Monday, December 9, 2024

இறை தூதர் (ஸல்) அவர்களது முதலாவது (இராஜதந்திரி) தூதுவர்!

அந்த இளைஞர், குழந்தைப் பருவம் முதல் மிகவும் செல்லமாகவும் செழிப்பாகவும் சகல வசதி வாய்ப்புக்களுடன் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவரது அழகும்,வசீகரமும், அறிவும் தெளிவும், தூய்மையும் அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளும் அவர் உபயோகிக்கின்ற விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களும் மக்கா வாசிகள் மத்தியில் அவருக்கு தனித்துவமான அடையாளத்தையே தந்திருந்தன.

அவர் இயல்பாக பெற்றிருந்த அறிவும் ஆற்றலும் பேச்சுத் திறனும் எந்தவொரு சபையிலும் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்திருந்தன.

இறைதூதர் (ஸல்) அவர்களது நுபுவ்வத் மக்காவாசிகள் மத்தியில் பரபரப்பான பேசுபொருளாக இருந்த ஆரம்ப நாட்களில் அர்கம் எனும் நபித் தோழர் இல்லத்தில் இறைதூதரை சந்தித்து தெளிவு பெற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்றாலும், செல்வாக்கு மிக்க குடும்பத்தில் செல்வாக்கு மிக்க தனது தாயாரின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள விரும்பாது இஸ்லாத்தை ஆரம்ப நாட்களில் மறைத்தாலும் பின்னர் வீட்டில் இருந்து சகல சம்பத்துகளையும் சுக போகங்களையும் துறந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது.

இரண்டு முறை அபீசீனியா ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் சென்று திரும்புகிறார்கள், பசி பட்டினி, வறுமையின் உச்சத்தில் ஒட்டுப் போடப்பட்ட ஆடைகளுடன் காட்சி தருகின்றார்கள்.

அவரது அறிவு ஆற்றல் திறமை கண்டு யத்ரிப் மாநகரிற்கு (தற்போதைய மதீனமாநகர்) இறைதூதர் (ஸல்) அவர்களது முதலாவது பிரதிநிதியாக அனுப்பி வைக்கப் படுகின்றார்.

நபுவ்வத் 11 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் மதீனாவில் இருந்து வருகை தந்த கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மினா வெளியில் இறைதூதருடன் அகபா என்ற இடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டு மதீனா திரும்பி இருந்தனர், அவர்களுடன் இணைந்து தனது பணிகளை மேற்கோண்ட அந்த நபித் தோழர் நுபுவ்வத் 12 இல் சுமார் 70 மதீனா வாசிகளுடன் இறைதூதரை துல்ஹஜ் மாதம் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்து யத்ரிப் மாநகர் நோக்கி ஹிஜ்ரதுர் ரஸூல் இடம் பெறுகிறது, அந்நகரின் பெயர் மதீனதுர் ரஸூலில்லாஹ் எனப் பெயரும் பெறுகிறது.

குறைஷிக் காஃபிர்கள் தொல்லை அதிகரிக்கிறது, பத்ர் யுத்தம் நடை பெற்று அடுத்த கட்டமாக உஹத் யுத்தம் இடம் பெறுகிறது..

இறைதூதர் ஸல் அவர்களை எதிரிகள் சுற்றி வளைத்த போது தனது வலக்கரத்தில் கொடியை ஏந்திய வண்ணம் அந்த இளம் நபித் தோழர் ஏனைய வீரர்களுக்கு அறைகூவல் விடுத்த வண்ணம் ஓடோடி வருகின்றார் நபியவராகள் சிறிய காயங்களுடன் காப்பாற்றப் படுகிறார்கள்..

எதிரிகளுடன் போராட்டம் தொடர்கிறது நபியவர்களது சிறிய தந்தை உற்பட பலர் ஷஹீதாக்கப் படுகிறார்கள்.

கொடியை ஏந்தியிருந்த நபித் தோழரின் வலக்கரம் வெட்டப் படுகிறது, இடக்கரத்தில் ஏந்திக் கொள்கிறார்கள், இடக்கரம் வெட்டப்பட மார்பினால் தாங்க முயற்சித்து பின்னர் எதிரிகளின் அம்புகளுக்கு இலக்காகி ஷஹீதாகு கின்றார்கள்…

யுத்த களத்தில் ஷூஹதாக்களுடைய ஜனாஸாக்கள் தேடி நல்லடக்கம் செய்யப்பட்ட போது அந்த ஸஹாபியை கபனிடுவதற்கு ஒரு போர்வை மாத்திரமே இருந்தது, அதனால் தலைக்கு கீழ் பகுதியை கபன் செய்து தலைப்பகுதியை இலைகளால் மறைக்குமாறு இறைதூதர் ஸல் ஆலோசனை கூறுகின்றார்கள்..

பின்னர் ஷுஹதாக்களுக்குரிய இறுதிக் கடமைகளை நிறைவேற்றிய இறைதூதர் ஸல் அவர்கள்..

அல்லாஹ்வுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றிய சில வீரர்கள்.. என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதி விட்டு..

இந்த ஷுஹதாக்களுக்காக துஆ செய்து ஸலாம் சொல்லுங்கள், நிச்சயமாக அவ்வாறு ஸலாம் சொல்வோருக்கு பதில் சொல்லப்படும் என உபதேசம் செய்தார்கள்..!

இன்றுவரை ஹஜ் உம்ரா யாத்திரைக்கு செல்பவர்கள் உஹத் களத்திற்கு சென்று ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்து ஸலாம் கூறி வருகின்றார்கள்.

மக்காவில் செல்வச் செழிப்புடன் அழகிய ஆடைகள் நறுமணங்களுடன் வாழ்ந்து மதீனா மாநகரில் உஹத் களத்தில் கபன் துணி கூட போதாமல் உலகிற்கு விடை தந்த அந்த நபித் தோழர் வேறு யாருமல்ல..

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள், அத்தகைய உன்னதமான தியாகிகளின் அர்ப்பணங்கள் மீது தான் உலகெங்கும் வாழ் எங்களுக்கு இனிய மார்க்கம் இஸ்லாம் கிடைத்திருக்கிறது.
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
10.08.2022 SHARE

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles