பிறவியின் பயனை உணர்த்தி நிற்கும் பிரதானமான உறுதிமொழி.
வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் உயிரிலும் மேலான எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
நீர் அல்லாஹ்வின் முன்னிலையில் அவனை பார்த்துக் கொண்டிருப்பது போல் (உளப்பூர்வமாக எண்ணி) வணங்குவீராக, நீர் பார்க்கா விடினும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் (என நினைவில் கொள்வீர்).
எத்தகைய வல்லமை மிக்க ஏகனாகிய அல்லாஹ்வின் முன் நாம் எத்தகைய பிரகஞையோடு ஆஜராகின்றோம்; அவன் எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான், அல்லது நாம் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் அருகாமையும் சந்நிதானமும் எத்தகையவை, உயிரோட்டமானவை, எமது ஈமானிய பலத்தை அதிகரிப்பவை என்பதனை உணர்த்த எமது தலைவர் எமக்கு எதனை கற்றுத் தந்துள்ளார்கள்.
வாணங்கள் பூமியின் சூரியன் சந்திரனின் இரக்ஷகனை கண்டறிந்த இப்ராஹீம் (அலை) செய்து கொண்ட பிரகடனம் அது, நாம் மில்லத் இப்ராஹீமை சேர்ந்த நல்லடியார்கள்.
இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தை,கோல் மண்டலங்களை, கிரகங்களை, நக்ஷத்திரங்களை, சூரிய குடும்பத்தை, மண்ணை, வின்னை , வளிமண்டலத்தை, சமுத்திரங்களை, மலைகளை, காடுகளை, உயிரினங்களை என அத்தனையையும் படைத்துப் பரிபாலித்து இயக்கிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல ஏகனாகிய இறைவனே உன் பக்கம் என் கவனத்தை முழுமையாக குவித்துள்ளேன்.
வஜ்ஜஹ்து :
“வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்க மாட்டேன்.
என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன, அவனுக்கு இணையே இல்லை.
இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் பூரணமாக கட்டுப்பட்ட (முஸ்லிம்) களில் ஒருவன் ஆவேன்.
(மேலதிகமான பகுதி)
இறைவா! நீயே அரசன், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; நீயே என் இறைவன், நான் உன் அடிமை, எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன், நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன்.
எனவே, எனபாவங்கள் அனைத்தையும மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.
நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.
துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.
இதோ வந்தேன், கட்டளையிடு (காத்திருக்கிறேன்), நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேய உள்ளன.
தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல, உன்னால் தான் நான் நல்வாழ்வு பெற்றேன், உன்னிடமே நான் திரும்பி வரப்போகிறேன்.
நீ சுபிட்சமிக்கவன், உன்னதமானவன், நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.
குறிப்பு:உங்கள் உளப்பூர்வமான துஆக்களில் எங்கள் உம்மா வாப்பா (ரஹ்) உடன் பிறந்தோர் மனைவி மக்கள் கல்விக்கண் திறந்துவிட்ட ஆசான்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
31.10.2021