியூகத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்கள் போன்று கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தமது பிராந்திய அரசியலை கையாள வேண்டும்!

கிழக்கிலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நியாயமான காரணங்களுக்காக தமக்கான பிரத்தியேகமான அரசியல் அணியொன்றை மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைத்துக் கொள்தல் ஆரோக்கியமான நகர்வாக இருக்கும்.
 
அது தனியொரு இளைஞர் அணியாகவோ கட்சியாகவோ சுயேட்சைக் குழுவாகவோ அன்றி பலதரப்புகளையும் உள்வாங்கிய கூட்டணியாக சிவில் சமூக தலைமைகளின் பங்களிப்புடன் அமைக்கப்படுதல் சிறந்தது.
 
இந்திய அரசு 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தும் புவியரசியலிலும் அண்மைக்கால தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களிலும் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கரிசனை கொள்ள வேண்டிய மிகவும் பிரத்தியேகமான பரிமாணங்கள் உள்ளன.
 
மலையக மக்கள் போன்று தமது பிராந்தியத்திற்குரிய விவகாரங்களை பட்டியலிட்டு முன்னுரிமைகள் அடிப்படையில் நிரல்படுத்தி அவற்றை மையமாக வைத்த மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதில் உடனடியாகவே கவனம் செலுத்துதல் நல்லது.
 
மேற்படி தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் தேசிய அரசியலில் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் சரியான பரிமாணங்களில் தம்மை இணைத்துக் கொள்வதே யுகத்திற்கான சரியான அரசியல் முன்னெடுப்பாக இருக்கும்.
 
வட மாகாணத்தில் சுமார் 5% முஸ்லிம்கள் கிடப்பில் உள்ள தமது விவகாரங்களை நிரல்படுத்தி தமது மாகாண சபைத் தேர்தல்களை வகுத்துக் கொள்தல் வேண்டும்.
 
தவறும் பட்சத்தில் கடந்த காலங்களில் போன்று பல்வேறு தேசிய பிராந்திய சர்வதேச சக்திகளின் நலன்களுக்காக எமது உரிமைகள் விலைபோகின்ற நிலைமைகள் ஏற்படலாம்.
 
மத்தியில் வேறாகவும் பிராந்தியத்தில் வேறாகவும் இரட்டை வேடம் போடும் தெளிவான கொள்கைசார் நிலைப்பாடுகளற்ற அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதனை அரசியல் சூதாட்டமாகவே பார்க்க வேண்டும்.
 
தென்னிலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை தற்போதைய களநிலவரங்கள் முற்றிலுமாக வேறுபட்டுள்ளதால் தேசிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமது தேர்தல் வியூகங்களை அந்தந்த மாகாணத்தில் வகுத்துக் கொள்தல் வேண்டும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

16.10.2021

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles