நேற்று நாள் முழுவதுமே மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, காரணம் எமது சில சகோதர சகோதரிகளின் “சரோங் பார்ட்டி” காணொளி சமூக ஊடககங்களில் பரபரப்பான விமர்சனங்களிற்கு ஆளாகியமை.

குறிப்பிட்ட காணொளி மற்றும் படங்கள் தொடர்பாக எனது கவனம் பலராலும் ஈர்க்கப்பட்டாலும் நிலைமை கட்டுக் கடங்காமல் போய்விட்டதனால் அது குறித்து கருத்து வெளியிட்டல் கூர்மையடைந்துள்ள வாதப் பிரதிவாதங்களின் ஒருபக்க நியாயமாகவே கொள்ளப்பட்டிருக்கும் என்பதனாலும் புதிதாக எதனையும் சொல்வதற்கு இல்ல என்பதனாலும் மௌனமாக இருந்து விட்டேன்.
என்றாலும் நேற்றுமாலை நானும் எனது நண்பர் ஒருவரும் கொழும்பு பல்கலைக் கழக வளாகத்தினூடாக வண்டியில் வரும் பொழுது கண்ட ஒரு காட்சி மேலும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்ததனால் இது குறித்து ஒரு பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் ஏற்படுத்தியது, தொடர்ந்து வாசியுங்கள் அந்த சம்பவம் கீழே ஒரு படிப்பினைக்காக சொல்லப் படுகிறது.
ஒருசில படிப்பினைகளிற்காக இதனை எழுதுகின்றேன், உண்மையில் முஸ்லிம் மாணவ மாணவியர் அவர்கள் எத்தகைய ஆடைகளை அணிந்திருந்தாலும் இவ்வாறான கலப்புக் களியாட்டங்களில் வரைமுறைகள் மீறி நடக்கின்றமை அனுமதிக்கப் பட முடியாத கண்டிக்கத் தக்க விடயமே அதில் எனக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.
ஆனால், குறித்த நிகழ்வை விதவிதமாக குறிவைத்து படம் எடுத்தும் காணொளியாக பதிவு செய்தும் சமூக ஊடகங்களில் வெளியிட்டமை குறித்த களியாட்ட நிகழ்வினை விடவும் மானக்கேடான இஸ்லாம் கண்டிப்பாக தடுத்துள்ள பாவச் செயலாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
ஒருபடிப்பினைக்காக, சமூக நலன் கருதி அதனைச் செய்திருந்தால் குறிப்பிட்ட சகோதர, சகோதரிகளின் முகங்களை அங்க அவயவங்களை நிழல் படுத்தி குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் அதனை பகிர்ந்திருக்கலாம், குறிப்பிட்ட பாடசாலை மாணவர்களது பெற்றார் பாதுகாவலர் அல்லது சமூகத் தலைமைகள் என ஒரு வட்டத்திற்குள் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.
ஒவ்வொரு குற்றச் செயலிற்கும் ஒரு தண்டனை இருக்கிறது, அளவீடு இருக்கிறது, அந்த வரையறைகளை மீறி எவரையும் தண்டிக்கவோ கண்டிக்கவோ மார்க்கத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை, ஒருவரது உடல் பொருள் போன்று மானம் கௌரவம் என்பவை அடுத்தவர் தீண்டுவதற்கு ஹராமாக்கப் பட்டுள்ளதனை நாம் அறிவோம்.
அந்த வகையில் குறிப்பிட்ட களியாட்ட நடவடிக்கைகளில் வரம்பு மீறிய சகோதர சகோதரிகள் அவர்களாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினாலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு எல்லை மீறி தண்டிக்கப் பட்டு விட்டார்கள் என்பதுவே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும், அதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன், அவர்களையும் பதின்ம வயதில் உள்ள எனது பிள்ளைகளையும் என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.
எனவே குறிப்பிட்ட சகோதர சகோதரிகள் அவர்கள் பெற்றார் பாதுகாவலர் சார்பாக நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடு சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அந்த படங்களையும் காணொளிகளையும் ஒளிப் பதிவுகளையும் அழித்து நீக்கிவிடுமாறும், அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் மன்றாடி வேண்டிக் கொள்கின்றேன்.
அதேவேளை ஆத்திரமூட்டப்பட்ட நிலையில் குறிப்பிட்ட ஒரு மாணவியின் சகோதரர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் மற்றும் அவரிற்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு வெளியிடப்பட்ட கருத்துக்கள் யாவும் நிச்சயமாக கண்டிக்கப் படவேண்டியவை மாத்திரமன்றி, தவறென உணர்த்தப் படவேண்டியவையுமாகும்.
உண்மையில் குறிப்பிட்ட விவகாரத்தை காரசாரமாக சமூக ஊடகங்களில் விமர்சித்த இளம் வயது நண்பர்களில் பலர் தனிப்பட்ட ஒரு சிலரின் நடத்தைகளையன்றி இஸ்லாமியர்களின் அடையாளங்களுடன் இடம்பெற்ற களியட்டத்தினை கண்டு ஆத்திரமடைந்தவர்கள் என்பதனை அவதானிக்க முடிந்ததது.
சமூக ஊடகங்களில் பதிவுகளையும் பகிர்வுகளையும் செய்வோர் எல்லோருமே அனுபவமும் முதிர்ச்சியும் மார்க்க அறிவும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எம்மால் எதிர்பார்க்க முடியாது, சொந்த அறையில் இருந்து நாம் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத விவகாரங்கள் கூட அம்பலத்தில் அரங்கேறும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எனவே இவ்வாறான புதிய சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வும் அறிவும் தெளிவும் வழிகாட்டல்களும் புதிய தலைமுறையினரிற்கு கட்டாயமாக வழங்கப் படுதல் வேண்டும்.
நேற்று 23/04/2018 மாலை நானும் எனது நண்பர் ஒருவரும் கொழும்பு பல்கலைக் கழக வளாகத்தினூடாக வண்டியில் வரும் பொழுது ஒரு முஸ்லிம் மாணவர் சகோதர இன மாணவியுடன் மிகவும் நெருக்கமான இறுக்கமான உறவாடல் உரையாடலுடன் நடைபயில்வதனை கண்ணுற்றோம். “இது என்ன புதிய விடயமா சார்?” என்று கேட்பீர்கள் என்பது தெரியும், ஆனால் கவலைக்குரிய விடயம் யாதெனில் அவர் ஒரு நீண்ட வெள்ளை ஜுப்பா அணிந்த தாடி வைத்த ஒரு மாணவர் தொப்பியை கழற்றி இருந்தார், சற்று பரீட்சயமான முகம் போலிருந்ததால் “ஹார்ன்” ஐ அழுத்தி வண்டியை சற்று மெதுவாக நகர்த்திய பொழுது அவர் அதிர்ச்சியில் ஸ்தம்பிதமடைந்ததனை காண முடிந்தது.
உண்மையில் அரபிகளின் அந்த ஆடையும் அறபு நாடுகளில் அவர்களில் பலர் புரியும் காடைத் தனங்களும் நாமறிந்த விடயமாயினும் இலங்கையில் அரபியின் ஆடையும் தலைக்கு போடும் சால்வையும் கண்ணியமான உலமாக்களின் அடையாளங்கள் என்பதனால் குறிப்பிட்ட மாணவரின் நடவடிக்கையை விடவும் அவர் பகிரங்கமாக தெருவில் காட்சிப் படுத்திச் சென்ற அடையாள அலங்கோலமே எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் தந்தது, சாதாரண பொது மகனின் உணர்வலைகளை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
இதே போன்று அபாயா ஹிஜாப் அணைந்த நிலையில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்தும் நாம் பல பதிவுகளை இதற்கு முன்னர் பார்த்திருக்கின்றோம், அவை சமூக ஊடகங்களில் வந்த பொழுது கண்டனங்கள் விமர்சனங்கள் வந்துமிருக்கின்றன.
இன்று இந்த நீண்ட வெள்ளை ஜுப்பாக்களும், கருத்த அபாயக்களும் ஏனைய சமூகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள நிலையில் முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் குறிவைக்கப் பட்டுள்ள ஒரு நிலையில் நாம் இவற்றை நாம் கண்டும் காணாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், நாம் கண்ணுற்ற அதே வாலிபரை தீய சக்திகள் கண்ணுற்று ஒரு கலவர நிலையினைத் தோற்றுவித்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதனை கற்பனை செய்து கொள்வது கடினமான விடயமல்ல.
கடந்த காலங்களை விடவும் கல்வி உயர்கல்வி விடயத்தில் ஆண்களை விட பெண்கள் மாணவியர் சிறந்து விளங்குவதனையும் பகுதி நேர வகுப்புக்கள், பலகலைக் கழகங்கள், கல்விக் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் என பலவற்றிற்கும் மாணவியர் அதிக அளவில் செல்வதனை அவதானிக்க முடிகிறது, இந்த நிலையில் பருவ வயதில் இளைஞர் யுவதிகள் வீட்டு ஊர் சூழல்களிற்கு அப்பால் கணிசமான நேரத்தினை கழிக்கின்ற சந்தர்ப்பங்கள், பொதுப் போக்குவரத்துகளில் தனித்து பயணிக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறித்து பெற்றார் பாதுகாவலர் போதிய கரிசனை கொள்ள கடமைப் பட்டுள்ளனர்.
நாம் பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் இஸ்லாமிய வரம்புகள் பற்றி அதிகம் பேசுகின்ற ஆத்திர அவசரத்தில் எதிர்வினையாற்றுகின்ற ஒரு சமூகம் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும், இன்று முஸ்லிம் மாதர் கல்வி உயர்கல்வி கற்பதும் தொழில் செய்வதும் கட்டாயமாகிவிட்ட ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெண்கள் வாழ்க்கைப்படுவது திருமணம் முடிப்பது தொடர்பில் நிலவுகின்ற சமூக கொடுமைகள் அவர்களை பாடசாலை பலகலைக் கழகங்களில் மாத்திரமன்றி ஆண் துணையின்றி கடல்கடந்து பயணித்து அரபிகளின் வீட்டில் அடிமைத் தொழில் செய்யும் நிலையினை ஏற்படுத்தியுள்ளமை அங்கு அவர்கள் எதிர் கொள்ளும் விரும்பத்தகாத சவால்கள் என பல விடயங்களை மௌனமாக சீரணித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாகவே நாம் இருக்கின்றோம்.
நாம் பேசிக் கொண்டிருப்பது பிரச்சினையின் ஒரு வெளிப்பட்டினைப் பற்றியாகும், சைபர் உலகில் வாழும் இளம் தலைமுறையினர் எந்த திசையில் பயணிக்கின்றார்கள் நாம் வாழும் யுகத்தில் அவர்களும் பெற்றார் பாதுகாவலரும் எதிர் கொள்கின்ற புதிய சவால்கள் யாவை அவற்றின் அக புறக் காரணிகள் பின்புலங்கள் என பல்வேறு பரிமாணங்களையும் கவனத்திற்க் கொண்டு சமூக மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் அறிவு ஜீவிகள் உரிய விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல் காலத்தின் கட்டாயமாகும்.

