Friday, April 17, 2026

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு!

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு,

அலரிமாளிகை,

கொழும்பு 03

2015 ஆம் ஆண்டு பொது எதிரணியின் பொது வேட்பாளராக சந்திரிக்கா அம்மையாரின் துணையுடன் அன்றைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த அதிபர் மகிந்தவின் ஆட்சியை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்பதற்கு பொதுவேட்பாளராக இன்றைய அதிபர் மைதிரியை களமிறக்கி வெற்றி பெறச் செய்த போது எய்தப்பட்ட உடன்பாடுகளுக்கு முரணாகவும்..

பின்னர் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு முரணாகவும், இயற்கை நீதி, மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களிற்கு முரணாகவும் நீங்கள் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லாமையால் உங்களை கௌரவ பிரதமந்திரி என அழைத்து இந்த மடலை எழுதுகின்றேன்.

இந்த ஜனாநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப் படல் வேண்டும், பாராளுமன்ற மரபுகள் மற்றும்   அரசியலமைப்பு மதிக்கப்படல் வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பேணப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லாததால் ஜனாதிபதின் அதிரடி நடவடிக்கைகளை..

அக்டோபர் 24 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப் பட்டமையை மற்றும் முன்னாள் அதிபர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷவின் அணியினரின் மட்டரகமான கீழ்த்தரமான அனைத்து  நடவடிக்கைகளையும் மக்களோடு மக்களாக நாங்களும் வன்மையாக கண்டிக்கின்றோம்!

கௌரவ பிரதமர் அவர்களே!

2015  ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைய பிரதான எதிர்க் கட்சியுடன் நாட்டின் ஏனைய அனைத்துக் கட்சிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும், சிறுபான்மை சமூகத்தினரும் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் முழு வீச்சிலும் உழைத்தார்கள் என்பதனை எங்களைப் போலவே நீங்களும் அறிவீர்கள்..

அந்த வகையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ரணில் என்ற ஒரு தனி நபருக்கும் அவரது அரசிற்கும், கட்சியிற்கும் அப்பால் மேலே சொல்லப்பட்ட சகல தரப்புக்களையும் வெகுவாக பாதித்திருப்பதோடு மாத்திரமல்லாது, நாம் அனைவரும் நம்பிக்கை வைத்து கட்டி எழுப்ப விளைந்த நல்லாட்சி விழுமியங்களை மாத்திரமன்றி எச்ச சொச்ச ஜனநாயக மரபுகளையும் இன்று கேள்விக்குறியாக்கியுள்ளமை வேதனை தரும் விடயமாகும்.

அன்றைய ஜனாதிபதி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது, அவரது சகோதர்கள் ஒரு பாதகாப்பு அமைச்சினையும், பொருளாதார அமைச்சையும், மனைவி மக்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களையும், குடும்பத்தினர் அரச அதிகாரங்களையும் உச்ச அளவில் வைத்திருந்த பொழுது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி மயிரிழையில் உயிர் பிழைத்து பெற்ற மக்களாணை.

எத்தகைய எதிர்பார்ப்புக்களுடன் வழங்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு என்பதனை அறிவீர்கள், 2005, 2010 ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியடைந்தது மாத்திரமன்றி ஏனைய பொதுத் தேர்தல்கள் உற்பட சகல தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி கண்டு அன்றைய பாராளுமன்றத்தில் 46 ஆசனங்களை மாத்திரமே கொண்டிருந்த உங்களை, தான் சத்தியப் பிரமாணம் செய்த மறுகணமே ஜனாதிபதி மைத்திரி பிரதமராக நியமித்த பொழுது நாங்களும் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் அரசியலமைப்பு நடைமுறைகள் பற்றியெல்லாம் விவாதிக்காது உங்களை பிரதமராக்கி ஆனந்தம் அடைந்தோம்.

கௌரவ பிரதமர் அவர்களே!

அன்றாடம் தமது நாட்களை ஒட்டிக் கொள்ளப் போராடும் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம்  ஒரு இமாலய சாதனை என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றின் மூலம் மக்கள் எதிர்பார்ப்புக்களை எந்த அளவில் நீங்கள் (இருவரும்) நிறைவேற்றினீர்கள் என்பதுதான் பாரிய கேள்வியாக இருந்தது.

நாட்டை கொள்ளையடிக்கிறார்கள், சீனாவிற்கு விற்றுவிட்டார்கள், குடும்ப ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள், ஒருசிலர் கொல்லப்பட்டார்கள், கடத்தப் பட்டார்கள், ஊழல் மோசடி ஆதிகரித்துள்ளது, உரிமைப் போராட்டங்கள் பொலிஸ் அராஜகத்தினால் முறியடிக்கப் படுகின்றது, வழக்கைச் செலவினம் அதிகரித்துள்ளது, இனவாத சக்திகள் தலை தூக்கியுள்ளன, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என்றல்லவா நல்லாட்சி அமைத்தோம்..!

சுயாதீன பொலிஸ் கமிஷன் அமைத்தீர்கள், அதிலும் உங்களது நேரடி கண்காணிப்பின் கீழ் நிதிமொசடிப் பிரிவை கொண்டுவந்தீர்கள், நாட்டைக் கொள்ளையடித்தவர்களை என்ன செய்தீர்கள்? ஹமாபந்தொட்டைத் துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், மத்தள விமான நிலையம்…

தெற்கு மற்றும் விமான நிலைய அதிவேகப் பாதைகள், மிக் யுத்தவிமான கொள்வனவு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிதி மோசடி, கொழும்பு காலிமுகத் திடலை அண்டிய பிரதேச காணிகளை நீண்டகால குத்தகைக்கு விடல் அல்லது விற்றல், செயற்கை கோல் அனுப்புதல், தேர்தல்களிற்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தல்…என பல பில்லியன்களில் பல ஆயிரம் கோடிகளில் புள்ளி விபரம் சொன்னீர்கள்?

மஹிந்த ராஜபக்ஷவை, அவரது மனைவியை, அவரது சகோதரர்களை, அவரது மகன்மார்களை அவரோடு இருந்த பெரும் புள்ளிகளை நீங்கள் காப்பாற்றுவதாக ஜனாதிபதி மாத்திரமல்லாது ஊடககங்களும் சந்தேகங்களைக் கிளப்பிய பொழுது இல்லை சாட்டம் அதன கடமையை செய்யும் என ஆறுதல் கூறினீர்கள், அவர்கள் கூட்ட்கு எதிரணி அமைத்தார்கள், ஏன் பொதுஜன பெரமுன என கட்சி அமைத்தார்கள்… அவற்றிற்கெல்லாம் வழிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்..?

ஏனென்றால் தொடர்ந்தேர்ச்சியாக சுமார் 20   தேர்தல்களில் உங்களது கட்சியையும் உங்களையும் வெற்றிப்படிகளில் கொண்டு செல்ல முடியாத உங்கள் தலைமைத்துவத்தை 2020 முதல் குறுக்கு வழியில்   தக்கவைத்து அதிகாரங்களைக் கைப்பற்ற நீங்கள் சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைக்கிற நரித் தந்திர கைங்கரியத்தில் அதிக அக்கறை செலுத்தினீர்கள், இலங்கையின் மிகப் பெரிய தனியொரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு நீங்கள் பார்த்த வேலை உங்கள் உள்வீட்டில் உள்ளவர்களால் கூட சீரணிக்க முடியவில்லை.

இன்று நீங்கள் வெட்டிய குழியில் நீங்கள் மாத்திரமல்ல உங்கள் கட்சியும், உங்களை நம்பி வந்த சிறுபான்மைக் கட்சிகளும், நல்லாட்சியை நம்பி வந்த சிவில் தலைமைகளும் எல்லோருமே குப்புற வீழ்ந்துள்ளார்கள் என்றுதான அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் சொல்லியும் இருந்தார்கள்… ஏன் மைத்திரியும் கூடவே..!

கௌரவ பிரதமர் அவர்களே!

இனி அடுத்தடுத்த விடயங்களிற்கு வருவோம், ஐக்கிய தேசியக் கட்சி தனியொரு கட்சி என்ற வகையில் இந்த நாட்டில் முதலிடத்தில் இருக்கின்ற பேருண்மை உங்களது தலைமைத்துவத்தில் பெரிதும் மறக்கடிக்கபட்டு பலவீனப் பட்டிருப்பதற்கான காரணம் உற்கட்சி ஜனநாயகம் பேணப்பாடாமையும் உங்கள் எதேச்சாதிகார போக்குமேயாகும், அடுத்தடுத்த தலைமைத்துவக் கட்டமைப்புகளை கரு-வறுத்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை விடவும் அரசியமைப்பின் மீதான 18  ஆவது சீர் திருத்தச் சட்டத்தையும் விடவும் கூடிய சர்வாதிகாரத்தையும் நீங்கள் கொண்டிருக்கின்றமையே காரணமாகும்.

அது உங்கள் கட்சி விவகாரம் மாத்திரமல்ல பொறுப்புள்ள ஆளும் கட்சியாகாவும், எதிர்க் கட்சியாகவும் பலமான ஜனநாயக சக்தியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி இன்று பூசல்களால் பலவீனப் பட்டு தேசிய அரசியலில் கடந்த இரு தசாப்தங்களாக ஏற்பட்டு வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் பாரிய பங்களிப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகின்றமை இந்த நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகளுக்கு பாரிய அச்சுறுத்தலாகும், என்பதனை தன நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தற்போதைய நெருக்கடி நிலைமைகளை எல்லோருமாகத் தான் எதிர் கொள்கிறோம், உங்கள் சாணக்கியமற்ற அரசியல் தலைமைத்துவத்தின் விளைவுகளிற்கு எல்லோருமே விலையை செலுத்திக் கொண்டிருக்கின்றோம், உள்வீட்டில் பாதிக்கப்பட்டவர்களும் உங்களுடன் கூட்டணியில் இணைந்து கொண்டோரும் சிவில் சமூகத் தலைமைகளும் ஜனநாயகத்தினை பாதுகாக்கவென களமிறங்கியுள்ள சகதிகளும் அதிகரித்த சுமைகளை சுமக்கவும் சிலவேளை சிரமசாத்தியமான அசாதாரணமான சவால்களை எதிர் கொள்ளவும் நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

உங்கள் எதேச்சாதிகார கட்சி அரசியலினாலும் அரச செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட பாதிப்பேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தற்போதைய நெருக்கடி நிலைகளின் பின்புலத்தில் இருப்பது மாத்திரமன்றி கிட்டிய எதிர்காலத்தில் ஒரு தீர்வு சுமுகமாக எய்தப் படுவதற்கு தடையாக இருப்பதாகவும் நாங்கள் அறிகிறோம்..

நீங்களும் உங்கள் பிடிவாதத்தில் இருப்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம், எனவே எந்த நம்பிக்கையில் பயணிப்பது என்ற கேள்வி உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது, உடனடியாக உன்கள் உர்கட்சிப் பூசல்களை முடிவிற்கு கொண்டுவாருங்கள்.

கௌரவ பிரதமர் அவர்களே!

நல்லாட்சி பதவியிற்கு கொண்டுவரப்பட்டு இரண்டே மாதங்களில் மத்திய வங்கியில் உங்கள் நண்பர் அர்ஜுன மகேந்திரன் ஆளுநராக இருக்க உங்கள் கட்சி பிரதானிகள் என்பதனை விட உங்களுக்கு    (சமையலறை அமைச்சரவை) நெருக்கமான கட்சியின் உபதலைவர், பொருளாளர், செயலாளர் எல்லோருமாக மேற்கொண்டதாக சொல்லப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் பாராளுமன்றம் வரை வந்த பொழுது அமர்வுகள் ஒத்திவைக்கப் பட்ட விதம்…

?

தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றமே கலைக்கப் பட்ட விதம் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் உங்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட பொழுது நீங்கள் ஆமர்வுகளை ஒத்திவைத்த விதம், உங்கள் சகாக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்த விதம் எல்லாமே இப்பொழுது எங்களையும் வெட்கித் தலை குணியச் செய்துள்ளமை நீங்கள் அறியாத விடயமல்ல.

உங்களைவிடவும் உங்களால் அபயமளிக்கப்பட்ட மஹிந்தவும் அவரது அணியினரும் நல்லவர்கள் உத்தமர்கள் அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல, அந்த அளவு அரசியல் சாணக்கியம் இல்லாத மடையர்களோ அல்லது மறதியோ உள்ளவர்கள் அல்ல நாங்கள், ஆனால் இன்று சட்டத்தை ஒழுங்கை, ஜனநாயகத்தினை, நீதித்துறையின் சுதந்திரத்தை, பாராளுமன்ற பாரம்பரியங்களை பாதுகாக்க களமிறங்கியிருக்கும் சகலரும் உங்களை இன்னுமொருமுறை பாதுகாக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோமா ? என்ற ஆதங்கம் தான்!

கௌரவ பிரதமர் அவர்களே !

இது எமது தாய்நாடு இந்த நாட்டில் அமைதி சமாதானம், அரசியல் ஸ்திரத் தன்மை, பொருளாதார சுபீட்சம் நிலவ வேண்டும் எனபதே ஒவ்வொரு பிரஜயினதும் கனவாகும், இந்த நாட்டின் சுயாதிபத்தியம் மக்களது இறைமை பாதுக்காக்கப் பட வேண்டும், ஜனாநாயக கட்டமைப்புக்கள் பாதுகாக்கப் பட வேண்டும், நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் ஏனைய சமூகங்களிற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் முஸ்லிம்களும் கரிசனை கொண்டுள்ளார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள்!

அந்த வகையில் அதிபர் மைத்திரியின் அதிரடிகளை முஸ்லிம் அரசியல் சிவில் தலைமைகள் அங்கீகரிக்க வில்லை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரதான அரசியல் நீரோட்டத்தில் மாற்று அணிகளில் இருப்பவர்களும் கூட தற்போதைய அரசியல் நெருக்கடியிற்கு சுமுகமான தீர்வு பாராளுமன்றத்தின் பாரம்பரியங்களூடாகவும், நீதித் துறையினூடாகவும் பெறப்பட வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்!

ஒருசில தரப்புக்கள் மௌனமாகவும், நிதானமாகவும் தமது பங்களிப்பினை செய்யும் அதேவேளை ஒருசில தரப்புக்கள் உங்கள் மீதான அபரிமிதமான காதலில் அதிகம் துள்ளி ஆக்ரோஷமாக சிலவேளை உங்கள் கட்சியில் உள்ள முன்னணி உறுப்பினர்களை விடவும் மும்முரமாக (தம்மிடம் வேண்டப்படும் அளவிற்கும் அதிகமாக குஷியாகவும் பிசியாகவும்) ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக களம் இறங்கியுள்ளமையை கூட நீங்கள் அறியாமல் இல்லை.

எங்கள் தேசப்பற்றை நிபந்தனைகளுக்கு அப்பால் உங்களைப் போல பல தரப்புக்களும் எதிர்பார்க்கின்றார்கள், ஆனால் 2015 இல் போலவே ஒரு சமூகமாக இன்றும் எதிர்பார்ப்பவர்களை விடவும் அதிகமாகவே நாங்கள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம், அன்றும் இன்றும் என்றும் எங்கள் சமூகம் தமது தேசப்பற்றிற்கும், நன்றி விசுவாசத்திற்கும் பாரிய விலையினைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுகின்றமை நீங்கள் அறியாத விடயம் அல்ல.

கௌரவ பிரதமர் அவர்களே!

இந்த நெருக்கடியான நிலையில் இருந்து தேசம் மீள வேண்டும் என்பதால் தனிநபர்களது மற்றும் சமூகங்களினது நிகழ்ச்சி நிரல்கள் குறித்தோ நிபந்தனைகள் குறித்தோ பேசக் கூடாது, வேண்டாம் என்று தலைமைகள் தீர்மானித்திருக்கின்றன, என்றாலும் ஒரு சில விடயங்களை அவை தற்போதைய நெருக்கடிகளின் தீர்வுகளில் தாக்கம் செலுத்த இடமிருப்பதால், அவை ஐக்கிய தேசியக் (கட்சி) கூட்டணியின் எதிர்காலத்திற்கும் பெரிதும் உதவலாம் எனவும், உரிய தருணத்தில் சொல்லப் படாவிட்டால் அதுவும் கூட ஒரு அநீதியாக அமைந்துவிடுமோ என்ற நல்ல எண்ணத்திலும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் ஜனநாயக பாரம்பரியங்கள் பேணப்படுவதும், பாராளுமன்ற சம்பிரதாயங்கள் பேணப்படுவதும், நீதித்துறையின் சுயாதிபத்தியம் பேணப்படுவதும் அரசியல்வாதிகளினால் அவ்வப்பொழுது தோற்றுவிக்கப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் தனி நபர்களை கட்சிகளை அதிகாரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும் மாத்திரமாக இருந்துவிட முடியாது.

மாறாக சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் என்பவற்றிற்கும் அவைதான் உத்தரவாதமளிக்க வேண்டும், அந்த வகையில் கடந்த கால ஐக்கிய தேசியக் ஆட்சி அரசுகளின் பொழுதும் உங்கள் ஆட்சிகளின் பொழுதும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் ஒருபுறமிருக்க இந்த நல்லாட்சி அரசு அமைந்த பின் நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட சவால்களை நீங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே!

ஹலால் முதல் அளுத்கமை வரை இடம்பெற்ற காழ்ப்புணர்வு வன்முறைகலிற்கு நல்லாட்சி முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று நம்பிய ஒரு சமூகத்திற்கு மென்மேலும் அச்சுறுத்தல் விடுக்குமளவு சுதந்திரம் இனமதவாத சகதிகளுக்கு நல்லாட்சி ஜனநாயகத்தில் இருந்தது, காலி, அம்பாறை, திகனை என வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொழுது முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்த முஸ்லிம் தலைமைகளும் நல்லாட்சியின் பங்காளிகளாகத் தான் இருந்தார்கள், மஹிந்த தரப்பினரும் பிரதான சூத்திரதாரிகள் உங்கள் தரப்பில் இருப்பதாக ஏளனமும் செய்தார்கள்.

முஸ்லிம்களின் அடிமட்ட அரசியல் பிரதிநிதித்துவங்களை சரிபாதியாக அல்லது அதற்கும் கீழ் குறைக்கும் உள்ளூராட்சி சட்டமூலங்களை இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக தான் நீங்கள் நிறைவேற்றினீர்கள், அதன் விளைவாக நாங்கள் மட்டுமல்ல நீங்களும் பாதிப்படைந்துள்ளீர்கள், உங்களை இன்று நடுத் தெருவில் தள்ளியுள்ள தாமரை மொட்டு அணியினரும் பாரிய வெற்றியை ஈட்டிக் கொண்டுள்ளார்கள்.

அது அப்படியிருக்க, அரசியல் பிரதிநிதித்துவங்களை சரிபாதியாக அல்லது அதற்கும் கீழ் குறைக்கும் மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நல்லாட்சியில் தான் நிறைவேறியது, அதனடியாக எல்லை நிர்ணய குழுவிற்கு முஸ்லிம் சமூகம் சார் அறிக்கைகள் தேசிய ஷூரா சபையினாலும் மற்றும் பிராந்தியத் தலைமைகளினாலும் சமர்ப்பிக்கப்பட்டும் அவை எதுவுமே கவனத்திற் கொள்ளப் படவில்லை என்பதனை அதன் உறுப்பினராக இருந்த காலம் சென்ற பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் அறிக்கைகள் வாயிலாக தெரிவித்திருந்தார்.

வடகிழக்கில் முஸ்லிம்களது பிரச்சினைகள் எவையும் கடந்த மூன்று வருட நல்லாட்சியில் போதிய அவதானத்தைப் பெறவில்லை என்பதே உண்மை, எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு கிழக்கிலங்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்பது பகிரங்க இரகசியமாக இருக்கிறது!

உண்மையில் மேற்படி அடிப்படை பிரச்சினைகளுக்கு உங்கள் எதிரணியினர் தீர்வுகளை தருவதாக தற்பொழுது முஸ்லிம் சிவில் அரசியல் சன்மார்கத் தலைமைகளிடம் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்கள்.

நீதிமன்றத்தின் இடைக்காலத்  தடை உத்தரவை இறுதித் தீர்வாக நாம் கருதவில்லை, சிலவேளை தீர்வு ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அடுத்து நிகழக் கூடிய அரசியல் மற்றும் தேர்தல் களநிலவரங்களில் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயமான அபிலாஷைகள் நிச்சயமாக தாக்கம் செலுத்தவே செய்யும் என்பதனை முன்கூட்டியே உங்களுக்கும் உங்களது சகாக்களுக்கும் நாங்கள் சொல்லித் தான் புரிய வேண்டுமென்பதில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே !

உங்களுக்கும் அதிபர் மைத்திர்யிற்கும் இடையே நிகழ்ந்த பனிப்போரின் தவிர்க்கமுடியாத விளைவுகளையே எமது தேசம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது, மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் போன்று 19  ஆவது அரசியமைப்பு சட்டத் திருத்தத்தை  புறந்தள்ளி 18  ஆவது அரசியமைப்பு சட்டத் திருத்தத்திற்கு உயிர் கொடுக்கவே முன்னாள் அரச அதிபர் மஹிந்த அவர்களும் அவர்களது அணியினரும் பிரயத்தனங்களினை மேற்கொள்வதாகவே தெரிகிறது.

அன்று அந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்த சகாக்கள் பலரும் இன்று உங்களோடு இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க குரல் எழுப்புகின்றார்கள், அவர்களும் உள்வீட்டுப் பூசல்களினால் மதில்மேல் பூனைகளாய் இருக்கும் பலரும் நாளை எந்தத் தரப்பில் இருப்பார்களோ என்பது சந்தேகத்திற்கு உரிய விடயங்கள் தான்!

உண்மையில் நல்லாட்சியும் வேண்டாம் பொல்லாட்சியும் வேண்டாம் வேண்டாம், சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி ஆட்சி செய்து  இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி அழிவின் விளிம்பிற்கு இட்டு வந்து ஒவ்வொரு பிரஜையின் தலையிலும் சுமார் ஐந்து இலட்சம் கடன் சுமையை தந்து வைத்துள்ள இருபெரும்  கட்சிகளும் வேண்டாம், அவற்றின் கூட்டணிகளும் வேண்டாம் என்றுதான் இன்றைய தலைமுறையினர் சிந்திக்கின்றார்கள்.

இந்த நாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நாடாளுமன்றம், நீதித் துறை என்பவற்றிற்கிடையில் எழுந்துள்ள வலுவேறாக்கள் சர்ச்சைகள் தேசிய நலன்களை மையப் படுத்தியவை அல்ல மாறாக அவை ரணில், மைத்திரி, மஹிந்த ஆகிய தனிநபர்களையும்  அவர்களுக்குப் பின்னல் உள்ள அணிகளையுமே மையப் படுத்தியுள்ளன என்பதனை என்னும் பொழுது நெஞ்சு பொறுக்குதில்லை வயிறு பற்றி எரிகிறது!

இது உங்களுக்கு மக்களால் தரப்பட்டுள்ள பதவியை மதிக்கும்

இந்த தேசத்தின் பிரஜை

 மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

குறிப்பு : அடுத்த கடிதங்கள் இன்னாள் முன்னாள் அதிபர்களுக்கானவை (விரைவில்)

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles