Monday, December 9, 2024

கடன் ஒரு அமானிதம் அதனை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும். இந்தப் பண்பு யாரிடம் இல்லாமல் ஆகி விடுகின்றதோ அவர் இறை நம்பிக்கையாளர் என்ற பட்டியலிலிருந்து விலகி நயவஞ்சகர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றார்.
 
கடன்பெற்று மோசடி செய்வோரிடம் நயவஞ்சகர்களது மூன்று பண்புகளும் இருக்கின்றன.
“நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று; பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 33
 
கடன் கொடுத்தவர் மன்னித்தாலன்றி கடனுடன் மரணிப்போரின் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை அவர் இறைபாதையில் ஷஹாதத் எய்தியவராயினூம் சரியே!
 
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3498
 
கடன்பட்ட ஒருவரின் ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க மறுத்து விடுகின்றார்கள், உடனே அபூகதாதா (ரலி) பொறுப்பேற்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள் என்ற செய்தியை புஹாரியில் காண முடிகின்றது.
 
திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே ஒரு பொருளை வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல, அது மோசடியாகும், இத்தகைய மோசடிக் காரர்களால் உண்மையில் கடன் வாங்கி திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் கேட்பவர்களும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள்.
 
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 3498
 
என்றைக்கு வசதி வந்து விடுகின்றதோ அன்றைக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவது கடமையாகி விடுகின்றது. “வசதிபடைத்தபின் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது அநீதியாகும், உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2287, 2288, 2400, முஸ்லிம் 2924
 
மோசடி செய்யும் தீய எண்ணத்தில் கடன் பெறுவோரது செல்வத்தை தொழில் முயற்சியை அல்லாஹ் அழித்து விடுவான், திருப்பிக் கொடுக்கும் நல்லெண்ணத்தில் பெறுவோரது செல்வத்தில் விருத்தியை ஏற்படுத்துகிறான், ஏமாற்றுப் பேர்வழிகளின் எண்ணம் போன்றே அல்லாஹ்வும் அவர்களுக்கு கைவிட்டு விடுகிறான்.
 
“யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான், யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி 2387
 
கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு:
 நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார், அப்போது அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார், இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர், அதற்கு நபி ஸல் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி: 2401
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, இறைவா, பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல் அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே, தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு நபி ஸல் அவர்கள்: மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான், என்று பதிலளித்தார்கள்.
நூல்; புஹாரி 2397
 
ஒருமுறை தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது, ‘இவர் கடனாளியா?’ என்று நபி ஸல் அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் ‘இல்லை!” என்றனர். அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
 
பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இவர் கடனாளியா?’ என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்!’ என்றனர், நபி ஸல் அவர்கள் ‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!” என்றார்கள்.
 
அப்போது அபூ கதாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புஹாரி 2295
 
இன்று வியாபாரம், முதலீடு, கடன் பெறுதல் என்ற பெயரில் தேவைகள் அடிப்படைத் தேவைகளுக்காக அன்றி ஆசைகள் பேராசைகளுக்காக பகற்கொள்ளைகள் இடம் பெறுகின்றன, வியாபாரம் முதலீடு என பலர் ஏமாற்றப்படுகிறார்கள், வியாபாரத்தில் காசோலை மோசடிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன, கடனை ஊக்குவிக்கும் கடனட்டை மோசடிகளும் அதிகரித்துள்ளன, கடன் சுமை தலையில் இருக்க ஆடம்பர வாழ்க்கை நடாத்துவோர் வருடம் தவறாமல் ஹஜ் உம்ராவும் செய்யத் தவறுவதில்லை.
 
கடன் பற்றிய இந்தப் தொகுப்பை ஒரு சதகதுல் ஜாரியாவாக பதிவு செய்துள்ளேன்.
 எம்மையும் எமது பெற்றார் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், அன்பிற்குரியோர், ஆசான்கள் அனைவரையும் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻 30.05.2021

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles