இது எங்களுடைய தாய் நாடு யாருக்க்கும் அஞ்சியோ கெஞ்சியோ கொஞ்சிக் குழாவியோ நாம் வாழ வேண்டிய கட்டாயம் இல்லை.
அவ்வாறு பகுத்தறிவும் சமய கலாசார ஆன்மீக மானுட பண்பாடும் உள்ள நாகரீகமான எந்த ஒரு சமூகமும் பிரிதொரு சமூகம் தமக்கு அண்டிப் பிழைப்பதனை எதிர் பார்ப்பதிதுமில்லை.
சமாதான சகவாழ்வு என்பது ஒரு சமூகம் தனது சமய கலாசார ஆன்மீக தனித்துவங்களை, அடிப்படை உரிமைகளை, சுய கொளரவத்தை விட்டுக் கொடுத்து செய்து கொள்கின்ற சமரசமும் அல்ல.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் உள்ள மிகச்சிறிய தீய சக்திகளின் அடாவடிகளை அஞ்சி அவர்களின் காலடியில் சரணடைந்து சமரசம் செய்து கொள்வது போன்ற இழிவான போலிப் பெருந்தன்மைகளும் பரோபகாரங்களுமல்ல.
சமாதான சகவாழ்வு என்பது ஒரு சமூக உளவியல் விஞ்ஞானமாகும், அது பிரிதொரு சமூகத்திலுள்ள தீயவர்களை, கயவர்களை, காடையர்களை திருப்திப்படுத்துகின்ற அரை வேக்காட்டுத்தனமான நடவடிக்கைகள் செயற்பாடுகள் அல்ல.
இடம் பொருள் ஏவல் காலம் சூழல் கருதி ஒரு சமூகத்தின் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புடன் ஒன்று கூடி ஆராய்ந்து அதன் வரைமுறைகள் அறிந்து, சமய கலாசார விழுமியங்கள் பேணி மேற்கொள்கின்ற கண்ணியமான அறிவுபூர்வமான பணியே சமாதான சகவாழ்விற்கான நகர்வாகும்.
சமாதான சகவாழ்வு என்பது உள்வீட்டில் இருந்தே முதற்கண் ஆரம்பிக்க வேண்டும், எல்லா சன்மார்க்க விடயங்களிலும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகளை கொண்ட ஒரு சமூகம் என்ற வகையில் சமாதான சகவாழ்வு குறித்த அடிப்படிகளில், வரைமுறைகளில் செயற்பாடுகளில் எமக்கிடையே பிரிவினைகளும் முரண்பாடுகளும் அதிகப் பிரசங்கித் தனங்களும் முற்றிப் போயிருப்பதனை ஊடகங்களிலும் சமூக ஊடககங்களிலும் அரங்கேற்றி அம்பலப் படுத்துவது எதிர்மறையான விளைவுகளினையே கொண்டுவரும்.
மிம்பருக்கு மிம்பர், மஸ்ஜிதிற்கு மஸ்ஜித், ஹசரத்திற்கு ஹசரத், முப்திக்கு முப்தின் ஜமாத்திற்கு ஜமாஅத், குழுமத்திற்கு குழுமம் சிலவேளை மதரசாவிற்கு மதரசா இயக்கத்திற்கு இயக்கம், மஹால்லாவிற்கு மஹல்லா தமது இஷ்டப்படி எமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், அடுத்தவர்கள் அவாம்கள், ஜாஹில்கள், வழிகேடர்கள், குப்பார்கள், முஷ்ரிக்குகள் என பத்வாக்கள் மார்க்கத் தீர்ப்புக்கள் கொடுத்துக் கொண்டு தாமும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி ஊரிலும் நாட்டிலும் பிணக்குகளை பிரிவினைகளை வளர்த்துக் கொள்வது எரியிற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்ற அறியாமையாகும்.
சமாதான சகவாழ்வின் புரிந்துணர்வின் சகிப்புத் தன்மையின் முக்கியத்துவம் முன்னொரு பொழுதுமில்லா வகையில் புதிய களநிலவரங்களில் அதிகமதிகம் வலியுறுத்தப் படுவதால் சமூகத்தில் பல்வேறு தரப்புக்களும் பல தவறுகளை விட்டுவிடலாம் அவற்றை ஆரவாரமின்றி நிதானமாக நாம் திருத்திக் கொண்டு அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு சகோதரத்துவ வாஞ்சையுடன் புதிய சவால்களிற்கு முகம் கொடுக்க முன்வரல் வேண்டும்.
தீயசக்திகளுக்கு அஞ்சி பெரும்பான்மை சமூகமொன்றின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக அவர்களது வணக்கஸ்தளங்களை நாங்கள் சென்று பராமரிக்க வேண்டும் என்பதோ, எங்கள் வணக்கஸ்தளங்களை அவர்களில் நல்லவர்கள் வந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்பதோ அல்லது அவர்களது சமயம் கலாசாரம் சார்ந்த விழாக்களில் நாம் கூடி நின்று குதூகளிக்க வேடண்டுமென்றோ அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.
அதேபோன்றே எமது வணக்க வழிபாடுகள் சார்ந்த விடயங்களில் வரம்புகள் மீறி ஏனைய சமூகங்களை அவர்களது மதகுருமார்களை அழைத்துவந்து ஆசீர்வதித்து உபசரித்து உண்டுகளித்து கொண்டாடுவதும் சமாதான சகவாழ்விற்கான நகர்வாக நாகரீகமான சமூகங்கள் எம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை.
குறிப்பாக ஏனைய சமூகங்களின் சுக துக்கங்களில் வரை முறைகள் பேணி அளவோடு பங்கெடுத்துக் கொள்வதில் தப்பில்லை, ஆனால் அவை சார்ந்த ஆசாரங்களில் நாம் எம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளுமளவிற்கு சிலவேளை அவர்களது சமூகத்தினரை விடவும் புலப்படுமளவிற்கு இதய சுத்தியில்லாத பரோபகாரங்களுடன் பங்கெடுக்க வேண்டிய கடமையோ கடப்பாடோ எமக்கு இல்லை.
பொதுப்பணிகளில் கூட நாம் தனியாக எம்மை அடையாளப்படுத்திக் கோண்டு அளவுகடந்த விளம்பரங்களோடு வைத்தியசாலைகளை பாதைகளை பொது இடங்களை அவர்களது சமய வழிபாட்டுத் தலங்களை பாடசாளைகளை துப்பரவு செய்ய வேண்டும் கழிவகற்ற வேண்டும் என அவர்களும் எதிர்பார்க்க வில்லை நாம் விழுந்தடித்துக் கொண்டு உசார் மடையர்கள் போல் அவற்றை செய்ய வேண்டியதுமில்லை.
அதேபோன்றே அரசாங்கமும், மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும், அரச பணியாளர்களும், அரச வளங்களூடாக செய்ய செய்ய வேண்டிய சேவைகளை முண்டியடித்துக் கொண்டு பாரிய விளம்பரங்களோடு எம்மை நாம் அடையாளப் படுத்திக் கொண்டு செய்வதில் முண்டியடித்துக் கொள்வதும் எம்மிடமிருந்து எதிர்பார்க்கப் படுவதில்லை.
ஏனைய சமூகங்களுடன் சமமாக இருந்து பொதுப்பணிகளில் சிரமதானங்களில் மற்றும் சமூக பொருளாதார பண்பாட்டு சீர்திருத்தப் பணிகளில் நாம் வழமை போல் ஒத்துழைக்க முடியும்.
தொடரும்..