அதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..!
(எனது முகநூலில் இடப்பட்ட சில நற்சிந்தனைகள்)
அலைபாயும் எண்ணங்கள், கற்பனைகள்..
நாம் தனிமையில் இருக்கும் பொழுது மாத்திரமல்ல ஏதாவது அலுவலில் இருக்கும் பொழுதும் எமது மனதில் எத்தனை விடயங்கள் வந்து செல்கின்றன, நேற்று நடந்தவைகள், இன்று நடப்பவைகள், நாளை நடக்க வேண்டியவைகள்.
வீட்டில், ரோட்டில், நாட்டில், ஆபிஸில், கடையில் நடையில் என எத்தனை விடயங்கள் எமது மூளையை உள்ளத்தை உணர்வுகளை ஆக்கிரமித்து விடுகின்றன.
அறிவு பூர்வமாக அசை போடுகிறோம், உணர்வு பூர்வமாக உந்தப்படுகிறோம், நிதானமாக திட்டமிடுகிறோம், ஆத்திரத்தில் அவசரப்படுகிறோம்.
அங்கு ஞானம் பிறக்கிறது, மகிழ்ச்சி ஏற்படுகிறது, அன்பு, பாசம், அனுதாபம் பொங்குகிறது, கவலை துயரம் கைசேதம் ஏற்படுகிறது, ஏன் அச்சம் பயம் கூட ஏற்படுகின்றன, அதே போன்றே பொறாமை, கர்வம், கோபம், பலிவாங்கும் வைராக்கியம் என விதவிதமான உணர்வலைகள் எம்மை ஆக்கிரமித்து விடுகின்றன.
தனிமையை ஊடருத்து வரும் இடஞ்சல்கள் சப்தங்கள், ஊடுருவல்கள் எமது கவனத்தை திசை திருப்பவும் செய்கின்றன, ஒரு விடயத்தில் மனதை ஒருமுகப் படுத்தவும் நாம் சிரமப்படுகிறோம், திண்டாடுகிறோம்.
வீடு மனைவி மக்கள் பெற்றார் உடன் பிறப்புகள் அண்டை அயலவர், ஊரார், உலகத்தார், கல்வி தொழில், பொதுப்பணிகள் என எத்தனை எத்தனை விடயங்களை நாம் சிந்திக்கிறோம், கற்பனை செய்கிறோம், அசை போடுகிறோம், மீட்டிப் பார்க்கிறோம், திட்டமிடுகிறோம்.
இங்கு பிரச்சினை என்னவென்றால் தொழுகைக்காக எழுந்து நின்றவுடன் எம்மை எவருமே தொந்தரவு செய்யாத நிலையில் அல்லாஹு அக்பர் என தக்பீர் கட்டி அஸ்ஸலாமு அலைக்கும் என ஸலாம் கொடுக்கும் வரை இவையெல்லாம் இடம் பெறுவது தான்.
நாம் எதனை ஓதுகிறோம் எந்த துஆவை கேட்கறோம், எத்தனையாவது ரக்காத்தில் இருக்கிறோம் என்று எதுவுமே புரிவதில்லை.
அல்லாஹ்வை அஞ்சுதல் கெஞ்சுதல் மன்றாடுதல் இறைஞ்சுதல் முறையிடுதல் மன்னிப்புக் கோருதல் உள்ளக்கிடக்கைகளை அவனிடம் சமர்ப்பித்து உணர்வு பூர்வமாக அறிவு பூர்வமாக எமது மனதை ஒருமுகப்படுத்தி எமது தொழுகைகளை அர்த்தமுள்ளவைகளாக, உயிரோட்ட முள்ளவைகளாக நிறைவேற்றி முடிக்க நாம் திண்டாடுகிறோம்.
ஐந்து வேளையும் அல்லாஹ்விற்காக ஒதுக்கும் அந்த பத்து நிமிடத்தின் தராதரத்தை, அந்தஸ்தை நாம் எப்போதாவது பரிசீலனைக்கு உற்படுத்தியுள்ளோமா!
வஜ்ஜஹ்து வில் என்ன சொல்கிறோம், கட்டாயமான ஸுரதுல் பாதிஹாவில் என்ன மொழிகிறோம் ஸுஜூதிலும் ருகூவிலும் இருப்புக்களிலும் ஆயுள் முழுவதும் ஓதும் துஆக்களில எதனை இறைஞ்சசுகிறோம்..??
தொழுகைக்குப் பின் அடித்து துரத்தினாற் போல் அவசர அவசரமாக இமாமோ அல்லது நாமோ ஓதிவிட்டு கிளம்புகின்ற ஸுன்னத்தான துஆக்களில் எதனைக் கேட்டோம், எவற்றைக் கேட்கத் தவறினோம் என்பதனை சிந்தித்துப் பார்த்ததுண்டா?
எந்த துன்யாவிற்காக, தொழிலுக்காக, கொடுக்கல் வாங்களிற்காக எந்த அலுவலிற்காக, யாருக்காக, எதற்காக அவசரமாக ஓடுகிறோமோ அவை அனைத்தும் ஏன் எமது அடுத்த நிமிடம் கூட அந்த வல்ல நாயனின கழாவிலும் கத்ரிலும் ஆட்சியிலும் இருக்கின்றன என்பதனை நாம் ஆழமாக உணர்ந்து எமது தொழுகைகளை உணர்வுபூர்வமாக அறிவு பூர்வமாக உயிரோட்டமம் உள்ளவைகளாக மாற்றிக் கொள்வோமா?
ஐவேளையும் ஆத்மார்த்தமாக மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி நிச்சயமாக எமது தனிப்பட்ட குடும்ப சமூக தேசிய வாழ்வில் வசந்தங்களைக் கொண்டு வரும் என விசுவாசிகளாகிய நாம் எமது விசுவாசங்களை ஐவேளையும் புதிப்பித்துக் கொள்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களனைவரையும் கருணை கூர்ந்து பொருந்திக் கொள்வானாக.! ஆமீன்.
ஞாயிறு திங்களென எல்லா நாளும் விளிப்புடனிருப்போம்
திங்கள் கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே அலாரம் அடிக்கிறது, மனைவி எழுந்து அவசர அவசரமாக கணவரையும் பிள்ளைகளையும் எழுப்பி விடுகிறார்.
அவசர அவசரமாக காலையில் ஸுபஹு தொழுது விட்டு தேணீர் அருந்தி காலைக்கடன்களை முடித்துவிட்டு கணவரும் மனைவியும் அல்லது கணவர் மாத்திரம் தொழிலுக்கும் பிள்ளைகள் வயதிற்கேற்ப பாடசாலை பல்கலைக் கழகம் அல்லது தொழில் என கிளம்பி விடுகிறோம்.
எல்லோரும் கல்வி தொழில் என வாழ்வாதாரத்திற்கான உழைப்பை நாடி தேவைகள், அடிப்படைத் தேவைகள், ஆசைகள், பேராசைகள் என்ற ஆயிரம் கனவுகள் திட்டங்களுடன் ஒவ்வொரு திசையிலும் பறப்பட்டுச் செல்கிறோம்.
நிச்சயிக்கப்பட்ட நேரம் வரை எமக்கு நிர்ணயிக்கப்பட்ட ரிஸ்கை வாழ்வாதாரத்தை தேடும் எமது ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும், எப்போது எங்கே எப்படி எமக்கான அழைப்பு வரும் என்பதனை நாம் அறியமாட்டோம்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கிழமை நாட்களில் அதிகாலை எழுந்திருக்கும் நாம் வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை தினங்களில் பெற்றோரும் பிள்ளைகளுமாக சற்று ஓய்வெடுக்கிறோம் தாமதமாக எழுந்திருக்கிறோம், சில வீடுகளில் பெற்றோர் எழுந்தாலும் பிள்ளைகள் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று இருந்து விடுகிறோம்.
கேள்வி என்ன வென்றால், வார நாட்களில் நாம் கல்வி தொழில் என்பவற்றிற்காக தானா எழுந்திருக்கிறோம், ஸுபஹு தொழுவதற்காக எழுந்திருப்பதாயின் வார இறுதி நாட்களில் விடுமுறை நாட்களில் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் விடுமுறை தந்திருக்கிறார்களா? என்பது தான்.
எமத மனச்சாட்சிகளை கை வைத்து கேட்போம்?
எந்த கல்விக்காக எந்த தொழிலுக்காக வாழ்வாதாரத்திற்காக நாம் ஓடுகிறோமோ அவை எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதனை ஏன் மறந்து விடுகிறோம்.?
அடுத்த நாள் பொழுது விடிந்ததன் பின்னரும் நித்திரை செய்யலாம் என முந்திய நாள் பின்னிரவு வரை விழித்திருந்து பொழுது போக்கும எமது உள்ளத்தில் இறையச்சம் எந்த அளவில் இருக்கிறது என்பதனை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்ததுண்டா..?
நாங்கள் கல்வியிலும் தொழிலிலும் ஹலாலான உழைப்பிலும் வாழ்வாதாரத்திலும் கொண்டுள்ள பற்றுதல் நம்பிக்கை விசுவாசம் ஆர்வம் எமது வாழ்வையும் மரணத்தையும் இரணத்தையும் காலம் நேரம் அளவு இடம் என சகல வற்றையும் கழாவிலும் கத்ரிலும் நிர்ணயிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் விடயத்தில் இரண்டாம் பட்சமாகிறதா..?
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நாம் எங்கு எந்த நிலையில் எந்த தினத்தில் இருந்தாலும் இறையுணர்வடன் இறையன்புடன் இறையச்சத்துடன் கடமையான நபிலான வணக்க வழிபாடுகளில் கவனமாக இருந்து அவற்றை முதன்மைப்படுத்தி எமது வாழ்வாதார இலக்குகளையும் முயற்சிகளையும் முழு நேர இபாதத்களாக மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
இங்குதான் எமது ஆன்மீகப் படித்தரம் அந்தஸ்து சோதனைக்குள்ளாகிறது!
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களனைவரையும் கருணை கூர்ந்து பொருந்திக் கொள்வானாக.! ஆமீன்.
ஒரு அடியான் மீதான வானவர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்யும் அற்புதமான அமல்.
எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ் அடியான் மீது கொள்கின்ற அபரிமிதமான அன்பிற்கு அடையாளம், எத்தகையதோர் அரவணைப்பு, அந்தஸ்து, கௌரவம் என்பதனை கற்பனை செய்து பார்ப்போம்.
வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு தான் இருக்கின்ற இடத்திற்கும் மக்காவில் அல்லாஹ்வின் இல்லம் வரைக்குமான ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாக ஒரு அறிவிப்பிலும்..
தனது பாதத்தின் கீழ் இருந்து வானுயர ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாகவும், கியாமத்து நாளில் அந்தப் பிரகாசம் ஒளிரும் என்று மற்றுமொரு அறிவிப்பிலும் கூறப் பட்டுள்ளது.
இரண்டு ஜும்மாவிற்கும் இடையிலான சிறிய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் தஜ்ஜாலின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வியாழன் சூரிய அஸ்தமனத்தில் இருந்து வெள்ளி மாலை பொழுது சாயும் வரை அதனை ஓதலாம்.
பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கும், பொய்யர்களின் மற்றும் தஜ்ஜாலின் சதி வலைகள் மாயை களில் இருந்து விமோசனம் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு விடுவாசியின் மனதில் ஆழமான தாக்கத்தை எவ்வாறு ஸுரத்துல் கஹ்ஃப் கொண்டிருக்கின்றது என்பதனை அதனை பொருளுணர்ந்து ஓதுவோர் புரிந்து கொள்வர்.
பாவங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் ஒரு அடியான் நிச்சயமாக தீங்குகளில் இருந்தும், தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதாக அவனுக்கு ஒரு ஆன்மிக அரண் உருவாக்கப் படுவதனையும் இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன.
அதற்குரிய தப்ஸீர் விளக்கங்களை நாம் தேடிப் படிக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாம் எங்களிடம் இருக்கும் மிகப் பெரிய முதன்மையான நிஃமத் அருள் ஆகும்.
சிறிய சிறிய ஸூராகளைக் கூட பொருளுநரணர்ந்து ஓத முடியாது இந்த அறிவியல் யுகத்த்தில் நாம் இருப்பின் மிகப் பெரிய துரதிட்டமாகும்.
அறியாமைக்கால அறபிகளுக்கு புரியும் மொழியில், மொழி நடையில் அருளப்பட்ட அல்-குரான், மற்றும் இறைதூதர் வாக்குகள் அறிவியலின் யுகத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கு மட்டும் ஆயிரமாயிரம் ஆய்வுகள் தேவைப் படுகின்றன.
ஆய்வுகளும், அறிவியல் வியக்கியாணங்களும், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அறிஞர்களும் அதிகரித்து விட்ட உலகில் தான் உம்மத்து எட்டுத் திக்கிலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இஸ்லாமிய குடும்பவியல், இஸ்லாமிய சமூகவியல், இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளியல், இஸ்லாமிய கலை, கலாசாரம், பணப்பாடு, நாகரீகம் என எல்லா அறிவியலும் மென்பொருட்களாகவே இருக்கின்றன.
முன்னொரு காலத்தில் ஆன்மீகம் துறவறமாகவும், சந்நியாசமாகவும் இருப்பது குறித்து பேசிய அஞ்சிய சமூகம் இன்று அறிவு சந்நியாசமாக துறவறமாக மாறிவிடுகிறதோ என அஞ்சுகிறது.
அல் குர்ஆனை கொண்டு எமது உள்ளங்களையும் எமது பெற்றார், உற்றார் உடன்பிறப்புகள், மனைவி மக்கள் அன்பிற்குரியோர் அனைவர் வாழ்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசிக்கச் செய்வானாக.
அதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..!
இரவின் கடைசிப் பகுதியில் மனிதர்கள் அயர்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்ற நடுநிசியில் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனும், அவனது வானவர்களும் மாத்திரமே சாட்சியம் அறிந்திருக்கின்ற நிலையில் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்து நிற்கும் ஒரு அடியான்..
அழுது, தொழுது தன்னையும், தனது அத்தனை தேவைகளையும், கஷ்ட நஷ்டங்களையும், துன்ப துயரங்களையும் விண்ணையும் மண்ணையும் அவற்றில் உள்ள அத்தனையையும் படைத்து பரிபாலிக்கின்ற ஏக வல்லோனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சமர்ப்பித்து, முறையீடு செய்கின்ற அந்த தருணங்கள்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருகாமை அந்த அடியானுக்கு கிடைக்கின்றது, எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகின்றான், என்னை அழைப்போர் இல்லையா? அவர்களுக்கு பதில் கூற காத்திருக்கின்றேன், என்னிடம் வேண்டுபவர்கள் இல்லையா ? அவர்களுக்கு நான் அள்ளி வழங்க காத்திருக்கின்றேன், என்னிடம் பாவமன்னிப்பு கோருவோர் இல்லையா ? அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் என்று அடியார்களை அழைக்கின்றான்..
“(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.”
“இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், ‘மகாமம் மஹ்முதா’ என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.”
“என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.” (ஸுராதுல் இஸ்ரா 17:78,79,80)
அல்லாஹ்வே!
உனக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும், நீயே வானங்கள் பூமி அத்தனையையும் படைத்து கத்து பரிபளிக்கின்றவன், அவற்றினதும் அவற்றில் உள்ளவற்றினதும் ஆட்சியும் அதிகாரமும் உன்னையே சாரும், அவற்றின் மீதான ஒளியும் நீயே, நீயே சத்தியமானவன், உனக்கே புகழ் அனைத்தும்…
உனது வாக்குறுதிகள் உண்மையானவை, உன்னை நாம் தரிசிப்பது உண்மையானது, உனது வாக்குகள் சத்தியமானவை, சுவர்க்கம் உண்மையானது, நரகம் உண்மையானது…
உன்னிடம் இஸ்லாமாகி சரணடைகின்றேன், உன்னையே விசுவாசிக்கின்றேன், உன்னிடமே எனது சகல கருமங்களையும் உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன்…
உன்னிடமே மீளுகின்றேன், உன்னிடமே உதவி தேடுகின்றேன், உன்னிடமே தீர்ப்புக் கேட்கின்றேன்….
என்னை நீ மன்னித்து விடுவாயாக, நான் முன்னும்,பின்னும், இரகசியமாகவும் பரகசியமாகவும் செய்த செய்கிற குற்றம் குறைகளை மன்னித்துவிடுவாயாக..
உன்னைத் தவிர வேறு நாயன் கிடையாது, வணக்கத்துக்குரியவர்கள் உன்னையன்றி யாருமில்லை, சர்வ வல்லமையும் சக்தியும் உனக்கே உரியவை..
என எமது தலைவர் அருமை நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையின் பொழுது அல்லாஹ்வுடன் இறைஞ்சுவார்கள்…
தஹஜ்ஜுத் தொழுகை இடம்பெறுகிற வீடுகள் இடங்கள் வானிலுள்ளவர்களுக்கு நட்க்ஷத்திரங்கள் இரவில் மின்னுவது போன்று இளங்குவதாக இறைதூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் விஷேட அவதானத்தை ஈர்க்கும் அடியார்கள் மீது அவன் அன்பு கொண்டால் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து அந்த அடியார் மீதான நேசத்தை வானவர்களூடாக புவியில் உள்ளவர்கள் மனதில் ஜீவராசிகளிடத்தில் ஏற்படுத்துமாறு கட்டளையும் இடுகிறான்.
இராக்கால பணி நிறைவுற்று மீளும் வானவர்களும், பகல் கால பணிக்காக புறப்படும் வானவர்களும் ஒருமித்து நின்று சாட்சி கூறுகின்ற அழகிய அந்தப் பொழுதுகளை அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் தவ்பீஃக் செய்வானாக!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
அன்பர்களே,
என்னையும் எனது பெற்றார் உடன் பிறப்புகளையும் மனைவி மக்களையும் ஆசான்களையும் அன்பிற்குரியவர்களையும் உங்கள் உயரிய ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
SHARE