Sunday, May 5, 2024

இஸ்லாமிய வாழ்வு நெறியில் மஸ்ஜிதுகளின் பிரதான வகிபாகம்.

எங்கே கோளாறு இருக்கிறது, எங்கிருந்து ஆரம்பிப்பது…?!

அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையில் உள்ள இதய சுத்தியுடனான உறவை உயிராட்டமுள்ளதாக வைத்துக் கொள்ளும் ஐவேளை தொழுகையை இரகஸ்யமாகவன்றி கூட்டாக ஜமாத்தாக மஸ்ஜிதுகளில் நிறைவேற்றுவதனை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஆன்மிகம் தனிநபர் வாழ்வில் துறவறம் அல்லது சந்நியாசம் அல்ல அது ஒரு அழகிய சமூக வாழ்வின் அடித்தளம் என்பதனை ஜும்மா மற்றும் ஜமாத்துத் தொழுகைகள் உணர்த்துகின்றன.

Masjid 2ரஸூல் (ஸல்) அவர்களது மக்கா வாழ்வும், ஹிஜ்ரத்தும் பின்னர் மதீனாவாழ்வும் மக்கா வெற்றியும் இரு பெரும் மஸ்ஜித்துகளை மையப் படுத்திய இஸ்லாமிய வரலாற்றின் அடித்தளங்கள் எவ்வாறு இடப்பட்டன என்பதனை எமக்கு உணர்த்துகின்றன.

இறுதி இறைதூதர் அவர்களிற்கு முன்னர் தோன்றிய பல நபிமார்களது வாழ்வில் பைத்துல் மக்திஸ் கொண்டிருந்த முக்கியத்துவத்தினால் முஸ்லிம் உம்மத்தின் மூன்றாவது பிரதான ஹரமாக அது திகழ்கின்றது.

ஐவேளை தொழுகைகளிற்கு அப்பால் உயரிய இஸ்லாமிய சமூக வாழ்வின் அதிகார மையங்களாக மஸ்ஜிதுகள் திகழ்கின்றன.

வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய தூதை வாழ வைப்பதில் முஸ்லிம் சமூகங்களை வழி நடாத்துவதில் மஸ்ஜிதுகள் பாரிய பங்களிப்புகளைச் செய்து வந்துள்ளன.

என்றாலும், மஸ்ஜித்களையும் மிம்பர் மேடைகளையும் யுகத்தின் சவால்களிற்கு கேற்ப பலப்படுத்துவத்தில் நாம் தவறியுள்ளோம்.

ஒரு சமூகத்தின், இருப்பு பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, கல்வி சுகாதார மேன்பாடு, உட்கட்டமைப்பு, சுற்றுச் சூழல் அபிவிருத்தி போன்ற விவகாரங்களை ஷூரா முறையில் கலந்துரையாடி வளங்களை திரட்டி அவற்றை முகாமை செய்கின்ற மக்கள் மன்றங்களாக மஸ்ஜிகள் திகழ வேண்டும்.

அல்-குரானை சுன்னாஹ்வை கற்கின்ற கற்றுக் கொடுக்கின்ற, இஸ்லாமிய பிக்ஹு சட்டங்களை கற்றுக் கொடுக்கின்ற திறந்த கல்லூரிகளாக மஸ்ஜிதுகள் திகழ வேண்டும்.

இஸ்லாமிய பொருளாதார வாழ்வின் அடிப்படை அம்சமான ஸகாத்தை அறவிட்டு பங்கீடு செய்வதோடு, பைத்துல் மால் நிதியங்களூடாக பல்வேறு மனித நேயப் பணிகளை நிர்வாகிக்கின்ற முகாமை செய்கின்ற நிர்வாக அலகு களை மஸ்ஜிதுகள் கொண்டிருத்தல் கட்டாயமாகும்.

குறிப்பாக சமூக அநீதிகளை ஒழித்தல், வறுமை ஒழித்தல், போதை வஸ்து ஒழிப்பு,
வரதட்சணை ஒழிப்பு, முஸ்லிம் மாதர் கடல் கடந்து தொழிலுக்காக செல்வதனை மாற்றீடுகளின் மூலம் ஒழித்தல் என இன்ன பிற சமுதாய பணிகளை மஸ்ஜிதுகளூடாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

மஸ்ஜித்களுடன் முஸ்லிம் மாதர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல், சமூகப் பணிகளில் அவர்களது பங்களிப்பை பெற்றுக் கொள்ளல், குடும்ப நிறுவனங்களின் கட்டுக் கோப்பை பேணுவதில் அவர்கள் வகிபாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் என மஜித்துகளிற்கு மகத்தான பணி இருக்கின்றது.

முஸிம்கள் மத்தியில் பிணக்குகள் ஏற்படுமிடத்து இயன்றவரை மஸ்ஜிதுகளூடாக அவற்றை தீர்த்துக் கொள்வதற்கான தகுதிவாய்ந்த மார்க்க மற்றும் நாட்டுச் சட்டங்களை அறிந்த சபைகளை நிறுவிக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

இளம் தலை முறையினரின் ஆன்மீக ஈடேற்றத்தில் மாத்திரமன்றி அவர்களது, கல்வி உயர்கல்வி, தொழில் வாய்ப்புகள் போன்ற ஹலாலான வாழ்வாதார அம்சங்களிலும் மஸ்ஜிதுகள் கரிசனை செலுத்துதல் வேண்டும், குறிப்பாக ஊரில் உள்ள பாடசாலைகளுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை கொண்டிருத்தல் அவசியமாகும்.

குறிப்பாக சிறுபான்மையாக வாழும் நாம் ஏனைய சமூகங்களுடன் இஸ்லாமிய வராயரைகளிற்குள் எவ்வாறு சமாதான சக வாழ்வை கட்டி எழுப்பிக் கொள்ள வேண்டும், பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களை கூட்டுப் பொறுப்புடன் கையாள வேண்டும் என தீராமணிப்பதற்காக கூட்டுப் பொறுப்புள்ள ஷூரா பொறிமுறைகளை மஸ்ஜிதுகள் கொண்டிருத்தல் வேண்டும்.

இவ்வாறான பரந்துபட்ட கண்ணோட்டத்தில் மஸ்ஜிதுகளை ஹயாத்தாக்குகின்ற பொறுப்பு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினறதும் கூட்டுப் பொறுப்பாகும், அதனை உலமாக்கள், பள்ளி நிர்வாகங்கள், தாதஃவா அமைப்புக்கள் தான் செய்ய வேண்டும் என்ற தப்பான மனப்பதிவில் நாம் இருக்கின்றோம்.

“இஸ்லாமிய சமூக மையங்களான மஸ்ஜிதுகளும் குத்பா பேருரைகளும்”

jumma_namaz_14என்ற ஒரு எண்ணக்கரு அல்லது தலைப்பு கொண்டுள்ள சமூக வாழ்வின் தத்துவங்கள் சமகாலத்தில் புதிதாக ஆராயப்பட விடயம் என்பதனை விட அமுலுக்கு வர வேண்டிய அம்சம் என்பதே உண்மையாகும்.

வாரத்தில் ஒவ்வொரு வெள்ளியும் எமது தொழில்கள், வியாபாரங்கள்,கொடுக்கல் வாங்கல்கள் என சகலதையும் நிறுத்திவிட்டு ஜும்மாவுக்காக மஸ்ஜிதுக்கு வருமாறு முஸ்லிம் சமூகம் வேண்டப்படுகிறது.

அன்றைய தினம் குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து உள்ளும் புறமும் தூய்மையானவர்களாக ஒரு ஆன்மீக சூழலில் ஒன்று கூடல்களுக்காகவும், குத்பா உரையை வாய் மூடி மௌனமாய் இருந்து கேட்பதற்காகவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

ஒவ்வொரு வாரமும் இவ்வாறு கண்டிப்பாக அழைக்கப்பட்டு ஒரு சமூகத்திற்கு இவ்வுலக மறு உலக ஈடேற்றத்திற்கான, சமுதாய சீர்திருத்தங்களுக்கான, மானிட விமோசனத்திற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்களை கள நிலவரங்களின் நிலைக்களனில் வழங்குகின்ற உத்தியோகபூர்வமான மேடைகளாகவே மிம்பர் மேடைகள் கருதப்படுகின்றன.

இன்றைய இஸ்லாமிய சிந்தனை முகாம்கள் மிம்பர் மேடைகளை விட்டு தூரமாக இருப்பதுவும், மிம்பர் மேடைகள் உரிய தராதரங்களை கொண்டிருக்காமையும், ஒட்டு மொத்த சமூகமும் அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும், வெறும் ஆசார தர்மங்களுக்காக ஜும்மா தினங்களை கடத்திக் கொண்டிருப்பதுவும் எல்லா மட்டங்களிலும்,எல்லா துறைகளிலும் முஸ்லிம் சமூகத்தில் பாதகமான தாக்கங்களை கொண்டிருக்கின்றன.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அந்த அறை மணித்தியால கால இடைவெளியில் இஸ்தம்பிக்கச் செய்து வழங்கப்படுகின்ற சனசமூக சன்மார்க்க போதனைகள் அறிவு பூர்வமாகவும், ஆய்வுபூர்வமாகவும், ஆன்மீக அடித்தளங்களில் சமயோசிதமாக சமூக விவகாரங்களை கையாளுகின்ற தராதரங்களை பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினதும்,இஸ்லாமிய தஃவா அமைப்புக்களினதும் கவனம் இந்த விவகாரத்தில் பெரிதும் ஈர்க்கப்பட வேண்டியுள்ளது, சிறந்த குத்பாக்களை நடாத்துவதற்கான பயிற்சிகளும் ஆங்காங்கே அவ்வப்போது இடம் பெற்றாலும் அவை நன்கு திட்டமிடப்பட்ட தொடர்ந்தேர்ச்சியிலான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம் பெற வேண்டிய தேவை இருக்கிறது.

சமூகத்தில் கற்றவர்கள் அறிந்தவர்கள் ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர் சமூகத்திற்கு அவசியம் எனக் கருதும் விவகாரங்களை குத்பா பேருரை நிகழ்த்தும் இமாம்களின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு சிறந்த குத்பா பேருரைகளை, ஆய்வுகளை காணுமிடத்து அவற்றை இமாம்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும்,முடியுமானவர்கள் குத்பாக்களை தயாரிப்பதில் அவர்களுக்கு உதவுவதன் மூலமும் அளப்பரிய சேவையொன்ற செய்யலாம்.

குத்பாப் பேருரைகளின் தராதரங்களை காலோசிதாமாக மேன்படுத்துவது ஒவ்வொரு மஹல்லாவினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழகிய உபதேசங்களையும், காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக வெள்ளிமேடைகளாக ஜும்மாப் பேருரைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.

Kuthbahகுறித்த ஒரு மணி நேரமும் முஸ்லிம்கள் குளித்து சிறந்த ஆடைகள் அணிந்து ஜும்மாவுக்கு வருகை தந்து வாய்மூடி மௌனமாக இருந்து கேட்கின்ற குத்பாப் பேருரைகள் ஒவ்வொரு தனி மனித மணித்தியாலங்களுக்கும் வலுவை சேர்க்கின்ற கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற தராதரங்களில் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

அந்த வகையில் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழத்தப்பட வேண்டிய குத்பாக்களை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அழகாக அர்த்தமுள்ளவையாக நிகழ்த்தப்படுவதனை அந்ததந்த மஹல்லாவில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் கூட்டுப் பொறுப்பாக உணர்ந்து உறுதி செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

கருத்து வேறுபாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய விடயங்களுக்கு அப்பால் சகலரும் உடன்படுகின்ற பொதுவான விவகாரங்களை அடிப்படையாக வைத்து காலோசிதமாக குத்பாக்களை தயாரித்துக் கொள்வதில் உலமாக்களுக்கு உதவுவதும், அவ்வாறான குத்பாப் பேருரைகள் இருந்தால் பெற்றுக் கொடுப்பதும், அல்லது முடியுமான ஏனைய உலமாக்கள் தயாரித்து அவர்களிடம் கொடுப்பதும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பி வைப்பதும் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.

ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.

இப்பொழுது ஆன்மீக நம்பிக்க்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில் மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தறுதலைத் தலை முறை உருவாகி வருகிறது.

அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.

போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.

எவ்வாறு உலகில் ஆயுத உற்பத்தியாளர்கள் இன மத மொழி வேற்றுமைகளில் முதலீடு செய்கிறார்களோ அதே போன்றே போதை வஸ்து உற்பத்தியாளர்களும் ஒரு சமூகத்தின் இளம் மற்றும் மாணவ சமூகத்தை இலக்கு வைத்து அழிப்பதற்கு போதை வஸ்துக்களை ஆயுதமாக பயன் படுத்தமாறு இன மத வெறியர்களை தூண்டுகிறார்கள்.

இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.

இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.

மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.

யுகத்தின் புதிய நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் மத்திய நிலையங்களாக மஸ்ஜிதுகள் மாறுதல் வேண்டும், மிம்பர் மேடைகள் வலுவூட்டப்படல் வேண்டும், பாடசாலைகள் உளவள ஆலோசனைகளுடன் பதின்ம வயதினரை வழி நடாத்த வேண்டும்.

Kuthbah1குத்பாப்ப் பேருரைகளை சுமார் ஏழு இலட்சம் பேர்கள் கேட்கின்றார்கள் என்றால் ஏழு இலட்சம் மனித மணித்தியாலங்கள் செலவிடப்படுகின்றன அந்த பெறுமதியான கால அவகாசத்தை சுமார் 1200 பேசும் இமாம்களின் தெரிவுகளுக்கும், சௌகரியங்களுக்கும் சிலவேளை விருப்பு வெறுப்பு கருத்து வேறுபாடுகளுக்கும் விட்டு விடுவது மிகப் பெறும் தவறாகும்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் முன்னணி உலமாக்கள் அல்லது சில பிரபலங்கள் நிகழத்துவது போன்ற நன்கு ஆராயப்பட்ட குத்பாக்கள் நாடுமுழுவதுமுள்ள கதீப் மார்களை சென்றடைவதற்கான முயற்சிகளை ஜம்மியாய்த்துல் உலமா தீவிரப்படுத்தல் வேண்டும்.

இஸ்லாம் சொல்லித் தரும் உயர் பண்பாட்டு சமாதான சகவாழ்வு மற்றும் மானுட விழுமியங்களின் தூதுவர்களாக ஒவ்வொரு தனிமனித முஸ்லிம் ஆண் பெண்ணும் மாறுவதிலேயே, இறக்குமதி செய்யப்பட்டு அதி தீவிரமாக இலங்கையில் குறிப்பாக பாமார சமூகங்களிடம் சந்தைப் படுத்தபடும் இஸ்லாமோபோபியா இஸ்லாம் முஸ்லிம்கள் குறித்த பீதி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் என்பவற்றை எங்களால் முறியடிக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles