உணவு மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும்.
உண்ணும் உணவு ஹலாலாக இருத்தல் வேண்டும் என்பதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகிறது. இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (ஸுராதுல்பகரா 2:172)
மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான். (அல்பகரா:168)
தூதர்களே! பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன்.(அல்முஃமினூன்: 51)
இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
(ஸுரத்துன் நஹ்ல் 16:13,14)
இரசாயனப் பசலைகள் உபயோகிக்கப் படாத பழங்கள், கீரை வஸ்துக்கள், தானிய வகைகள், கிழங்கு வகைகள் , காய்கறி வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகும்.
அவசர உணவுகள், அதிக எண்ணெய், அதிக உப்பு, அதிக சுவையூட்டிகள், அதிக கொழுப்பு, அதிக இனிப்பு அதிக மாப்பொருள் என்பன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன.
அதே போன்றே போதிய உடற்பயிற்சி இன்மை, நித்திரை இன்மை, ஓய்வு இன்மை, தொழாமல் , ஓதாமல் இருத்தல், தனிமையில் உறவுகளை துண்டித்து வாழுதல் பல்வேறு உடல் உள உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
சரி, இதெல்லாம் பார்த்தா என்னத்த தின்ற, என்னத்த குடிக்கிற, எப்பிடி வாழ்ற.. என்று நீங்க சொல்றதும் விளங்குது, என்றாலும் இயன்றவற்றை இயன்றவரை செய்ய முயற்சிப்போம்.
இது ஒரு இயற்கை வளங்கள் நிறைந்த விவசாய நாடு, அவற்றை பாதுகாப்பதும் எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச் செல்தலும் எமது கடமையாகும்.
இயற்கையான பானங்களை பழச்சாறுகளை பருகுங்கள், உள்நாட்டில் விளையும் பழங்களை, காய்கறிகளை கீரை வகைகளை உணவிற்காக கொள்வனவு செய்யுங்கள். குறிப்பாக இரசாயனப் பசலைகள் உபயோகிக்கப் படாத உற்பத்திகளை தேடி அதற்கான கேள்வியை ஏற்படுத்துங்கள், இயன்றவரை நீங்களும் வீட்டுத் தோட்டங்களை செய்கை பண்ணுங்கள்.
அவ்வாறு செய்வதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன:
ஆரோக்கியத்திற்கு உகந்தவை நோய் நொடிகளை குறைத்து இருக்கின்ற நோய்களுக்கு பரிகாரமாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
உள் நாட்டு விவசாயிகளுக்கு எங்களால் முடியுமான ஒத்துழைப்பாக இருக்கும்.
சொந்த வாழ்க்கைச் செலவினம் குறையும். நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பங்களிப்பாக இருக்கும். வெளிநாட்டுச் செலாவணி மீதமாகும்.
புதிய தலைமுறை விவசாய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமாளிப்பதாக அமையும்.
பலதேசியக் கம்பனிகளின் சுரண்டல்களில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க ஒவ்வொரு பிரஜையும் பங்களிப்பு செய்தல் வேண்டும்.
நன்மையை ஏவுதலும், தீமையை தடுத்தலும், தான தர்மம், பொருளாதார உதவி ஒத்தாசை புரிவதும், தேசத்தின் வளங்களை பாதுகாப்பதும் விசுவாசிகளின் பண்பாகும்.

