Friday, March 29, 2024

இலவசக் கல்வி, சுகாதார சேவைகளிற்கெதிராக மஸ்ஜிதுகளில் பிரச்சாரம் செய்வோர் மீது முஸ்லிம் விவகார திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர், திணைகள பணிப்பாளர், அதிகாரிகள், முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் கவனத்திற்கு.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

பாமர முஸ்லிம் மக்களின் ஆன்மீக உணர்வுகளை தமது குறுகிய வியாபார இலக்குகளிற்காக பயன்படுத்தி மஸ்ஜிதுகள் மிம்பர்களூடாக ஒருசில உலமாக்கள்  பிரச்சாரம் செய்து வருவதோடு “வீட்டுக்கு வீடு வைத்தியர்” என நபிவழி வைத்தியம் என்ற பெயரில் ஆறுநாள் கற்கைகளை போதித்து பல தராதரமற்ற அரச அங்கீகாரமற்ற (போலி) வைத்தியர்களை உருவாக்கி பணம் சம்பாதித்து வருகின்றமை சமுதாயத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளமை அறிந்த விடயமே!

“அரச பாடசாலைகளிற்கு முஸ்லிம் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம், அங்கு முஸ்லிம்களிற்கும் இஸ்லாத்திற்கும் எதிராக யூத கிறிஸ்தவ சதிகாரர்களால் வடிவமைக்கப்பட்ட கல்வி முறையே போதிக்கப் படுகின்றது, அரச ஆங்கில வைத்திய சுகாதார சேவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும், நோய்த் தடுப்பிற்கான தடுப்பூசி தேசிய வேலைத்திட்டத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றெல்லாம் அண்மைக் காலமாக ஒரு சிறு குழுவினர் நாடளாவிய ரீதியில் பிரச்சாரம் செய்து பாமர முஸ்லிம் மக்களை குழப்பத்திற்குள் ஆளாக்கி வருகின்றனர்.

தற்பொழுது சமூகத் தளத்தில் பேசுபொருளாக இருக்கும் விடயத்தை உடனடியாக ஒரு முடிவிற்கு கொண்டுவராவிட்டால் நாளை தேசிய அளவில் பாரிய சவால்களை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என்பதனை மேற்படி பிரசாரங்களின்  நீண்ட கால விளைவுகளை அறிபவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் சம்பந்தப் பட்ட சர்ச்சைக்குரிய தரப்பினர் உற்பட முஸ்லிம்களிற்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை உரிய மட்டங்களில் துறை சார் நிபுணர்களை அழைத்து ஆழமாக விரிவாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டியது சமூகத்தின் அரசியல் சன்மார்க்க மற்றும் சிவில் தலைமைகளின் கடமையாகும்.

இலங்கையில் சுமார் 900   முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன, எல்லா இடங்களிலும் அரச சுகாதார மருத்துவ சேவைகள் இருக்கின்றன, அரசின் அங்கீகாரம் பெற்ற சுதேச ஆயுர்வேத, அக்குபஞ்சர், யூனானி, சித்த வைத்தியத் துறைகள் இருக்கின்றன இத்தகைய தேசிய சேவைகளை முஸ்லிம்கள் அனுபவிப்பதும் பேணிக் காப்பதும் எமது அடிப்படி உரிமை மாத்திரமல்லாது தலையாய கடமையுமாகும்.

அதேபோன்று நாட்டின் பல பாகங்களிலும் “நபிவழி மருத்துவம்” என்ற பெயரில் காளான்கள் போல முளைவிட்டு வரும் ஆறுநாள் கற்கை முடித்தவர்களின் தராதரங்கள், அவர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகளின் தன்மைகள் தராதரங்கள் செயற்பாடுகள் குறித்த முறையான விசாரணைகளை சுகாதார சுதேச மருத்துவ அமைச்சினூடாக மேற்கொண்டு அவை குறித்த அறிவுறுத்தல்களை அவர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்குதல் அவசியமாகும், போலி வைத்தியர்கள் இனம் காணப் படின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுதலும் வேண்டும்.

பாமார மக்களின் ஆன்மீக உணர்வுகளை தமது குறுகிய நலன்களிற்காக ஆலிம்கள் ஒரு சிலர் பயன்படுத்துவதனாலும், மஸ்ஜிதுகள் மிம்பர் மேடைகளில் அவர்கள் தமது பாமரத்தனமான கருத்துக்களை தீவிரமாக பிரச்சாரம் செய்வதனாலும், குறிப்பிட்ட சில வெளிநாட்டு உள்நாட்டு மதரசாக்களில் கற்ற ஒரு சிலரே இவ்வாறான தீவிர பிரசாரங்களை மேற்கொள்வதாலும் முஸ்லிம் சமய கலாசார விவகார திணைக்களம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆகியன இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும், மேற்படி விவகாரம் உரிய தரப்பினரால் அகில இலங்கை இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

“அலோபதி” மருத்துவம் குறைகளற்றது, அதைத் தான் சகலரும் அணுக வேண்டும் என்றோ ஹோமியோபதி, அக்குபஞ்சர், யுனானி, ஆயுர்வேத, சித்த வைத்தியங்களை அணுகக் கூடாது, நபிவழி வைத்தியத்தை கற்கக் கூடாது என்றோ எவரும் வாதிட வில்லை ஆனால் அவற்றை கற்பதற்கும் பிரயோகிப்பதற்கும் உரிய அங்கீகாரம் பெற்ற நிபுணர்களை மற்றும் நிறுவனங்களையே பொதுமக்கள் அணுகுதல் வேண்டும், இலங்கையில் சுதேச மருத்துவத்துறை அரச அங்கீகாரத்துடன் ஊக்குவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சர் தலைமையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் உடனடியாக ஒன்று கூடி மேற்படி விவகாரம் குறித்து ஆராய்வதோடு இரண்டாம் கட்டமாக அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா, தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் கவுன்சில் உற்பட ஏனைய இஸ்லாமிய சமூக அமைப்புக்கள் மற்றும் துறை சார் நிபுணர்களையும் அழைத்து கலந்துரையாடி அவசரமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி பாமரத்தனமான சிந்தனைகளால் எதிர்கால முஸ்லிம் சந்ததியினர் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் பாரிய அளவில் பின்தங்குவதோடு மாத்திரமன்றி இஸ்லாத்தின் பெயாரால் எதிர்காலத்தில் பலசர்ச்சைகளையும், பிணக்குகளையும், வன்முறைகளையும் சமூகத் தளத்தில் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்படலாம் என்பதனை ஒரு சில பின்தங்கிய ஆசிய ஆபிரிக்க நாடுகளின் அனுபவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம் என சகல துறைக்கும் வித்திட்ட இஸ்லாத்தையும், அல்-குரானையும், சுன்னாஹ்வையும் முஸ்லிம்களையும் அவற்றிற்கு எதிரான அடிப்படை வாதிகளாக காட்டுவதற்கும் ஏற்கனவே கொழுந்து  விட்டெறிகின்ற “இஸ்லாமோபோபிய” தீயில் எண்ணெய் வார்த்து தீய சக்திகளிற்கு களமமைத்துக் கொடுக்கின்ற இவர்களது கைங்கரியங்களிற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஒரு சமூக கடமையாகும்.

எனவே, இந்த விவகாரம் சமூகத் தளத்திலும் தேசிய மட்டத்திலும் பூதாகரமான சர்சைகளாக வெடிக்கும் முன்னர் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் சன்மார்க்க சிவில தலைமைகள் உடனடியாக மேற்கொள்தல் கட்டாயமாகும்.

தேசியத் தலைமைகளிற்கு அப்பால் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள், அறிஞர்கள், உலமாக்கள் கல்விமான்கள், கல்வி உயர்கல்வி சமூகத்தினர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், அறபு இஸ்லாமிய கலாபீடங்கள், இஸ்லாமிய அமைப்புகள், மஸ்ஜித் நிர்வாகத்தினர் என சகலரும் இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்தும் அவற்றின் பின்புலங்கள், பின்விளைவுகள் குறித்தும் மிகவும் அவதானமாக மக்களை விழிப்பூட்டல் அவசியமாகும்.

ஏற்கனவே அரசின் தடுப்பூசி தேசிய வேலைத் திட்டத்ததை புறக்கணிக்குமாறு மேற்படி தரப்பினர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் குறித்து தேசிய ஷூரா சபை  நிபுணர்களுடனான பல கட்ட கலந்துரையாடலகளுக்குப் பின்னர் வெளியிட்ட வழிகாட்டல் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.

http://www.nationalshoora.com/2-uncategorised/67-2018-02-07-14-19-55

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles