Saturday, November 27, 2021

சமூக ஊடகங்களை ஒரு விசுவாசி எவ்வாறு கையாள்வது.

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.  (ஸுரத்துல் ஹதீத் 57:4,5)

நாம் வாழுகின்ற தகவல் தொழில் நுட்ப யுகத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள், பொதுசன ஊடகங்களை விடவும் சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகின்றதன.

எனவே யுகத்தின் சவால்களை கருத்தில் கொண்டு ஒரு முஸ்லிம் எவ்வாறு சமூக ஊடகங்களை கையாள்வது என்பதனை தெரிந்து வைத்துக் கொள்வதோடு புதிய தலைமுறையினரை அறிவுறுத்தி உரிய உரிய வழிகாட்டல்களை வழங்குவது காலத்தின் கட்டாயம் மாத்திரமன்றி சன்மார்க்க கடமையும் கூட்டுப் பொறுப்புமாகும்.

Social-Media-Impactசமூக ஊடகங்களை உபயோகிக்கும் விசுவாசிகள் எல்லா நிலையிலும் எங்கு இருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ள வேண்டும், வாழ்வில் ஏனைய விடயங்களில் எவ்வாறு ஹலால், ஹராம், ஆகுமானவை, ஆகாதவை, கடமையனவை, தடுக்கப்பட்டவை, விரும்பத் தக்கவை விரும்பத் தகாதவை என வரைமுறைகள் இருக்கின்றனவோ அவைகள் சமூக ஊடக நடத்தைகளிலும் கண்டிப்பாக கைக்கொள்ளப் படல் வேண்டும்.

சமூக ஊடகங்களில் மஹ்ரம் பேணுதல்

மஹ்ரம் வரையறை எல்லாம் வல்ல அல்லாஹ் போட்டுள்ள அரண், அதை தகர்த்தெரியும் துணிவு உண்மை விசுவாசிகளுக்கு வரமாட்டாது.  மஹ்ரமற்ற இருவரின் தனித்த தொடர்பாடலில் மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருக்கிறான். ஹராமான Chat தொடர்பாடல்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், எமது பிடரி நாளங்களை விடவும் அல்லாஹ் எமக்கு அருகாமையில் இருக்கிறான்.

உங்கள் கணவர், உங்கள் சகோதரன், உங்கள் மகன், உங்கள் சகோதரி, உங்கள் மனைவி, உங்கள் மகள் உங்கள் அன்பிற்குரியோர் நெறிபிறழ் வதை கனவிலும் நினைக்காத நீங்கள் பேணுதலாக இருந்து கொள்ளுங்கள், நாளை ஷைதான் உங்கள் வீடுளில் திருட்டுத் தனம் புரிவான்.

“தக்வா” எனும் இறையுணர்வு ஒன்று மாத்திதிரமே எங்களை, எங்கள் குடும்பங்களை சீரழிவுகளில், சிதைவுகளில்  இருந்து பாதுகாக்க முடியும்.

அவனறியாமல் ஒரு மரத்தின் இலை ஒன்றேனும் உதிரவதில்லை.

“அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.”

(ஸுரதுல் அன்ஆம் 6:59)

“அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.”
(ஸுரதுல் ஹதீத் 57:4)

 

சமூக ஊடகங்களை சரியான இலக்குகளிற்காக பயன்படுத்துவது (பர்ழு) கடமையாகிறது.

சிலர் எடுத்த எடுப்பிலேயே சமூக ஊடகங்கள் பொழுது போக்கிற்கு உரியவை அங்கு சீர்திருத்தங்கள், சமூக மாற்றங்கள், இலட்சிய போராட்டங்கள், அரசியல், மார்க்கம் என எதையும் கொண்டுவராதீர்கள் என்று கூறுவார்கள், அவ்வாறான குறுகிய பார்வையைக் கொண்டவர்கள் ஒருவிஷயத்தை தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும், எங்கெல்லாம் மனித ஆளுமைகளில் ஷைத்தான் செல்வாக்கு செலுத்த இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்மையை ஏவி தீமையை விலக்குகின்ற பணி இடம்பெறுவது விதிக்கப்பட்ட கடமையாகும்.

சமூக ஊடகங்களில் தீமைகளை தவிர்வதும், தவிர்ப்பதும் (பர்ழு) கடமையாகும்.

உண்மை, நீதி, நேர்மை, சத்தியம் போன்ற உயரிய இலக்குகளை எந்தவொரு சூழ்நிலையிலும் விசுவாசிகள் விட்டுக் கொடுப்பதற்கு மார்கத்தில் அனுமதி கிடையாது, அதேபோன்று உயரிய இஸ்லாமிய பண்பாடுகளை சீரழிக்கின்ற அல்லது தீமைகளை சந்தைப்படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையினையும் இரகசியமாகவோ பரகசியமாகவோ ஒரு விசுவாசி மேற்கொள்வதற்கு அனுமதி கிடையாது.

A supporter of nationalist Buddhist monks wears a T-shirt calling for a ban on Islamic halal-slaughtered meat, during a rally at Maharagama, a suburb of the capital Colombo, February 17, 2013. A new group known as the Bodu Bala Sena, or Buddhist Force, launched a drive to press for a boycott of all halal products in a country where the majority are Buddhists. AFP PHOTO/Ishara S.KODIKARA
எனவே வாழ்வின் ஏனைய விவகாரங்களில் எவ்வாறு இறையச்சம், உளத்தூய்மை, நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், நல்ல விவகாரங்களில் ஒத்துழைத்தல், பயனுள்ளவற்றை பகிர்ந்து கொள்தல், பயனற்றவற்றை தவிர்ந்து கொள்தல், ஹலால், ஹராம் பேணுதல் என சகல பெறுமானங்களும் சமூக ஊடக வலையமைப்புகளின் பாவனைகளிலும் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

ஒரு மனிதனின் பண்பாடுகள் விருப்பு, வெறுப்புக்கள், நடத்தைகள், அங்கீகாரங்கள், ஆதரவுகள் எல்லாம் அவரது ஆளுமையினை பிரதிபலிக்கின்றன, எண்ணங்களிற்கு ஏற்பவே கருமங்கள் இடம் பெறுகின்றன அதேபோன்றே சமூக ஊடகங்களில் எமது நடத்தைகள் எங்கள் தராதரங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக நாம் சமூக ஊடகங்களில் விரும்பி ரசிப்பவைகள், பகிர்ந்து கொள்பவைகள், பின்னூட்டம் இடுபவைகள் என எமது எல்லா நடத்தைகளையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான், வானவர்கள் அவற்றை பதிவு செய்து கொள்கின்றார்கள், அவற்றிற்கான பிரதிபலன்கள் இவவுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் எங்களிற்கு வந்து சேருகின்றன.

சமூக ஊடகங்களை பொறுப்புணர்வுடன் கையாளுதல் (வாஜிப்) ஆகும்

குறிப்பாக இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களிற்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற தப்பபிப்பிராயங்கள், காழ்ப்புணர்வுப் பரப்புரைகள், அல்லது பிழையான தகவல்கள், வதந்திகள் செய்திகள், இருப்பு ,பாதுகாப்பிற்கு விடுக்கப் படுகின்ற அச்சுறுத்தல்கள் என சமூக ஊடகங்கள் பிழையான தரப்புக்களால் கையாளப் படுகின்ற பொழுது கூட்டுப் பொறுப்புடனும், அறிவு பூர்வமாகவும் அவற்றிற்கு முகம் கொடுப்பது எம்மீது கடமையாகின்றது.

இன நல்லுறவிற்கும், தேசத்தில் சமாதான சகவாழ்விற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற  இனங்களுக்கிடையில் பிணக்குகளை தோற்றுவிக்கின்ற முரண்பாடுகளை ஏற்படுத்துகின்ற பதிவுகளை  நாம் இடாது தவிர்ந்து கொள்வதும் அவ்வாறான பதிவுகளை தவிர்ந்து கொள்வதும் எவ்வாறு கடமியாகின்றதோ அவ்வாறே ஏனைய தீய சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும் பரப்புரைகளிற்கு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுதலும் கட்டாயமாக தவிர்க்கப் படல் வேண்டும்.

ஒரு சமூகத்தின் தேசத்தின் இருப்பு பாதுகாப்பு சார்ந்த செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என அல்-குர்ஆன் சொல்லித் தருகின்றது, ஒரு கூட்டத்தார் பிறிதொரு கூட்டத்தாரை ஏளனம் செய்வது குறித்து அல்-குரான் கண்டனம் செய்கின்றது, கோள் மூட்டுதல், புறம் பேசுதல், இட்டுக் கட்டுதல், பகிடிவதை பண்ணுதல், நையாண்டி பண்ணுதல், குரலை உயர்த்திப் பேசுதல், மற்றொருவரது உள்ளத்தை காயப் படுத்தல் போன்ற சகல பிரயோகங்களும் அல்-குர்ஆனில் மற்றும் அல் ஹதீஸில் வன்மையாக கண்டிக்கப் பட்டவையாகும்.

நாவை தீயவைகளில் இருந்து பேணுவது போல், நல்ல விடயங்களிற்கு பயன்படுத்தாமல் இருப்பதுவும் அமானிதங்களை பாழ் படுத்தும் ஒரு விடயமாகும், நல்லவற்றை ஏவுதல், தீயவற்றை தடுத்தல், நீதி நியாயத்திற்காக குரல் கொடுத்தல், சத்தியத்தை கொண்டு பரஸ்பரம் நல்லுபதேசங்கள் செய்து கொள்ளல், அல்-குரானை, அல்-ஹதீஸை கற்றல், கற்றுக் கொடுத்தல், சமாதனம் செய்து வைத்தல் என இன்னோரன்ன நல்ல கருமங்களிற்காக எமது பேச்சுக்களும் எழுத்துக்களும் பிரயோகிக்கப் படுதல் வேண்டும்.

சமூகத்திற்கும் சன்மார்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவது (ஹராம்) குற்றமாகும்.

அழகிய இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு நாம் பதிவேற்றுகின்ற அடையாளப்படங்கள், பகிர்ந்து கொள்கின்ற ஆபாசங்கள், அல்லது எமது சொந்த படைப்புக்கள், பதிவுகள், வார்த்தைப் பிரயோகங்கள் சிலவேளைகளில் நாம் சார்ந்த சமூகத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடலாம், நிச்சயமாக நாம் அவற்றைத் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

பயனுள்ளவற்றை பகிர்ந்துகொள்ளுதல் (வாஜிப்)  காட்டயமாகவும், (முஸ்தஹப்)  விரும்பத் தக்கவையாகவும் இருக்கலாம்.  

நாம் கடந்து செல்கின்ற அருமையான தகவல்கள், அவசியமான அறிவுறுத்தல்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்வது அவற்றின் முக்கியத்துவங்களிற்கு ஏற்ப  கட்டாயமாகவும் சிலவேளைகளில் விரும்பத் தக்கதாகவும் இருக்கலாம். நமக்கும் நமது சமூகத்திற்கும் மாத்திரமன்றி தேசத்திற்கும் மக்களிற்கும் பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துகொள்கின்ற மன நிலை எங்களிடம் வர வேண்டும், நாம் வழமையாக விரும்புகின்ற பகிர்ந்துகொள்கின்ற விடயங்களை வைத்து எமது தற்போதைய மனநிலையை தெரிந்து கொள்ளலாம்.

இறையுணர்வு உள்ள ஆன்மாக்களின் நடத்தைகள் மாத்திரமல்ல நாவும் வார்த்தைகளும் ஆன்மீக அற நெறிகளை பிரதிபலிக்க வேண்டும்.

எமது கருத்து வெளியீடுகள், வார்த்தைகளாகவும், உரையாடல்களாகவும், எழுத்துக்களாகவும், வெவ்வேறு வடிவங்கள் கொண்டிருக்கலாம், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுகள், செய்தி மற்றும் தகவல் பரிமாற்றங்கள் இலக்கியங்கள் போன்ற இன்னோரன்ன வடிவங்களைக் கொண்டிருக்கலாம்.

எமது கருத்துச் சுதந்திரம் என்பது எமது ஆன்மீக பண்பாட்டு கலாசார விழுமியங்களை வரை முறைகளை தகர்த்தெறிகின்ற கருத்தியல் வன்முறைகளாக, துஷ்பிரயோகங்களாக இருக்க முடியாது.

leadership1தகாத, நாகரீகமற்ற பண்பாடற்ற (அறியாமைக்கால) வார்த்தைப் பிரயோகங்களை மற்றும் நடத்தைகளை விடாதவர்கள் பசித்திருப்பதிலும் தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் கிடையாது, ஒரு மனிதனின் வார்த்தை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவு நரகின் பாதாளத்தில் தள்ளி விடும், பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய் மூடியிருங்கள், நாவினாலும் நடத்தையினாலும் அடுத்தவரை நோவினை செய்யதவனே முஸ்லிம். என்ற கருத்துக்களையுடைய நபி மொழிகளை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

 

எழுத்துக்கள் விமர்சனங்கள் அமானிதங்களாகும்.

ஒரு மனிதர் அல்லது கூட்டத்தினர் மீதுள்ள அன்போ அல்லது வெறுப்போ அவர்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து ஒரு விசுவாசியை தடுக்க முடியாது, ஒரு சாராருக்கு ஆதரவாகவும், மற்றுமொரு சாராருக்கு எதிராகவும் எழுதுவதும், பேசுவதும் கூட அந்த ஆன்மீக அளவுகோள்களின் கணிப்பீடுகளை விஞ்சிவிடக் கூடாது.

அவ்வாறான விமர்சனங்களில் போட்டியும் பொறாமையும்,காழ்ப்புணர்வும், சில வேளைகளில் புகழ் தேடலும், தாழ்வு மனப்பான்மைகளும், மனநிலைக் கோளாறுகளும், கருத்தியல் வன்முறையும் குழுச் சண்டைகளும் மிகைத்து நிற்பதனை என்னால் உணர முடிகின்றது.

இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சை பரஸ்பர அன்பு இல்லாது ஒருவரை அடுத்தவர் வழிகேடாக அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் அடிப்படை இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாட்டு விழுமியங்களை மீறுவதாக எனக்குத் தெரிகின்றது.

பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.

சிலரது கருத்துப் பகிர்வுகள் மிகவும் சிறு பிள்ளைத் தனமாகவும், அதிகப் பிரசங்கித் தனமான பிரயோகங்களைக் கொண்டதாகவும் எனக்குத் தெரிகின்றது

குறிப்பாக, இலத்திரனியல் அச்சு மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு சத்தியம் அசத்தியம் என்ற வரை முறைகளை தாண்டும் பொழுது எமது பணியும் உழைப்பும், தொழிலும் ஹலால் ஹாராம் என்ற வரைமுறைகளுக்கு உற்பட்டவையா அவை எமது கொள்கை கோட்பாடுகளை ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களை பிரதிபலிக்கின்றனவா என்பதனை நாம் மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

மிகைப்படுத்தல்,அளவுகடந்த வர்ணனைகள், அளவுகடந்த வஞ்சனைகள், கூட அநீதிகளாகும், கண்ணுக்குக் கண், காதுக்குக் காது, மூக்கிற்கு மூக்கு, உடலிற்கு உடல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இருக்கின்றது, ஒரு சிறிய தவறை எல்லை மீறி பூதாகரமாக்குவது, ஒரு பெரிய தவறை அல்லது சமூகத் துரோகத்தை நியாயப் படுத்துவது அல்லது சிறிய விவகாரமாக பேசுவது எழுதுவது எல்லாம் ஆநீதிகளாகும்.

“நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.”

(ஸுரத் யூனுஸ் 10:61)

 

உலகில் தீயவர்கள் குறைவானவர்கள், நல்லவர்களின் மௌனமே தீயவர்களை ஷைதானியத்தை கோலோச்சச் செய்கின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles