அல்-ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெறும் கிருபையினால் சிங்கள மொழியிலான அல்-குரான் பொருள் மொழியாக்கம் கடந்த 20/05/2018 ஞாயிற்றுக் கிழமை சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for Religious and Cultural Studies) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற எளிமையான இப்தார் நிகழ்வுடன் வெளியிட்டு வைக்கப் பட்டது.
2008 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் இலங்கைத் (CONSUL GENERAL) துணைத் தூதுவராக கடமைபுரிந்துவிட்டு நாடு திரும்பியிருந்த நிலையில் சிங்கள மொழியில் அல்-குரான் பொருள் மொழியாக்கம் செய்வது குறித்து பல் துறை சார் அறிஞர்களிடம் ஆலோசனை செய்து வந்தேன். அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளால் 2009 ஆம் ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பு நிபுணர் சகோதரர் ஸலீம் அவர்களுடன் ஒரு புரிந்துணர்வுடன் மொழிபெயர்ப்பு பணிகளை ஆரம்பித்து பத்து ஜூஸ்வுகளை மொழிபெயர்த்து சரி பார்த்துக் கொண்டிருந்தோம்.
2010 ஆம் ஆண்டு சகோதரர் ஸலீம் அவர்கள் என்னிடம் வந்து இந்த உயரிய பணியை ஒரு நிறுவனம் செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அதற்கு இணங்க முடியுமா என்றும் கேட்டார், உயரிய பணியை சிறப்பாக செய்வதற்கு எவர் ஒத்துழைக்க முன்வந்தாலும் என்னிடம் ஆட்சேபனை இல்லை என்று அவரிடம் தெரிவித்தேன், அல்ஹம்துலில்லாஹ் சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for Religious and Cultural Studies) நிறுவனம் அந்த உயரிய பணியை பொறுப்பேற்று இன்று நிறைவு செய்துள்ளது.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் பொழுதும் அதற்கு முன்னர் பல தடவைகளும் மதீனாவிலுள்ள அல்-குர்ஆன் வெளியீட்டு மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்கின்ற பொழுதெல்லாம் உலகின் பல மொழிகளிலும் வெளியிடப்படும் அல்-குரான் பொருள் மொழியாக்கம் சிங்கள மொழியில் கொண்டுவரப் படல் வேண்டும் என்ற எண்ணம் என்னிடமிருந்தது.
1991 ஆண்டு அன்றைய சவூதி மன்னரின் விருந்தினராக எனது முதலாவது ஹஜ்ஜிற்காக சென்று முதன்முறையாக அல்-குர்ஆன் வெளியீட்டிற்கான மன்னர் பஹத் மத்திய நிலையத்திற்கு சென்ற பொழுது தமிழ் மொழியில் அல்-குர்ஆன் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, பின்னர் 1995 ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்டதாக அறிந்தேன்.
எனவே அவர்களது அங்கீகாரத்தை பெற்று அல்-குர்ஆன் வெளியீட்டு மத்திய நிலையத்தினூடாகவே சிங்கள மொழியாக்கத்தை வெளிக் கொணரவும் விநியோகிக்கவும் உத்தேசித்து அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஆங்கில மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புக்களையும் அனுசரித்தே எமது முயற்சியை மேற்கொண்டோம், ஏனெனில் பல ஆயிரம் பிரதிகளை காலாகாலமாக பதிவு செய்து விநியோகிக்கக் கூடிய வளங்கள் அந்த நிறுவனத்திடம் தாராளமாக இருந்ததோடு வளைகுடா மத்திய கிழக்கு உற்பட பல்வேறு நாடுகளிற்கும் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அவர்களிடமுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.

எமது தந்தை அதிபர் மஸிஹுத்தீன் (ரஹ்) அவர்கள் தனது சக சிங்கள மொழி ஆசிரிய நண்பர்களிற்கு தஃவா செய்கின்ற நோக்கில் இலங்கையில் முதலாவது சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தினால் (MICH ) வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் பொருள் மொழியாக்க பிரதி ஒன்றினை பெற்று வீட்டில் வைத்திருந்தார், 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-குர்ஆன் பொருள் மொழியாக்கம் 1986 ஆண்டளவில் வெளிவந்திருந்தது, அங்கு நூலகராக பணி புரிந்த எமது பெரிய தந்தை உபைதுஸ் சத்தார் அல் அஸ்ஹரி (ரஹ்) மூலம் அதனைப் பெற்றிருந்தார், ஆனால் அது பண்டைய உயர் இலக்கிய சிங்கள மொழி நடையில் இருந்ததால் அதனை சரளமாக வாசித்து விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தமை பலராலும் அவதானிக்கப் பட்டது.
அதற்குப் பின்னர் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அறிஞர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர்ஆன் தப்ஸீர் ஐ சிங்கள மொழியில் 12 பாகங்களில் மொழி பெயர்த்து இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனமூடாக வெளியிட்டுள்ளது. அதன் உத்தியோக பூர்வ வெளியீட்டு வைபவம் 16 பெப்ருவரி 2012 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அன்றைய பிரதமர் டி மு ஜயரத்ன கலந்து சிறப்பித்தார்.
இலங்கை இஸ்லாமிய வரலாற்றில் அல்-குரானுக்கான விரிவுரையோன்று முழுவதுமாக சிங்கள மொழியில் வெளிவருவது இதுவே முதற் தடவையாகும், முன்னாள் பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை ஜாமாத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரும், செரண்டிப் ஆய்வு நிறுவனம், ஆயிஷா சித்தீகா, தன்வீர் அகாடெமி ஆகியவற்றின் ஸ்தாபக தவிசாளருமான அறிஞர் மௌலவி எ எல் எம் இப்ராஹீம் அவர்களின் தலைமயிலான ஒரு குழுவினர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டில் அதன் முதற்பாகம் வெளிவந்த போதும் சுமார் ஒரு தசாப்த காலம் அந்த புனித பணி இடை நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மௌலவி மாஹிர், ஷரீபுத்தீன் ஆசிரியர்,சகோதரர் இஸ்மாயில் யூசுப் , (பிரபோதய) நஜிமுதீன் ஆசிரியர் உற்பட பல்வேறு அறிஞர் குழாம் இந்த உயரிய பணியில் ஈடுபட்டதாக அறியக் கிடைத்தது. அல்லாஹ் அவர்கள் அனைவரினதும் பணியை அங்கீகரித்து இனமையிலும் மறுமையிலும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக.
மொளானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தஃப்ஹீமுல் குரான் விரிவுரையில் இருந்து அல்-குரானிற்கான மொழிபெயர்ப்பை பிரித்தெடுத்து தற்பொழுது இஸ்லாமிக் புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
அல்-குரான் மொழிபெயர்ப்பு பணியில் இன்னும் பல தரப்புக்களும் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸ்தாபகர் மௌலவி பீ ஜெய்னுலாப்தீன் அவர்களது தமிழ் தர்ஜுமதுல் குரானை மிகவும் சரளமான சிங்கள மொழியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர் ஷெய்க் அப்துல் ராசிக் அவர்கள் சிங்கள மொழியாக்கம் செய்து 2015 ஆம் ஆண்டு வெளியிட்டனர், அதனுடன் அல்-குரான் பற்றிய அறிமுக விளக்கம் ஒன்றும் சேர்த்தே பிரசுரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே காலப்பகுதியில் உலக முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் (WAMY) அல்குரானிற்கான விளக்கக் குறிப்புகளுடன் கூடிய சிங்கள மொழி பெயர்ப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் 30/11/2007 அன்று அல்-குர்ஆன் திறந்த கல்லூரியின் முதல்வர், மிஷ்காத ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர், ஜாமியாஹ் நளீமியாஹ்வின் முன்னைநாள் சிரேஷ்ட விரிவுரையாளர் உஸ்தாத் மன்ஸூர் அபூ ஸாலிஹ் அவர்களால் எழுதப்பட்ட அல்-குரான் சிந்தனை எனும் தமிழ் தப்ஸீரின் முதலாவது பாகமான ஸுரத்துல் பாத்திஹா ஸுரத்துல் பகரா ஆகியவற்றிற்கான சிங்கள மொழிபெயர்ப்பு “குரான் சிந்தாவ” பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது, தற்பொழுது அதன் அம்மா ஜுசுவிற்கான மொழி பெயர்ப்பு வேலைகளும் இடம் பெற்று வருவதாக அல்-குர்ஆன் திறந்த கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, தமிழ் மொழியில் முதலாவது வெளிவரும் முழுமயான தப்ஸீராக உஸ்தாத் மன்ஸூர் அவர்களின் தப்ஸீர் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லாஹ்வின் மகத்தான கலாம் அவனது அடியார்கள் யாவரையும் சென்றடைய வேண்டும் என்ற எமது அபிலாஷையை எல்லாம் வல்ல அல்லாஹ் எமது வாழ்நாளில் இந்த நாட்டில் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை பிகப்பெரிய அருளாகும், இன்ஷா அல்லாஹ் அல்-குரானின் செய்தி எல்லா மக்களையும் சென்றடைய நாம் எல்லோரும் எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு திட சங்கற்பம் பூணுவோம்.
மேற்படி “குரான் சிந்தாவ” தப்ஸீரை கூகுள் மென்பொருளாக தரவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.i2codes.quranchinthawa&hl=en

சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for Religious and Cultural Studies) நிறுவனத்தை தொடர்பு கொள்வதற்கும் அல்-குர்ஆனின் பணியில் பங்கு கொள்வதற்கும் அவர்களது தொடர்பிலக்கங்களை இங்கே தருகின்றேன்.
தற்பொழுது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தயாரித்த சிங்கள மொழியிலான அல் குரான் பொருளாக்கமும் வெளியிடப்பட்டிருக்கிறது, நேற்று 08/04/2019 மாலை பண்டாரநாயக்க ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வின் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்புடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுனர்கள், உலமாக்கள் புத்திஜீவிகள் எநுஅ பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் மேற்படி சிங்கள மொழியிலான அல் குரான் பொருளாக்கமும் வெளியிட்டு வைக்கப் பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரது பணியையும் அங்கீகரித்து ஈருலகிலும் நிறைவாக அருள்புரிவானாக!
யா அல்லாஹ்..!! அல்-குர்ஆனைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களையும்,உள்ளங்களையும்,அறிவு ஆற்றலையும்,செயற்பாடுகளையும் ஒளிபெறச் செய்வாயாக..! அல்-குர்ஆனின் மாதமான ரமழான் சுமந்து வரும் சுப சோபனங்களுக்கு உரித்துடையவர்களாக எம் அனைவரையும் ஆக்கியருளவாயாக.! எங்கள் பெற்றாரகளது பாவங்களை மன்னித்து அவர்கள் மீது ஈருலக வாழ்விலும் கருணை காட்டுவாயாக.

