வளர்ந்தவர்களாயினும், குழந்தைகளாயினும் பல்வேறு காரணிகளால் “மன அழுத்தம்” எனும் உளவள கோளாறு ஏற்படலாம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோளாறுகள் முற்றும் வரை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகின்றது.
அதிகரித்த சோர்வு, அதிகரித்த பயம், அச்சம், உள்ளத்தில் படபடப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், எதிலும் ஆர்வமின்மை, அதிகரித்த நித்திரை, அல்லது நித்திரை இன்மை, பசியின்மை, அதிகரித்த கோபம், தனிமையை விரும்புதல், ஏன் வாழ்கின்றோம் என்று விரக்தியடைதல், உறவுகளை முறித்துக் கொள்ளல், எதற்கெடுத்தாலும் கடுகடுத்தல், எறிந்து விழுதல், தனிமையில் அழுதல் இவ்வாறு பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
மன உளைச்சல் மூளையில் இரசாயன சமநிலையின்மை ஏற்படுவதாலும், உடலில் தேவையான ஹோர்மோன்கள் சுரக்காமையும் பல்வேறு கோளாறுகளுக்கு இட்டுச் செல்கின்றன, நோயெதிர்ப்புச் சக்தி குன்றுதல், தலைவலி, சுவாசக் கோளாறுகள், gastritis போன்றசமிபாட்டுத் தொகுதி சார்ந்த கோளாறுகள், பார்வை குன்றுதல், உடல் மெலிவு இவ்வாறான பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
குழந்தைகள், சிறுவர்கள், இளம்பராயத்தினர், அவர்களது நடவடிக்கைகளை அவதானித்து பெற்றார்கள் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
அதேபோல் குடும்ப வாழ்வில் இவ்வாறன வெளிப்பாடுகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாது விடின் விளைவுகள் கசப்பானதாக மாறிவிடலாம், சிலவேளை மன அழுத்தத்தில் இருப்பவர்களது நடவடிக்கைகளை வேண்டுமென்றே மேற்கொள்ளும் அலட்சியங்களாக அல்லது ஒத்துழையாமையாக கணவனோ அல்லது மனைவியோ தவறாக புரிந்து கொள்ளுவதற்கு அறியாமை காரணமாகி விடுகின்றது.
வயது முதிர்ந்த பெரியவர்கள், பெற்றார்கள் தனிமையில் வாடும் பொழுது அல்லது பிள்ளைகள், உறவினர்கள், பேரக்குழந்தைகள் அவர்களுடன் உறவாடுவதனை குறைத்துக் கொள்ளும் பொழுது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள்.
கல்வி வாழ்வில் ஏற்படுத்தப் படும் அதிகரித்த மன அழுத்தம், தொழில் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், குடும்ப வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம்,சமூக வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் என பல்வேறு காரணிகளால் மன அமைதி குழைந்து விடுவதால் ஏற்படும் உடல், உள நடத்தை கோளாறுகள் Depression, Schizophrenia, Stress, Anxiety Disorder, Phobia, Insomnia என பல வகைப்படுத்தப் பட்டுள்ளன.
கல்வி வாழ்வில் உள்ள அழுத்தங்கள், கேளிவதைகள், அவமானப் படுத்தல்கள், கவலைகள், , அதிகரித்த பொறுப்புக்கள் மற்றும் நீண்டகால பிரிவுத் துயர்கள், குடும்ப சூழலில் உள்ள புரிந்துனர்வின்மை, தொழில் சூழலில் உள்ள போட்டி பொறாமைகள், பொறுப்பற்ற அழுத்தங்கள், திட்டமிடாமயினால் வரும் பொருளாதார சுமைகள், சமூக அநீதிகளால் ஏற்படும் கொடுமைகள் (உதாரணமாக வரதட்சணை)இவ்வாறு பல்வேறு காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
ஐவேளையும் நேரம் தவறாது தொழுதல், அல்லாஹ்வுடன் உறவை உறுதிப் படுத்திக் கொள்தல், கவலைகளை, துன்ப துயரங்களை அவனிடம் முறையிடுதல், அதிகமதிகம் திக்ரு செய்தல் நிச்சயமாக மன அமைதியை ஏற்படுத்தும்.
சரியான உணவுப் பழக்க வழக்கங்கள், நேரகாலத்தொடு நித்திரைக்குச் செல்தல், போதிய அளவு ஓய்வெடுத்தல், அதிகாலையில் எழுந்து சுபஹு தொழுதல், போதிய அளவு நீர் அருந்துதல் என அன்றாட வாழ்வில் ஒழுங்குகளை கடைப்பிடித்தல்.
குடும்பத்தில், பெற்றார் உடன் பிறப்புக்களுடன், மனைவி மக்களுடன், அன்பாக நற்பண்புகளுடன் இனிமையாக பழகுதல், பாடசாலைகளில், தொழில் தளங்களில் உயரிய பண்பாடுகளுடன் நடந்து கொள்ளுதல் என்பன எமது வாழ்வில் மன அமைதியை அதிகரிக்கச் செய்கின்றன.
அடுத்தவர் உணர்வுகளை மதித்து நடத்தல், பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், பரஸ்பரம் உதவி ஒத்தாசை புரிதல், சுக துக்கங்களில் பங்கெடுத்தல், இன பந்துக்களைச் சேர்ந்து நடத்தல், உறவு முறைகளை பேணி வாழ்ந்து தனிமையை விரட்டுதல், சிறந்த பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுதல், பயனுள்ள நூல்களை வாசித்தல், கலை உணர்வுகளை பயனுள்ள விதத்தில் பயன் படுத்தல், சிறந்த உடற்பயிச்சி, விளையாட்டுக்களில் ஈடுபடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் மன அழுத்தத்தில் இருந்து எம்மை பாதுகாக்கும்.
அடுத்தவர் திறமைகளை அங்கீகரித்தல், பாராட்டுதல், வாழ்த்துக் கூறுதல், வீட்டில் குழந்தைகளை பாராட்டுதல், தட்டிக் கொடுத்தல், புன்முறுவலுடன் அடுத்தவரை அணுகுதல், சலாம் சொல்லுதல், மனைவியின் பங்களிப்புக்களை பாராட்டுதல், குறை நிறைகளை நளினமாக சுட்டிக் காட்டுதல் என பல்வேறு உயரிய பண்பாடுகள் குடும்ப சமூக வாழ்வில் மன அமைதியை மகிச்சியை ஏற்படுத்துகின்றன.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக தனிமையை விரட்டுவத்ற்காகாக சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் தொலைக் காட்சி பெட்டிகளுடனும், சமூக வலை தளங்கள் இன்டர் நெட் போன்றவற்றுடனும் காலத்தைக் கழிக்கின்றனர், ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்தாவிடின் அவை எரியிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் இன்னும் பல தனியாள், குடும்ப, சமூக பிரச்சினைகளுக்கு, கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன.
நகர வாழ்க்கை, தனிக் குடும்பங்கள், ஊர் உறவுகளை விட்டு தூரமாதல், கல்வி வாழ்வில் ஏற்பட்டுள்ள அதிகரித்த சுமைகள், குடும்ப சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள அதிகரித்த அழுத்தங்கள் இன்று மன அழுத்த கோளாறுகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
உயரிய இஸ்லாமிய தனிநபர், குடும்ப சமூக வாழ்வியல் ஒழுங்குகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகச் சிறந்த தீர்வுகளை கொண்டிருப்பதனை மேலே சொல்லப்பட்ட விடயங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
தராதரமுள்ள குத்பாப் பேருரைகள் மிகச் சிறந்த தீர்வாக அமையும், சகல பாடசாலைகளிலும் உளவள ஆலோசகர்கள் இருத்தல் வேண்டும், மனக்கருக்கு மாத்திரமன்றி ஆசிரியர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப் படுதல் வேண்டும்.
மருத்துவத் துறையை பொறுத்தவரையில் உளவள, உளவியல் துறையில் நிபுணர்களின் தேவை இன்று அதிகரித்து காணப் படுகின்றது.
உங்கள் அனைவர் மீதும், உள்ளங்களிலும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..!
மன அழுத்தம் பற்றி தமிழ் விக்கிபிடியா :
மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும்.
இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன், மனச்சோர்வும் ஏற்படும்.
- உணர்வு தொடர்பானவை:அதிகரித்த கவலை, மனக் குழப்பம், மனக் கலக்கம் அல்லது மனப் போராட்டம், எளிதில் எரிச்சலுறல் அல்லது கோபப்படல், மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல், தனிமையாக உணர்தல், உளச்சோர்வு.
- உடற்றொழிலியல் இடர்கள்: தலை வலி அல்லது நெஞ்சு வலி போன்ற வலிகள் வயிற்ருப் போக்கு (Diarrhoea) அல்லது மலச்சிக்கல், (Constipation), குமட்டல் (Nausea), தலைச்சுற்றல் (Dizziness), அதிகரித்த இதயத்துடிப்பு
- பழக்கவழக்கம் தொடர்பானவை:மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல், வேலைகளைப் பின்போடல், பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல், அதிகரிக்கும் மதுபானப் பாவனை, போதைப் பொருள் பாவனை,புகைத்தல்போன்றவற்றுடன் நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.
மனச்சோர்வு (Depression)
- மனக்கவலை
- அதிகாலை தூக்கமின்மை
- மிகுந்த சோர்வு
- பசியின்மை
- எடை குறைவு
- அடிக்கடி அழுதல்
- தன்னம்பிக்கையின்மை
- எதிலும் ஆர்வமின்மை
- அதிகமான குற்ற உணர்வு
- அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
- தொடர் துக்கமின்மை
- தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
- தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
- காதில் மாயக்குரல்கள் கேட்டல்
- அதிகமாக சந்தேகப்படுதல்
- அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
- சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
- உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
மனப்பதட்ட நோய் – (Anxiety Disorder)
- நெஞ்சுப் படபடப்பு
- கை நடுக்கம்
- அதிகமாக வியர்த்தல்
- நெஞ்சுவலி
- எதிலும் கவனம் செலுத்த இயலாமை
- தூக்கக் குறைவு
- அடிக்கடி எரிச்சல் அடைதல்
- எதிர்மறையான எண்ணங்கள்
பய நோய் (Phobia)
- தனிமையில் இருக்க பயம்
- கூட்டத்தினைக் கண்டுபயம்
- புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
- உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
- மூடிய இடங்களைக் கண்டு பயம்
- இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
- எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
- திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
- ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
- திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
- திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
- பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
- பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
- ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
- தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
- குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
- அடிக்கடி கோபம் கொள்ளுதல்
- குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
- மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
- உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
- கலவரங்களில் ஈடுபடுதல்
- சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
- மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
- பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
- எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
- எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக
- அதிக எரிச்சல்
- கோபம்
- சோர்வு
- பதற்றம்
- இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
கர்பிணி பெண்களும் மனநோய்களும்
- குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
- அடிக்கடி அழுதல்
- தூக்கமின்மை
- பசியின்மை
- தற்கொலை எண்ணங்கள்
- தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
- தொடர் தூக்கமின்மை
- மறதி
- பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
- நாள், கிழமை மறந்து விடுவது
- உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
- அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
- பசியின்மை
இதர மனநோய்கள்
- சாமியாட்டம்
- புகை பிடித்தல்
- மது அருந்துதல்
- கணவன் மனைவி பிரச்சனைகள்
- மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்
- குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
- படிப்பில் கவனம் குறைதல்
- அதிக கோபம் கொள்ளுதல்
- அடிக்கடி எரிச்சல் அடைதல்
- படுக்கையில் சிறுநீர் கழித்தல்
- மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
- கீழ்படியாமை
- அடிக்கடி பொய் சொல்வது
- திருடுவது
- குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
- 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
- மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
- நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
- குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் ( Separation anxiety disorder)