சமூகத் தளத்தில் புதிய தலை முறை ஆளுமைகள் எல்லா மட்டத்திலும் உருவாக்கப் படல் வேண்டும், அவர்களிற்கான அங்கீகாரமும், அவகாசமும் வழங்கப் படல் வேண்டும், சமூகத் தளத்தில் அரசியல், சிவில் சன்மார்க்க , தஃவா களங்களில் இரண்டாம், மூன்றாம் படிநிலை தலைமைகள் ஆளுமைகள் அறிமுகம் செய்யப் படுவதற்கான இயல்பான பொறிமுறைகள் இல்லாமை பெரிய குறைபாடாகும்.
ஒவ்வொரு தலை முறையினரும் புதிய ஒரு யுகத்திலேயே பிறக்கின்றார்கள், காலத்திற்குக் காலம் வெவ்வேறு நூதனமான சவால்களை நாம் எதிர் கொள்கின்றோம், அவற்றை எதிர்கொள்ள வெவ்வேறு புதுப்புது உத்திகளும் யுக்திகளும் தேவைப்படுகின்றன.
தலைமுறை இடைவெளியை கருத்தில் கொள்ளாத எந்தவொரு சமூகத் தலைமையும் சாதிக்கப் போவதில்லை, புதிய இளம் தலைமைகள் பட்டறைகளிலும் பாசறைகளிலுமன்றி சரியான தளத்திலும் களத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப் படுவதன் மூலம் பயிற்றுவிக்கப் படல் வேண்டும்.
இன்று பதவிகள் ஒரு சிலருக்கு அலங்காரமாகவும், சூதாட்டமாகவும் மாறிவருக்கின்றன, அதேவேளை எந்தப் பதவிகளையும் அலங்கரிக்க வல்ல பலர் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள், சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்த படிமுறைகளிற்கு வழங்கப் படுகின்ற பொழுது அங்கு பெரறுப்புக்கூரல், வெளிப்படைத் தன்மை, ஆக்கத் திறன், சாதித்துக் காட்டுவதில் ஊக்கம் என பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன, நன்றாக திட்டமிடப்பட்ட கௌரவமான ஆயுட்கால ஆக்கிரமிப்புகள் பல நிறுவனங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.
மௌனமான கௌரவமான அழகாக திட்டமிடப்பட்ட, ஜனநாயக முலாம் பூசப்பட்ட, எதேச்சாதிகார ஏகபோக தலைமைத் துவக் கட்டமைப்புக்கள் எமது, சமுக மற்றும் தேசிய வாழ்வில் பாரிய பின்னடைவுகளை நோக்கி எம்மை இழுத்து சென்றிருக்கின்றன.
அங்கீகரிக்கப்படவேண்டிய ஒருவரை அங்கீகரிக்காமல் இருப்பது, பாராட்டப்பட வேண்டிய ஒருவரை பாராட்டாமல் இருப்பது, ஊக்குவிக்கப்படவேண்டிய ஒருவரை ஊக்குவிக்காமல் இருப்பது, அல்லது அவற்றையெல்லாம் தகுதியில்லாவிடினும் தாமே அடைந்து கொள்ள முணைவது எல்லாம் அமானிதங்களை பாழ் படுத்துவதாகும்.
இன்று தாம் செய்யாதவற்றிக்காக பாராட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கும், அடுத்தவர் திறமைகளை, அர்பணங்களைை, அங்கீகாரங்களை தமாதாக்கிக் கொள்வதற்கும் பலர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களும் பகல் கொள்ளைக் காரர்கள் தான்.
நாம் ஒரு உம்மத்து என்ற வகையிலும், ஒரு சமூகம் என்ற வகையிலும், ஒரு தேசத்தவர் என்ற வகையிலும் சமகாலத்தில் எதிர் கொள்கின்ற சவால்களிற்கு முன்னால் எங்களை சரியான தளங்களில் நிலைப் படுத்திக் கொள்வதில் தோல்விக்கு மேல் தோல்வி கண்டு கொண்டிருக்கின்றோம்.
தலைமுறை இடைவெளியினை நாம் விசாலப் படுத்திக் கொண்டு செல்கின்றோம், தனியாட்களாயினும், குழுக்கள் ஆயினும் தம்மால் அடைய முடியாத அங்கீகாரமும் அதிகாரமும் சரியான பிறிதொரு தரப்பிற்கு சென்றடைவதனை நாம் விரும்புவதில்லை, மாறாக பிழையான தரப்புக்களை தக்க கொள்வதில் மறைமுகமான பங்களிப்பினை செய்து வருகின்றோம்.
இன்று ஒவ்வொருவரும் தமக்குரிய அங்கீகாரத்திற்கு ஏங்கித் தவிப்பதனால் அடுத்தவரை அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றார்கள், அடுத்தவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து விடக் கூடாது என்பதில் அக்கறையாகவும் இருக்கின்றார்கள். அங்கீகாரங்கள் அமானிதங்கள் என்பதனை மறந்து விடுகின்றார்கள். இன்னும் சிலர் அக்கம்பக்கத்தில் வாழுகின்றவர்களை அங்கீகரிக்கக் கூடாது என்பதற்காக வருகைதரும் பிரபலங்களை தேடி ஓடுவார்கள்.
முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்ககுவதாகும். குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முணைவது அமானிதத்தை பாழாக்க்குவதாகும்.
தஜ்ஜாலிஸம் :”பிழையான தரப்புக்களுக்கு வழங்கும் ஆதரவு, சரியான தரப்பிற்கு இழைக்கும் அநீதியாகும், எல்லா அநீதிகளும் வரம்பு மீறலாகும்”
பிழையான தரப்புக்களுக்கு நாம் வழங்குகின்ற அங்கீகாரங்கள் சரியான தரப்புக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாக அமைந்து விடுகின்றது, நாம் விசுவாசிக்கின்ற கொள்கைகள்,கோட்பாடுகள், நாம் சொல்லித் தருகின்ற பாதை இலக்குகள் பயணங்கள் என்பவற்றிற்கு முற்றிலும் முரணான தரப்புக்களை எம்மால் ஒரு பொழுதும் விளம்பரப்படுத்தவோ, சந்தைப் படுத்தவோ முடியாது.

சந்தர்பங்களை உருவாக்குபவர்களே தலைவர்கள், சனதப்பங்களுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகள் அல்ல, இன்றைய இளம் தலை முறையினரும் சந்தர்பங்களுக்காக காத்திருப்பவர்களே அன்றி அவற்றை உருவாக்க முனைவதில்லை, சமூக அரசியல் தேசிய நீரோட்டத்தில் தமக்குரிய சரியான தளத்தை இனம் கண்டு இலட்சியக் கனவுகளோடு முன்னே செல்பவர்களே நாளைய தலைவர்கள்.
அதேபோன்றே, சவால்களிற்கு பின்னால் உள்ள சந்தர்ப்பங்களை காணுகின்றவவர்கள் தலைவர்கள், அவர்கள் ஒரு பொழுதும் தளர்ந்து விடுவதில்லை.
சவால்களிற்கு இறை நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் முகம் கொடுப்பதே அவர்களின் வாழ்வினை வசந்தமாக்குகின்றது, அவர்கள் பிரகாசிக்கின்றார்கள்.
சமூகத்தில் இலைமறை காய்களாக இருக்கும் முதுசங்களை, முத்துக்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய கௌரவம் அங்கீகாரம் வழங்கி பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவர்களது ஆற்றல்களை, அனுபவங்களை, திறன்களை, பங்களிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான பொறி முறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்தல் காலத்தின் கட்டாயமாகும்.
சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டால் அவர்களும் சாதித்துக் காட்டுவார்கள், சந்தர்ப்பங்களை உருவாக்குபவர்கள் தலைவர்கள்.
ஊரில் உள்ள ஆசிரியர்கள், கல்விமான்கள் பட்டதாரிகள், சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,துறைசார் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், கதீப்மார்கள், அரச மற்றும் தனியார் துறைகளில், வெளி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ளோர் என ஒரு தகவல் திரட்டும் பணியை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

