முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை யமன் பிரதேசத்திற்கு அதிகாரியாக நியமித்து இறைதூதர் (ஸல்) அவர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்; முஆத் இப்னு ஜபல் ஒட்டகையில் ஏறி புறப்பட இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நடையாக சிறிது தூரம் அவருடன் செல்லுகிறார்கள்.
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களுடைய கரங்களை பற்றிக் கொண்டு முஆதே அல்லாஹ்விற்காக நான் உம்மை நேசிக்கிறேன் என்று மூன்று முறை கூறிவிட்டு நீர் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இவ்வாறு பிரார்த்தித்துக் கொள்வீராக என்று உபதேசம் செய்தார்கள்: “யா அல்லாஹ், சதாவும் உன்னை திக்ரு செய்யவும், உனக்கு நன்றி சொல்லவும், மிகவும் சிறப்பாக வணங்கி வழிபடவும் எனக்கு துணை புரிவாயாக!”
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் தனது 18 ஆவது வயதில் இறைதூதர் ஸல் அவர்களை சந்தித்து பைஅத் செய்து இஸ்லாத்தை தழுவிய இளம் தொழில் முனைவராக இருந்துள்ளார்கள், அழகும் அறிவும் நற்பண்புகள் நிறைந்தவராகவும் அல்குர்ஆன் ஸுன்னாஹ்வை தீவிரமாக கற்பதில் கற்பிப்பதில் அதிக ஆர்வமும் கொண்டவராக இருந்தார்கள். .
சன்மார்க்க விடயங்களில் தெளிவுபெற இவர்களை அணுகுங்கள் என இறைதூதர் ஸல் குறிப்பிடும் ஸஹாபாக்களில் அவர்களும் ஒருவர்; மக்கா வெற்றியின் பின்னர் தன்னுடன் இருந்து மக்காவாசிகளுக்கு மார்க்கத்தை போதிக்குமாறு இறைதூதர் ஸல் அவர்களை வேண்டிக் கொள்கிறார்கள், மறுமை நாளில் அறிஞர்களுடன் முஆத் சுவனம் செல்வார் என இறைதூதர் ஸல் அவர்களை பாராட்டுமளவு மார்க்கஞானம் உடையவராக திகழ்ந்தார்கள்.
உழைப்பில் சிறந்தவராக இருப்பது போல் இல்லாதோருக்கு இரங்கி இருப்பவற்றை தானதர்மம் செய்து விடும் இளகிய மனம் கொண்டவராக இருந்தார்கள், யமன் தேசத்திற்கு அதிகாரியாக அனுப்பப்பட முன்னர் அவர் பலரிடம் கடன் பட்டிருந்ததால், அவரையும் கடன்கொடுத்தவர்களையும் அழைத்து பேசியிருக்கிறார்கள் இறைதூதர் ஸல் அவர்கள்.
எவருமே கடனை விட்டுக் கொடுக்க முன்வராமையால் முஆத் ரழி அவர்களிடமிருந்த சில சொத்துக்களை விற்று அவற்றை செலுத்திவிட உதவி செய்திருக்கிறார்கள், யமன் தேசத்தில் சிறப்பாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் தமது ஹலாலான உழைப்பில் கொடுக்கல் வாங்கலில் எவ்வளவு தூய்மையாக பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதனை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இறைதூதர் ஸல் அவர்கள் யமன் தேசத்திற்கு வழியனுப்பும் பொழுது மற்றுமொரு விடயத்தை முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் கூறவே அவர்கள் அழுது விடுகிறார்கள்; முஆதே, இன்றுதான் நீங்கள் என்னை இறுதியாக காண்கிறீர்கள் என நினைக்கிறேன், நீங்கள் திரும்பி வரும் பொழுது அல்லாஹ்விடம் நான் மீண்டிருக்க கூடும் என்றார்கள், அழவேண்டாம், ஷைத்தான் உங்களை அழச் செய்கிறான் என்று கூறிவிட்டுத் தான் அந்த துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள்.
சிறந்த துணிவுள்ள இளம் படை வீரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள், பத்ரு யுத்தம் முதற்கொண்டு இறைதூதர் ஸல் அவர்களது அனைத்து படையணிகளிலும் பங்குபற்றி இருக்கின்றார்கள்.
இறைதூதர் ஸல் அவர்களது வபாத்திற்கு பின்னர் உமர் (ரழி) அவர்களது ஆட்சிக்காலத்தில் பைதுல் மக்திஸ் வெற்றி கொள்ளப்பட்ட படையணியில் கலீபாவின் தலைமையில் கலந்து கொள்கிறார்கள், பின்னர் கல்விப்பணி வர்த்தகம் என்பவற்றிற்காக அங்கு சில காலம் தங்க நேரிடுகிறது, ஷாம் தேச கவர்னர் அபூ உபைதா (ரழி) அவர்களோடு இருந்து விடுகிறார்கள்.
ஆனால் அந்த வருடம் தான் அம்வாஸ் எனும் கொள்ளை நோய் அங்கு பரவுகிறது, “நோயிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறவோ இருக்கின்ற இடத்திற்கு செல்லவோ கூடாது” என்ற இறைதூதர் (ஸல்) அவர்களது கட்டளையை மீறக் கூடாது என்ற பிடிவாதத்தில் ஆளுனர் அபூ உபைதாவும் ஏனைய நபித் தோழர்களும் அங்கேயே இருந்து விட்டார்கள்.
அபூ உபைதா ரழி அவர்கள் ஷஹீதாக முஆத் இப்னு ஜபல் ரழி அவர்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள், என்றாலும் அவர்களும் கொள்ளை நோயிற்கு ஆளாகி தனது 33 ஆம் வயதில் ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷஹீதாகுகின்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
18 வயது முதல் 33 வயது வரை ஒரு இளம் நபித் தோழரது வாழ்வு எவ்வாறு இருந்திருக்கிறது, சற்று நிதானமாக இவ்வாறான சரிதைகளை படித்து எம்மை ஒருமுறை நாம் சுயவிசாரணை செய்து கொள்வோம்.
உங்கள் துஆக்களில் என்னையும் பெற்றார், உன்பிறப்புக்கள் மனைவி மக்களையும் ஆசான்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அன்பின்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻 08.11.2021