“ரணில் விக்ரமசிங்க நல்லாட்சியை பச்சை பச்சையாக கொலை செய்தார், ரணில் நாட்டை நாசமாக்கினார், ரணில் இலங்கை அரசியல் வரலாற்றில் சிரேஷ்டமான ஐக்கிய தேசியக் கட்சியை சீரழித்துவிட்டார், ஏன் ரணில் என்னையும் ஓரளவு நாசம் செய்து விட்டார், ரணில் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு தலை வணங்குகுகிறார், நாம் இந்த தேசத்தை மக்களுக்கு தலை வணங்குகிறோம், பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் வாக்களித்து ஆதரவு தந்தாலும் நான் மீண்டும் ரணிலை பிரதமாராக நியமிக்கப் போவதில்லை..” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேராளர் மாநாட்டில் (04/12/2018) ஜனாதிபதி.
இனி உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புக்களுக்காக முழு தேசமும் காத்திருக்கும் நிலையில் ஜனாதிபதியின் இந்த பிடிவாதம் மற்றுமொரு அரசியல் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாராளுமனர்த்தைக் கலைத்தமை அரசியலமைப்புடன் முரண்படுகிறதா இல்லையா என்ற மனுவின் தீர்ப்பு “ஆம்” முரண்படுகிறது என்று வழங்கப்பட்டாலோ ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலை எதோ ஒரு வகையில் மீளப் பெற்றுக் கொண்டாலோ பாராளுமன்றம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் பிரதமர் மஹிந்தவுடைய அரசு பாராளுமன்றப் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளதால் அது சட்டவிரோதமானது என்ற மனுவிற்கும் சாதகமான தீர்ப்பு வந்தால் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமனம் செய்தல் வேண்டும்.
ஆனால், தனக்கு விசுவாசமில்லாத ஒருவரை தேசத்தின் நலன்களுக்கு ஆபத்தானவராக தான் காணும் ஒருவரை பிரதமாராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி கூறும்பட்சத்தில் ஐக்கிய தேசிய முன்னணி என்ன நிலைப்பாட்டினை எடுக்கும்? என்பதே தற்போதைய பிரதான கேள்வி..
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் பெயர்குறிக்கப்குறிக்கப்பட்ட உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பெருமபன்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியுள்ள கடிதத்தையும் ஜனாதிபதி நிராகரிக்க அதிகாரம் இருப்பதாக சொல்லப் படுகிறது.
மேற்படி நிலைப்பாட்டின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சின் உள்வீட்டில் முரண்பாடுகளை ஜனாதிபதி மேலும் தூண்டிவிடுவதன் மூலம் மஹிந்த தரப்பினர் விரும்பும் பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி தேசத்தைத் தள்ளும் அடுத்த கட்ட கைங்கரியத்தில் ஜனாதிபதி ஈடுபடுவதாக புலனாகிறது!
ஏற்கனவே உள்வீட்டில் அதிருப்தியாளர்கள் சஜித் பிரேமதாசவை முன் கொண்டுவரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருவதும் உள்வீட்டில் அதிருப்தியாளர்களை முடக்குவதில் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகரத்தைப் பிரயோகிப்பதும் நாடறிந்த இரகசியமாகும்!
சஜித் பிரேமதாச மாத்திரமன்றி கரு ஜயசூரிய, ரவி கருணநாயக்க போன்றோரும் கட்சியை விட்டு விலகிச் சென்று ஏனைய காட்சிகளில் இருக்கும் பலரும் கடந்த காலங்களில் ஐக்கியதேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் எதேச்சாதிகாரத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தான்.
நிலைமை இவ்வாறு இருக்க ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி தரப்படாவிட்டால் சஜித் பிரேமதாசாவிற்கு வழங்குமாறு கோருவதற்கு கட்சியினுள் பலத்த ஆதரவு இருப்பதாக அறிய முடிகிறது, ஆனால் நிச்சயமாக அவ்வாறானதொரு முடிவு ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அஸ்தமனமாகவே இருக்கப் போகிறது.
பாராளுமன்றத்தினை ஜனாதிபதி கலைத்தமை சரியானது என தீர்ப்பு வந்தால் மீண்டும் ஐக்கியதேசயக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழத்தான் போகிறது. யார் பிரதமாராக வரவேண்டும் என்கிற விடயத்தில் நாம் தலயிடுவதில்லை என ஜே வீ பி தெளிவாகவே சொல்லியிருக்கிறது.
அவ்வாறானதொரு உட்கட்சிப் பூசலை சமாளிப்பதாயின் சஜித் பிரேமதாச பிரதமர் வேட்பாளராகவும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகவும் வரும் வகையில் பராளுமனத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டினையும் ஒரே தடவையில் நடத்துவதற்கு முடிவு காணப்படல் வேண்டும்.
அதனால் தான், நாங்கள் தேர்தல்களுக்கு அஞ்சவில்லை ஜனாதிபதி பதவியேற்று நான்கு வருடங்கள் கழிந்து விடுவதனால் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே தடைவையாக நடத்த இணங்குவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றிலிரு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தைக் கலைக்க தாம் இணக்கம் தெரிவிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படிப் போனாலும், தற்போதைய அரசியல் நெருக்கடியினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்கச் செய்து 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்தச் செய்வதும் பின்னர் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சிப்பதும் 2020 ஜனாதிபதித் தேர்தலில் தானே களமிறங்குவதும் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடைய நோக்கமாக இருப்பதாக ஊகிக்க முடிகிறது!
அதேதேவேளை முன் நிபந்தனைகளுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதனை தாம் ஆதரிப்பதாக ஜே வீ பி யும் தெரிவித்துள்ளது, மூன்றிலிரு பெரும்பான்மை யுடன் பாராளுமன்றத்தைக் கலைக்கு முன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுதல், தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி குறித்து விசாரிக்க பாராளுமன்ற அணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்துதல் என ஒரு சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளனர்.
பாராளுமன்றம் கூட்டப்பட்டு 2019 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப் பட வேண்டிய தேவையும் இருக்கின்றது, பாராளுமன்றம் கலைக்கப் பட்டது சரியென்று நீதிமன்றம் அறிவித்தால் அண்மையில் மஹிந்த அரசு சமர்ப்பித்த கணக்கு அறிக்கையை ஜனாதிபதி தனது அதிகாராம் மூல அமுலுக்கு கொண்டு வந்து மஹிந்த அரசின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்த முற்படுவார், அவ்வாறான ஒரு நிலையில் நாட்டில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப் பட்டமை சரியானது, மஹிந்த அரசு சட்ட விரோதமானது என்று தீர்ப்புகள் மாறி வரின் ஜனாதிபதி ஆட்சியில் பொதுத் தேர்தல் இடம் பெறுமா ? காபந்து ஆட்சி அமையுமா? எவ்வாறு அமையும் என்ற கேள்விகளும் இருக்கின்றன?
உண்மையில் தற்போதைய அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பாடாவிடில் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம், பொருளாதார நெருக்கடியிற்கு மேலாக, குறிப்பாக சிவில் சமூக அமைதியின்மை ஏற்படின் நாட்டில் வணமுறைகள் வெடித்து அராஜக சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.