ஹராமிகளை ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ வேண்டாம்!

14
“ஹராமி” என்றால் தடுக்கப்பட்ட தீய கருமங்களை, ஹராமானவற்றை செய்பவன் “ஹராமிய்யாஹ்” என்றால் ஹராமானவற்றை செய்பவள், கள்வர்களுக்கும் அதாவது திருடர்களுக்கும் அந்த நாமம் சூட்டப்படுகிறது.
உண்மையில் அல்குர்ஆனோ, சுன்னாஹ்வோ இவ்வாறு எவரையும் குறிப்பிட்டதில்லை, பாவங்களை பகிரங்கமாக செய்வோரை பாஃஸித், பாஃஜிர்கள், பாஃஸிக்கு கள் என குறிப்பிட்டுள்ளன, ஆனால் அறபு வழக்காற்றில் தான் இவ்வாறு ஒரு பிரயோகம் இருக்கிறது.
ஒரு தவறை பிழையை செய்த ஒருவரை கண்டிப்பதற்காக கோபத்தில் தூற்றுவதற்காக திட்டுவதற்காக ஹராமி என சர்வசாதாரணமாக அழைப்பது தடுக்கப்பட்டுள்ள விடயமாகும். அதே போன்று பகிரங்கமாக பூமியில் ஹராமான தடுக்கப்பட்ட பாவங்களை செய்து திரிபவர்கள் அடாவடிகள் புரிவோரை ஹராமிகள் என அழைப்பர்.
பொய், களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை புரிவோர், ஏமாற்று பேர்வழிகள் ஹராமிகள் ஆவர், அதே போன்று மது மாது தகாத உறவுகள் என துர்நடத்தைகள் உடையோரும் ஹராமிகள் ஆவர்.
ஆகுமான அனுமதிக்கப்பட்ட வழிகளில் ஹலாலாக உழைத்து ஹலாலாக வாழ்வதே ஒரு விசுவாசியின் பண்பாகும், உண்மை, நீதி, நேர்மை, தூய்மை, அறம், தர்மம் என உயரிய குணாதிசயங்கள் உண்மை விசுவாசத்தின் வெளிப்பாடுகளாகும், ஆனால் “ஹலாலிகள்” என எவரும் போற்றப்படுவில்லை.
இஸ்லாத்தில் கொஞ்சம் பொய், கொஞ்சம் களவு, கொஞ்சம் ஓர வஞ்சனை, கொஞ்சம் நோவினை, கொஞ்சம் அநீதி, கொஞ்சம் ஷைத்தானிய பண்புகள், கொஞ்சம் மது, கொஞ்சம் மாது என எதுவும் கிடையாது, அதில் பூரணமாகவே நுழைதல் வேண்டும்.
அதே போன்று தாம் நல்லவர்களாக உண்மை நேர்மை நீதி நியாயம் பேணுபவர்களாக இருந்து விட்டால் போதாது, நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் ஒரு உண்மை விசுவாசியின் கட்டாய கடமையுமாகும்.
ஒரு தீமையை கையால் தடுப்பது, வாயால் தடுப்பது, முடியாது போனால் மனதால் வெறுத்து ஒதுங்கி நிற்பது தீமைகளை தடுக்கும் படிமுறைகளாகும். நன்மைகள் செய்பவரை பாராட்டுவது, ஆதரிப்பது அவர்களோடு ஒத்துழைப்பது சேர்ந்து வாழ்வது எவ்வாறு நன்மைகளை நேசிக்கின்ற பண்பாக இருக்கின்றதோ அவ்வாறே தீயோரை திருத்துவதும் திருந்தாவிடின் அவர்களது சசகவாசத்தை தவிர்ப்பதும் தீமைகளை வெறுக்கின்ற தடுக்கின்ற குறைந்த ஈமானிய பண்பாகும்.
(திருடன்/திருடர்) பொதுவாக ஒரு கோழியை திருடியவனை திருடன் “ஹராமி” என்று பட்டம் சூட்டி ஒதுக்கி வைக்கும் நாம் கோடிகளை திருடும் பக்காத் திருடர்களை அதிவிஷேட பிரமுகர்களாக வாழ்த்தி வரவேற்று தோள்கள் மேல் சுமந்து திரிகிறோம், அவர்கள் அருகாமைக்காக ஏங்குகிறோம், அவர்களுடன் பல் இழித்து படம் எடுத்துக் கொள்கிறோம் என்றால் எமது ஈமானிய பண்புகளை நாம் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், நண்கொடைகள் வக்பு சொத்துக்களில் வயிறு வளர்ப்பவர்கள், மோசடி புரிபவர்கள், அரசியலில் ஊழல் மோசடி செய்து செல்வம் திரட்டும் பகற்கொள்ளைக் காரர்கள், சமூகத்தை சமயத்தை விற்று வயிறு வளர்ப்பவர்கள், சமூகத் தேசத் துரோகிகள் மாத்திரமல்ல.. வர்த்தகத்தில் மோசடிகள் புரியும் பக்காத் திருடர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், ஹராமான வழிகளில் உழைப்போர் அவர்கள் செல்வம் செல்வாக்கு அதிகாரம் அந்தஸ்துகளில் இருந்தாலும் ஹராமிகளே!
மேற்படி ஹராமிகளின் செல்வம் செல்வாக்கு பணம் அதிகாரம் அந்தஸ்த்து ஆகியன சமூக நலன்களுக்கு பெறப்படுவதும் அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும், அல்லாஹ் தூய்மையானவன் அவன் தூய்மையானவற்றை மாத்திரமே அங்கீகரிக்கின்றான்.
ஹராமிகளை அங்கீகரிப்பது ஊக்குவிப்பது வரவேற்பது ஆதரிப்பது அவர்களுக்கு ஆதரவு திரட்டுவது, பதவிகளில் அமர்த்துவது எல்லாமே எந்த வகையிலும் குறைவில்லாது எம்மையும் பாவத்தின் பங்காளர்களாகவே மாற்றிவிடும்.
மனிதர்கள் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால் பூமியில் பஸாதுகள் முறைகேடுகள் அதிகரித்துவிடும் என்பது இறைமறை கற்றுத்தரும் பாடங்களாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
06.10.2021