அல்ஹம்து லில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
தற்பொழுது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி எய்திய சகல மாணவச் செல்வங்களிற்கும் எனது வாழ்த்துக்கள்!
போதிய பெறுபேறுகளைப் பெறத் தவறிய மாணவர்களது முயற்சியை பாராட்டுவதோடு இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இடம் பெறவுள்ள பரீட்சையில் நீங்கள் சிறப்பாக சித்தி எய்த எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக என பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
உங்கள் அனைவரினதும் எதிர்கால கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்சார் வாழ்வாதார முனைப்புக்கள் அனைத்திலும் இறையச்சம், கடமை, கடின உழைப்பு, அர்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் மிகச் சிறப்பாக முன்னே செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புறிவானாக!
உங்கள் அனைவரையும் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்பின் தாய் தந்தையர், பாதுகாவலர், உடன் பிறப்புக்கள், கற்றுத் தந்த ஹசரத் மார்கள், ஆசான்கள் அனைவரத் ஈருலக வாழ்விலும் அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக!
2018 இல் சாதாரண தரப்பரீட்சை எழுதிய 518184 பேரில் 371330 பேர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றிருந்தாலும் சகலருக்கும் ஆர்வமுள்ள ஏதாவது ஒரு தொழில் தொழில்நுட்பக் துறையில் வாய்ப்புகள் இருக்கின்றன!
விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 656984, பரீட்சைக்கு தோற்றத் தவறிய 138,800 மாணவர்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
உயர்தரத்திற்கு சித்தியடையாத மாணவர்கள் 146854 பேரில் இன்னுமொரு முயற்சி செய்வோர் தவிர்த்து ஏனைய மாணவர்களுக்கு அரசு வழங்கும் தொழில் தொழில் நுட்ப பயிற்சிகளில் பாடசாலைகளும் பெற்றார்களும் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
சமூக ரீதியாக திட்டமிடுகின்ற தரப்புக்கள் மேலே சொல்லப்பட்ட தரவுகளில் 10% விகிதத்தை கணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்!
வாழ்வின் மிகவும் பொறுப்பான பதின்ம வயதில் நீங்களும் சிறுபராயம் கடந்து கட்டிளம் பருவத்தில் காலை வைத்துள்ளீர்கள், நீங்கள் வளர்ந்தவர்கள் இனி உம்மா வாப்பாவின் ஆசிரியர்களின் வற்புறுத்தல்களுக்காக அன்றி சுய முயற்சியில் சொந்த ஆர்வத்தில் காலநேரங்களை திட்டமிட்டு கடமைகள் பொறுப்புக்களை உணர்ந்து அமல் இபாதத்துக்கள் தவறாது கல்வி உயர்கல்வி வாழ்வினை வாழ்வாதார முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஓரளவு சுதந்திரமும், தைரியமும் வெளியுலக தொடர்புகளும் கிடைக்கின்ற இந்த பருவத்தில் உங்களை காவுகொள்ளக் காத்திருக்கும் தீய நட்புக்கள், காதல் வலைகள், கேளிக்கைகள், தீய பழக்க வழக்கங்கள், புகைத்தல், மதுபாவனை, போதை வஸ்துக்கள், அதீத இன்டர்நெட் பாவனை, முறைகேடான உறவுகள் என்பவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்கின்ற கடமையும் பொறுப்பும் முன்னெச்சரிக்கையும், அவதானமும் உங்களிடமே விடப் படுகின்றது.
உங்கள் உடல் அறிவு ஆன்மா என மூன்று பிரதான அம்சங்களிலும் நீங்கள் காணுகின்ற சமாந்தரமான வளர்ச்சியே உங்கள் எதிர்கால வாழ்வின் அடித்தளமாகும் என்பதனை எப்பொழுதும் மனதில் வைத்துக் கொண்டு எங்கள் வாழ்வின் பொன்னான இந்த காலகட்டத்தை முகாமை செய்து கொள்ளுதல் உங்கள் முன்னுள்ள முதன்மையான சவாலாகும்!
சுமார் 518184 மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்கள், இந்த தேசத்தில் இருக்கின்ற மட்டுப் படுத்தப்பட்ட கல்வி உயர்கல்வி, தொழிநுட்ப, உயர் தொழில் நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி வாய்ப்புக்களை மிகவும் கவனமாக அறிந்து அலசி ஆராய்ந்து, உங்கள் திறமைகள் ஆற்றல்கள் வளங்கள் வசதிகளுக்கு ஏற்ப உரிய வழிகாட்டல்களைப் பெற்று நீங்கள் அடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும்.
குறிப்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் நிலவுகின்ற நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர் தேவையினை கருத்தில் கொண்டும், இந்த தேசத்தில் மனித வள அபிவிருத்தியை கருத்தில் கொண்டும் குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் உயர்தர கற்கைகளை மேற்கொள்ள அரசு பல புதிய துறைகளை அறிமுகம் செய்துள்ளதோடு பல சந்தர்ப்பங்களை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க புதிய கல்வி உயர்கல்வி கொள்கைகளை அறிமுகம் செய்துள்ளமையை பலரும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவரையும் சரியான திசையில் வழிநடத்துவானாக! ஆயுளிலும், ரிஸ்கிலும் மக்ஃபிரத்தும், ரஹ்மத்தும், பரக்கத்தும் நிறைவாக தந்தருள்வானாக!