Wednesday, September 17, 2025

முஸ்லிம் மாதர்: உடல் உள ஆரோக்கியமும் உடற்பயிற்சியும்!


மனிதன் உடல் ஆன்மா ஆறிவு என்ற மூன்று பிரதான கூறுகளையும் கொண்ட அல்லாஹ்வின் சிறந்த படைப்பாகும், ஏனைய படைப்புகளை அவன் வசமாக்கி உலகை ஆளவும் அபிவிருத்தி செய்யவும் கடமைப்பட்டுள்ள  அவனுக்கு வாழ்வில் ஒவ்வொரு அம்சமும் சோதனையாகும்!

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (ஸுரத்துன் நிஸாஉ  4:1)

gender equal opportunity or representation

ஆணாகவும் பெண்ணாகவும் சோடியாக படைத்துள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் இரு பாலாருக்கும் விஷேடமான சிறப்பம்சங்களை இயல்புகளை தனித் தன்மைகளை கொடுத்து இருவரது ஆன்மாக்களுக்கும் ஈருலக வாழ்விலும் ஏற்றத் தாழ்வற்ற சம அந்தஸ்தினை வழங்கியுள்ளான்.

“ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும். எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.” (ஸுரத்துல் லைல்:  92:7)

மனித வரலாற்றில் ஆண் பெண் உறவில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்த போதும் இஸ்லாம் அவற்றை சரி செய்து இரு சாராரது உரிமைகளையும் கடமைகளையும் தெளிவாகவே வரையறுத்து அழகிய வாழ்வு நெறியொன்றை தந்திருக்கிறது.

உடல் உள  (ஆண் பெண்) ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமளிக்கும் இஸ்லாம்

இந்த ஆக்கத்தின் நோக்கம் “ஆண் பெண் சமத்துவம்” பற்றியும் அதன் ஆழ அகலங்கள் பற்றி பேசுவதுமல்ல மாறாக முஸ்லிம் மாதர்களது உடல் உள ஆரோக்கியம் மற்றும் அவற்றிற்குத் தடையாகவுள்ள சில சமூக கலாசார பாரம்பரிய காரணிகள் குறித்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை ஆரம்பித்து வைப்பதாகும்.

அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள முதலாவது அமானிதம் அவனது /அவளது உடல் ஆகும் மண்ணில் வாழ்வதற்கு மண்ணினால் படைக்கப்பட்ட மனித உடலில் தான் அறிவு ஆன்மா எனும் அடுத்த இரண்டு பிரதான கூறுகளும் (மென்பொருட்கள்) அமையப் பெறுகின்றன, உயரிய நோக்கத்திற்காக பாரிய அமானிதம் ஒன்றை சுமப்பதற்காக படைக்கப் பட்ட மனிதனின் உடலமைப்பு அல்லாஹ்வின் மிகப் பெரிய அத்தாட்சிகளை கொண்டிருக்கின்றது.

“மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..”(ஸுரத்துல் ஹஜ் 22:5)

தரப்பட்டுள்ள உடல் எனும் அமானிதத்தை பாதுகாப்பதும் தூய்மை, ஆரோக்கியம்  பேணி  பராமரிப்பதும் குழந்தைகளாக, சிறுவர்களாக இருக்கும் பொழுது தாய் தந்தையர்கள் மீதும், பருவ வயதை அடைந்ததன் பின்னர் அவரவர் மீதும் விதிக்கப் பட்ட கடமையாகும்! தந்து அல்லது பிறரது உடல் உள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பது தவிர்க்கப்பட வேண்டிய பாவ காரியமாகும் உச்ச பட்ச தண்டனையாகிய மரண தண்டனை வரை உலகவாழ்வில் தண்டனைகளும் மறுமையில் கொடிய தண்டனைகளும் விதிக்கப் பட்டுள்ளன.

ஆரோக்கியம் ஓய்வு இரண்டிலும் பெரும்பாலானோர் கரிசனையின்றி இழப்புகளை சந்திப்பதாகவும், பலமான விசுவாசி பலவீனமான விசுவாசியை விட அல்லாஹ்விற்கும் அவனது தூதரிற்கும் விருப்பமானவன் எனவும் இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் கூட மனித உடல் உள ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்கின்றன, தனது நாவினாலோ கரங்களினாளோ அடுத்தவருக்கு தீமை செய்யதவரே உண்மை விசுவாசியாவார் என ஒரு நபி மொழி கூறுகிறது.

முஸ்லிம் மாதர்:  உடல் உள ஆரோக்கியமும் உடற்பயிற்சியும்!

பொதுவாகவே முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் உடல் உள ஆரோக்கியத்தில் இருபாலாரும் குறிப்பாக பெரியவர்களான பின்பு கவனம் செலுத்துவது மிகக் குறைவாகும் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மாதர்கள் பருவ வயதை எய்தியன் பின்னர் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது இல்லை என்றே கூறல் வேண்டும்.

அதற்குப் பல சமூக பொருளாதார கலாசார காரணிகளும் இருக்கின்றன, குறிப்பாக தெற்காசிய நாடுகளிலும் முஸ்லிம் அரபு உலகிலும் பின்பற்றப் படுகின்ற இறுக்கமான சமூக கலாசார காரணிகள் பெண்களை பெரும்பாலும் வீட்டு முகாமைத்துவம் மற்றும் பணிகளுடன் முழுநேர ஊழியர்களாக முடக்கிவிடுகின்றமை அவர்களது உடல் உள ஆரோக்கியத்தில் பல பாதகமான தாக்கங்களை கொண்டிருக்கின்றமை நாம் அறிந்த விடயமாகும்.

மத்திய கிழக்கு, மத்தியாசிய, தெற்காசிய மாதர்களின் உடலமைப்பை அவற்றின் பருமனை பற்றிய பொதுவான பார்வை அவர்களுக்கு எத்ததைய  தொற்றும் தொற்றா நோய்கள் ஏற்பட அதிகரித்த வாய்ப்புக்கள் உள்ளன என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

குறிப்பாக மேற்சொல்லப்பட்ட நாடுகளில் பாரம்பரியமாக போற்றப்படும் ஆணாதிக்க சமூக கட்டமைப்புகள் குறித்து பெண்ணிய வாதிகள் முன்வைக்கின்ற பல குற்றச் சாட்டுகளில் மாதருக்கு தமது சுகாதாரம் ஆரோக்கியம் பேணல் சார் உரிமைகள் மறுக்கப் படுகின்றமையும் ஒரு பிரதான விடயமாகும்.

பெண்ணிய வாதிகள் பேசுகின்றார்கள் என்பதனை விடவும் முஸ்லிம்களது குடும்ப சமூக வாழ்வில் முஸ்லிம் மாதர் எதிர் கொள்கின்ற இன்னோரன்ன சமூக அநீதிகள் இஸ்லாமிய வரைமுறைகளுக்குள்  களையப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதே பெரும் சவாலாகும்.

பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிவகைகள் பல இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப் படல் வேண்டும், முதற்கட்டமாக உடல் ஆரோக்கியம் பேணுதல் குறித்த விழிப்புணர்வை அரச சுகாதர திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும் தேசிய சர்வதேசிய தொண்டர் சேவை நிறுவனங்களுடனும் ஒத்துழைத்து எமது தனித்துவங்கள் பேணப் படுகின்ற வகையில் மேற்கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பாக பாடசாலைப் பருவத்தில் அது குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்துதல் வேண்டும் அத்தோடு பாடசாலை வாழ்விற்குப் பிறகு வீட்டுச் சூழலில் எவ்வாறு தமது உடல் உள ஆரோக்கியத்தைப் பேணும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எவ்வாறான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் போன்ற வழிகாட்டல்களை வழங்க முடியும்.

இலங்கைச் சூழலில் மஸ்ஜித் மையப் பட்ட செயற்பாடுகளில் முஸ்லிம் மாதர் ஈடுபடாமயினாலும் பொது இடங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ள விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், நடைபயிலும் இடங்களில் முஸ்லிம் மாதர் தமது வரைமுறைகள் பேணி உடற் பயிற்சிகளில் ஈடுபடும் சாத்தியப் பாடுகள் இல்லாமையினாலும் தற்போதைய நிலையில் அவ்வாறான உடனடித் தீர்வுகளை எய்த முடியாதுள்ளது. என்றாலும் காலப் போக்கில் பொருத்தமான ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டிய கடப் பாடு இருக்கின்றது.

இஸ்லாமிய அமைப்புகள் தொண்டர் நிறுவனங்கள் முஸ்லிம் மாத்ர்களுக்கென தனியான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் மேற்கொள்வதற்கான பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்!

நகர்ப்புறங்களில் சில இடங்களில் வர்த்தக நோக்கில் சில உடற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன, அதேபோல் நாடாளாவிய ரீதியில் பாதுகாப்பான சூழலில் அவ்வாறான ஏற்பாடுகளை அரச மற்றும்  தனியார் துறையினாலும் செய்து தரமுடியும்!

மதர்கள் சிறுவர்களுக்கென ஒரு வார இறுதி தினத்தை ஒதுக்கி பாடசாலை  மைதானங்களில் பாதுகாப்பான சூழமைவுகளில் சில தொடர்ந்தேர்சியிலான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் எமக்குரிய வரைமுறைகளுடன் அவர்களை ஈடுபடுத்துதல் மற்றுமொரு அபிப்பிராயமாகும்.

ஆரம்ப காலங்களில் ஆண்களாயினும் பெண்களாயினும் வீட்டு வேலைகள் வீட்டுச் சுற்றுச் சூழல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் என பல விடயங்களில் ஓரளவு உடல் உழைப்புடன் வாழ்வை நகர்த்தியதால் போதிய உடற்பயிற்சி அவர்களுக்கு இருந்தது, ஆனால் யந்திர மயமான நகர வாழ்கையில் மனித வாழ்வு பெருமளவில் யந்திரங்களில் தங்கி இருப்பதால் அதற்கேற்ப ஆரோக்கியம் சார் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.

நிச்சயமாக எந்தவொரு முன்னெடுப்பை செய்த போதும் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும் சவால்கள் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதற்காக நல்ல முன்னெடுப்புக்களை நாம் கைவிட்டு விடுவதனை விட நியாயமான ஆரோக்கியமான விமர்சனங்களினை உள்வாங்கி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுதல் வேண்டும்.

இந்த விடயத்தை எமது சொந்த தாயாரின் சகோதரியின் மகளின் சந்ததியினரின் ஆரோக்கியம் சார் விவகாரமாக கருதி நின்று நிதானித்து சிந்தித்து செயற்பட நாங்கள் முன்வருதல் காலம் கடந்து போன கட்டாயமாகும்!

குறிப்பு: உங்கள் அபிப்பிராயங்களுடன் தொடரும்…  

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்       

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles