1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களையும் தமது அனைத்து உடமைகளையும் கைவிட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தரவிட்டமை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நினைவு கூறப்படுகிறது.
புத்தளம் கம்பஹா கொழும்பு களுத்துறை அநுராதபுரம் உற்பட தென்னிலங்கையின் பலபாகங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்த அவர்களது வாழ்வு மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னரும் முற்றுப் பெறாத சோகமாகவே இருக்கின்றது.
வடமாகாணத்தில் அவர்களிடமிருந்து பாசிசப் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட வதிவிடங்கள் காணிகள் என்பவற்றிற்குப் புறம்பாக இரானுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனப்பிரதேசங்களாக பிரகடணப்படுத்த பூர்வீக வாழ்விடங்கள் என இருதலைக் கொல்லி எரும்பின் நிலையில் அவலங்கள் தொடருகின்றன.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 75 000 மக்களது இயல்பான மூன்று தசாப்த சனத்தொகை வளர்ச்சி வீதத்துடன்இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற உடனேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் கண்காணிப்பின் பேரில் அவசர அவசரமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட பொழுதும் வடபுல முஸ்லிம்களது விவகாரம் (பழைய அகதிகள் இடம்பெயர்ந்தவர்கள் என) கிடப்பிலேயே போடப்பட்டமை கசப்பான உண்மையாகும்.
வடபுல முஸ்லிம்களது புர்வீக வாழ்விடங்களுக்கு மீளச்சென்று குடியேறுவதற்கான அடிப்படை உற்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் புதியதலைமுறைகள் அங்கு சென்று குடியைறுவதில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்.
தாம் எதிர்கொள்ளும் இன்னொரன்ன சவால்களுக்கு மத்தியில் தமது அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை கூட தமது வாழ்விடங்களில் முறையாக பதிவு செய்வதிலும் அவற்றை பிரயோகிப்பதிலும் ஆயிரத்து எட்டு பிரச்சினைகள் இருக்கின்றன.
வடமாகாண முஸ்லிம்களது விவகாரம் மத்திய தேசிய அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களில் முறையாக உள்வாங்கப் படாமை பற்றி பேசும் பலர் அது வடமாகாண அரசியலின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தலைமைகளாலும் உள்வாங்க மறுக்கப்படுகின்றமை குறித்து எவரும் அதிகம் பேசுவதாக தெரியவில்லை.
தமிழ் தேசிய வரலாற்றில் இழைக்கப்பட்ட மாபெரிய அநீதியை வரலாற்றுத் தவறை ஒத்துக் கொள்கின்ற அரசியல் தலைமைகள் மாகாண மட்டத்திலும் தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் தமது நிகழ்சி நிரலில் வடபுல முஸ்லிம்களுக்கு நீதி வழங்குகின்ற நியாயத்தை பெற்றுக் கொடுக்கின்ற சமிகஞைகளையாவது காட்டவில்லை என்பது தான் உண்மை.
தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டம் தடம்புரண்டு போனமைக்குப் பின்னால் இருந்த மிகப்பிரதானமான காரணம் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய பாசிசப் புலிகளும் ஆயுதக் குழுக்களும் மேற்கொண்ட முஸ்தீபுகள் தான் என்பதனை வரலாற்றை மீட்டிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
இதுவரையும் சமுகமான அரசியல் தீர்வை எய்த முடியாது சர்வதேச பிராந்திய வல்லரசுகளின் நலன்களிற்கான பணயமாக தமது போராட்டத்தை அடகு வைத்து அங்கலாய்க்கும் தமிழ்த் தலைமைகள் வடகிழக்கில் சகோதர முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை அங்கீகரித்து அரவணைக்கத் தவறின் இன்னும் பல தசாப்தங்கள் கடப்பினும் தீர்வுகளை எய்த முடியாது போகும்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்புகின்ற சர்வதேச பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு முஸ்லிம் விரோத அரசியல் செய்கின்ற சக்திகளுக்கு வடகிழக்கில் காவிக் காவடி சுமக்க தயாராகும் சக்திகள் விலைபேசி சூதாட்டம் நடாத்துவது தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தையே என்பதனை மறந்து விடக் கூடாது.
வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களது தனித்துவமான அபிலாஷைகளை மனக்குறைகளை அங்கீகரிக்க மறுக்கின்ற, அவர்களைப் பிரித்து ஆள நினைக்கின்ற தென்னிலங்கை அதற்கான விலையை தற்பொழுது செலுத்திக் கொண்டிருக்கிறது.
இனியும் காலம் தாழ்த்தாது இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களும் இரண்டாவது சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் இருப்பை பாதுகாப்பு அடிப்படை உரிமைகளை சமயகலாசார தனித்துவங்களை ஐனநாயக உரிமைகளை மதித்து தீர்வுகளைக் காண முன்வருதல் வேண்டும்.
அதேவேளை மூன்று தசாப்த கால முஸ்லிம் அரசியல் தமது தனித்துவ அடையாள அரசியல் இலக்குகளை தொலைத்து விட்டு உரிமைகளுக்கான போராட்ட அரசியலை சலுகைகளுக்காக சோரம் போகும் சூதாட்ட சரணாகதி அரசியலாக மாற்றிக் கொண்டைமை எமது பின்னடைவுகளுக்கும் நாம் இன்று எதிர் கொள்ளும் சவால்களுக்கும் காரணமாகும் என்பதனையும் நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
30.10.2021