பாகுபாடில்லாமல் படைப்பினங்கள்
அனைத்தின் மீதும் கருணை புரியும் ரஹ்மான்
படைத்தவனை அறிந்து பணிவோர் மீது
பன்மடங்கு பாசம் கொள்ளும் ரஹீம்
அல்லாஹ்வின் உயர்திரு நாமத்தால்..
o
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
குல், நபியே நீ சொல்வீராக!
விடியலின் இரக்ஷகனிடம் யான்
அபயம் தேடுகிறேன்..!
அஊது பிரப்பில் பஃலக்!
o
அவன் படைத்தவை அனைத்தினதும்
தீங்குகள் தனிலிருந்தும் ..
மின் ஷர்ரி மா க்ஹலக்!
o
இரவு கவிழ்ந்ததன் பின்
ஊடுருவும் தீய சக்திகளிடமிருந்தும்..
வரின் ஷர்ரி காஸிகின் இதா வக்ப்..!
o
முடிச்சுகளின் மீது ஊதுகின்ற
மந்திரிக்கும் மாதர்தம் தீங்குகளிலிருந்தும்,
வமின் ஷர்ரின் நஃப்பாதாதி பில்உகத்..!
o
பொறாமைக் காரர் கொள்ளும்
பொறாமைகளின் தீங்குகளிலிருந்தும்..
வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்!
o
படைப்பினங்கள் அனைத்தின் மீதும்
பாகுபாடின்றி கருணை புரியும் ரஹ்மான்
படைத்தவனை அறிந்து பணிவோர் மீது
பன்மடங்கு பாசம் கொள்ளும் ரஹீம்
அல்லாஹ்வின் திரு நாமத்தால்..
o
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
குல், நபியே நீ சொல்வீராக !
மானிடரின் இரக்ஷகனின்
அபயம் நான் தேடுகிறேன்!
o
மனுக்குலத்தின் மாமன்னரவன்!
மானிடர் போற்றி வணங்கப்படுபவன்!
மலிகின்னாஸி இலாஹின்னாஸ்!
o
உள்ளங்களை ஊடறுத்து
ஊசலாட்டம் புரிகின்ற
வஸ்வாஸின் (ஷைத்தானின்)
தீமைகள் போக்க..
மின் ஷர்ரில் வஸ்வாஸில் க்கன்னாஸ்!
o
மனிதர் மனங்களிலே ஊடறுத்து
வஸ்வாஸை (குழப்பங்களை) உண்டாக்கும்
மனிதர்கள் ஜின்கள் தம் தீமைகள் போக்க!
|
“மஃவிததைன்”
அபயம் தருகின்ற இரு
அத்தியாயங்கள் அவையென்று
அன்பின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் ..
அழைத்த இரு ஸூராக்கள்!
ஸூரதுல் பஃலக் மற்றும்
ஸூரதுன் நாஸ்!
o
நித்திரைக்குச் செல்லுமுன்
ஸுரதுல் பாதிஹாவுடன்
குல் ஸூராக்கள் மூன்றையும்
நித்தமும் ஓதித் தம்
பொற் கரங்களில் ஊதியபின்
தலைமுதல் பாதம் வரை
தடவிக் கொள்தல் எம்
தலைவர் (ஸல்) வழிமுறையாம்
ஸஹாபாக்கள் சொன்னார்கள்!
o
வலியொன்று கண்டாலும்
அவ்வாறே செய்தார்கள் நபியவர்கள்
அன்னை ஆயிஷா (ரழி)
அறிவிப்புச் செய்தார்கள்!
o
மனு ஜின் வர்க்கங்கள்
படைத்தாளும் இரக்ஷகனே
வணக்கத்திற்கு பாத்திரமான நாயகனே
பாதுகாவல் தேடுகிறோம், உன்னிடமே!
படைப்பினங்கள் அத்தனையும்
படைத்தவன் உன் பிடியில் தானே,
ரப்பே ரஹ்மானே!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
04.11.2021
|