Wednesday, September 17, 2025

அக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு!

அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் வயது தாண்டியும் புரிந்தவனாக மேலே சொல்லப்பட்ட விடயத்தை எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன், எனது நிலைப்பாடு  சமரசத்திற்கான ஒரு முனைப்பாகவே இருக்கும்.

யார் இதில் அத்து மீறுகிறார், யார் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று தெரிந்தும் கூட, இஸ்லாமிய பின்புலத்தில் ஒரு நெருக்கடி முகாமைத்துவ இராஜதந்திரியின் நிலைப்பாடாக மாத்திரமே எனது இவ்வாறான பதிவுகளை நீங்கள் அணுக வேண்டும்..

சமரசத்திற்கான முயற்சியில் ஸுராதுல் ஹுஜ்ராத் சில படிமுறைகளை சொல்லித் தந்துள்ளது, எனது நிலைப்பாடு குறித்து உஸ்தாத் மன்ஸுரிடம் கேட்டுப் பார்க்கலாம், இந்த நிலைப்பாட்டை  உஸ்தாதின் மாணவர்கள்  பலரும் வரவேற்றுமுள்ளார்கள், ஏனெனில் அவர்களுக்கு எனது பணிகள் பற்றி ஓரளவு தெரியும்.

கூட்டுப் பொறுப்பு என்பது முதலாவதாக அஸ்னா ஜும்மாப் பள்ளி நிர்வாகம் சார்ந்த மிகப் பெரிய அமானிதமாகும், ஏனென்றால் அவர்கள் முழு ஊருக்கும் பதில் கூற வேண்டியவர்கள், குறிப்பிட்ட ஒரு இயக்கத்திற்கோ அல்லது குழுவினருக்கோ சொந்தமானவர்கள் அல்ல, இரண்டாவதாக ஒட்டு மொத்த அக்குரணை உலமாக்கள் புத்திஜீவிகள் சார்ந்த அமானிதமாகும்.

அடுத்ததாக அக்குரணை ஜம்மியத்துல் உலமா அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவின் கிளை என்பதால் அவர்களும் கூட்டுப் பொறுப்பு குறித்து   அக்கறை செலுத்துதல் வேண்டும், ஏனெனில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள குழுவினர் அந்த மூன்று தரப்புக்களையும் கூட்டுப் பொறுப்புடன் பிரதிநிதித் துவம் செய்யவில்லை.

மூன்றாவதாக பாதிக்கப் பட்ட தரப்பென கருதப்படும் உஸ்தாத் தரப்பினர் மீதான அமானிதம், ஏற்கனவே தொடரப்பட்டுள்ள புரிந்துணர்வு முயற்சிகளை முன்கொண்டு செல்வது குறித்த அவரது கூட்டுப் பொறுப்பினையும் இன்னுமின்னும் வலியுறுத்துகிறேன்,  சர்ச்சைக்குரிய தரப்பினர் எனக்கருதப்படுவோரை விடவும், ஏனைய மூன்று தரப்பினரையும் அணுகுவதில் தான் தீர்வுகள் இருக்கின்றன.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அறிவார்ந்த இஸ்லாமிய பன்பொழுக்கங்களைக் கொண்ட சமரச முயற்சிகளை முன்கொண்டுசெல்ல சகல தரப்புக்களும் பெருந்தன்மையுடன் இணக்கம் காணுவதே ஆரோக்கியமான தீர்வாக அமையும்!

உஸ்தாத் மன்ஸுரிற்கு தனது பணி மற்றும் அணுகுமுறைகள் எதிர்வினைகள் குறித்து போதிய தெளிவு இருந்தாலும் அவரது மாணவர்கள், அபிமானிகள் அல்லது எரிகிற தீயில் குளிர்காய, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க அல்லது பிரபல்யம் தேட விரும்புவோர், தற்காலிக அனுதாபிகள் விவகாரத்தை மென்மேலும் சிக்கலாக்கவும் குழுவாத முரண்பாடுகளாக பரிணாமம் பெறச் செய்யவும் முனைவதனால் அத்தகைய தரப்புக்களை கையாள்வதிலும் கூட்டுப் பொறுப்பு அவர் தரப்பில் முக்கியமாகிறது.

உஸ்தாத் மன்ஸுர் அவரது ஆய்வுப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரையிலும் அணுகுமுறைகளிலும் அவர்  ஜாமியாஹ் நளீமியாஹ்வையோ ஒட்டு மொத்த நளீமியாஹ்  சமூகத்தையோ அல்லது ஏனைய கொள்கை சார் பள்ளிகளையோ  பிரதிநிதித்துவம் செய்வதில்லை, ஒரு சிலர் ஜம்மியதுல் உலமாவில் பங்களிப்பு செய்வது போல, உதாரணத்திற்காக தனியார் சட்ட விவகாரம்.!

தயவு செய்து என்னை தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சையின் ஒரு தரப்பாக பார்க்க/ தள்ளிவிட அவசரப்படாதீர்கள், தீர்வின் பங்காளியாக பார்க்க முனையுங்கள்..!

உள்வீட்டு குழுவாத ஜாஹிலிய்யத்தை அணுகுவதிலும் மக்காஹ் வெற்றி வரையிலான அணுகுமுறைகள் அவசியப்படுகின்றன.

இந்தக் கருத்தைச் சொன்னதற்காக என்னையும் மட்டரகமாக எந்தக் களமும் காணாத சில கருத்துக் குஞ்சுகள் விமர்சித்திருக்கின்றன, அத்தகைய அதபுகெட்ட, எவரையும் விட்டு வைக்காத அபிமானிகளின் உளறல்கள்தான் ஷெய்ய்க் மன்ஸூர் போன்றவர்களை நெருக்கடிக்குள் தள்ளி விடுகின்றன.

வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஜம்மியத்துல் உலமாவின் மீதுள்ள வெறுப்பினை கக்குவதற்கு ஷெய்க் மன்ஸூர் மீதும், ஜாமியா நளீமியாஹ் மீதும் சவாரி செய்ய முனையும் சில தர்ப்புக்களது அதிகப் பிரசங்கித் தனமான அல்லது அதிமேதாவித்தனமான வசனப் பிரயோகங்கள் வன்முறைகளை தூண்டுகிற அளவிற்கு இருப்பதனை அவதானிக்க முடிகிறது!

உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாதிருக்கலாம், என்றாலும் உங்களுக்கு கருத்துச் சொல்லும் உரிமை இருக்கிறது என்பதில் உடன்பாடு இருக்கிறது, ஆனால் அதபு ஒழுக்கம் பேணி சொல்லாவிட்டால் என்னிடம் அதற்கு மதிப்புக் கிடையாது, உடனே அவ்வாறான பதிவுகளை நீக்கி விடுவேன், அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட..!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles