Thursday, December 1, 2022

எல்லாம் இருந்தும் அல்லாஹ் இன்றேல் ஒன்றும் இல்லை!

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷிக் காபிர்கள் ஏளனமாக பல விடயங்களை கூறினார்கள் என்பதனை நாம் அறிவோம்..

தன்னை ஒரு நபியாக பிரகடனம் செய்ததன் பின்னர் குறைஷி குலத்தில் இருந்து உறவுகள் துண்டிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர் என்றும்..

தனது மகன் காஸிம் (அலை) வபாஃத் ஆனதன் பின் ஆண் வாரிசுகளற்ற, பெயர் சொல்ல சந்ததிகளற்ற ஒரு மனிதர் என்றும் ..

உலகத்தில் குல வம்ச பெருமைகள் இழந்த ஆட்சி அதிகாரம் செல்வம் செல்வாக்கு அற்ற முகவரியற்ற தனியாளாக தனிமைப்படுத்தப் பட்ட ஒருவர் என்றும், அவர்கள் கூறி நோவினை செய்வார்கள்..

நபித்தோழர் அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமுறை இறைதூதர் (ஸல்) அவர்கள் சிறிய மயக்க நிலையின் பின் புன்னகைத்துக் கொண்டு விழித்தார்கள்.. காரணத்தை கேட்ட பொழுது எனக்கு தற்போது ஒரு ஸூரத் அருளப்பட்டது எனக்கூறி “இன்னா அஃதய்னாக அல் கவ்தர்” எனும் சிறிய ஸூராவை ஓதினார்கள்..

(நபியே) உமக்கு நாம் அல்கவ்தரை தந்துள்ளோம், நீர் உமது இரட்க்ஷகனை தொழுது குர்பானியையும் அறுத்துப் பங்கீடு செய்வீராக, உம்மைத் தூற்றுபவர் தான் நிச்சயமாக “அப்தர்” ஆவார்.

இங்கு சொல்லப்பட்டுள்ள கவ்தர் அப்தர் என்ற ஒன்றுக்கொன்று எதிர்ச் சொற்கள் குறித்து பல அறிவிப்புக்களை விளக்கங்களை தப்ஸீர் ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்..

கவ்தர் என்றால் அதிகரித்த செல்வம் என்றும் அப்தர் என்றால் எதுவுமற்ற அனைத்தையும் இழந்த நிலை என்றும் அன்றைய அரபு மொழி பிரயோகங்கள் காணப்பட்டதாக மொழியியல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

நுபுவ்வத், இஸ்லாம், அல்குர்ஆன், தொழுகை உற்பட ஐம்பெரும் கடமைகள், இறுதிநாள் வரையும் அதற்குப் பிறகும் பெயர் கூறப்படல், ஸலவாத்தும் ஸலாமும் சொல்லப்படல், மறுமையில் ஷபாஅத்து செய்யும் தனிச் சிறப்பு, சுவனத்தில் ஹவ்ழுல் கவ்தர் எனும் தடாகம் என இம்மை மறுமையில் இறை தூதர் ஸல் அவர்களுக்கு தரப்படும் அனைத்து அதிகரித்த அருட் கொடைகளையும் அல் கவ்தர் எனும் பிரயோகம் குறிப்பதாகவும்..

உலகில் சாதி குலப் பெருமை வம்சாவழி வாரிசுகள், ஆட்சி, அதிகாரம், செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்தும் அல்லாஹ் வும் அவனது தீன் இஸ்லாமும் இல்லாத நிலையே அப்தர் எனும் அனைத்து சம்பதாதுக்களும் துண்டிக்கப்பட்ட நிலை என்றும் தப்ஸீர் வியாக்கியானங்கள் கூறுகின்றன.

ஆகவே இம்மை வாழ்வில் ஈடேற்றம் பெற்ற இறை தூதர் ஸல் அவர்களது உம்மத்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுமையிலும் சுவனத்திலும் அவர்களோடு இருப்பார்கள், இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு விசேடமாக தரப்படும் ஹவ்ழுல் கவ்தர் எனப்படும் தடாகத்தில் அல்லது அருவியில் இருந்து நீர் அருந்துவார்கள்…!

ஆக, எமது உயிரிலும் மேலான தலைவருக்கு இம்மை மறுமைப் பேருகளாக தரப்பட்ட அல்கவ்தரில் அவர்களது உம்மதாதாகிய எமக்கும் பங்கு நிச்சயமாக இருக்கின்றது என்பதனை ஹவ்ழுல் கவ்தர் தடாகம் பற்றிய அறிவிப்புக்கள் உணர்த்துகின்றன.

எனவே, துன்யா ஆகிராவின் அனைத்து அருட்பாக்கியங்களையும் அதிகமதிகமாக, அல்கவ்தர் எனும் வற்றா நீரூற்றாகப் பெற்ற முழுமதியாம் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தவர்கள் அவர்தம் வழி நடக்காதவர்கள் தான் எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழந்த அப்தர்கள் என இந்த அத்தியாயம் எமக்கு வாழ்வின் யதார்த்த நிலையை கற்றுத் தருகிறது.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
11.08.2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles