தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரி (ரழி) அவர்கள் கிரிஸ்தவத்திலிருந்து ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிய ஒரு நபித் தோழர், தஜ்ஜால் குறித்து அவர் அறிவித்த ஒரு தகவலை இறைதூதர் (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்திய ஹதீஸ் பிரபலமானது, ஹிஜ்ரி 40 இல் பலஸ்தீனில் வபாஃத் ஆனார்கள்.
அவர்கள் அறிவித்த ஒரே ஒரு ஹதீஸ் தான் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது, ஒருமுறை இறைதூதர் (ஸல்) அவர்கள் எம்மிடம் மூன்று முறை “அத்தீனுன் நஸீஹத்” என கூறினார்கள், அப்படி என்றால் என்ன என்று வினவிய பொழுது அல்லாஹ்விற்கும் அவனது ரஸூலிற்கும் அவனது கிதாபிற்கும், ஆட்சி, நிர்வாக தலைமைகளிற்கும், பொது மக்களிற்கும் நஸீஹத் செய்வது என விளக்கம் தந்தார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே நஸீஹத் என்றால் நல்லுபதேசம் என்று தான் பிரயோகிக்கப் படுகிறது, என்றாலும் இந்த ஹதீஸ் சற்று பரந்த கருத்தாழமிக்க ஹதீஸ் என்பதனை ஹதீஸ் துறை விற்பன்னர்கள் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.
“நஸஹ, நஸூஹ், நுஸ்ஹ் ” என்ற அரபு மொழிப் பிரயோகம் தூய்மை, சுத்தம், அப்பழுக்கற்ற தன்மை என்பதனை குறிப்பதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வுடன், அவனது தூதருடன், அல்குர்ஆனுடன் உளத் தூய்மையுடன், இதய சுத்தியுடன் ஆத்மார்த்தமாக உண்மையாக நேர்மையாக ஆழமான உறுதியான நம்பிக்கை விசுவாசத்துடன், ஷிர்க்கு, குஃப்ரு, நிபாக்கு நயவஞ்சகம் இன்றி நடந்து கொள்வதும் வழிப்படுவதும் நஸீஹத் என விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதே போன்று ஆட்சி நிர்வாக தலைமைகளுடனும் பொது மக்களுடனும் உண்மையாக நேர்மையாக இதய சுத்தியுடன் விசுவாசமாக நடந்து கொள்வது, உண்மையை நன்மையை நீதி யை நிலை நிறுத்த ஒத்துழைப்பது.
அநீதி அராஜகம், அக்கிரமம், அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்து நிற்பது, நன்மைகளை ஏவி தீமைகளை தடுப்பது நல்லுபதேசங்கள் செய்வது அவர்கள் பால் உள்ள நஸீஹத் ஆகும்.
அவர்களை நயவஞ்சகத் தனமாக ஏமாற்றுவது சூழ்ச்சிகள் செய்வது, வரியிறுப்பாளர்கள் பொதுமக்களை நேரடியாக மறைமுகமாக சூரையாடுவது, அராஜகம் அநீதி அக்கிரமங்களுக்கு ஊழல் மோசடிகளுக்கு துணை நிற்பது எல்லாமே சன்மார்க்க முரணான செயற்பாடுகளாகும்.
அல்லாஹ்விற்கும் ரஸூலிற்கும் அல்குர்ஆனிற்கும் ஆத்மார்த்தமான இதய சுத்தியுடன், உளத்தூய்மையுடனான விசுவாசத்தை வழிப்படுதலை கொண்டுள்ள ஒரு சமூகம் ஆட்சியாளர்கள் தலைமைகள் பொதுமக்களது விவகாரங்களில் உண்மையாக நேர்மையாக இதய சுத்தியுடன் நடந்து கொள்ளா விட்டால் அவர்களது தீன் பூரணமாவதில்லை அங்கு கோளாறு இருக்கின்றது என்பதனை இந்த நபிமொழி எமக்கு உணர்த்துகிறது.
ஈமான் கொண்டு ஸாலிஹான நல்லமல்கள் புரிந்து தமக்கு மத்தியில் சத்தியத்தை சகிப்புத் தன்மையை நல்லுபதேசம் வஸிய்யத் செய்து கொள்வோரன்றி அனைவரும் நஷ்டத்தில் தோல்வியில் இருப்பதாக அல்குர்ஆனும் எமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதனை நாம் அறிவோம்.
உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எம்மையும், எமது பெற்றோர், உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், ஆசான்கள், ஆத்மார்த்தமாக அறப்பணிகள் புரிவோரையும் நினைவில் கொள்ளுங்கள்.
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
13.08.2022 SHARE