எனது கருத்துக்கள் தனிப்பட்டவை, உடன்பாடுகள் இருப்பது போல் முரண்பாடுகளும் இருக்கலாம், தனிப்பட்ட உறவு முறைகள், விருப்பு வெறுப்புகள், இலாப நஷ்டங்கள், நட்பு, விசுவாசங்கள் ஒரு பொழுதும் எனது சிந்தனைகளில் தாக்கம் செலுத்துவதில்லை.
ஆனால் அவற்றை தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முழுமையாகவோ, பகுதியாகவோ எவரேனும் மேற்கோள் காட்டுவது அல்லது மீளப் பதிவு, பகிர்வு செய்வது நியாயமாகாது. அவற்றிற்கு என்னால் பொறுப்புக் கூறவோ, விளக்கமளிக்கவோ முடியாது.
அதேபோன்றே தத்தமது தொழில், நட்பு, பந்த பாச விருப்பு வெறுப்புக்கள், விசுவாசங்கள், செஞ்சோற்றுக்கடன்கள் அல்லது எதிர்த் தரப்பு போட்டி பொறாமைகள் போன்ற பின்புலன்களில் சரி காண்போர், அல்லது பிழை காண்போர் என்னை அரவணைப்பதனை, அல்லது தள்ளி வைப்பதனை நான் பொருட்டாகவே கருதுவதில்லை.
ஏனெனில் நான் எனது கொள்கை கோட்பாடுகளுக்கு இதய சுத்தியுடன் விசுவாசமாக இருக்கின்றேன், தனியாட்களுக்கோ, குழுக்களுக்கோ அல்ல; இந்த நிலைப்பாட்டால் நான் அடைந்தவைகளை விட இழக்கின்றவைகளே அதிகம் என்பதனை என்னைத் தெறிந்தவர்கள் அறிவார்கள்.
என்னிடம் அதிகாரம் இல்லை, பதவி அந்தஸ்து, செல்வம் செல்வாக்கு இல்லை, ஆனால் என்னை எனது சிந்தனைகளுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது, சிலவேளை ஒருமுறையேனும் வாழ்நாளில் சந்திக்காது நேசிக்கின்ற பல நூற்றுக்கணக்கான நண்பர்கள் உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இருக்கின்றார்கள், அவர்களுக்காகவேணும் அவ்வப்பொழுது சமகால விவகாரங்கள் குறித்த எனது நிலைப் பாடுகளை நான் சொல்லியே ஆக வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கல், கருத்துருவாக்கள் என்பது பாரதூரமான பணி யாகும், அமானிதமாகும், பலர் தாம் கருத்துக்கள் சொல்வதற்கும், சிலவேளை மாற்றுக் கருத்துக்கள் சொல்வதற்கும் எனது கருத்து வெளியீடுகளை பயன்படுத்துவதாக கூறியிருக்கின்றார்கள்.
எமது சொந்த மண்ணில் அன்றாட சமகால அரசியல், சமூக பொருளாதார கல்வி, பண்பாட்டு விவகாரங்களில் எனது பங்களிப்பு மற்றும் அனுபவங்கள் அவதானங்கள் என்பவற்றை மையமாக வைத்தே பெரும்பாலும் எனது கருத்துக்கள் அமைகின்றன, அதே போன்றே சரவதேச பிராந்திய அரங்கில் உம்மத்து சார்ந்த விவகாரங்களிலும் இரவலாக அன்றி எனது புரிதலை (அவர் இவர் சொல்வது போலன்றி) நானே சொல்ல முயற்சிக் கின்றேன்.
சுவாரசியம் என்ன வென்றால் சில மௌன குரு சாமிகள் என்னோடு முரண்பட வேண்டும் என்ற அவாவில் கருத்து வெளியிட முனைவது தான், உண்மையில் அவ்வாறான முனைப்புக்களை நான் உளமார வரவேற்கின்றேன், சிலவேளை அவ்வாறு உருவாக்கப்படுகின்ற சிந்தனை அலைகள், பேசுபொருட்கள் ஆரோக்கியமான கருத்தாடல்களிற்கு வழி கோலுகின்றன.
ஒரு தெளிவான கொள்கை, கோட்பாடு அல்லது நிலைப்பாடு உரிய நேரத்தில் முன்வைக்கப் படுவது அமானிதமாகும், காலம் கடந்தேனும் அவை உணரப்படும் அப்பொழுது சொல்வதற்கும், கேட்பதற்கும் நான் இல்லாமலும் இருக்கலாம்.
அல்லாஹ்வின் நாட்டம் அப்படி இருந்தது, முஸ்லிம் அரசியல், சிவில், சன்மார்க்கத் தலைமைகளுடனும், ஊடகத் துறையுடனும் முஸ்லிம் உலகின் பல அறிவு ஆளுமைகளுடனும் நிறுவனங்களுடனும் கடந்த மூன்று தசாப்த காலம் நான் கொண்டிருந்த உறவின் பின்புலத்தில் எனது சிந்தனைகளிற்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது என்றவகையில் திருப்தியடைகின்றேன். அல்-ஹம்துலில்லாஹ்.
இன்று நான் தேசிய ஷூரா சபை தவிர எந்த ஒரு அரசியல் கட்சியிலோ வேறு ஏதேனும் இயக்கத்திலோ அல்லது தொண்டர் நிறுவனத்திலோ உறுப்பினர் இல்லை, நான் பெற்றுக் கொண்ட கல்வி, எனது கடந்த கால் நூற்றாண்டு கால பொது வாழ்வில் நான் கற்றுக் கொண்ட அனுபவங்கள் என்பவற்றின் பின்புலத்தில் முஸ்லிம் சமூகம் தேசம் சார்ந்த விடயங்களில் வாழ்வியல் விழுமியங்களில் அவ்வப் போது எனது கருத்துக்களை அறிக்கைகளாகவும் ஆக்கங்களாகவும் வெளியிட்டு வருகின்றேன்.
அரசியல் வட்டாரங்களிற்கு எனது இஸ்லாமிய நிலைப்பாடுகள் பிடிக்கவில்லை, இஸ்லாமிய வட்டாங்களிற்கு எனது அரசியல் நிலைப்பாடுகள் பிடிக்கவில்லை, கடந்த கால் நூற்றாண்டு காலமாக இரு சாராரும் என்னை தீண்டத் தகாதவனாக தள்ளி வைத்தே உறவை அளவோடு வைத்திருக்கின்றார்கள். அதனால் தான் எந்த அரங்குகளிற்கும் அழைக்கப் படுவதுமில்லை.
என்றாலும், எனது சிந்தனைகளை கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாக்கப் படுவதில் ஒரு சிறு பங்களிப்பையேனும் நானும் செய்ய வேண்டும், அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்கிலேயே எழுதிக் கொண்டிருக்கின்றேன், எழுத்துக்களோடு நின்று விடாமல் தொடர்ந்தும் அரசியல் சிவில் சமூக சன்மார்க்க பணிகளில் என்னால் இயன்றவரை ஈடுபட்டுக் கொண்டிருப்பதனையும் நீங்கள் அறிவீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
எனது பேச்சிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் புதிய தலைமுறையினருக்கு ஏதேனும் பயன்கள் இருக்கவேண்டும் நாளைய தலைவர்கள் உருவாக்கப் படவேண்டும் என்ற ஒரே எண்ணம் மாத்திரமே இருக்கின்றது; அதேவேளை அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளுக்கு அவ்வப் போது சொல்லப் படவேண்டிய விஷயங்களும் அவற்றுள் அடங்குகின்றன.
எனக்கு கட்சி அமைக்கின்ற, இயக்கம் நடத்துகின்ற, பெயரும் புகழும் பிரபல்யமும் தேடுகின்ற அவற்றை வைத்து நானும் எனது குடும்பமும் எமது வாழ்வாதார தேவைகளை ஆசைகளை, சொகுசு சௌகாரியங்களை அடைந்து கொள்கின்ற அமானிதங்களை பாழ் படுத்துகின்ற எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது.
அவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் இருந்தால் அதிகாரத்திலுள்ள எனது அரசியல் சகாக்களின் பின்னால் வாய் மூடி மௌனியாக இருந்தால் மட்டுமே போதும் என்பது உங்களில் அனேகமானோருக்குத் தெரியும்.
நானும் ஒரு சராசரி தனி நபர் மாத்திரமே, எனக்கென்று எனது சக்தியிற்கும் அறிவிற்கும் உற்பட்ட சில வரையறைகள் இருக்கின்றன, இந்த சமூகத்தினதும் தேசத்தினதும் எல்லா விவகாரங்களிலும் கருத்துச் சொல்லவும் அறிக்கை விடவும் என்னால் முடியாது.
தயவு செய்து மக்களது வரிப்பணத்தில் நியமனம் பெற்றுள்ள உங்களால் நியமிக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அல்லது ஆளும் கட்சி எதிர்க் கட்சி அரசியலில் இருக்கின்ற செயற்பட்டாளர்களிடம் அல்லது ஏதேனும் இயக்கங்கள் தொண்டர் நிறுவனங்களிடம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பணிகளையோ அறிக்கைகளையோ அரசியலையோ என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.
எனக்கு அறிஞனாக நடிக்கும் ஆர்வமோ, அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை கட்டி ஆள வேண்டும் என்ற நப்பாசையோ, அல்லது அரசியல் சன்மார்க்க அல்லது சிவில் சமூகத் தலைவனாக ஆக வேண்டும் என்ற எண்ணமோ அறவே கிடையாது, அதேபோல் பாராளுமன்றம் செல்வதற்காக வீடு வீடாக சென்று வாக்குப் பிச்சை கேட்டு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசவோ என்னால் முடியாது, ஒரு போஸ்டர் என்ன நான் எழுதிய ஆக்கங்களை பிரதி பண்ணவோ என்னிடம் வளங்கள் இல்லை.
என்னால் இயன்ற வரை இந்த நாட்டில் சிவில் அரசியல் மற்றும் சன்மார்க்கத் தலைமைகளுடன் இதுவரை எந்தவொரு பிரதி உபகாரமும் பெறாமல் ஒத்துழைத்து வருகின்றேன். நான் ஒரு மகானோ மகாத்மாவோ இல்லை, எனது கருத்துக்களை சிந்தனைகளை எவர் மீதும் திணிக்கும் தேவையும் எனக்கு கிடையாது. ஊடகங்களுக்குப் பின்னால் பிரபல்யங்களுக்குப் பின்னால் அலைந்து திரியவும் நான் விரும்புவதில்லை.
இறுதியாக, ஒரு பொழுதும் நான் சொல்லும் கருத்துக்களே முதலும் முடிவுமானவை என எண்ணுமளவிற்கு உளநிலைக் கோளாறுகளும் என்னிடம் இல்லை, எப்பொழுதுமே ஆரோக்கியமான அழகான கருத்துப் பரிமாறல்களை கலந்துரையாடல்களை ஊக்குவிக்கின்ற எல்லா மட்டத்திலும் கூட்டுத் தலைமைத்துவ ஷூரா பொறிமுறை உருவாவதை கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே வலியுறுத்தியும் வருவது யாவரும் அறிந்த விடயமாகும்.

