Friday, April 17, 2026

ஸ்ரீலங்கா : அரசியல் அரங்கில் அடுத்தது என்ன ?

அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி அதிரடியாக பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்து (ரணில் மைத்திரி நல்லாட்சிக் கூட்டின் பிரதான எதிரி)  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமாராக நியமிக்கிறார், அத்தோடு ஐக்கிய தேசிய முன்னணி அரசும் இயல்பாகவே கலைகிறது.

அடுத்தநாள் அக்டோபர் 27 ஆம் திகதி விஷேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம்  பாராளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கிறார், அதன் மூலம் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசியலமைப்பு வழங்கும் சந்தர்ப்பம் நிராகரிக்கப் படுகிறது.

தொடர்ந்து 29, 30 ஆம் திகதிகளில் மைத்திரி மஹிந்த அரசின் அமைச்சரவை நியமனங்கள் இடம் பெறுகின்றன.

அரசு அமைத்த பொழுதும் பாராளுமன்றத்தில் தமது பெரும்பன்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில் நவம்பர் மாதம் 09 ஒன்பதாம் திகதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து   ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம் பெறுமென ஜனாதிபதி மைத்திரி மற்றுமொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்கிறார்!

19 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நான்கரை வருடங்கள் கழியுமுன் ஜனாதிபதியினால்    பாராளுமன்றத்தை தன்னிச்சையாக கலைக்க முடியாது அவ்வாறு கலைப்பதாயின்  பாராளுமனறத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றிலிரு பெரும்பான்மை பெறப்பட்டால் மாத்திரமே முடியும்; என்ற அடிப்படயில் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, அவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் 13 ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இடை நிறுத்தி தடையுத்தரவு விதித்தது.

தடையுத்தரவின் படி பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பவேண்டும், அதன்படி அமர்வுகள் ஒத்திவைக்கப் பட்ட நிலையில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் படி நவம்பர் மாதம் 14 ஆம் நாள் மீண்டும் அமர்வுகள் ஆரம்பிக்கப் படுவதற்கான அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப் பட்டிருந்ததால் சபாநாயகர் குறித்த தினத்தில் பாராளுமன்றம் கூடுமேன்பதனை உறுதி செய்து அவை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அன்றைய தினம் ஜனாதிபதியிற்கு பதிலாக அவரது உரையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமர்ப்பித்து அமர்வுகளை ஆரம்பித்தவுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி  புதிய அரசின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜே வீ பி கட்சியினர் கொண்டுவந்து 122 பேர் ஆதரவாக வாக்களித்ததாக சபாநாயகர் கையொப்பங்களுடன் ஜானாதிபதியிற்கு அறிவிக்கின்றார், அது முறையாக இடம்பெறவில்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப இடம் பெறவில்லை எனவே அதனை அங்கீகரிக்க முடியாது என ஆளும் தரப்பினர் மறுத்தனர்.

ஜானாதிபதியவர்களும் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பை முறையாக நடாத்துமாறும், எதிர்காலத்தில் அரசியலமைப்பை மீறியதாக தனக்கெதிராகபிரயோகிக்கப் படமுடியுமான வாக்கியங்களை நீக்குமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அடுத்தநாள் காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பொழுதும் ஆளுந்தரப்பினரின் பலத்த இடையூறுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு இடம் பெற்றது, ஈற்றில் அதனையும் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.

நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்த பொழுது தமக்கு  ஆளுந்தரப்பினருக்கு ஐவரும் ஐக்கியதேசிய முன்னணிக்கு ஐவரும், தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் ஜே வீ பி யினருக்கு தலா ஒருவருமாக நியமிக்கப் பட முடிவு காணப்பட்ட பொழுது, 12  உறுப்பினர்களுள் தமக்கு 7 உறுப்பினர்கள் வேண்டும் என ஆளுந்ததரப்பினர் விடாப்பிடியாக கூறி விட்டு வெளிநடப்பு செய்து விட்டனர், என்றாலும் குறிப்பிட்ட பங்கீட்டை வாக்கெடுப்பிற்கு விட்ட சபாநாயகர் 121 உறுப்பினர்கள் தெரிவுக்குழுவை அங்கீகரித்துள்ளதாக அறிவித்தார்.

2019  ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் பட இருந்த நிலையில் ஆட்சி கவிழ்க்கப் பட்டதாலும், பராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நவம்பர் மாதம் 28 திகதி அமைச்சரவையில் பிரதமமந்திரியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2019 ஆம் வருட முதல் நான்கு மாத செலவினங்களுக்காக 1735 பில்லியன் ரூபாவிற்கான கணக்கு அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுகிறார்.

மேற்படி கணக்கு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நிலையில் ஜனாதிபதியின் விஷேட அதிகாரங்களை பயன்படுத்தி திறைசேரியிலிருந்து நிதியை பெறுவதற்கான வழிவகைகளை கண்டறிய அவர்கள் எண்ணம் கொண்டிருந்ததோடு  மாத்திரமல்லாது டிசம்பர்  07 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்கு சாதகமாக உயர் நீதி மன்ற தீர்ப்பு வெளிவருமாயின் பாராளுமன்ற அனுமதியின்றி ஜனாதிபதியின் விஷேட அதிகாரங்களை பயன்படுத்தி பொதுத் தேர்தலையும் தமது ஆட்சியில் சௌகாரியமாக நடாத்தும் உபாயங்களை அவர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகியது.

எனவே தமது உபாயங்களுக்கு ஏற்ப காலத்தை கடத்தும் முயற்சியில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் பக்கச் சார்பாக நடந்துகொள்கின்றார் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மற்றும் பாரம்பரியங்களை மீறுகின்றார் அவர் மீது எமக்கு நம்பிக்கையில்லை எனவே இனி வரும் அமர்வுகளில் நாம் பங்குபற்றுவதில்லை என ஆளும் காபந்து அரச தரப்பினர் அறிவித்து நவம்பர் மாதம்  ஐக்கிய தேசிய முன்னணி, பிரதான எதிர்க்கட்சி மற்றும் ஜே வீ பி ஆகிய தரப்புக்களுடன் 29 ஆம் திகதி இடம் பெற்ற அமர்வுகளை புறக்கணித்தனர்.

நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பிரதம மந்திரியின் பிரதம அமைச்சிற்கான செலவினங்களை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றப்படுகிறது, மறுநாள் 30 ஆம் திகதி ஏனைய அமைச்சுக்களுக்கான நிதி வழங்குதல் தடை செய்யப் படுகிறது.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி (அவரால் நியமிக்கப்பட்ட காபந்து அரசு) சபாநாயகரின் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கிடையிலான அதிகார இழுபறி நீதித்துறையிடம் மண்டியிடும் நிலையினை உருவாக்கியுள்ளது, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி  122 பாராளுமன்ற உறுப்பினர்கள்  மேன்முறையீட்டு நீதிமன்றில்   பாராளுமன்றத்தில் பெரும்பனமையை நிரூபிக்கத் தவறிய பிரதமர் மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவையை இரத்துச் செய்யுமாறு கோரி (WRIT OF QUO WARRANTO) முறையீடு ஒன்றை செய்தனர், அதனை நிராகரிக்குமாறு பிரதமர் மஹிந்த தரப்பினரும் முறையீடு வேண்டுகோள் விடுத்து மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

மேற்படி மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா என்பதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று 03/12/2018  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தீர்மானித்து பிரதிவாதிகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு எதிர்வரும் 12/12/2018 விசரணைகளை ஆரம்பிப்பதாகவும் அதுவரை பிரதமர் மஹிந்த உற்பட அவரது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என சகலரையும் தமது பதவிகளில் இருந்து தொழிற்படுவதனை தடை செய்து இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதற்கெதிராக இன்று (04/12/2018)   உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாகவும், அரசியமைப்பு விவகாரங்களில் முடிவுகளை சொல்லும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே இருக்கின்றதென்றும் நேற்று மாலையே அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார், அதேவேளை நேற்று முன்தினம் தற்போதைய நெருக்கடி நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்வதே ஒரே வழி என்றும் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும் ஒரு விளக்கத்தை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்று (03/12/2018)  மாலை ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி ரணில் அல்லாத ஒருவரை பிரேரியுங்கள் நான் பிரதமாராக நியமிக்கத் தயாராக உள்ளேன் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தவே பேச்சு வார்த்தை வெற்றி பெறவில்ல என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் அதன் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள், சபாநாயகர் என சகலரிடமும் ஜனாதிபதி மைத்திரி ரணிலை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கத் தயாரில்லை என்பதனையே வலியுறுத்தி வருகிறார், அந்த பிடிவாதத்தின் பின்னால் உள்ள அரசியல் கவனிக்கப் பட வேண்டிய விடயமாகும்.

நீதிமன்றங்களின் முன்னுள்ள மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பாக வரினும் அடுத்த பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை எவ்வாறு கையாளப் போகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது, ஐக்கியதேசியக் கட்சியிற்குள் ரணிலுக்கு எதிரான அலைகள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான குரல்கள் போன்றவற்றை ஜனாதிபதி கவனத்திற் கொண்டுள்ளமை மற்றுமொரு அரசியல் நெருக்கடிக்கடியிற்கு வழிகோலுமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழர் தேசியக் கூட்டணி, ஜே வீ பி தவிர்த்து பாராளுமன்றத்தில் மஹிந்த தரப்பினருக்கு 103 பேர் ஆதரவும் ரணில் தரப்பிற்கு 100 பேர் ஆதரவும் இருப்பதாகவும், இன்னும் சிலர் அங்குமிங்கும் தாவுவதற்கு காத்திருப்பதாகவும் எனவே ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுப்பார் என்றும் தற்போதைய ஆளுந் தரப்பினர் வாதாடுகின்றனர்.

இன்று முதல் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுமீதான தீர்ப்பு  பாராளுமன்றதை ஜானாதிபதி கலைத்தமை அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்று சாதகமாக வருமாயின் இடைநிறுத்தப் பட்டுள்ள மஹிந்த அரசிற்கெதிரான தீர்ப்பு வெளிவரும் வரை எந்த காபந்து அரசின் கீழ்  பொதுத்தேர்தல்  இடம் பெரும் என்ற கேள்வியும் எழுகிறது?

அவ்வாறு பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப் படும்பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் /முன்னணியின் பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கக் கூடும், கூட்டணியிந பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் இருப்பார்களா ?

பொதுசன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டாகவா அல்லது இரு அணிகளாகவா தேர்தல் களத்தில் குதிக்கப் போகின்றன என்பதெலாம் இப்பொழுது ஆராயப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் கோருகின்ற பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம் ஆனால் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரேயடியாக நடத்த முன்வாருங்கள் என ஐக்கிய தேசிய முன்னணியினர் கோரிக்கை வைத்துமுள்ளனர். ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு முரண்பாட்டைத் தீர்க்க சஜித் பிரதமாராக வரின் தான் ஜானாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்ற ரணிலின் நிபந்தனையாகவும் இருக்கலாம்.

எது எப்படியோ அடுத்து வரும் ஒரு சில வாரங்கள் அரசியல் நெருக்கடி அதன் உச்ச கட்டத்தை நோக்கி அசுர வேகத்தில் நகரும் என்பதில் (இன்ஷா அல்லாஹ் ) சந்தேகமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles