“அத்தியின் மீதும், ஸைதூனின் மீதும், தூர் ஸீனீன் மீதும் பாதுகாப்பான இந்த நகரின் மீதும் சத்தியமாக, மனிதனை நாம் மிகச் சிறந்த (அக,புற) வடிவில் படைத்தோம், பின்னர் (நன்றி மறந்து நிராகரிக்கும் அவனை) படைப்பினங்களில் மிகவும் கீழ்த்தரமான படைப்பாக ஆக்கி விடுகிறோம், ஆனால் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்லமல்கள் புரிவோரைத் தவிர, அவர்களுக்கு நிலையான நற்கூலி இருக்கின்றது, (இத்தகைய அத்தாட்சிகளை அறிந்த) பின்னரும் சன்மார்க்கம் பொய்யானதென உமக்கு தோன்றக் காரணம் ஏது?, (இத்தகைய வல்லமையை அத்தாட்சிகளை கொண்ட) அல்லாஹ் நீதியாளன் இல்லையா? ” (ஸூரதுத் தீன்)
இது அல்குர்ஆனில் ஸூரதுத் தீன் எனும் மக்கிய அத்தியாயத்தின் கிட்டிய பொருளாக்கமாகும், இந்த ஸூரா அல்லாஹ் நீதியாளன் இல்லையா என்ற ஆச்சரியக் (கேள்விக்) குறியுடன் நிறைவுறுவதால்..
“ஆமாமாம் நிச்சயமாக, நாம் அதற்கு சான்று பகர்கின்றோம்.” என கூறிக் கொள்ளுமாறு எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதாக நபித் தோழர் அபூஹூரைரா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்..
அத்தி, ஸைதூன், தூர் ஸீனா என பைதுல் மக்திஸையும் அது அமைந்துள்ள பிரதேசத்தையும், மூஸா (அலை) அவர்களோடு அல்லாஹ் பேசிய மலை அடிவாரத்தையும், புனித மக்கமா நகரையும் எடுத்துக் கூறி சத்தியம் செய்வதின் பின்னணி அஹ்லுல் கிதாபி களுடைய நபிமார்களான நபி ஈஸா (அலை), நபி மூஸா (அலை) மற்றும் இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) மற்றும் ஏனைய நபிமார்கள் எல்லோருக்குமே அருளப்பட்ட மனித வர்க்கத்திற்கான தூதுகள் அடிப்படையில் ஒன்றென உணர்த்துவதற்காகும் என பல தப்ஸீர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதே போன்று அத்தி ஸைதூன் என மனிதனது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திய அல்லாஹ்வின் வல்லமையையும் அது நினைவுட்டுவதாகவும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன!
உன்னதமான படைப்பினமாகிய மனிதன் தானாகவே நன்றி மறந்து இறை நிராகரிப்பு செய்து தனது உன்னதத் தன்மையை இழந்து கீழ்மட்ட படைப்பினமாக ஆகிவிடுகின்றான்.. அன்றியும் அவனை அநியாயமாக அல்லாஹ் தண்டிப்பதில்லை! என்ற வாழ்வியல் யதார்த்தத்தை இந்த அத்தியாயம் உணர்த்துகின்றது.
அல்லாஹ் வின் கலாம் அல்குர்ஆன் ஸூராக்களை வசனங்களை பொருளுணர்ந்து ஓதி அதன்படி வாழ்ந்து உன்னதமான மனிதர்களாக பிறவிப் பயனை ஈருலக ஈடேற்றங்களை அடைந்து கொள்ள அவ்வல்லோன் எம்மனைவருக்கும் தவ்பீஃக் செய்வானாக!
உங்களது ஆத்மார்தாதமான துஆக்களில் எம்மை எமது பெற்றார் உடன் பிறப்புக்கள் மனைவி மக்கள் ஆசான்கள் நாம் பிரார்தனை செய்யக் கடமைப் பட்டோர் அனைவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை ஒரு ஸதகதுல் ஜாரியாவாக அதிகமதிகம் பகிர்ந்து பணியில் பங்காளராகுங்கள்!
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
09.08.2022