Saturday, November 27, 2021

ஒவ்வொரு ஆன்மாவும் தனித்துவமானது பிரத்தியேகமான ஒரு காரணி இம்மை மறுமை ஈடேற்றத்துக்கு காரணமாகலாம்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு ஆன்மாவும் தனித்துவமான ஒரு காரணியின் மூலம் அல்லாஹ்வின் அருளை, கருணையை, பாவமன்னிப்பை, சுவனத்தை அடைந்து கொள்ள முடியும்..

ஒரு சமூகத்தின் இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் வருகின்றபொழுது அந்தச் சமூகத்தின் சகல் தரப்பினருக்கும் “பர்ளு அயின்’ கட்டாய கடமையாக விதிக்கப் படுகின்ற பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.

சிலருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கியிருப்பான், சிலருக்கு களத்தில் குதித்து உழைக்கும் உடல் பலத்தை, துணிவை வழங்கியிருக்கின்றான், சிலருக்கு சிறந்த மொழியாற்றல், எழுத்தாற்றல் பேச்சாற்றலை வழங்கியிருக்கின்றான், அதிலும் சிலருக்கு பன்மொழிப்புலமை கிடைக்கப் பெற்றிருக்கிறது.

இன்னும் சிலருக்கு சிறந்த PR எனும் பிறருடன் நல்ல தொடர்பாடல் ஆளுமை செல்வாக்கு பரந்த அளவில் தொடர்புகள் கிடைக்கப் பெற்றிருக்கும், சிலரிடம் கூட்டங்கள் சந்திப்புக்கள் நடத்துவதற்கான இட வசதிகள் இருக்கும், சிலரிடம் அறிஞர்களை உலமாக்களை புத்திஜீவிகளை செயற்பாட்டாளர்களை அழைத்துச் செல்ல வாகன வசதிகள் இருக்கலாம்.

இளம் தலை முறையினரிடம் நவீன தகவல் தொழில் நுட்ப அறிவு இருக்கிறது, சிறந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் திறனும் நுட்பங்களும் இருக்கின்றன, சிறந்த முகாமைத்துவ நிர்வாக தகைமைகள் இருக்கின்றன, துறைசார் நிபுணர்களிடம் பல்வேறு எதிர்பார்க்கப் படுகின்ற வளங்கள் இருக்கின்றன.

இன்னும் பலரிடம் அல்லாஹ் செல்வத்தை தந்து வைத்திருக்கின்றான், இவ்வாறு பல்வேறு தரப்புக்களிடமும் பல்வேறு அருள் பாக்கியங்களை அள்ளி வழங்கியுள்ள அல்லாஹ் கூட்டு சமூக வாழ்வில் தத்தமது பங்களிப்புக்களை தத்தமது சக்திகளுக்கு ஏற்ப செய்தேயாக வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றான்; இது ஒவ்வொருவரினதும் சௌகரியங்களுக்கு விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற ஏற்ற தெரிவு அல்ல கடமையாகும்.

அல்ஹம்துலில்லாஹ், தமது கஷ்ட நஷ்டங்களிற்கும் குறை நிறை களிற்கும் மத்தியில் மிகப் பெரும் தியாகங்களோடு பலர் களத்தில் சிறந்த பங்களிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் தேவைகளும் கடமைகளும் இருக்கின்றன அவர்களுக்கு தேவையான ஒழுங்குகள் செய்து கொடுக்கப் பட வேண்டியுமுள்ளன.

அடுத்த சமூகங்களில் உள்ள எழுத்தாளர்கள் ஊடக வியலாளர்கள் பலரை நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்கும் பலர் ஊக்குவிக்கப்படல் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

தயவு செய்து உங்கள் ஊரில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற உயரிய பணிகளுக்கு தாராளாமாக உதவுங்கள், இயன்ற பங்களிப்பினை கட்டாயம் நாம் செய்ய வேண்டும் , இன்றேல் நிச்சயமாக காலம் கடந்து கை சேதப் படுவோம் அல்லாஹ்விடம் எங்களுக்கு வழங்கப்பட்ட நிஃமத்துக்கள் அமானிதங்கள் பற்றி பதில் கூற கடமைப் பட்டுள்ளோம் . வெளிநாடுகளில் வசிப்போர் தங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அறிவு, ஆற்றல்கள், இயல்பூக்கங்கள், உள்ளுணர்வுகள், திறமைகள், பலம், பலவீனம், வளங்கள்…

ஒவ்வொருவரும் வளரும் வாழும் கற்கும் சுற்றுச் சூழல்கள், சந்தர்ப்பங்கள், வசதி வாய்ப்புக்கள், குடும்ப சமூக பொருளாதார காரணிகள்…என பெற்றவைகள், கற்றவைகள், பட்டவைகள்..

ஒவ்வொருவரும் வாழ்வில் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள், தேடல்கள், தேவைகள், ஆசைகள்….ஒவ்வொருவர் மீதுமுள்ள பொறுப்புக்கள், சுமைகள், எல்லாமே வேறுபட்டவைகளாக இருக்கின்றன…

ஒவ்வொரு ஆத்மாவையும் அவற்றின் சக்திக்கு ஏற்பவே எல்லாம் வல்ல அல்லாஹ் சோதிக்கின்றான், எல்லோரையும் எல்லா நிலையிலும் அங்கீகரிக்க காத்திருக்கின்றான்…

முழுமையாக எங்களை நாம் ஒவ்வொருவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எம்மை சமர்ப்பிப்போம்..!

அல்லாஹ்வின் கருணையின் மீது அருளின் மீது எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்!

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!

(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!

எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; (எங்கள் மீது போர் தொடுக்கும்) சய்தியத்தை நிராகரிப்போர் மீது எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”(ஸுரத்துல் பகறா 2: 286)”

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

18.10.2021 (மீள்பதிவு)

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles