நவம்பர் மாதம் 09 ஒன்பதாம் திகதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம் பெறுமென ஜனாதிபதி மைத்திரி மற்றுமொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்கிறார்!
19 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி நான்கரை வருடங்கள் கழியுமுன் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை தன்னிச்சையாக கலைக்க முடியாது, அவ்வாறு கலைப்பதாயின் பாராளுமனறத்தில் பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றிலிரு பெரும்பான்மை பெறப்பட்டால் மாத்திரமே முடியும்; என்ற அடிப்படயில் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, அவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் 13 ஆம் திகதி மாலை ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இடை நிறுத்தி தடையுத்தரவு விதித்தது.
டிசம்பர் மாதம் 04,05,06 ஆம் திகதிகளில் மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று இன்று 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த நிலையில் இன்றும் விசாரணைகள் தொடரும் எனவும் ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையுத்தரவு நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை வரை நீடிக்கப் படுவதாகவும் நீதிமன்றம் நேற்று 06 ஆம் திகதி மாலை அறிவித்தது, பின்னர் இன்று வெள்ளிக்கிழமை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடைக்கால தடியுத்தரவு நீடிக்கும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இரண்டொரு நாட்களில் தீர்ப்பு வெளிவரவேண்டும் அல்லது விசரணை நிறைவுறும் வரை தடையுத்தரவு நீடிக்க வேண்டும்!
ஆனால் விசாரணைகள் ஆரம்பித்தது முதல் இடைநிறுத்தப் பட்டுள்ள அரசு அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இடையீட்டு மனுக்களின் பின்புலத்தில் ஏதாவது அரசியல் நகர்வுகள் இருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது!
அரசியலமைப்பின் மீதான 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறைகண்டு அதுகுறித்து ஆராயவென நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தனது வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் வாங்கலாம்!
ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தல் தவறென உயர்நீதிமன்றம் கருதும் பட்சத்தில் அவர்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர அது ஏதுவாகும் மாத்திரமல்ல எதிர்காலத்தில் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோக சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடலாம் ! தவிர்ப்பதற்கு வழி வேண்டும்!
இது ஒரு அவதானம் மட்டுமே, நீதித்துறையின் சுயாதீனம் மீது நம்பிக்கை வைத்துள்ள தேசத்தின் பிரஜைகள் பொறுமையுடன் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
எது எப்படிப் போனாலும், தற்போதைய அரசியல் நெருக்கடியினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்கச் செய்து 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்தச் செய்வதும் பின்னர் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சிப்பதும் 2020 ஜனாதிபதித் தேர்தலில் தானே களமிறங்குவதும் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடைய நோக்கமாக இருப்பதாகவும் ஊகிக்க முடிகிறது!