இயற்கையில் ஆண் பெண் சமத்துவம் கிடையாது, ஆண்மை தனித்துவமானது, பெண்மையும் தனித்துமானது. இரண்டு வகை தனித்துவங்களும் இணைந்தே மனித வாழ்வை பூரணப் படுத்துகின்றன, அது 50+50 ஆகும் 100=100 அல்ல.
ஆண்மைக்கு இலக்கணம் பெண்ணாக இல்லை என்பதுவல்ல, அதேபோல் பெண்மைக்கு இலக்கணம் ஆணாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் அல்ல.
ஆண்மை வன் பொருள் என்றால் பெண்மை மென் பொருளாகும், இரண்டுக்குமிடையில் சமத்துவம் கிடையாது மாறாக ஒன்றை ஒன்று விஞ்சுகின்ற ஈடாக முடியாத தனித்துவமே இருக்கின்றது.
ஆண் இல்லத்தை அமைக்கிறான் பெண் இல்லத்தையும் உள்ளத்தையும் ஆளுகின்றாள்.
ஆண் ஆதிக்க மனப்பான்மை தவறானது தான், ஆனால் அவர்களது தனித்துவங்களை சமத்துவங்களின் பெயரால் ஒழித்து விடுவதற்கான இயற்கைக்கு முரணான கோஷங்களும், நகர்வுகளும் இன்று பெண்மைக்கும், தாய்மைக்கும் நீதி வழங்குவதனை விட அநீதிகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
ஒரு ஆணின் முழு நேர உழைப்பும் ஒரு போதும் ஒரு தாய்மையின் பணிக்கு ஈடாவதில்லை, அதனால் தான் அல்லஹ்விற்கும் ரஸூவிற்கும் அடுத்து தாய், அடுத்ததும் தாய், அடுத்ததும் தாய் அதற்கு அடுத்ததே தந்தை என இஸ்லாம் கூறுகின்றது.
தாய்மை என்ற உயரிய அந்தஸ்துக்கு கீழ் தான் இஸ்லாமிய தஃவா களம் அவர்களது பரந்த விரிந்த வகிபாகம் குறித்து பேசுகின்றது. அங்கிருந்து தான் சிறந்த பெண் ஆளுமைகளை மாத்திராமன்றி ஆண் ஆளுமைகளும் உருவாக்கப் படுகின்றன.
இன்று பெண்மைக்கும், தாய்மைக்கும் எதிரான சமூக அநீதிகள், கொடுமைகள், வன்முறைகள் என்பவற்றை ஒழித்துக் கட்ட முடியாத கையாளாகாத நிலையில் நாம் இருந்து கொண்டுதான் இலட்சிய சமுதாயம், எழுச்சி, புரட்சி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, ஆண்மைக்கு இலக்கணம் பெண்ணாக இல்லாமல் இருப்பதுவல்ல, மாறாக பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை அநீதிகளை ஒழித்துக் கட்டி இலட்சிய சமுதாயத்தின் இலக்கணம் உலகறியச் செய்வதாகும்.
ஆண்மைக்கு இலக்கணம் பெண்ணாக இல்லாமல் இருப்பதுவல்ல மாறாக பெண்ணிடம் வரதட்சணை, கைக்கூலி, சீதனம், சீர்வரிசை என்று சுரண்டி வாழாது அவர்களை வாழ வைப்பதன் மூலம் பெண்மையையும், தாய்மையையும் போற்றுவதாகும்.