Thursday, January 16, 2025

போராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய  உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்!

போராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய  உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்!

குண இயல்புகளில் ஆன்மாக்கள் பல பட்டாளங்களாக இருக்கின்றன, ஒரே இயல்புள்ளவை ஒத்திசைவது போல் மற்றவை ஒவ்வாமை கொள்கின்றன. (ஈர்ப்பு)

பெரிய பெரிய கனவுகளோடு ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் நாம் அன்றாடம் சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தொலைத்தவை தான் அரியவை பெரியவை என்று உணரும் போது காலம் வெகுவாக கடந்து போயிருக்கும்.

புகழின் உச்சம் தேடி வானை தொட்டவர்களோ, புவியைப் பிளந்து ஆழம் கண்டவர்களோ எவருமில்லை!  அகந்தை வேண்டாம், அடங்கி வாழ்தலே  அறிவு!

நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள் அவனிடமே மீளுவோம்!  நேற்று எம்மோடு இருந்த பலர் இன்று இல்லை, நாளை எம்மையும்  இவ்வாறே பலரும் நினைவு கூறுவர்.

தனித்தனியாகவே அழைக்கப்படுவோம்! கூட்டங்களாக, குழுக்களாக , குடும்பங்களாக, சமூகங்களாக, அமைப்புக்களாக, நிறுவனங்களாக இருந்தாலும் இறந்தாலும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தனித்தனி ஏடுகள் இருக்கின்றன!

இறுதிச் சான்றிதல் வலக்கரத்திலா இடக்கரத்திலா ?  என்பதே கேள்வி, எந்த மேடையில்  எந்த வேடத்தில் யாருடன் வேண்டுமென்றாலும் நடித்து விட்டுப் போகலாம்.

நபியவர்கள் கடனிலிருந்து பாதுகாப்பு கோரினார்கள். வங்கிகள் ஊக்குவிப்பதால் வீடு வாகனம் என நாம் கடனாளிகள் ஆகி விடுகிறோம்!

வாழ்க்கையில் கடன் இருக்கலாம்; வாழ்க்கையே கடனாக இருக்கக் கூடாது. ஊக்குவிக்கப் படும் வங்கிக் குத்தகைக் கடன்கள், தவனைக் கட்டணங்கள் குறித்து இரட்டிப்பு அவதானம் தேவை.

கடன் பெற  கூனிக் குறுகி குழைந்து நெளிந்து வரும் சிலர் பெற்ற பின்  எம்மை கடன்காரர் போல் கடுப்புடன் கடிந்து தள்ளி நிற்பர்.

நீதியை நிலை நிறுத்துதல் அநீதி இடம்பெறுவதை தடுத்தல் என்பதற்கான மூலாதாரங்களின் ஒளியில் சட்டவாக்க சர்ச்சைகள் தீர்க்கப்படல் வேண்டும்.

யுகத்தின் சவால்கள் நூதனமானவை, பல தசாப்தங்கள் பின்னே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! புதிய தலைமுறை ஏமாற்றப்படுகிறது.

விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப யுகத்தின் நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்க காலப் பொருத்தமான அணுகுமுறைகள் அவசியம், ஸைபர் உலகின் அச்சுறுத்தல்கள் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றன.

இன்டர்நெட்டில் காலம், பணம், ஆரோக்கியம், மானம், கற்பு, கல்வி,உழைப்பு, உறவுகள், ஆன்மிகம், நிம்மதி சந்தோசம் என வாழ்க்கையே தொலைகிறது!

அதிஷ்டங்கள் சன்மானங்கள் ஜோதிடங்கள் என சமூக ஊடகங்களில் பல செயலிகள் பொறிகளூடாக உங்கள் கைபேசிகள் கணனிகளில்  உள்ள தரவுகள் திருட்டு!

ஒரு வழிப்பாதை பெருந்தன்மைகளை  பரீட்சித்துப் பார்ப்பதே சிலரின் பொழுது போக்கு, அவர்களுக்கு கெட்டவனாகவே காட்டிக் கொள்வதாக முடிவு! ஆச்சர்யம் என்ன வென்றால் இவ்வாறானவர்கள் நல்லவர்களை இடைபோடுவதில் தான் காலத்தைக் கடத்துவார்கள்.

பதின்ம வயதில் உழைக்கனும் அல்லது உழைப்பதற்கு கற்கனும்! இலவச வதிவிட ஷரீஆ கற்கைகளாயினும் ஹலாலான வாழ்வாதாரக் கற்கைகள் பிரதானமானவை.

ஷரீஅத்துக் கல்விக்குப் புறம்பாக ஹலாலான வாழ்வாதாரக் கற்கைகள் குறித்தும் அரபுக் கல்லூரி மாணவர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்!

ஒரு சில துறைகளின் கைதிகளாக அதிகமானோர் (மிகை நிரம்பல்) இருப்பதால் தொழிற் சந்தைகளில் கேள்வியுள்ள துறைகளுக்கு நிரம்பல் இல்லை!

எதிர்கால தொழிற் சந்தை நிலவரங்களை கருத்தில் எடுக்காது கற்கைகளை தெரிவு செய்வதில் காலா காலமாக தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆங்கிலத்தில் அமோகமாக சுயவிபரக் கோவை அனுப்பும் பட்டதாரிகளே ஆங்கில மொழி அறிவில் கூடிய கவனம் செலுத்துங்கள்!

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் அல்ல, ஏனைய சமூக தலைமைகளின் கரிசனைகளுக்கு முன்னால் எமது தலைமைகளின் இயலாமைகள் என்பதே உண்மை!

(LEADER)  போராட்டத்திற்கு நம்பிக்கை நாணயம் வேண்டும்! (DEALER)  சூதாட்டத்திற்கு நாணய நம்பிக்கை வேண்டும்!

தலைமைகளின் குறை நிறைகளை உணர்த்துவதே உண்மை விசுவாசமாகும், கண்டு கொள்ளாமல் இருப்பதுவும் நியாயப் படுத்துவதும் நயவஞ்சக  துரோகமாகும்!

நியாயப் படுத்தல்களின் உண்மைத் தன்மைகளை  மனச் சாட்சி அறிவது போல் அவற்றை எல்லாம் வல்ல அல்லாஹ்வும் அறிகிறான்!

“ஷூரா” என்பது கருத்துக்களை மாத்திரம் அல்ல கரிசனைகளை பொறுப்புக்களை வளங்களை பணிகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையாகும்!

தன்னை விட்டால் ஆளில்லை என நினைப்பவனை விட பெரிய முட்டாள் யாருமில்லை. இறைவன் தன்னை மட்டுமே வல்லவனாக படைத்திருப்பதாக தப்புக்கணக்கு.

அடுத்தவர் அறிவு ஆற்றலை திறமைகளை அங்கீகரிக்க மறுக்கும் சுயநலமிகள் அதிகமுள்ள அமைப்புக்களில் ஆயுட்கால சர்வாதிகாரிகள்  கோலோச்சுவர்!

ஒருவரது திறமையை ஆற்றலை சாதனையை மெச்சுவதற்கு, பாராட்டுவதற்கு, தட்டிக் கொடுப்பதற்கு, ஊக்குவிப்பதற்கு பெரிய மனசு வேண்டும்!

எடுத்ததற்கெல்லாம் (So-called) பன்முக பிரபலங்களை தேடும் சமூகம் துறைசார் நிபுணர்களின் பங்களிப்புகளை பெறத் தவறி விடுவது ஜாஹிலிய்யத்.

ஊரின் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம்,  சூழல், பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் என்பன  கூட்டுப் பொறுப்பாகும். “ஷூரா”

பெருந்தன்மைகளை பலவீனங்களாக எண்ணி ஏறி மித்திக்க துணியும் மடையர்களுக்கு ஒருமுறை எகிறினால் புரியும் நண்பன் யார் பகைவன் யாரென்று!

அல்லாஹ்வால் மனிதனுக்கு அளிக்கப்பட மூளை ஆதாரமின்றி மூலாதாரங்களை அணுகுவதால் கருத்து வேற்றுமைகள் அதிகரிக்கின்றன!

அடுத்தடுத்த தரப்பு ஆதாரங்களையும் நியாயங்களையும் உள்வாங்கி ஆராயத் தெரிந்தவனே அறிஞன்! பகுத்தறிவு என்பதே அதுதான்!

மூடர்களுடன் தர்கிப்பதைத் தவிர்ந்து ஸலாம் கூறி விலகிச் செல்லல் எனும் அழகிய அல்குர்ஆனிய உபதேசம் துறைசார் அறிவிலிகளையும் குறிக்கும்!

பேச்சு வார்த்தைகளில் தீர்வு இருக்கிறது என்பதற்காக அரை வேக்காடுகளுடனும் அடிமுட்டாள்களுடனும் அமர்ந்து பேச முடியாது!\

கருத்துக்கள் கருத்துக்களாக இருக்கும் வரை முரண்பாடுகள் அதிகரிக்கின்றன, அவை அமுலாக்கு வருகிறபொழுது உடன்பாடுகள் எய்தப் படுகின்றன!

உம்மத்தின் உள்ளிருக்கும் ஜாஹிலிய்யத்து வெளியிலிருக்கும் ஜாஹிலிய்யத்தை விட ஆபத்தானது. முதலாவது இஸ்லாமியப் போர்வையில் இருக்கிறது.

சோறு போடும் நாடு, அமைப்பு, நிறுவனம், தலைமை, அதிகாரி,  என பல விசுவாசங்கள் பத்வாக்களில், நிலைப்பாடுகளில் இறை விசுவாசத்தை விஞ்சுகின்றனவா?

ஆழமாக ஆராயப்பட்ட அறிஞர்களின் ஆய்வு முரண்பாடுகளை பதவி அந்தஸ்து விசுவாச செளகரியங்களுக்காக தமதாக்கிக் கொள்ளும் தரம் கெட்டவர்கள் பலர்!

படிக்காத மேதாவிகளும் படித்த முட்டாள்களும் சமூக ஊடகங்களில் மார்கத்தின் பெயரால விஷமத்தனம் செய்கின்றனர். “பிஃத்னா”

ஒவ்வொரு உறவுக்கும் உள்ள தனித்துவமான பெறுமதிகளை உணர மறுக்கும் அல்லது முடியாத ஒரு பொருள் முதல்வாத தலைமுறை உறுவாகி வருகிறதா ?

எதிர்பார்ப்புகளும் கணக்கு வழக்குகளும் இல்லாத அன்பு உம்மா வாப்பாவுடையது! தாமும் பெற்றோர் ஆகும் வரை இந்த யதார்த்தம் புரிவதில்லை.

உம்மா வாப்பா பார்க்க விரும்பும் உறவுகளை அனுசரித்து விருந்துக்கு அழையுங்கள் அல்லது அவர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.!

நாட்டிலும் ரோட்டிலும் இருந்தென்ன பயன் அன்பும் அறமும் வீட்டிலே இல்லையெனில், உம்மா வாப்பா உடன் பிறப்புகள் உறவுதனைப் போற்றுவோம்!

வாழ்வின் உயரிய இலக்குகள் சிதைந்து சின்னாபின்னமாகின்றன; புனரமைப்பு ஆன்மீகத்தில் இருந்தே ஆரம்பமாக வேண்டும்!

நிறைவாக பெற்றும் மனதில் குறையோடு  வாழ்வோர் பலர், குறைவாகப் பெற்றும் மனதில் நிறைவோடு வாழ்வோர் சிலர்!

தனிப்பட்ட வாழ்விலோ பொது வாழ்விலோ இமாலய சவாலாக இருப்பினும் இருக்கின்ற இடத்திலிருந்து ஒரு எட்டை முன்னோக்கி நகர்த்துவதே வாழ்வு!

இயன்றதை செய்து இறைவனிடம் தவக்குல் வைத்த பின் மனதில் சஞ்சலம் இருப்பின் ஈமானில் அல்லது தவ்பாஹ்வில் குறைபாடுகள் இருக்கலாம்!

ஆக்கிரமிக்கப் படும் பூமிகள் அல்லாஹ்விற்கே உரியவை, இஸ்லாம் உள்ளங்களை ஆக்கிரமிக்கும், அடக்குமுறையாளர்களும் அல்லாஹ்விடமே மீளுவர்!

கிழிந்த, ஒட்டுப் போட்டது போன்ற, உள்ளாடையை காட்டுகின்ற, இறுக்கமான அசிங்கமான அ/நகாரீக ஆடைகள் நமக்கு வேண்டாம்!  வரம்பு பேணுவோம்!

சிறார்களை பதின்ம வயதினரை போதை வஸ்து விற்பனை முகவர்கள் வலை விரித்து தேடுகிறார்கள். அன்புச் செல்வங்களை பாது காத்துக் கொள்ளுங்கள்.

பல”சொல் அமர்வு” களுக்கு “செயலமர்வு” கள் என்று பெயர் வைத்து விடுகிறார்கள்! எதுவும் அமுலாக்கம், அடைவுகள் மட்டத்தை எட்டுவதில்லை!

நகர வாழ்க்கை நரக வாழ்க்கை! இயற்கையோடு இயற்கை வளங்களோடு இயைந்து வாழ்வோருக்கே வளமான எதிர்காலம் இருக்கிறது!

இயற்கை வளம் கொழிக்கும் இந்நாட்டில் விவசாயம் மீன்பிடி கால்நடை வளர்ப்பு  துறைகளில் வாழ்வாதாரம் குறித்த பசுமைப் புரட்சி வேண்டும்.!

இன மத மொழி குல நிற வரையறைகள் இஸ்லாமியனுக்கு இல்லை, அத்தகைய குறுகிய எல்லைகள் கடந்த மானுட அபிமானமே இஸ்லாம்!

தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் செய்கின்ற பொதுநல அறப்பணிகள் யாவும் தஃவாவின் ஓர் அங்கமாகும், இகாமதுத் தீன் சார் பணியாகும்.

ஒரு முஸ்லிமிற்கு பெரும்பான்மை எனும் மேலாதிக்க மனநிலையோ, சிறுபான்மையெனும் தாழ்வு மனப்பான்மையோ இருக்க முடியாது.

இன மத மொழி வாதங்கள் அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல்களிற்காக எம்மீது பல்வேறு தரப்புகளாலும் திணிக்கப்படுகின்றன, அத்தகைய தீய சக்திகளை விஞ்சி மக்கள் மனங்களை வெல்லவதே சிறந்த உம்மத்தின் பணியாகும்.

அகிலத்தையும் அண்டசராசரங்களையும் ஆளும் கருணையுள்ள நாயனிடம் உணர்வுபூர்வமாக மன்றாடி முறையிடவும் கேட்கவும் தாய்மொழி தனித்துவமானது.

அல்லாஹ்விற்கும் அடியானுக்குமிடையில் உள்ள பலமான ஆத்மார்த்நமான நேரடியான பிணைப்பு பிரார்த்தனையாகும், அது இட கால நேர வரைகளற்ற இபாதத் ஆகும்.

பொருளுணர்ந்து ஓதுதல் துஆ செய்தல் வணக்க வழிபாடுகளில் மனதை ஒருமுகப்படுத்தும் இபாதாக்களை உயிரோட்டமுள்ளதாக மாற்றும் பிரதான காரணியாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles