Sunday, January 23, 2022

அரபிகளின் இராச்சியத்தில் பூச்சியத்தில் நகரும் வாழ்க்கை!

உயர்தரம் கற்ற பின்னும்
உருப்படியாய் தொழிலின்றி
உழைப்பதற்காய் சென்றேன்
நானும் கடல் கடந்து!

o

சென்ற கடன் தீர்த்திடவும் வீட்டுச்
செலவினங்கள் பார்த்திடவும்
சென்றன முதலிரண்டு வருடங்கள்..

o

முதலோடு ஊர் வந்து
முறையாக தொழில் செய்ய
முயற்சிகள் செய்திடவே
கழிந்தனபின் நான்கு வருடங்கள்..!

o

விடுதலை இனியென்று
வீடுவர காத்திருந்தேன்
தங்கைக்கு வரனொன்று
வந்திருக்கும் செய்திகண்டு
தாமதித்தேன்…

o

தங்கையைக் கரைசேர்க்க
தங்கத்தை வாங்கிச் சென்றேன்…
தம்பியும் ஓடி வந்து
பல்கழைக் கழகம்
படிப்பு என்றான்…!

o

முப்பது வயது தானே
இன்னுமிரு வருடங்கள்
உழைத்திடவே புறப்பட்டேன்
மூன்றாம் முறையும் அங்கு!

o

தங்கையின் சீதனமும்
சீர்வரிசை செலவுகளும்
தம்பியவன் கற்கைகளும்
டியூஷன் பீஸ்களென
பட்ட கடன் தோள்களிலே
சுகமான சுமைகளாக
தாங்கி நான் கழித்திட்டேன்
கடல் கடந்த வாழ்வுதனை!

o

உற்றார் பெற்றார் ஹாஜத்தும்
தம்பிக்கு ஐ போனும்
தங்கைக்கு ஐ பேட்டும்
மச்சான் கார்வாங்க
வீட்டார் பட்ட கடன்
கடந்தன பல வருடங்கள்
பாலைவன தேசத்தில்…!

o

முப்பத்தி எட்டு வயதெனக்கு
வரன் ஒன்று வந்திருக்காம்
விடுமுறையில் சென்றவுடன்
வீடு வந்து பார்ப்பாங்கலாம்!

o

பண்ணிரண்டு வருடங்கள்
கடல்கடந்து உழைத்த எந்தன்
கையிருப்பில் காசுமில்லை
கல்யாணம் தான் பாக்கியென்று
உறுத்தியது உள்மனசு.!

o

ஊர் உலகம் பார்க்கவென
திருமணமும் நடந்தேற
மறுபடியும் தயாரானேன்
எமக்கென்று வாழ்வமைக்க…!

o

வாழ்க்கைப் பட்டவளும்
வாசல்வரை வந்தென்னை
வழியனுப்பி வருடங்கள்
இரண்டாச்சி…
கையில் ஒரு பிள்ளையுடன்
‘கப்பலுக்கு போன மச்சான்
கல்புக்குள் ஆளும் மச்சான்
எப்பதான் வருவீங்களோ’
என வரவுக்காய் காத்திருந்தாள்…

o

தங்கைக்கொரு வாழ்வு தந்தேன்…
தம்பிக்கொரு வழி சொன்னேன்…
கைகொடுக்க யாருமின்றி
கடன் சுமைகள் தாங்கி நின்றேன்…

நாடு திரும்பி வாழ்வதற்கு
வீடு ஒன்று வேண்டுமென
நாற்பது வயது தாண்டி
நான்கு வருடங்கள் கழிந்த பின்னும்
தொடர்கிறது என் வாழ்க்கை
பாலைவன தேசத்தில்…

o

ஆயிரங்கள் மட்டுமல்ல
வாழ்க்கையென்றால்
ஆயிரம் இருக்கும் என்பர்,
ஆனாலும் அடியேனின்
வாழ்க்கை மட்டும்
அரபிகள் இராச்சியத்தில்
பூச்சியத்தில் நகர்வதேனோ!

o

விடுமுறைகள் ஒவ்வொன்றும்
தேன் நிலவாய் முதலிரவாய்
கழிந்த பலன் கையிலின்று
மூன்று பிள்ளைகள்…!

o

விடுமுறைக் கணவராய்
விடுமுறைத் தகப்பனாய்
வீடுவரும் விருந்தாளி நான்!

o

இனியெந்தன் பிள்ளைகள்
கல்வி உயர் கல்வியென்றும்
கல்யாணம் காய்ச்சியென்றும்
கடைசிவரை கடல்கடந்தே
காலத்தை ஓட்டும் நிலை!

o

அரை வயிறும் குறை வயிறும்
அல்சரும் கேஸ்றைறிடிசும்
சுகரென்றும் பிரஷரென்றும்
சொல்லொனா வலிகளென்றும்
உள்ளுக்குள் புதைத்து நான்
உழைத்து களைத்திங்கு
நடைப் பிணமாய் நிற்கின்றேன்!

o

காலம் கடந்தபின் ஞானம்
பிறந்தின்று சொல்லுகிறேன்
உமக்குமொரு வாழ்வுண்டு
உன் மனைவி மக்களுக்கும்
என்பதனை நீர் மறவாதீர்!

o

தம்பிகளே தங்கைகளே,
அடிப்படைத் தேவைகள்
ஆசைகள் பேராசைகள்
பிரித்தறிந்து வாழ்வுதனை
திட்டமிட்டு கொண்டு செல்வீர்..!

o

விடுகதையா இந்த வாழ்க்கை,
தொடர்கதையா!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
10.11.2021

(சொல்லக் கேட்ட சோகங்கள்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles