Monday, October 18, 2021

முஸ்லிம் தனியார் சட்டம் – யுகத்தின் தேவைகளிற்கேற்ப இஜ்திஹாத் செய்வதற்கு இடமிருக்கின்றது.

இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என சமூக மட்டத்தில் நீண்டகாலமாக கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது, குறிப்பாக  இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டதிற்கு முரணான வழக்காறுகள் சீர்திருத்தப் படல் வேண்டும், காதி நீதிமன்ற சட்ட திட்டங்கள், அமுலாக்கல் விதிமுறைகள், நீதிபதிகள் நியமனம், அவர்களது தகைமைகள் போன்ற விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும் என முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

nikah1அதேபோன்றே சிறுமிகளின் திருமண வயதெல்லை குறித்த விவாதம் ஒன்றும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது,   1995ம் ஆண்டின் 18ம் இலக்க திருத்த சட்டத்தின் மூலம் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்ற எல்லையை நிர்ணயித்தது அதற்கு முன்னர் 1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டதின்  15ம் ஷர்த்தில் ஒரு ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண சட்டமும் அதே வயதெல்லையை மாற்றாமல் கொண்டிருந்தது.

தற்போதைய சமூக பொருளாதார, இரவல் கலாசார மற்றும் உடலியல், உளநிலை காரணிகளை கருத்தில் கொண்டு சிறுமியர் பொறுப்புணர்வு “ருஷ்து” வயதெல்லையை 16 அல்லது அதற்கு மேல் நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

முஸ்லிம்களது தனித்துவமான இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களிற்கு அமைவான விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் அரசாங்கமோ அல்லது பிறநாட்டு சக்திகளோ அல்லது வேறேதும் மூன்றாவது தர்ப்புக்களோ கைவைப்பதனை முஸ்லிம்கள் ஒரு பொழுதும் அனுமதிக்கப் போவதில்லை.

உலமாக்கள், முஸ்லிம் சட்ட நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெறாது முஸ்லிம் (தனியார்) விவாக விவாக ரத்துச் சட்டங்கள் குறித்த எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எந்த ஒரு அவையிலுமோ குழுவிலுமோ எடுக்கக் கூடாது.  இது ஒரு வரலாற்றுக் கடமையாகும்.  

2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்கள் தலைமையில் அன்றைய நீதியமைச்சரினால்  நியமிக்கப் பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சமூகத் தலைமைகள் பெற்று மீளாய்வு செய்தல் வேண்டும்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பெண்களது திருமண வயது

ஆண் பெண் உறவுகளை இஸ்லாம் நெறிப்படுத்தி அழகிய குடும்ப வாழ்வை காட்டித் தருவதற்கு முன்னர் பெண்களை போகப் பொருளாக மாத்திரமே ஜாஹிலியா சமூகம் கருதியது, பெண்களை மனிதர்களாகவே மதிக்காத காலமது, இஸ்லாம் அவர்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்கியது, அவர்களது திருமணத்தை உடன்படிக்கை மூலம் சட்ட வலுவுள்ள பாதுகாப்பான உறவாக மாற்றியமைத்தது, அவர்களுக்கு மஹர் கொடுப்பதனை கட்டாயமாக்கியது, பெண்களுக்குரிய சொத்து உரிமைகளை நிர்ணயம் செய்துள்ளது அவர்களுக்குரிய வாழ்வாதரங்களை ஆண்களே பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தியது.

nikah2பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணின் சுகபோகப் பொருளாக ஒரு மங்கையை ஒப்படைத்துவிடும் கொடுக்கல் வாங்கல் (அடிமை சாசனம்)  அல்ல, அது பொறுப்புணர்வுடன் கூடிய கடப்பாடுகள் நிறைந்த குடும்ப வாழ்வின் அத்திவாரமாகும், ஒரு ஆண் பெண்ணிற்கோ அல்லது ஒரு பெண் ஆணிற்கோ அநீதிகள் இழைத்து விடாது பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற ஒரு குடும்ப நிறுவனத்தை கட்டி எழுப்புகின்ற அறிவுபூர்வமான இல்லறமாகும்.

பருவவயதை அடைவது திருமணத்திற்கான அடிப்படைத் தகைமையாகும், பருவ வயதை அடைந்தவுடன் அவர்களை கட்டாயம் தீர்மானம் செய்து வையுங்கள்  என்றோ இத்தனை வயதில் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றோ இஸ்லாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்ல,  அந்த விடயம் சம்பந்தப்பட்ட மாதர் அவர்தம் பெற்றோர் பாதுகாவலர் ஆகியோரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ளது.

ஒரு பருவ மங்கையின் திருமணம் குறித்து அவரிடம் அனுமதி கேட்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது, அவரது திருமணம் குறித்து பெற்றார் அல்லது பாதுகாவலர் முடிவுகளை எடுக்கின்ற அனுமதியை இஸலாம் வழங்கியுள்ளது, அவ்வாறு பெற்றார் பாதுகாவலர் முடிவுகளை எடுக்கும் பொழுது மாதர்களின் உணர்வுகளை உரிமைகளை விருப்பு வெறுப்புக்களை கவனத்திற்க் கொள்ள வேண்டிய அவசியமில்ல என வாதிடுவது ஏனைய இஸ்லாமிய ஒழுக்கவியல் வழிமுறைகளிற்கு முரணான கருதுகோளாகும்,     ஏற்கனவே திருமணமாகி விடுபட்டோர் தமது திருமணம் குறித்த முடிவை எடுக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு திருமணத்துடன் தொடர்புடைய பல்வேறு தரப்புக்களும் பல்வேறு விவகாரங்களை கரிசனைக்கு எடுத்து யாரை எந்த வயதில் யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்ற முடிவுகளை எடுத்துக் கொள்ளும் திறந்த அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது.

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் “ ஏற்கனவே திருமணமாகிய பெண்ணாயின் அவரது கட்டளை பெறப்படுவதனையும், கன்னிப் பெண்ணாயின் அவரது பெற்றார் பாதுகாவலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்கள், பெண்களது, விருப்பு வெறுப்புக்களை, உரிமைகள் கடமைகளை கவனத்தில் எடுக்காது அவர்களை பலவந்தமாக திருமணம் செய்து வைக்குமாறு எங்குமே குறிப்பிடவில்லை, மாறாக இஸ்லாமிய அவர்கது உணர்வுகளை அபிலாஷைகளை உரிமைகளை மதிக்குமாறே இஸ்லாமிய ஒழுக்கவியல் பண்பாட்டு வழிகாட்டல்கள் உணர்த்தி நிற்கின்றன.

அனாதைகளின் திருமணம் பற்றி பேசும் அல்குரான் அவர்களை அவதானித்துக் கொண்டிருங்கள் அவர்கள் திருமண வயதை அடையும் பொழுது அவர்களது பொறுப்புணர்வு சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல் உடையவர்களாக நீங்கள் காணும் பொழுது அவர்களது சொத்துக்களை அவர்களிடம் ஒப்படையுங்கள் என்று அல்லாஹ்  கட்டளையிட்டுள்ளான்.

nikah3அநாதைகளிற்கு சேரவேண்டிய சொத்துக்களை அவகளது பருவமடையும் வயதை மாத்திரமன்றி பொறுப்புணர்வு “ருஷ்து” வயதுவரையும் காத்திருந்து கண்காணித்து அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்வதன் மூலம் அவர்களது உரிமைகளை எவ்வாறு இஸ்லாம் உத்தரவாதப் படுத்துகின்றது என்பதனை அறிவோம், அவ்வாறெனின் தமது குழந்தைச் செல்வங்களான சிறுவர்  சிறுமியர்களை அடுத்தவரிடம் ஒப்படைப்பது குறித்தும் பல்வேறு பரிமாணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதும் எம்மீது கடமையாகின்றது.

பருவமடைதல் மாத்திரமல்ல ஆணாயினும் பெண்ணாயினும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவில் தெளிவு “ருஷ்து” என பல்வேறு விடயங்களிலும் தகைமை பெற்றிருப்பதனை இஸ்லாம் வலியுறுத்துகின்றது, குறிப்பாக திருமண வாழ்வை கொண்டு நடத்த முடியுமானவர்கள் என தகைமை பெற்றவர்களையே திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கின்றது.

இஸ்லாத்தில் பலவந்தம் கிடையாது, இஸ்லாம் அநீதிகள் இடம் பெறுவதனை அனுமதிப்பதில்லை, இஸலாம் நன்மைகளை ஏவுவது போல் தீமைகளை தடுக்கின்றது, அனாதைகளது சொத்துக்களை மாத்திரமல்ல அநாதையற்ற ஏனைய  ஆண் பெண் சிறிய வயதினறது சொத்துக்களில் கூட அநீதி இழைக்கப் படுவதனை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

nikah4இவ்வாறான நியாயமான இஸ்லாமிய வழிகாட்டல்களை மையமாக வைத்து ஒவ்வொரு சமூகங்களும் ஒவ்வொரு கலப்பிரிவிலும் திருமண விவாகரத்து மற்றும் சொத்துப் பகிர்வுகள் குறித்த சட்டதிட்டங்களை அமுல படுத்தினர், 1800 , 1900 களில் பதின்ம வயது இளைஞர்கள் திருமணத்திற்கு தகைமை பெற்றிருந்தார்கள் மாதர்களின் வயதெல்லையை அன்றைய கால சூழ்நிலைகளைப் பொறுத்து குறிப்பிட்ட கரிசனைகளை உள்வாங்கியே பெண்களின் திருமண வயதை 12 என வரையறை செய்தார்கள், அல்-குர்ஆனோ சுன்னாவோ வரையறை செய்யவில்லை.

இஸ்லாமியர் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை திருமண வயது, குடும்பவாழ்வு மற்றும் பொறுப்புணர்வுப் பராயம் என பல்வேறு அம்சங்கள் பரிணாமம் பெற்றுவந்துள்ளன, இவ்வாறான பல்வேறு சமூக பொருளாதார உயிரியல், உளவியல், அறிவியல் காரணிகளை கருத்தில் கொண்டு  இஸ்லாமிய அறிஞர்கள் மாத்திரமன்றி முஸ்லிம் நாடுகள் கூட திருமண வயதெல்லை குறித்த நிபந்தனைகளை அறிமுகம் செய்துள்ளனர்.

ஒரு நாட்டில் அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் சட்டம் இயற்றப் படும் பொழுது பொதுவான கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன, இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு கலாசார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் திருமண நடைமுறைகளில் உள்ள சீர்கேடுகளை அல்லது முறைகேடுகளை தடுப்பதற்கான சில ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் சமூகத்திற்கும் குறிப்பாக இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிற்கும் இருக்கின்றது.

அந்த அடிப்படையில் திருமணத்திற்கான முஸ்லிம் மாதரின் குறைந்த பட்ச வயதெல்லையை 16 அல்லது 18  ஆக உயர்த்துவது யுகத்தின் தேவையாகும், பாகிஸ்தான் , பங்களாதேஷ், மலேஷியா, துருக்கி, மொரோக்கோ, கட்டார், குவைத், இந்தோனேசியா, அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற பல முஸ்லிம் நாடுகளில் அவ்வாறு வரையறை செய்திருக்கின்றார்கள், அதனை விட குறைந்த வயதில் திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாய நிலை வரின் அதற்குரிய அனுமதியை காதி நீதிமன்றிடம் பெறுவதற்கு உரிய நிபந்தனைகள் விதிக்கப் படல் வேண்டும்.

அநீதிகள் இடம் பெறுவதை தவிர்த்தல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் துஷ்பிரயோகம் செய்யப் படுவதனை தடுத்தல், சமூக கலாசார அநீதிகள் இடம் பெறுவதை தடுத்தல், சிறுமியர்களது உரிமைகளை பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தல் போன்ற மார்க்கத்தில் முன்னுரிமைப் படுத்தப் பட வேண்டிய அம்சங்களை ஒரு “சலுகை” க்காக சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.

Dowryகுறிப்பாக கைக்கூலி சீதனம் சீர்வரிசை போன்ற வழி கெட்ட வரதட்சணைக் கலாச்சாரங்களை அனுமதிக்கும் தனியார் சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள், கொடுமைகள் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் இளவயது திருமணங்கள் கட்டாயமாக தடை செய்யப் படல் வேண்டும் என உலமாக்கள் இஜ்திஹாத் முடிவு ஒன்றை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

பருவம் எய்தியதும் திருமணம் செய்து வையுங்கள் என்று அல்-குரானோ அல்-ஸுன்னாஹ்வோ எவரையும் கட்டாயப் படுத்தாத ஒரு விடயத்தில் அநீதிகள் அக்கிரமங்கள் இடம் பெறாதிருப்பதனை உறுதி செய்வதற்கான இஜ்திஹாத் தீர்வை உலமாக்கள் உரிய தர்ப்புக்களிற்கு முன்வைத்தல் வேண்டும்.

அன்றைய யுகத்தின் பாரம்பரியங்களிற்கு அமைய சிறிய வயதில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை இறைதூதர் (ஸல்) திருமணம் செய்தமை திருமண வயதெல்லையை தீர்மானிப்பதில் உம்மத்தை கட்டாயப் படுத்துகின்ற ஒரு ஸுன்னஹ்வாக விவாதிக்கப் பட வேண்டிய அவசியமில்லை, இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் தனது மகள் ஆயிஷாவை (ரழி) ஒப்படைத்த அபூபக்கர் (ரழி) அவர்கள் சித்தீக் ஆக இருந்தார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம்களாக முன்வந்து ஆராய்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசியலமைப்பில் சட்டமாக்கிக் கொள்வதனை ஷரீஅத்துச் சட்டத்தில் கைவைப்பதாக எவரும் மேலோட்டமான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பருவ வயது வந்த 14, 15, 16 வயது சிறுவர்களை திருமணத்திற்கு அனுமதித்த காலமும் வரலாற்றில் இருந்தது, முஹம்மத் பின் காசிம் ஆசிய நாடுகள் நோக்கி படையினருக்கு தலைமை தாங்கும் பொழுது அவரது வயது 16.

ஒரு சிறுமி திருமணத்திற்குரிய உடல் உள, அறிவு வளர்ச்சியை பக்குவத்தை பெற்றிருக்கின்றாரா என்பதனை அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக பண்டைய மரபுகளிற்கு அப்பால் தீர்மானிப்பதனை இஸ்லாமிய ஷாரீஆவின் அடிப்படை இலக்குகள் தடுப்பதற்கில்லை, மாறாக மாதர்களின் உரிமைகளை பாதுகாப்பதனை அவர்களது அபிலாஷைகளை மதிப்பதனை, அவர்களது வளமான திருமண வாழ்வை உறுதி செய்வதனையே அவை வேண்டி நிற்கின்றன.

இளவயது திருமணம் என்பது ஒரு தனித்த, வயதுடன் மாத்திரம் மட்டுப் படுகின்ற ஒரு விவகாரமல்ல, முறைப்படி மஹர் கொடுகின்ற, பெண்வீட்டை சீதனம், கைக்கூலி, சீர்வரிசை என சூரையாடாத  இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் வாரிசுரிமைச் சட்டங்கள், ஒரு விதவை மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள், சமூக பொருளாதார கலாசார ,உடலியல், உளவியல் காரணிகள் என பரந்த பரப்புக்களுடன் தொடர்பு பட்ட ஒரு விவகாரமாகும்.

me1010ஒரு பெண்ணுக்கு அவளது கல்வி, தொழில், திருமணம், துணைவன் போன்ற விவகாரங்களில் பலாத்காரம் பிரயாகிக்கப் படுவதனை அனுமதிக்க முடியாது, அவர்கள் சுயமாக இஸ்லாமிய வரைமுறைகள் மீறாது தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப் படல் வேண்டும்.

திருமணம் சார்ந்த பலநூறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகி தனக்கொரு துணையை விலைக்கு வாங்க கடல் கடந்து அரபியின் வீட்டில் அடிமைச் சேவகம் செய்ய ஆயிரக் கணக்கான சகோதரிகள் மஹ்ரமின்றி வெளியேறும் அவலத்திற்கு தீர்வு சொல்ல முடியாத ஒரு சமூகத்தில் இள வயது திருமணம் தடுக்கப் படல் வேண்டும்.

இத்தகைய காரணிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவராக சான்றிதழ் வழங்கி அனுமதி வழங்கவும் முடியாது எனவே இளவயது திருமணங்களை தடுப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப் படுவதனை தனிப்பட்ட முறையில் பூரணமாக நான் ஆதரிக்கின்றேன்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள்  கொண்டுபடுவத்தோடு காதி நீதி மன்ற கட்டமைப்பு ஒரு தரப்படுத்தலுக்கு உட்படுத்தப் படல் வேண்டும், காழி மார்களின் தகைமைகள் நிர்ணயம் செய்யப் படுத்தல் வேண்டும்.

காழி நீதிபதிகளது சட்ட மற்றும் மார்க்க அறிவு குறித்த தகைமைகளை வரையறை செய்து அவர்களுக்கான ஒரு பரீட்சை நடாத்தப்படுதல் அவர்களது நியமனங்களை இலங்கை தொழில் சார் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தரப்படுத்துதல் என இன்னோரன்ன விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

காழி நீதிமன்றக் கட்டமைப்பில் இஸ்லாமிய வரையறைகளுக்குள் பாதுகாப்பான சூழலில் முறையீடுகளை மேற்கொள்ளவும், தமது உள்ளக்கிடக்கைகளை இரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும் கூடிய நம்பகமான பெண் ஜூரர்களை பதவியில் அமர்த்தவும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படலாம்.

காழி நீதிமன்றக் கட்டமைப்பில் இஸ்லாமிய வரையறைகளுக்குள் பாதுகாப்பான சூழலில் முறையீடுகளை மேற்கொள்ளவும், தமது உள்ளக்கிடக்கைகளை இரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும் கூடிய நம்பகமான பெண் ஜூரர்களை பதவியில் அமர்த்தவும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படலாம்.

Related Articles

Latest Articles