Monday, October 18, 2021

“இகாமதுத் தீன்” சில குறிப்புக்கள்…

கீழிருந்து மேல்நோக்கி பயணிப்பதே இலக்கை நோக்கிய இனிய பயணம்.

தேவையான அறிவு ஞானத்தோடு, விவேகத்துடன், தன்னம்பிக்கையோடு ,துணிவோடு, சாதுரியமாக, சமயோசிதமாக, நிதானமாக, பொறுமையோடு, படிப்படியாக, கீழிருந்து மேல்நோக்கி பயணிப்பதே இலக்கை நோக்கிய இனிய பயணம்.

தனி மனிதன், குடும்பம், அண்டை அயலவர், கிராமம், தேசம், உம்மத் என கீழிருந்து மேல்நோக்கிய பயணம், இந்த அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்ள மறுக்கின்ற நாம் எப்பொழுதும் தீர்வுகளை வெளியில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

எமது சமூக பொருளாதார, அரசியல், கலை, கலாச்சார, கல்வி, சுகாதார, சுற்றுச்சூழல் என வாழ்வின் சகல துறை பிரச்சினைகளிற்கும், சவால்களிற்குமான தீர்வுகள் வானிலிருந்து வீழ்வதில்லை. அவை பிறதேசங்களில் இருந்தோ அல்லது தேசத்தில் தலைநகர்களில் இருந்தோ வந்து வீழ்வதில்லை.

முஸ்லிம் உம்மத்திற்கான விமோசனமும் அவ்வாறுதான் இகாமதுத் தீனும், கிலாபாவும் அவ்வாறுதான் அவை அடிமட்டத்தில் ஒரு புள்ளியில் இருந்து துவங்கும் ஒளிக்கீற்று, அதனை சவூதியில் இருந்தோ, எகிப்தில் இருந்தோ, ஈரானில் இருந்தோ, துருக்கியில் இருந்தோ, மலேஷியாவில் இருந்தோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இயற்கை நியதிகளுக்கு முரணானது.

தனிமனிதனுடைய கிலாபாத் பயணம் தன்னிலிருந்து தனது வீட்டிலிருந்து ஆரம்பித்து மஸ்ஜித் மைய செயற்பாடுகளூடாக அடிமட்ட அலகுகளூடாக மேல்நோக்கி பயணிக்கின்ற அழகிய படிமுறையை கொண்டுள்ளது, அது மகத்தான மனித நேயப் பயணம்.

எவற்றை, எப்போது, எந்தப் பருவத்தில் யாரிடமிருந்து , எந்த அளவில் கற்றுக்கொள்வது, பெற்றுக் கொள்வது, உள்வாங்குவது என்பவற்றை அவ்வப்போது தீர்மானிக்கின்ற அறிவும் ஆற்றலும் புலமையும், திறமையும் ஒவ்வொரு அடிமாட்ட அங்கத்துவத்திற்கும், தலைமைகளிற்கும் இருக்க வேண்டும்.

அடிமட்டத்தில் இருந்தே களத்தில் தலைமைத்துவப் பண்புள்ள ஆளுமைகள் இனம் காணப்படுதல் வேண்டும் எல்லா மட்டங்களிலும் எல்லாத்துறைகளிலும் உள்ள ஆளுமைகளிற்கான அங்கீகாரங்களும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுதல் வேண்டும், இல்லாதவிடத்து ஒருசில பிரபலப் பிம்பங்களை தோற்றுவித்து நம்பி இருக்க வேண்டிய துரதிட்ட நிலை ஏற்படுகின்றது.

இன்றைய சன்மார்க்க சமூக அரசியல் போராட்டங்கள் அவற்றிற்கான கட்டமைப்புக்கள் அடிமட்டத்தில் இருந்து பிரச்சினைகளிற்கான சவால்களிற்கான தீர்வுகளை கண்டறிகின்ற பொறிமுறைகளை தோற்றுவிக்காது உயர்மட்டங்களில் இருந்து, மேலிடங்களில் இருந்து, பிற தேசங்களில் இருந்து , இறக்கு-மதிகளில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு அவல நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகள், ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என ஒவ்வொரு தேசங்களிலும் உள்ள சிந்தனைப் பள்ளிகள், அறிஞர்கள் கால சூழ்நிலைக் கேற்ப இலட்சியப் பணிகளின் வடிவங்களை தீர்மானித்துக் கொள்கின்றார்கள். சில நாடுகளில் இஸ்லாமிய ஷரீஅத்தின் அமுலாக்கத்தை வலியுறுத்தி அரசியல் சக்திகள் இகாமதுத் தீன் நிலைப்பாடுகளை வகுத்துள்ளனர்.

ஆதமும் ஹவ்வாவும் உலகிற்க்கு அனுப்பப் பட்டது முதல் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையிலான சமர் இறை நேசர்களிற்கும், ஷைத்தானின் பட்டாளங்களிற்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆதமுடைய மக்கள் பிறக்கின்ற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் அவர்களுக்கான களமும், தளமும் காத்திருக்கின்றன, ஒவ்வொரு ஆன்மாவும் தாம் பிறந்த இடத்தில், காலத்தில் சத்தியத்தின் காரவானில் இணைந்து கொள்ள வேண்டும்.

சொந்த மண்ணில் போராட்டங்கள் மறந்து வேறெந்த மண்ணின் போராட்டம் குறித்தும் பேசுவதும் எழுதுவதும் அடித்தளமின்றி ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போலாகும்.

எல்லா மட்டங்களிலும் திறமைகளை ஆற்றல்களை அங்கீகரித்தல் 

Shoora4தனி நபர்களாகவும் குழுக்களாகவும் தாமும் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கு தம்மால் இயன்றதையெல்லாம் இயன்றவரை செய்வதற்கு சமூகத்தில் மிகப் பெரும்பான்மையினர் நல்லெண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தான் அல்லது தாம் மட்டுமே தேசத்திற்கும் சமூகத்திற்கும் உம்மத்திற்கும், உலகத்திற்கும் நன்மையை நாடுகின்றவர்கள் அல்லது செய்கின்றவர்கள் என்று நினைப்போர் இயற்கை நியதிகளை நிராகரிக்கின்ற உச்சக் கட்ட மடமையில் இருக்கின்றார்கள்.

அடுத்தவர்களது உணர்வுகளை, ஆற்றல்களை, அர்ப்பணங்களை புரிந்து கொள்கின்ற, மதிக்கின்ற மனோபக்குவமும் அறிவு முதிர்ச்சியும் இல்லாதவர்களே தனிநபர்களாகவும் குழுக்களாகவும் ஏகபோக எதேச்சாதிகார மேலாதிக்க முஸ்தீபுகளில் ஈடுபடுகின்றார்கள்.

தனிநபர்களாகவும், குழுக்களாகவும் தமது கொள்கை கோட்பாடு இலட்சியங்களை அமுலாக்க மற்றும் நடைமுறை முன்மாதிரிகளூடாக சமூகத்தின் முன்னும் தேசத்தின் முன்னும் வைக்கின்ற பொழுது மாத்திரமே உண்மையான அங்கீகாரம் கிடைக்கின்றது.

மாறாக, தனிநபர்களாகவும், போட்டிக் குழுக்களாகவும் நாம் பிரிந்து நின்று ஏட்டிக்குப் போட்டியாய் அடுத்தவரை மட்டம்தட்டுகின்ற கருத்தியல் வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் நாம் எமது அறியாமயினது உச்சத்திற்கே சென்று விடுகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு தனிமனிதனிற்கும் வழங்கியுள்ள தனித்துவமான ஆற்றல்கள், திறமைகள், மதிநுட்பங்கள், அறிவு ஞானம் என்பவற்றை அங்கீகரிக்க மறுக்கின்ற அகங்காரமும், ஆணவமும் நிறைந்த தனிநபர்களோ குழுக்களோ நிச்சயமாக தாம் நன்மையே செய்வதாக எண்ணிக்கொண்டு பெரும்தீங்கினையே இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சமூகத்தின், தேசத்தின் உம்மத்தின், குழுமத்தின் இருப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, உயர்வு, விருத்தி என இன்னோரன்ன விடயங்கள் அவர்களின் கூட்டுப்பொறுப்பு என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது, அதனாலேயே “ஷூரா” எனும் அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

தான் மாத்திரமே யாவும்அறிந்த கலைக் களஞ்சியம் என்ற இறுமாப்பில் ஏனைய அறிஞர்களை தரக்குறைவாக பேசுவதும், விமர்சிப்பதும், தாம்மாத்திரமே உலகிற்கு நன்மை செய்ய முடியுமான அங்க சம்பூரணமான அமைப்பினர் என உரிமை பாராட்டுவதும் மமதை கொள்வதும் ஜாஹிலிய்யத்தின் உச்சகட்டமாகும்.

அத்தகைய ஜாஹிலிய்யத்தின் எதேச்சாதிகார ஏகபோக சக்கரவர்த்திகளாகவே நாம் நவயுக பிர்அவுன்களை, ஹாமான்களை, காரூன்களை, அபூ ஜஹல்களை, ஆத் சமூத் கூட்டங்களை காணுகின்றோம்.

தனி நபர்களாகவும், குழுக்களாகவும் எம்மால் இயன்றவரை நாம் புரிந்துணர்வுகளை இணக்கப்பாடுகளை எய்துவதற்கான நியாயங்களை, காரணங்களை தேடுவதை விட்டு விட்டு முரண்படுவதற்கான, முட்டி மோதிக் கொள்வதற்கான நியாயங்களை காரண காரியங்களை தேடிக் கொண்டிருப்பதன் மூலம் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

 நன்மை செய்தல், செய்ய தூண்டுதல், ஏவுதல் தீமை தவிர்தல் தவிர்த்தல்

ummath1நன்மை செய்தல், செய்ய தூண்டுதல், ஏவுதல் தீமை தவிர்தல் தவிர்த்தல் எனும் பொழுது குறிப்பிட்ட சில மர்க்கக் கடமைகளை செய்தல், ஏவுதல், சில பாவங்களை செய்யாதிருத்தல், தடுத்தல் என பொதுவான ஒரு கருத்தோட்டம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

மாறாக, இந்தப் புவியில் மனிதனும் ஏனைய படைப்புக்களும் உரிய முறையில் வாழ்வதற்கும், பணி செய்வதற்கும் சாதகமான எல்லா நல்ல கருமங்களையும் செய்வதனையும், எடுத்துச் செல்வதனையும், பாதகமான அனைத்து கருமங்களையும் தவிர்த்துக் கொள்வதனையும், தடுப்பதனையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரம் சமூக பொருளாதார, கலை கலாசார, சுகாதார சுற்றுச் சூழல் நாகரிக, பண்பாட்டு சீர்கேடுகளில் இருந்து தமக்குள் பாதுகாப்பு பெறுவது ஒரு கப்பலில் பயணம் செய்யும் ஒரு சிலர் மாத்திரம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணிப்பது போன்றாகும்.

மற்றொரு உதாரணம் சொல்வதாயின் டெங்கு, பன்றிக் காய்ச்சல், மலேரியா, மூளைக் காய்ச்சல் பரவும் ஒரு தேசதத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரம் இனம், மதம், மொழி, நிறம், குலம், இயக்கம், கொள்கை பார்த்து தமக்குள் மாத்திரம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தமது வீடு வளவுகளை மாத்திரம் நுளம்பு பெருகுவதில் இருந்து காத்துக் கொள்வது போன்ற குறுகிய பார்வையாகும்.

ஓரு விசுவாசியின் அழைப்புப் பணி பரந்துபட்ட மனிதாபிமான செயற்பாடாகும். அங்குதான் மனித குலத்திற்கான கருணையின் தூது ஏனைய சமூகங்களை சென்றடைகின்றது, உம்மத்துக்களில் சிறந்த உம்மத்தாக இந்த உம்மத்து பரிணமிக்கின்றது.

இத்தகைய பரந்துபட்ட பார்வையில் ஒரு விசுவாசி சமூக வாழ்வில் மாத்திரமன்றி தேசிய வாழ்வில் முன்னணி செயற்பாட்டாளராக இருத்தல் வேண்டும், அத்தகைய ஆளுமைகள் உருவாக்கப் படல் வேண்டும்.

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படைகள் குறித்த ஆய்வுகள் “மகாஸித் இயல்”

மனிதன், இறைவன், பிரபஞ்சம், பூமி, பஞ்ச பூதங்கள், ஏனைய படைப்பினங்கள், வாழ்வு, வாழ்வு நெறி, மரணம் , மரணத்திற்குப் பின் என வாழ்வின் அடிப்படையான கேள்விகளிற்கு வேத சாஸ்திரங்களும், தத்துவ ஞானங்களும், சித்தாந்த கோட்பாடுகளும் பதில் அளிக்க விளைகின்றன.

மேற்படி வேதசாஸ்திரங்கள், தத்துவ ஞானங்கள், சித்தாந்தங்கள் போன்றவற்றின் மூலாதார வசனங்களிற்குள்ளும், வரலாறு நெடுகிலும் மேற்கொள்ளப்பட்ட வியக்கியானங்களிற்கும் சிறைப்பட்டு முரண்பாட்டு சித்தாந்த மற்றும் அமுலாக்க முகாம்களாக முரண்பட்டு மனிதகுலம் வாழ்வின் அடிப்படை இலக்குகளை தொலைத்து நிற்கின்றது.

காலாகாலமாக கருத்துக்களால் முரண்பட்டுக் கொண்ட மனித வர்க்கம் இன்று வன்முறை பிரயோகங்களால் மோதிக் கொள்கின்ற நிலைக்கு பரிணாமம் அடைந்திருக்கின்றது. வாழ்வின் அடிப்படை இலக்குகளை தொலைத்து விட்டு மதம், இனம், மொழி, நிறம் என்ற போட்டா போட்டிகளுடன் அழிவின் விளிம்பினை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறனதொரு காலகட்டத்தில், யுகத்தின் சவால்களை நன்கு புரிந்து கொண்டு, யுகத்திற்குரிய பரிபாஷையில் இஸ்லாமிய ஷரீஅத்தின் மூலாதார வசனங்களை அவற்றிற்குரிய வியாக்கியானங்களை அவை அமுலாக்கப் படவேண்டிய இடம், காலம் மற்றும் சூழ்நிலை பரிமாணங்களை கருத்தில்கொண்டு மக்கள் முன் வைப்பதற்கான நவீன அணுகுமுறையே “மகாஸித் ஷரீஆ” குறித்த ஆய்வு முயற்சிகளாகும்.

இஸ்லாமிய பயங்கரவாதம்,அடிப்படைவாதம், தீவிரவாதம் போன்ற கோஷங்களுடன் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள தீவிர இஸ்லாமோபோபியா, பிரச்சாரங்கள், இஸ்லாமிய கிலாபா, ஜிஹாத், ஷரீஆத் சட்டங்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள் என்பவற்றிற்கு உரிய பரிபாஷையில் முகம்கொடுப்பதற்கும் இஸ்லாமிய தஃவாவை முன்னெடுப்பதற்குமான தத்துவார்த்தமான ஒரு அணுகுமுறையுமாகும்.

மாறாக, இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படைகள் குறித்த ஆய்வுகள் “மகாஸித் இயல்” என்பதுஇஸ்லாமிய ஷரீஆவில் இதுவரை கண்டறியப்படாத, அல்லது இஸ்லாமிய மூலாதாரங்களை, வரலாறு நெடுகிலும் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாத், பிக்ஹு, உஸூல், கவாயித் தொடர்பிலான ஆய்வுமுயற்சிகளை அல்லது இஸ்லாமிய செயற்பாட்டு மற்றும் அமுலாக்க நடைமுறைகளை கலாவதியாகச் செய்கின்ற முற்றிலும் புதிய ஒரு கலை அல்ல.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles