Thursday, September 18, 2025

கொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..!

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறானமுறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின்பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம்நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)

ஒருவர் தனது பிறப்புரிமையால் பெற்றுக் கொள்ளும் சொத்துக்கள், செல்வங்கள் மற்றும் தனது உழைப்பினால் பெற்றுக் கொள்ளும் செல்வங்கள் என தன்னிடமுள்ள அசையும் அசையா சொத்துக்கள், வளரும் வளரா சொத்துக்கள் என்பவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஸகாத், சதகா போன்ற கடமையான மற்றும் விரும்பத் தக்க நற்கருமங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.

அதே போன்று மேற்படி நற்கருமங்கள் செய்யப்படுமிடத்து அவற்றின் வளர்சி, விருத்தியிற்கான உத்தரவாதம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்படுகின்றது. செய்யப்படாதவிடத்து தூய்மை பெறாத செல்வங்களில் அழிவு, விருத்தியின்மை ஏற்படுகின்ற இயல்பான தொழிற்பாடு இடம் பெறுகின்றது.

ஏழைகள், அனாதைகள், அங்கவீனர்கள், நளிவுற்றோர் என சமூகத்தில், தேசத்தில் உள்ளவர்களுக்கு சேர வேண்டியவற்றை சேர்த்துவிடாமல் சேகரித்து வைப்பதுவும், அவர்களுடைய சொத்துக்களை செல்வங்களை முறைகேடாக கையாடல், சூறையாடல் செய்வதுவும் நரக நெருப்பை சமிபாடு செய்வது போன்ற கொடிய பாவமாகும்.

அதே போன்றே சன்மார்க்க அதிகார சபைகள், பள்ளி பரிபாலனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என வக்ஃபு சொத்துக்களை, நிதியங்களை கையாளுகின்றவர்கள் அவற்றை பல்வேறு நியாயங்கள் கற்பித்து தமக்கு வாழ்வாதரங்களாக மாற்றிக் கொள்பவர்கள் கூட பாதிலான முறையில் அடுத்தவர் செல்வங்களை திருடுபவர்கள் ஆவர்.

Carஅரசியல் மற்றும் அரசஅதிகாரங்களில்உள்ளோர் அபிவிருத்தி நிதிகள், பிறநாட்டு உதவிகள், வளப்பங்கீடுகள், சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் என இன்னோரன்ன அரச வளங்களை ஊழல் மோசடி என்ற பெயரில் பெற்றுக் கொள்வதன் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரியிருப்பாளர்களின் சொத்துக்களை சூறையாடுவது, திருடுவது மிகக் கொடிய ஹராமாகும்.

வட்டி எடுப்பது கொடுப்பது போன்ற அடுத்தவர் செல்வங்களில் இருந்து மிகச் சிறிய விகிதாசாரத்தையேனும் பெற்றுக் கொள்வது எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் போர் பிரகடனம் செய்வதற்குச் சமனாகும் என இஸ்லாம் கூறியுள்ள பொழுது மேலே சொல்லப்பட்ட பகற் கொள்ளைகளை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

மேலும்,ஒருவர் தனது செல்வங்களை யார் யாருக்கு எவ்வாறு செலவு செய்யவேண்டும் பங்கீடு செய்ய வேண்டும் அனந்தரமாக விட்டுச் செல்ல வேண்டும் என மிக அழகிய வழிகாட்டல்களை இஸ்லாம் சொல்லி இருக்கின்றது.

விவகாரம் அவ்வாறு இருக்க ஒரு குடும்பத்தில் பலருக்கும் நியாயமாக சேரவேண்டிய சொத்தினை ஒரு பெண்மகவிற்கு வரதட்சணையாக , கைக்கூலியாக கொடுப்பதும் அதனை வலியுறுத்தி கேட்டுப் பெற்றுக் கொள்வதும் மிகக் கொடிய பாவமாகும்.

Houseவரதட்சணையும், கைக்கூலியும் முறையான ஹலாலான சன்மானங்கள் என்ற வரையறை தாண்டும் பொழுது வட்டியை விட கொடிய பாவமாகும், வட்டி அடுத்தவன் உழைப்பில் ஒரு சிறு பகுதியை திருடுவதாகும், வரதட்சணை பெரும்பாலும் அடுத்தவன் உழைப்பையே சூரையாடுவதாகும்.

குறிப்பாக வரதட்சணை, கைக்கூலி, திருமண சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இடம் பெறும் சமூக அநீதிகள் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான குடும்ப சமூக கலாச்சார, பொருளாதார கட்டமைப்பினை தென்னாசிய சமூகங்களில் தோற்றுவித்து இருப்பதானால் இஸ்லாமியகுடும்ப,சமூக,பொருளாதார ,கலாசார விழுமியங்களுக்கு எதிராக மிகக் கொடூரமான போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறல் வேண்டும்.

சிலர் பெற்றோர்களும் சகோதரர்களும் தமது பெண் பிள்ளைகளிற்கும், சகோதரிகளிற்கும் சன்மானமாக வீடு கார் நகை காசு எதனையும் வரதட்சணையாக வழங்கலாம் அதற்கு தடை இல்லை என்று நியாயங்கள் கூறுவார்கள், சன்மானம் என்பது வேறு, ஒரு சமூகக் கொடுமைக்கு “சன்மானம்” என்று பெயர் வைப்பது வேறு; “இதனை புக்ஹாக்கள்  ஹராத்தை தந்திரமாக ஹலால் ஆக்குதல்” எனக் கூறுவார்கள், இலஞ்சம், ஊழல் என்பவற்றையும் விரும்பித் தரும் சன்மானங்கள் என்று கூறுவது போல.

இவ்வாறு தந்திரோபாயங்களை மேற்கொள்வோர் சமூகத்தை அல்லாஹ்வை அவன் தூதரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் தமது மனச் காட்சியுடன் போராடிக் கொண்டு நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள், ஒரு தவறை செய்வதனை விட அதனை நியாயப் படுத்துதுவது பெரும் குற்றமாகும்.

“மனிதன் தனது மனச் சாட்சிக்கு எதிராகவே  வாதாடுகின்றான்,  அவன் தனது பாவங்களிற்கு நியாயங்கள் முன் வைத்த போதும்” (ஸுரத்துல் கியாமா 75:14)

மார்க்கம் அனுமதித்த சொத்துப் பங்கீடுகளிற்கு அப்பால் பலருக்கும் சேர வேண்டிய சொத்துகளை ஒருவருக்கு கொடுப்பதுவும், ஆண் மக்களின் உழைப்புக்களை மொத்தமாக  பெண் மக்களிற்கோ சகோதரிகளிற்கோ கொடுப்பதுவோ பெரும் சமூக அநீதியாகும், பலநூறு சமூக அநீதிகளின் ஊற்றாக இருக்கும்க வரதட்சணைக் கலாச்சாரத்தின்  பலிக்கடாக்களான நிலையில் அவர்கள் நிர்பந்தத்தின் பேரில் தரும் சொத்து சுகங்கள் ஒரு பொழுதும்  சன்மானங்களாக மாட்டா.

பிற சமூகங்களிடமிருந்து இரவல் வாங்கப்பட்ட வரதட்சணைக் கலாச்சாரம் சமூகத்தில் ஏழை பணக்காரன், மத்திய தர வர்க்கத்தினர் என சகலரது வாழ்விலும் ஆழமாக வேரூன்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தியுள்ள பலநூறு சமூக அநீதிகள் சீர்கேடுகளில் இருந்து விடுதலை பெறுவதனை சமூகம் தனது கூட்டுப் பொறுப்பாக அணுக வேண்டும்.

எமது, கலிமாவும், தொழுகைகளும், ஹஜ்ஜும், உம்ராவும், ஏனைய நபிலான வணக்க வழி பாடுகளும் எமது கொள்கை, கோட்பாடுகளும், அழகிய எமது புறத் தோற்றங்களும், நாம்கட்டி எழுப்பும் அழகிய மினாராக்களும் எமது குடும்ப, சமூக, பொருளாதார ,அரசியல், கலாச்சார வாழ்வில் முன்மாதிரியான சமூகம் ஒன்றை தோற்றுவிக்கா விட்டால் அடுத்த சமூகங்களிற்று மனித குலத்திற்கான விமோசனத்தின் தூதினை சுமந்துள்ள கைர உம்மத் ஆக நாம் ஒரு பொழுதும் இருக்க முடியாது.

குறிப்பு: நாம் ஒவ்வொருவரும் தீர்வின் பங்காளரா..? அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா..? ! என்பதனை மனச் சாட்சிகளை தொட்டு அளவீடு செய்துகொள்வதற்கான ஒரு பதிவு…பகிர்வாகவும் இருக்கட்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles