Monday, April 20, 2026

சமூக உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியும் பொறாமையும்.

அமானிதங்கள் பாழ் படுத்தப் படுகின்றமைகான முதன்மையான காரணி.

போட்டி பொறாமை ஆற்றாமை எனும் இழி குணங்கள் இயல்பாகவே மனித மனங்களில் ஆதிக்கம்செலுத்துகின்றன, மற்றொருவருக்கு இறவன் வழங்கியுள்ள அறிவு ஆற்றல் ஆரோக்கியம்,திறமைகள், வளங்கள் வசதி வாய்ப்புக்கள் போன்று தனக்கும் கிடைக்க வேண்டும்என்ற போட்டியுணர்வு இருப்பதில் தவறில்லை என்றாலும் அவை அவரிடமிருந்து இல்லாமல் போய்விட வேண்டும் என்ற பொறாமை உணர்வு மிகவும் ஆபத்தானது.

இத்தகைய இழிவான குணங்கள் அடுத்தவருக்கு இழைக்கும் தீங்குகளை விட அவற்றை கொண்டிருப்போருக்கே அதிக தீங்குகளை கொண்டு வருகின்றன.அதனால் தான் அவற்றை உள நோய்கள் என இனிய மார்க்கம் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.

ஒரு ஆரோக்கியமான சிறந்த உள்ளத்தில் தற்பெருமை, பொறாமை,பேராசை, கெட்ட எண்ணங்கள், அகம்பாவம் அகங்காரம், நயவஞ்சகம் போன்ற இழிகுணங்கள் ஒரு பொழுதும் இருக்க முடியாது.

நப்சுடைய தீய குணாதிசியங்களில் இருந்து தூய்மை பெறுவது “தஸ்கியா” ஒரு விசுவாசியின் முதன்மையான கடமையாகும், எமது தொழுகை எமது நோன்பு, எமது ஸக்காத்து எமது ஹஜ்ஜு என எல்லா பர்ழான மற்றும் நபிலான வணக்க வழிபாடுகள் கடமைகள் அனைத்தும் எமது ஆன்மாக்களை பரிசுத்தப் படுத்துகின்றன, இன்றேல் அவற்றில் பயனில்லை என்பதனை குர்ஆன் ஹதீஸ் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.

போட்டி பொறாமை தனிநபர் குடும்ப சமூக வாழ்வில் ஏற்படுத்துகின்ற ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் பற்றிஅதிகம் பேச கேட்டிருக்கின்றோம், என்றாலும் குறிப்பாக ஒரு விடயத்தை மாத்திரம் இந்த பதிவில் சுட்டிக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

இன்று எமது சமூக தேசிய வாழ்வில் நாம் எதிர் கொண்டுள்ள பல்வேறு பல்வேறு சவால்கள், அவற்றிற்கு முகம் கொடுப்பதில் எமது பின்னடைவுகள் என்பவற்றை ஆராய்கின்ற பொழுது ஒரு உண்மை புலப்படுகின்றது.

சமூகத்தின் எல்லா மட்டங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாத் தரப்புக்களிடமும் அடுத்தவரை அங்கீகரிக்கின்ற, திறமை சாலிகளை கௌரவிக்கின்ற, அறிவு ஆற்றல்களுக்கு, துறைசார் நிபுனத்துவங்களிற்கு மதிப்பளிக்கின்ற அல்லது தமக்கு மத்தியில் இலை மறை காய்களாக மறைந்து கிடக்கின்ற பல நூற்றுக்கணக்கான அத்தகைய வளங்களை தேடி இனம் காணுகின்ற உயரிய நாகரீகம் எம்மிடம் இல்லாது போயிருக்கின்றது.

தன்னைவிடவும் ஒருவர் தனது துறையில் தேர்ந்துவிடக் கூடாது என்றும், தகுதி இருக்கின்றதோ இல்லையோ தானோ தனக்கு வேண்டியவரோ பதவி அதிகாரம் அந்தஸ்துக்களில் இருக்கவேண்டும் என்றோ பலரும் எண்ணுகின்றார்கள், போட்டியும் பொறாமையும் சமூக உளவியலில் மிகவும் பாதகமான தாக்கங்களை கொண்டிருக்கின்றன.

ஒருவர் வாழ்க்கையில் தனது கடின உழைப்பு, அறிவு ஆற்றல்கள், தேடல்கள் மூலம் உயர்ந்து செல்ல எத்தணிக்கின்ற பொழுது அல்லது அவருக்கு உரிய நியாயமான அங்கீகாரம் கிடைக்கவிருக்கின்ற பொழுது காலை வாரிவிடுவதில் கரிசனை காட்டுபவர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

உண்மையில் அமானிதங்கள் பாழ் படுத்தப் படுவதற்கு இந்த போட்டியும் பொறாமையும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன.

தகுதியானவர்களுக்கு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, இடத்தை,பதவியை, பொறுப்பை வழங்குவது அமானிதமாகும், இமாமத், தலைமை ஆட்சி அதிகாரம் இவையெல்லாம் அமானிதங்களாகும்.

முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்ககுவதாகும்.

குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முணைவது அமானிதத்தை பாழாக்க்குவதாகும்.
பாராட்டப்பட வேண்டிய ஒருவரை பாராட்டாமல் இருப்பது, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒருவரை ஊக்குவிக்காமல் இருப்பது, அங்கீகரிக்கப்படவேண்டிய ஒருவரை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது அவற்றையெல்லாம் தகுதியில்லாவிடினும் தாமே அடைந்து கொள்ள முணைவது எல்லாம் அமானிதங்களை பாழ் படுத்துவதாகும்.

கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் ஆன்மீக பண்பாடுகள் பற்றியும் பயிற்றுவிப்புக்கள் பற்றியும் அதிகம் பேசுகின்ற நிறுவனங்கள் அமைப்புக்களில் கூட அடுத்தடுத்த தலைமைத்துவக் கட்டமைப்புக்கள் உருவாக்கப் படாமைக்குப் பின்னால் இத்தகைய பாரிய உளவியல் கோளாறுகள் காணப்படுகின்றன.

இன்று சமூகத்தின் பெரும் சாபக்கேடாக மாறிவருகின்ற ஆயுட்காலத் தலைமைகளுக்கும் அவர்களின் எதேச்சாதிகாரமான செயற்பாடுகளுக்கும், உள்ளக அதிகாரப் பகிர்வுகள், பங்கீடுகள் இடம்பெறாமைக்கும், உரியவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்படாமைக்கும், தகுதிதியானவர்கள் இனம் கணப்படாமைக்கும் பின்னால் அவர்களும் அவர்களை சூழவுள்ள அடுத்தவர்களுக்கு வழி விடவிரும்பாத சிறு சிறு குழுவினரும் காணப்படுகின்றனர்.

இன்று எமது கொள்கைகளும், கோட்பாடுகளும், பாதையும் பயணமும் இலக்குகளும் தெளிவாக இருப்பினும் எமக்கு மத்தியில் அதிகரித்த முரண்பாடுகளும் பிளவுகளும் வெட்டுக்குத்துகளும் இருப்பதற்கு காரணம் இத்தகைய சமூக உளவியலேயாகும்.

ஒவ்வொருவரும் அடைவுகளைவிட அடையாளங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர், அதனால் சாதனைகளை விட இன்று சோதனைகளே அதிகரித்துக் காணப்படுகின்றன.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles