O (முகநூல் பதிவுகளில் இருந்து…)
உங்களுக்கு உரியதை மாத்திரமே பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு உரியதை மாத்திரமே பெற்றுக் கொள்ளுங்கள், பிறருக்கு சேரவேண்டியதை ஒப்படைத்துவிடுங்கள், தரப்படுகின்றது என்பதற்காக பெறப்பட வேண்டும் என்பதில்லை, குறுக்கு வழிகளில் எதனையும் அடைந்து கொள்ள முண்டியடிக்காதீர்கள்.
சொத்து, செல்வம், பொருட்கள், சேவைகள், தொழில்கள், பாராட்டுக்கள், சன்மானங்கள், பதவிகள், கௌரவங்கள், அங்கீகாரங்கள், அந்தஸ்துகள் எவை என்றாலும் சரியே..!
ஏனென்றால் பிறரிற்கு சேரவேண்டியவை எமக்கு ஒரு பொழுதுமே நன்மைபயக்கப் போவதில்லை மாறாக ஒரு சோதனையாகவோ சாபக் கேடாகவோ இருக்கலாம்.
உரிமையும், தகைமையும், அருகதையும், தகுதியும் உள்ளோர் வயிற்றில் அடித்து, காலை வாரி பிழைப்பு நடத்துவோர் பகற்கொள்ளைக் காரர்கள்.
அமானிதம் பேணாமை அக்கிரமமாகும், அமானிதங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப் படாவிடின் கியாமத்தை எதிர்பாருங்கள் என்பது நபிமொழி.
நீங்கள் நீங்களாகவே நீங்களாகவே முயன்று முன்னே வாருங்கள்.
இன்னொருவரை போலவோ, இன்னொருவரை நம்பியோ வாழாதீர்கள், உங்கள் அறிவு திறமை ஆற்றல்களை எவரிடமும் அடகு வைத்து விடாதீர்கள், சந்தர்ப்பங்களுக்கும், சலுகைகளுக்குமாக காத்திருக்காதீர்கள்.
அல்லாஹ் ஒருவன் மீதே ஆழமான நம்பிக்கை வையுங்கள், அவனிடமே தவக்குள் வையுங்கள், அவனிடமே முறையிடுங்கள், அவனது திருப்தியில் ஆறுதலடையுங்கள், தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தானாகவே வரும், அங்கீகாரமும் அந்தஸ்துக்களும் உங்களை தேடி வரும்.
ஒவ்வொரு ஆன்மாவும் அதனதன் சக்திக்கு ஏற்பவே விசாரிக்கப்படும்.
100 வாட் மின் குமிழ் -பல்பு- 20 வாட் ஒளி தருவதற்கும், 10 வாட் பல்ப் 8 வாட் ஒளி பிரகாசாம் தருவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கின்றது.
முன்னையது 80% விகிதம் தோல்வி கண்டிருக்கின்றது, பின்னையது 80% வெற்றி கண்டிருக்கின்றது, பிரகாசம் என்னவோ முன்னையதில் அதிகமாக தான் இருக்கிறது.
அதுபோல் தான் மக்கள் வரிப்பணத்தில் உரிமைகள் சலுகைகள் அனுபவித்துக் கொண்டு அரச நிதியில் தமது பெயரில் சமூக சேவை செய்வதும், அரச சார்பற்ற சமூக தொண்டு நிறுவனங்கள் மனித நேய பணிகள் செய்வதும்.
உரிமைப் போராட்டம் செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் செய்கின்ற சேவைகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் செய்கின்ற சேவைகளும்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் பணி செய்வதும், அதிகாரங்கள் கையில் இல்லாது மக்கள் பணி செய்வதும்.
அதேபோல் தான் நன்கு கற்றிருந்த ஆலிம் நல் அமல்கள் செய்வதும், பாமரர்கள் தம்மால் இயன்றவரை கேட்டறிந்து அமல்கள் செய்வதும்.
இக்லாஸ் உளத்தூய்மையின்றி அதிகம் நல் அமல்கள் செயவதும், உளத்தூய்மையுடன் முடியுமானவற்றை இயன்றவரை செய்வதும்.
அதேபோல் தான் ஒரு செல்வந்தர் கிள்ளிக் கொடுப்பதும், ஒரு வறியவர் அள்ளிக் கொடுப்பதும்.
வசதி வாய்ப்புக்கள் அதிகம் பெற்ற புத்திஜீவிகள் அறிவுப்பணி செய்வதும் வரிய மாணவர்கள் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும்.
ஒவ்வொரு ஆன்மாவும் தனது சக்திக்கு ஏற்பவே கேள்வி கணக்கிற்கு ஆளாகும்.
உறவுகளில் முதன்மையானது அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு.
உறவுகளில் முதன்மையானது அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு, அந்த உறவு சீரடைந்தால் ஏனைய அனைத்து உறவுகளும் சீரடைந்து விடுகின்றன.
இறையுணர்வு உள்ளங்களை ஒளி பெறச் செய்கின்றது, இறையச்சம், உளத்தூய்மை , அல்லாஹ்வின் அருள் மீதான நம்பிக்கை, அவன் மீதான தவக்குள் ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வில் மாத்திரம் அல்லது மறுமை வாழ்வில் மாத்திரம் ஈடேற்றம் தருபவை அல்ல.
எமது அன்றாட வாழ்வில் அவை சாதகமான அனுகூலங்களை கொண்டிருக்கின்றன, எமது வாழ்வில் உண்மை, நீதி, நேர்மை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, ஹலால் ஹராம் பேணுதல், பொறுமை, நிதானம், உயரிய குணாதிசயங்கள், பாரோபகாரம் என எல்லையில்லா நன்மைகளை கொண்டுள்ளன.
எமது வாழ்வில் அல்லாஹ்வின் அருள் நிறைவாக கிடைக்கின்றது, அவனது துணை இருக்கின்றது, எமது உழைப்பில் பறக்கத் இருக்கின்றது, எமது குடும்பங்களில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவுகின்றன.
எமது நல்ல அமல்களும் உயர்ந்த குண நலன்களும் எமது மறுமை வாழ்வை மாத்திரமன்றி இன்மை வாழ்வை இறையருள் நிறைந்த வசந்தம் நிறைந்த வாழ்வாக மாற்றி விடுகின்றன.
இன்று ஸுபஹு தொழுதீர்க்கள், அல்லாஹ்விடம் உங்கள் உள்ளக் கிடக்கைகளை சமர்பித்தீர்கள் , பாவ மன்னிப்பு கோரினீர்கள், கஷ்ட துன்ப துயரங்களை முறையிட்டீர்கள், ஹலாலான ஆசைகள் தேவைகளை கேட்டீர்கள்…உங்கள் உள்ளங்கள் எவ்வளவு சாந்தமடைந்துள்ளன. நிச்சயமாக அல்லாஹ் நல்லடியார்களை கைவிடுவதில்லை.
அல்லாஹ்வில் தவக்குள் வைத்து நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை ஆரம்பியுங்கள்..
ஆழமான ஆன்மீக பக்குவமும், உயரிய குணாதிஷ்யங்களும் ஒரு உண்மை விசுவாசியின் அகத்தில் மாத்திரமன்றி முகத்திலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் அவனது நேசர்களாக அங்கீகரித்து எமது ஈருலக வாழ்விலும் நிறைவாக அருள்புரிவானாக.
ஆழமான உறுதியான அடித்தளத்தின் மீதே கட்டி எழுப்பப் படும் கட்டடம்
ஒரு மரம், சிறப்பான அடித்தளத்தில் ஆழமாக வேர்விட்டு செழிப்பாக வளர்கிறது, வானளாவ வளர்ந்து கிளைகள் பரப்பி வனப்புடன் வளர்ந்து கனியும் நிழலும் தாராளமாகத் தருகின்றது.
ஒரு சிறந்த கட்டடம் ஆழமான உறுதியான அடித்தளத்தின் மீதே கட்டி எழுப்பப் படுதல் வேண்டும், இன்றேல் அது எந்தவொரு நேரத்திலும் சரிந்து வீழ்ந்து விடும் அபாயம் உள்ளது.
அது போன்றுதான், இறையச்சம் உயரிய இஸ்லாமிய பண்பாடுகள் எனும் ஆழமான அடித்தளத்தில் கட்டி எழுப்பப் படுகின்ற ஆளுமைகள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன.
“யார் மேலானவர்? தக்வா இறையச்சம் மீது ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா சிறந்தவர் ? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடித்தளமிட்டு கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் கட்டடத்தை அமைத்தவரா (சிறந்தவர்?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.” (ஸுரத் தவ்பா 9 : 10)
புறத் தோற்றங்கள், கோலங்கள், ஏற்றத் தாழ்வுடையவையாக, வேறுபாடுகள் கொண்டவையாக இருக்கலாம், அவரவர் வாழ்வில் இடப்படுகின்ற தனிப்பட்ட ஆன்மீக பண்பாட்டு அடித்தளங்களே ஒவ்வொரு ஆன்மாவினதும் பிறவிப் பயனை தீர்மானிகின்றன.
எமது கல்வி, நாம் திரட்டும் செல்வம், எமது தொழில், எமது அந்தஸ்து, எமது பதவி, எமது அதிகாரம் என எத்தனை கோலங்கள் நாம் கொண்டிருந்தாலும் இரண்டு கோலங்களில் தான் வாழ்வு நிறைவுறுகின்றது.
இறை நேசர்- சுவர்க்கவாதி
ஷைத்தானின் நேசர்- நரகவாதி
மனச்சாட்சியை கேட்டுப் பார்ப்போம்..
“(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.
எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்.
(ஸுரத் இப்ராஹீம்14:27)
அணுகப்படாத அதிஷ்டத்தின் வாயல் !
எமக்கு தெரியாத எத்தனையோ மொழிகளை நாம் கற்றுக் கொள்கின்றோம், தேர்ச்சி பெறுகின்றோம், புரிந்து கொள்கின்றோம், அறியாத மொழியில்ஒரு அமைச்சரின், அதிகாரியின், ஜனாதிபதியின் கடிதம் கிடைக்கப் பெற்றால் வரிக்கு வரி வசனத்திற்கு வசனம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றோம்,
ஆனால் எங்களை படைத்த றப்பு, எங்கள் ஹயாத்தை, மவ்தை, இரணத்தை (ரிஸ்கு) தீர்மானிக்கின்ற அண்ட சராசரங்களை படைத்து ஆளும் ஆட்சியாளர்களுக்கு எல்லாம் ஆட்சியாளன், எமது இன்மை மறுமை வாழ்வை தீர்மானிப்பவன் அருளிய அல் குரானில் எத்தனை ஸு ராக்களை நாம் பெருளுணர்ந்து ஓதுகின்றோம்..?
அறியாமைக்கால அரபிகளுக்கே புரிந்து கொள்ள முடியுமான அற்புதமான அரபு மொழியில் அருளப்பட்ட அல் குரானை எங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று எங்களை இன்னும் அல் குரானை விட்டும் தூரமாக்கும், அல்லாஹ்வையும் ரஸுலையும்(ஸல்) விஞ்சிய சதிகாரர்கள் யார்..?
அல் குரானைக் கொண்டு மஸ்ஜித்களை, இல்லங்களை, உள்ளங்களை ஒலிபெறச் செய்யுங்கள்.
அல்லாஹ்விற்காக எதையும் இழக்கலாம், எதற்காகவும் அவனை இழந்து விடலாகாது.
அல் குரானை ஏன் இன்னும் அவர்கள் ஆராய்ந்து பார்க்காது இருக்கின்றார்கள் ? உணரமுடியாதவாறு அவர்களது உள்ளங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா? என்று அல்லாஹ் கேட்கின்றான்.
நாம் நிச்சயமாக அல்லாஹ்விற்கு உரியவர்கள் நாளை அவனது கலாமை அணுகாது அவனிடமே மீளப் போகின்றோம், அதனை புறக்கணித்தவர்களாக அவனிடமே எமது கைகளை ஏந்திக் கொண்டிருக்கின்றோம்.